Thursday, December 18, 2008

உலகத்திரைப்படவிழா - மு.க.ஸ்டாலினின் SV சேகர் காமெடி


ஆறாவது சென்னை உலகத்திரைப்பட விழா நேற்று மிகச்சிறப்பாக துவங்கியது. தமிழக அரசின் 25 லட்ச ரூபாய் நிதி உதவியுடன் இந்த ஆண்டு மிகவும் புஷ்டியோடு நடத்த தலைப்பட்டிருக்கிறது ICAF அமைப்பு. இந்த அமைப்பு பற்றிய மேலதிக விபரத்திற்க அண்ணன் உண்மைத்தமிழனின் பதிவுகளைப் படித்துத் தெரிந்து கொள்ளவும்.


ஜாக்கி சேகரும், உண்மைத்தமிழரும் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றி காலையிலேயே வந்து விட்டனர். காலையில் woodlands தியேட்டரில் Bad faith (France) , Mirush (Norway) மற்றும் Casket for Hire (Phillipines) ஆகிய படங்களைப் பார்த்தோம்.


Woodlands திரையரங்கில் பார்த்த மூன்று படங்களும் சற்று heavy ஆன படங்கள். woodlands symphony யிலும், film chamber auditorium மிலும் திரையிடப்படும் படங்கள் அடுத்த வகுப்பைச் சார்ந்தவையே, comparitively.


Bad faith படம் எல்லா ஊர்லயும் இதுதான் பிரச்சனையா என்று வருத்தம் வரச்செய்தது. எந்த வித வணிகசமரங்களும் இல்லாமல் படமெடுத்திருப்பது மனதைக் கவர்ந்தது. சடாரென்று கடைசிக் காட்சியில் வில்லன் மனம் மாறி திருந்திவிடுவதைப்போல படம் முடிவடைந்த விதம் சிறு தொய்வைத் தந்தாலும், படம் பயணிக்கும் பாதையும் அதன் காட்சியமைப்புகளும் இயல்பான வசனங்களும் ஒரு திருப்தியைத்தந்தன என்பதில் ஐயமில்லை.


Mirush மிக அழகான ஒரு படம். தெள்ளிய நீரோடை போன்ற திரைக்கதை. Mirush ஆக வரும் பையன் மிகச்சிறந்த தேர்வு. படத்தின் சின்னச்சின்ன பாத்திரங்களும் அருமை. உதாரணம் : mirush உடன் Basket ball விளையாடும் பையன். நகைச்சுவை இழை தொடர்ந்து வருவதும் மிகச் சிறப்பு. எதிர்பாராத திருப்பத்துடன் முடியும் காட்சிகளும் அருமையே.


Casket for Hire - விளிம்பு நிலை மனிதர்களையும் அவர்தம் வாழ்க்கை முறைகளைப் பற்றியுமான ஒரு விரிவான ஆய்வின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களைக் கொண்ட படம். அவர்களது சந்தோஷம், துக்கம், நகைச்சுவை என அனைத்து பரிமாணங்களையும் அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. Survival அவர்களது வாழ்க்கையை எவ்வளவு தூரம் அடித்துத் துவைக்கிறது என்பதை அதன் போக்கிலேயே விட்டு காண்பித்திருக்கும் விதம் மிகச் சிறப்பு.


- - - - - - - -


சாயங்காலம் ஒரு சம்பிரதாய துவக்கவிழா கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. SV சேகர் மு.க. ஸ்டாலினை எஸ்கார்ட் செய்து அழைத்து வந்தார். சுருக்கமாக ஸ்டாலி்ன் பேசியபோதும் SV சேகரை விளித்தவிதம் நகைப்பை வரவழைத்தது. “சுயமரியாதை மிக்க தன்மானம் மிக்க” SV சேகர் என்று அவருக்கு ஒரு புது adjective கொடுத்து அழைத்தபோது அரங்கமே சிரித்தது. தொடர்ந்து பேசுகையில், “ இங்கு தமிழ்த்திரைப்படங்களையும் திரையிடவிருக்கிறார்கள். அதில் முதலாவதாக சேகருக்கு பொருத்தமாக 'அஞ்சாதே' என்ற திரைப்படம் திரையிடப்படவிருக்கிறது” - என்றும் ஸ்டாலி்ன் பேசி சிரிக்க வைத்தார்.


அவருடைய பேச்சின் ஹைலைட் காமெடி இதைவிட இன்னொன்றுதான்..... “ தமிழகத்தில் தற்போது நடைபெறும் இந்த பொற்கால ஆட்சியில்....” என்று அவர் பேசிக்கொண்டே போக எனக்கு மயக்கம் வராததுதான் குறை.


Sunday, November 23, 2008

100 பதிவு கண்ட அபூர்வ சிகாமணி அண்ணன் ஜாக்கி அவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்


ஜாக்கி சேகர் ஐயா சமூகத்திற்கு,

வந்தனங்கள். 100 பதிவு என்னும் இமாலய சாதனை புரிந்த களைப்பில் உங்கள் வாழ்க்கையில் வந்துபோன அனைவருக்கும் (பேனாவில் இங்க் ஊற்றித்தந்த பானு அக்காவையும், “காக்கா கடி” கடித்து கடலை மிட்டாய் தந்த சுரேஷையும் தாங்கள் விட்டு விட்டதற்கு என் கண்டணங்கள்) நெடுஞ்சாண்கிடையாக உருண்டு உருண்டு நீங்கள் நன்றி சொன்ன விதம் மிகவும் மெச்சத்தக்கது. இந்த பண்பினை நீங்கள் பாலகுமாரனிடமிருந்து தருவித்துக் கொண்டிருக்கலாம் என்று எண்ணுமளவிற்கு உங்களின் நன்றி கூறலின் விசுவாசம் உங்கள் பதிவெங்கும் மணக்கிறது.

பொதுவாக எண்ணிக்கையில் எனக்கு பெரிய நம்பிக்கையில்லை என்று சொன்னால் அது பொய். எண்ணிக்கைகள் தான் நாம் கடந்து வந்த தூரம் குறித்து நமக்கு அடிக்கடி உணர்த்துபவை. 100 என்ற எண்ணம் மிகவும் முக்கியமானது. அந்த எண்ணிக்கையை விட என்னை மிகவும் கவர்ந்த விடயம் என்னவென்றால் உங்களின் பதிவுகளில் காணப்படும் variety தான். அந்த பல்பொருள்தன்மை என்னை வெகுவாகவே கவர்ந்தது.

நீங்கள் அநியாயமாக சாகடித்த அந்த பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளன் அவ்வப்போது என் நினைவில் வந்து போவதுண்டு. சினிமா தியேட்டருக்குள் உணரும் வியர்வை பிசுபிசுக்கை அனுபவ சுருதியோடு சொன்ன உங்கள் வார்த்தைகளும், அப்போதைய அரசியல் சமூக சிக்கல்களை நக்கல் வழிய வழிய வறுத்தெடுத்த உங்கள் பாங்கும் அதீத கவர்ச்சியை அந்த தொடர்கதைக்கு வழங்கின என்றால் அது மிகையாகாது.

அதைப்போன்றதல்லாமல் வேறொரு genre ல் ஒரு புதிய தொடர் எழுதினால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம். கள்ளக்காதல், பஸ் ஸ்டாண்டு லாட்ஜ், சாவி துவாரத்தில் எட்டிப் பார்க்கும் ரூம் பாய், அநியாயமாய் உச்சக் கட்டத்தில் கிழிந்து போகும் காண்டம், வேடிக்கை பார்க்கும் செயலற்ற தமிழக போலீஸ் என்று தொடங்கி நீங்கள் பிளந்து கட்டி எழுதினால் சாரு தலைமையில் ஒரு கூட்டமே வந்து உங்கள் எழுத்தை உலகின் பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச்செல்லும் பணியை மேற்கொள்வார்கள். பிறகு நீங்கள் தனித்தளம் தொடங்கி இடைவேளை விட்டு இளைப்பாறலாம். இது குறித்து நீங்கள் பரிசீலிக்கவும்.

உங்களின் சினிமா பற்றிய புரிதலும் அது குறித்தான பார்வையும், சினிமாவில் உங்களுக்கு நெருக்கமானவர்களின் அறிவு விசாலமும் எனக்கு ஓரளவு தெரியும். நம் பதிவுலகில் முணுக் முணுக் கென்று வாரம் ஒரு திரைவிமர்சனம் எழுதும் பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் சினிமா என்பது என்ன... அதன் வலிகள் என்ன... இவர்கள் எழுதும் குப்பைகளால் வரும் பாதிப்புகள் என்ன என்பதெல்லாம் தெரியாது. சினிமா பற்றிய புரிதலை நம் சக பதிவர்களுக்கு ஏற்படுத்தும் முயற்சியில் புது கட்டுரைத்தொடர் எழுதலாம் (அதற்கெல்லாம் சத்தியமாக பின்னனூட்டமே வராது என்பது வேறு விஷயம்). சினிமா என்று தலைப்பிட்டு விட்டால் போதும், அதைப் படிக்க இங்கு அனைவரும் தலைப்பட்டு வருவார்கள் அது போதும். உலக சினிமா பற்றிய உங்கள் தொடரில் நல்ல திரைப்படங்களை நீங்கள் அறிமுகப்படுத்தும் பணி மேலும் தொடரட்டும்.

அம்புட்டுதான் சாமி... எனக்கு இப்ப உத்தரவு குடுங்க...

அன்புடன் நித்யகுமாரன்

Friday, September 26, 2008

காதலில் விழுந்தேன் - திரைப்பார்வை


புத்தம்புதிய இயக்குநர், புத்தம்புதிய தயாரிப்புக்குழு, பிரபலமாகாத நாயகன் (பாய்ஸ் படத்தில் முள்ளம்பன்றித் தலையோடு வருவாரே அவர்தான்) என்று தயாரிக்கத் துவங்கியபோது இப்படம் பெரிதாக தனக்கான பிம்பம் ஏதுமின்றி வளரத்துவங்கியது. ஒலித்தட்டு வெளியானது. பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பத்துவங்கியது “நாக்க முக்க” பாடல். இந்த பாட்டு எந்த படம் என்பதே கேள்வியானது. படம் பார்த்து பிடித்துப் போனதால் சன் குழுமம் இப்படத்தை வாங்கி வெளியிடத் தயாரானது. பிறகு படத்தின் வீச்சின் நிலையே முற்றிலுமாக மாறி விட்டது. ரசிகர்களையெல்லாம் தியேட்டருக்கு வரவழைக்கும் சக்தியோடு அதிரடிப் பாடல் தயார். அசுரத்தனமான விளம்பர விளிம்பில் நிற்கும் சன் குழுமத்தால் படத்திற்கு அதிரடி விளம்பரங்கள் தயார். அதிகபட்ச தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தயார். புதுமுக நாயகன், நாயகி, இயக்குநர் கூட்டணிக்கு இப்படிப்பட்ட opening கிடைப்பதென்பது மிகப் பெரிய விஷயம். இந்த வாய்ப்பை புதுமுக இயக்குநர் P.V. பிரசாத் எப்படி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று பார்த்தால், நம்மை “அட...” போட வைக்கிறார். களேபரப்படுத்தியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.


பணக்கார நாயகி - ஏழை நாயகன் - விபத்தில் பிறக்கும் அன்பு - பரிமளிக்கும் காதல் - என அரதப் பழசான பாதையிலேயே முன்பாதி படம் நகர்ந்தாலும், மெலடிகளால் நிறைந்து வழிந்தாலும் - “நாக்க முக்க” பாடலும், சுனேனாவின் இயல்பாய் பரிமளிக்கும் அழகும், இயக்குநரின் சின்னச்சின்ன அழகிய ஐடியாக்களும் படத்தை தெம்பாய் தூக்கி நிறுத்துகின்றன. இடைவேளைக்குப் பிறகு நாம் எதிர்பாராத திருப்பம் வந்தவுடன் படத்தில் அசுர வேகம் வந்து ஒட்டிக்கொள்கிறது. அந்த டெம்போ கடைசி வரை தடம்பிறளாமல் கொண்டு சென்றது இயக்குநரின் திறன். படத்தின் கதையினைச் சொல்லி உங்களின் ஆர்வத்தைக் குறைக்க விரும்பவில்லை. வெண்திரையில் பாருங்கள்.


சபா நாயகன். மீரா நாயகி. காதலைச் சொல்லத் தயங்கும் முரளி போல் இருக்கும் நாயகனுக்கு நாயகியே தரும் வழி அற்புதம். தன் கவலையை மறக்க மீரா சொல்லும் பலூன் பாடம் அழகு. தன்னுடைய கல்லூரியிலிருந்து விலகி சபாவின் கல்லூரிக்கு வரும் மீரா, “அம்மா அனுப்பினாங்க” என்றபடி சபாவின் கை கோர்க்கும் இடம் படத்தின் அதியற்புதமான கவிதை.


தன் விழிகளால் மீராவாக வரும் சுனேனா ஸ்கோர் செய்கிறார். படத்தின் இன்னொரு ஆச்சரியம் நகுல். சபாவாக வாழ்ந்திருக்கிறார். முகமூடி அணிந்து பேருந்தில் இடும் சண்டையில் காட்டும் வேகத்திலாகட்டும், “நாக்க முக்க” பாடலின் அதிரடி நடனத்திலாகட்டும், இடைவேளைக்குப் பிந்தைய வனாந்திரப் பகுதியில் வரும் ஆக்ரோஷமான உக்கிரப் பார்வையோடு அரற்றும் நடிப்பிலாகட்டும் - நம்மை கவர்கிறார். சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் நம்மை வெகுவாய் கவர்ந்த ஜெய்யை போன்று இவரும் தொடர்ந்து முன்னேற பலமான வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளன. சம்பத்குமார், லிவிங்ஸ்டன் என்று அனுபவ நடிகர்களின் பங்கும் படத்திற்கு பலம்.


“நாக்க முக்க” மட்டுமல்லாமல் படத்தின் மற்ற அழகிய மெலடிகளிலும் நம்மை மெய்மறக்கச் செய்யும் விஜய் ஆண்டனி படத்தின் அடுத்த ஹீரோ. படத்தின் முன்பாதியில் நிறைந்து வழியும் மென்மை மெட்டுக்களிலும் ரசிகர்களை இருக்கையோடு கட்டிப்போடுகிறார் இசையமைப்பாளர். வனாந்திரத்தை பயத்தோடு நாம் நோக்கும் வண்ணம் தன் திறனை வெளிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளரும் கவனிக்கப்படவேண்டியவர். மற்ற தொழில்நுட்பத் துறைகளும் படத்தின் கதையோட்டத்திலிருந்து நம்மை திசைதிருப்பா வண்ணம் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.


புதிய இயக்குநர் P.V. பிரசாத்தின் பங்கு படமெங்கும் தெரிகிறது. தண்ணீர் குடிக்காமல் குடிக்கும் காதல் மான்களின் கதையில் ஓர் அழகிய க்ளைமாக்ஸை இணைத்திருக்கும் அந்த குணா பாணி வசன பாடல் மிக்க அழகு. ஒரே ப்ரேமில் லாங் ஷாட்டில் ஒரு சண்டைக்காட்சியை படைத்திருக்கும் விதம் அழகு. கேமராவின் சின்னச்சின்ன சிணுங்கல்களிலும், பிண்னணி இசையிலும் அந்த காட்சி ஜொலிக்கிறது. ஒரு நிஜக்கதையின் inspiration ல் கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். உலகப்பட DVDக்களில் கதைதேடும் இந்தக்காலத்தில் Discovery Channel ல் கதை கண்டுபிடித்திருக்கும் இயக்குநருக்கு பாராட்டுக்கள்.
“காதலில் விழுந்தேன்” படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.

Friday, September 12, 2008

DVDயில் பார்த்த கொரிய மற்றும் hollywood படங்கள்




கல்யாண வேலையில் மிகவும் பரபரப்பாக இயங்கும் அண்ணன் கனரகதாங்கி சேகர் (Jackiesekar) அவர்களின் தூண்டுதலி்ன் பேரில் சில உலகத் திரைப்படங்களைப் பார்த்தேன். முன்னமே முருகனடிமை அவர்கள் அறிமுகப்படுத்தினாலும் சேகரிடமிருந்து DVD க்கள் வாங்கி பார்த்தபின் உலகத் திரைப்படங்களின் மீது பெரிய போதையே உண்டானது. Childrens of Heaven ஐ அவர்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். அதிர்ந்து போனேன். எவ்வளவு நல்ல படங்களையெல்லாம் நாம் இத்தனைநாள் தவறவிட்டிருக்கிறோம் என்று அப்போதுதான் தோன்றியது.

இந்தமாதிரி படங்களெல்லாம் எங்கு கிடைக்கும் என்று கேட்டதற்கு Parrys corner ல் கிடைக்கும் இடம், மொபைல் எண், இத்யாதி, இத்யாதி என்று எல்லா தகவலும் சொன்ன சேகருக்கு எல்லாம் வல்ல அருளால் முதலில் பெண் குழந்தை பிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

கொரியமொழி திரைப்படங்களும் மிகவும் அழகாக இருக்கின்றன. Dirty Carnival என்கிற ஒரு Action படம் பார்த்தேன். காதல், காமெடி, சென்டிமென்ட் எல்லாம் கலந்த ஒரு Gangster கதை. “கத்தி எடுத்தவன் கத்தியாலே சாவான்” என்கிற நம்ம ஊர் கதைதான். அதைச் சொல்லியிருந்தவிதம் எனக்கு பிடித்திருந்தது. வாய்ப்பு கிடைத்தால் பாருங்களேன். இன்னுமிரண்டு கொரிய மொழி படங்கள் வாங்கி வந்திருக்கிறேன். பார்த்துவிட்டு பிடித்திருந்தால் எழுதுகிறேன்.

Hollywood படங்களும் பார்க்க வாய்த்தது. Pursuit of Happyness மனதை கரைய வைத்தது. அடிதடி மசாலா மனிதனாக நினைத்திருந்த Will smith ன் முகம் இந்த படம் பார்த்தபின் மறைந்து போனது. அழுகையும், பரவசமும், அளவிட முடியா சந்தோஷமும் இணைந்து, அந்த உணர்வை வெளிக்காட்ட முயற்சிக்கும் அந்த இறுதிக் காட்சியில் Will Smith, excels. நம் கமலின் நினைப்பு வந்தது.

Vantage Point ம் இப்போதுதான் பார்த்தேன். 23 நிமிடங்களும் திரும்ப திரும்ப பின்னோக்கி பயணிக்கும் அந்த திரைக்கதை உத்தி அபாரம். பார்ப்பவருக்கு போரடித்துவிடும் அபாயம் தொக்கிநிற்கும் அந்த உத்தி, காட்சிகளின் கோர்வையினால் வென்றுவிடுகிறது. சின்ன சின்ன flash back குகள் முடிந்தபின் காட்சிகள் எடுக்கும் வேகம் பிரமாதம். தவற விட்டவங்க திரும்ப பாருங்களேன்.

Saturday, August 30, 2008

குருவி குருவி குருவி அடிச்சா......!


சமீபத்தில் சத்யத்தில் பார்த்த காமெடி (விளம்பர) படம் (கிளிக்கி பெருசா பாத்து என்ஜாய் பண்ணுங்கோ...)
படம் சொல்லும் நீதி:
1. உங்க கைல காசு இருந்தா இன்னாவேணா பண்ணலாம்...
2. வெரசா போயி நெறையா காசு சம்பாரிங்கோ...

Thursday, August 7, 2008

“கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்...” - ஓர் அழகிய பதிவு


சமீபத்திய பாடல்களில் இந்த பாடல் வசீகரித்ததைப் போல வேறெந்த பாடலும் என்னை வசீகரிக்கவில்லை. காரணங்கள் பற்பல.


ஒலியும் ஒளியுமாக நம்மை அடையும் பாடல்களில் பெரும்பாலானவற்றில் ஏதேனும் ஒரு தன்மையே அதிகப்படியான கவனத்தோடு பதிவு செய்யப்படுகிறது. சில பாடல்களை கேட்டு ரசித்துவிட்டு திரையில் பார்க்கும்போது ஒருவித அந்நியத்தன்மையைக் கூட உணர்ந்திருக்கிறேன். அப்படிப்பட்ட பாடலுக்கான மிகச்சிறந்த உதாரணம் ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற, “கண்ணோடு காண்பதெல்லாம்..” என்ற பாடல். நித்யஸ்ரீ மகாதேவனின் குரலில் அந்த பாடலை ரசித்து உணர்ந்துவிட்டு திரையில் பார்த்தபின் மிகவும் வருத்தமடைந்தேன்.


சுப்ரமணியபுரத்தில் அமைந்த இந்த பாடலில் இசையும் காட்சியமைப்புகளும் இரண்டறக்கலந்து ஓர் அற்புதமான கலவையாகி நம் மனதைக் கொள்ளையடிக்கிறது. கண்களால் கதைபேசிக் கசிந்துருகும் காதல்தான் களம். பல வீரர்கள் செஞ்சுரி அடித்த அதே களத்தில் இயக்குநர் சசிக்குமார் மிகவும் சாதாரணமாக கலக்கியிருக்கிறார். மிகவும் இயல்பானவர்களாக வரும் நாயகனும் நாயகியும் தனி அழகு. சுவாதியின் தாவணிக்கட்டும் எளிமையான மேக்கப்பும் வெகுசிறப்பு. அவருடைய கண்களே இந்த பாடலின் மிகப்பெரிய பலம்.


மெலிதான இசையுடன் தொடங்கி, தொடங்கிய கோட்டுக்குள்ளேயே பயணித்து அங்கங்கு அழகை தூவிச்செல்லும் இசை அற்புதம். ஜேம்ஸ் வசந்தனுக்கு பிரத்யேகமான பூங்கொத்துகள். மிகவும் எளிதான வரிகளில் காதலின் தகிப்பை வெளிப்படுத்திச் செல்லும் தாமரையின் பேனாவுக்கும் ஒரு சபாஷ். தனித்துத்தெரியாத ஒளிப்பதிவும், மிகவும் நாசூக்கான எடிட்டிங்கும் இந்த பாடலை அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்கின்றன.


காதலியை impress செய்வதற்காக காதலன் செய்யும் துடிப்பான, துறுதுறுப்பான செயல்களும் அதன் எதிர்வினைகளின் முரண்களும் அழகாக பதிவு செய்யப்படுகின்றன. “தோற்றவரே வென்றவர்...” என்று சொல்கிற வள்ளுவத்தைப் போல, தன் செயல்களில் இடரிவிழுந்தாலும், அதன் காரணமாகவே தன் காதலியின் உள்ளத்தில் உச்சாணிக்கொம்பில் ஏறி நிற்கிறான் காதலன். இப்பாடலின் வரிகளை இந்த பதிவில் கண்டும், கேட்டும் மகிழுங்கள்.

நீண்ட நாட்களுக்கு மனதில் நின்று தாலாட்டும் அழகிய திரைப்பாடலைத் தந்த சுப்ரமணியபுரம் குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
பின்குறிப்பு : நினைவுப் புதையல்களிலிருந்து காயத்ரியையும், அமராவதியையும் மீட்டுத்தந்து ஞாபகப்படுத்தியமைக்கு மீண்டும் ஒரு நன்றியை நவில்கிறேன்.

Tuesday, August 5, 2008

சும்மா குறிப்புகள் - 1



ப்ரியம் நிறைந்த நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

சமீபத்தில் நண்பர் தனசேகரிடம் அளவளாவிக் கொண்டிருந்தபோது, ப்ளாக் எழுதாது ஏன் என நோண்டி நொங்கெடுத்துக்கொண்டிருந்தார். நண்பர் நாடோடி இலக்கியனும் ஏன் எழுதவி்ல்லை என துருவிக்கொண்டிருக்கிறார். பெரிதாய் சொல்லிக்கொள்ளும்படி காரணம் ஏதுமி்ல்லை. விசைப்பலகை பிரச்சனை செய்துவிட்டது. ஆங்கில எழுத்துகள் E மற்றும் Y வேலை செய்யவி்ல்லை. சரி செய்ய சோம்பேறித்தனம் மற்றும் எழுதுவதிலும் பெரிதாக ஆர்வமில்லாமல் இருந்து விட்டது. இப்போது விசைப்பலகை தயார். எதாவது எழுதலாமே என்று அமர்ந்துவிட்டேன்.

* * * * *

குசேலன் படம் பார்க்கவில்லை. வலையெங்கும் துவைத்து தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் உலகத்தொலைக்காட்சிகளில் முதன்முறையாக வரும்போது பார்க்கலாம் என உத்தேசம். படம் பார்த்த நண்பர்களிடம் விசாரித்தேன். குட்டிப் பட்டாளத்தோடு மாயாஜால் சென்று படம் பார்த்த நண்பர் ராகவன் சொன்னது: “ பசங்களுக்கு படம் பிடிக்கல”. குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்காக, ரஜினி அவர்கள் ஹைதராபாத்திலிருந்து அவர்களுக்கு புரியும் விதத்தில் request ( அது மன்னிப்பு இல்லையாமே...!) செய்ததாக, CNN - IBN ல் செய்தி வெளிவந்தபோதே முடிவு செய்துவிட்டேன்; இந்த படத்தை திரையரங்கில் பார்ப்பதில்லையென்று. கலை வியாபாரிகளிடம் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்து போவது தமிழ் மக்களுக்கொன்றும் புதிதில்லையே...!

* * * * *

“குருவி” பாடல்கள் தொலைக்காட்சியில் வந்தால், என் 14 மாத மகன் தவறவிடுவதில்லை (“தேன் தேன் தேன்...” என்கிற மெலடி உட்பட...) . அப்படி என்னதான் பிடிக்கிறதென்றும் புரியவில்லை. தகிட தகிட எனத்துவங்கும் கலக்கலான “கத்தாழ கண்ணால...” முதல் அவனுக்குப்பிடித்த பாடல்கள் ஒரு வரிசையில் அமைகின்றன. தசாவதாரத்தில் “முகுந்தா முகுந்தா...” மற்றும் “கல்லைமட்டும் கண்டால்...” என இரண்டு பாடல்களும் அவனை வசீகரித்திருக்கின்றன. நேபாளி படத்தில் வரும் “கனவிலே கனவிலே...” என்கிற பாடலும், “பதினெட்டு வயது பட்டாம்பூச்சி...” என ஒரு பெண் துள்ளியாடும் ஒரு பாடலையும் இமை அசையாது ரசிக்கிறான். அவனுடைய ஹிட் லிஸ்ட்டின் புதுவரவு : சுப்ரமணியபுரத்திலிருந்து எனக்கு மிகவும் பிடித்த “கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்” என்ற அழகிய பாடல்.

* * * * *

ஆடி மாதத்தின் மையத்திலிருக்கிறோம். இன்னும் 12 நாட்களுக்கு ஆடி விளம்பரங்கள் நம்மை மேலும் துவைத்தெடுக்கும். ஸ்னிக்தா அழகாக அபிநயம் காட்டும் “மழை மழை மழை மழை பெய்யுதே...” என்ற sridevi textiles விளம்பரம் அட்டகாசம். அளவுக்கு அதிகமாக உணர்ச்சி கொட்டி + காட்டி, ப்ரியாமணி ஆடும் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் தொடர்ந்து பார்க்க சலிக்கிறது. “ஒரே எடத்துல ரெண்டு பாருங்க...” என்று அவர் தொடர்ந்து சொல்வதும் அபத்தம். மாறாக மீரா ஜாஸ்மின் வரும் “சாமுத்ரிகா பட்டு” விளம்பரம் படு பாந்தம். முன்பு படபடவென்று வந்த அதே விளம்பரத்தை சற்று பிரேக் போட்டு நிறுத்தி, ஸ்லோவாக சொல்கிறார்கள். இதுவும் அதே அழகுடன் மிளிர்கிறது. “சர்வ லட்சணமான பட்டு” என்ற பிரயோகம் கூட “லட்சணமான பட்டு” என சுருங்கிவிட்டது. பிரகாஷ்ராஜ் வரும் வனஸ்பதி விளம்பரத்தைக் காட்டிலும், ஜெயராம் கலக்கும் துணிக்கடை விளம்பரம் சிறப்பு. அவருடைய தமிழில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. “நொட்டு” என்று பஞ்சதந்திரத்தில் அவர் அடிக்கும் ஒரு டைமிங் காமெடியை இப்போது நினைத்தாலும் சிரித்து மாளமுடியாது. இந்த காட்சி யாருக்கேனும் நினைவிற்கு வந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

* * * * *

இப்போதைக்கு ஜூட்டு... விரைவில் ரிபீட்டு....

Wednesday, July 9, 2008

தலைப்படாததால் தலைப்பில்லை


நீ
இயல்பாய் பார்ப்பதாய்
நினைத்து
எத்தனை முறை
என்னை நானே
ஏமாற்றிக்கொண்டேன்...

Tuesday, July 8, 2008

“சுப்ரமணியபுரம்” - தவறவிட வேண்டாம்

இனிய நண்பர்களுக்கு வணக்கம். சற்றே இடைவெளி விழுந்துவிட்டது. இனி சுப்ரமணியபுரத்திற்கு போகலாம்.





படத்தைப் பற்றிய பார்வையை இங்கு துளிகளாகத் தருகிறேன்.

* “கற்றது தமிழ்” படம் பார்த்தபோது “இந்த படம் வெற்றி பெற வேண்டுமே...” என்று உதித்த ஆசை, இந்த படம் பார்த்தபின்னும் தோன்றியது.

* இயக்குனர், தயாரிப்பாளர் திரு.சசிகுமார் அவர்களுக்கு பாராட்டுக்கள். மிகவும் அழகாக செதுக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது இந்த திரைப்படம். மிகுந்த துணிவுடனும், சிரத்தையுடனும், தமிழ் திரைப்பட ரசிகர்கள் மீது மிகுந்த நம்பிக்கையுடனும் வெளிவந்திருக்கிறது.

* அழகர், பரமு, காசி, துளசி, துளசியின் அம்மா, அப்பா, பெரியப்பா, சித்தப்பா - என ஒவ்வொரு பாத்திரங்களின் படைப்பும், நடிகர்கள் தேர்வும், அவர்களின் சரியான வெளிப்பாடும் அற்புதமாக ஒன்றிணைந்து, கதாசிரியனின் எழுத்து அற்புதமாக திரையி்ல் விரிகிறது.

* கவனத்தை சிதறடிக்காத ஒளிப்பதிவும், நம்மை எண்பதுகளுக்கே அழைத்துப் போகும் கலை வடிவமைப்புகளும், படத்தின் கோடு தாண்டாமல் பயணிக்கும் இசையும் இந்த திரைப்படத்திற்கு பலம் சேர்க்கின்றன. திரைப்பட அறிவியல் பற்றி அதிகம் தெரியாத காரணத்தால் மற்ற துறைகளைப்பற்றி எழுதத் தெரியவில்லை.

* நாயகியின் “வெட்கம் கலந்த ஆசையில் விரியும்” கண்களும், நாயகனின் “காதல் கலந்த வெள்ளந்திச்” சிரிப்பும் முதல் பாதியில் ரசிக்க வைக்கின்றன. இரண்டாம் பாதியில் நாம் சற்றும் எதிர்பார்க்காத வகையில் தடம் புரண்டு படபடவென பயணிக்கும் திரைக்கதையும், அனுமானிக்கவியலாதத் திருப்பங்களும் நம்மை ஆட்படுத்திக் கொண்டுவிடுகின்றன. அழகர், பரமு மற்றும் காசியின் ஊனமான நண்பன் மருத்துவமனை அறையினின்று வெளி்வந்து நடந்து போகும் காட்சியின் நீளம் முழுவதும் இருக்கையினின்று எழ மனம் வராதே போகிறது.

* காதல் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் படங்களின் வரிசையில் இத்திரைப்படம் சேர்கின்றது. நம் கலாச்சாரக் கட்டுப்பாட்டுக்குள் சிக்கிக்கொண்டு, மனம் ரீதியாக இயல்பாக வந்து தொலையும் காதலையும் கட்டிக்கொண்டு அழும் போராட்டத்தை இப்படம் அழகாக பதிவு செய்கிறது. காதல் என்கிற உணர்வைத்தாண்டாமல் எந்த மனிதனும் பயணிக்கவே முடியாது. அப்படி உயிர் இயற்கையாகிப்போயிருக்கும் இந்த உணர்வை, நம் சமூக நிலைப்பாடுகளுக்குள், ஒரு கட்டுக்குள்ளே வாழ்ந்து பழகிய மனம், எப்படி சமாளிப்பதெனத் தெரியாமல் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பது இந்த சமூகத்தின் அன்றாட நிகழ்வு என்பது அப்பட்டமான உண்மை.

* இந்த சூழல் பற்றிய புரிதலை, தெளிவை அடுத்த தலைமுறைக்குப் பதிவு செய்துதருகிறது இந்த திரைப்படம். ஒரு கலை வடிவாக திரைப்படத்தின் முயற்சியும் வெற்றியும் அதுதானே...

நன்றி எண் 1: உடனடியாக படம் பார்க்க வேண்டிய உணர்வை ஏற்படுத்திய நண்பர் குதிரை ஓட்டுனர் சேகரின் இந்த பதிவிற்கு

நன்றி எண் 2 : பதிவு இடாத நாட்களில் என்னை உற்சாகப்படுத்தி, பின்னூட்டம் வழங்கிய நண்பர் நாடோடி இலக்கியன் அவர்களுக்கு.

Wednesday, May 7, 2008

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு...


இனிய நண்பர்களுக்கு...

அன்பான வணக்கங்கள். சமீபகாலமாக ஏதும் எழுத தலைப்படாமல் இருந்து விட்டேன். ஒரு மாதத்திற்கு மேல் ஓடிவிட்டது. சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லாததுதான் காரணமேயன்றி வேறொன்றுமில்லை. இப்போதுகூட காரணமேதுமில்லாமல்தான் எழுத எத்தனித்திருக்கிறேன்.

உங்களுடன் பகிர நினைத்த நிகழ்வுகளை புள்ளிகளாகத் தருகிறேன். வாசிக்க எளிமையாக இருக்கும்.

* நண்பர் தனசேகர் ஜாக்கிசேகர் என்று புதுவடிவம் எடுத்து கலக்கத் தொடங்கியிருக்கிறார். பட்டை சாராயம் போன்று மிகவும் ராவானவர், மிகவும் ரசனையானவர். roller coaster வாழ்க்கை என்பது இவருக்கு மிகச் சரியாகப் பொருந்தும். நண்பருக்கு இனிமையான வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

* யாரடி நீ மோகினி என்ற ஒரு குப்பைப் படத்தைப் பார்த்து மனம் நொந்து போனேன். தமிழ் சினிமாவின் தரத்தை 1mm உயர்த்தாவிட்டால் கூட பரவாயில்லை, அதை தாழ்த்தாமல் இருக்க இந்த நாயகர்களையும் அவர்களின் வெற்றிப்பட இயக்குநர்களையும் மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

* IPL கிரிக்கெட் போட்டிகளைக் கண்டு மகிழ்ந்தும் வருந்தியும் வருகிறேன். ஹர்பஜன் சிங்கிற்கு மொத்தமாக தடை விதித்து அவரை வீட்டிற்குள் அமர்ந்து கிரிக்கெட் பார்க்க வைக்க வேண்டும் என்பது என் கட்சி. அவர் 10 க்கு 10 விக்கெட்டுகள் எடுத்தால்கூட நமக்கு தேவை கிடையாது.

* என்னுடைய 10 மாத பையன் அடமின்றி சாப்பிட TV தொடர்களின் முகப்பு பாட்டு கேட்கிறான் என்று, “திருமதி செல்வம்” என்ற விகடன் தயாரிப்பு தொடர் பார்க்க வாய்த்தது. அடக்கடவுளே என்று மனம் கஷ்டப்பட்டது. அந்த கதைக்கான கருவும் அதை இவர்கள் நகர்த்தும் விதமும், கடவுளே இவர்களெப்போது காணாமற்போனவர்கள் ஆவார்கள் என்று நினைத்துக் கொண்டேன். இந்த Information technology புரட்சி யுகத்தின் மிகப்பெரிய சாபக் கேடாக இந்த TV தொடர்களை நான் பார்க்கிறேன். கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். அவர் பெயரைக் கொண்டும் தொடர்கள்....!!!!!!!

தொடர்ந்து மீண்டும் சந்திப்போம்.

பேரன்புடன் நித்யகுமாரன்.

Thursday, April 3, 2008

சமீபத்திய பதிவர் சந்திப்பு - என் பார்வையில்...


இனிய நண்பர்களுக்கு...


வணக்கம். சமீபத்திய பதிவர் சந்திப்பில் நானும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. வலையுலக வரலாற்றின் நீண்ட பதிவுகளையெல்லாம் எழுதி அதனால் மட்டுமல்லாமல் மற்ற பல காரணங்களுக்காகவும் வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் முருகனடிமை (மாலடிமை என்ற அரசியல் வார்த்தைச்சுவைக்கிணையாக ஒரு வார்த்தை) அவர்கள் என்னை கட்டாயம் வந்து பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார். அண்ணார் அவர்களின் ஆணைக்கிணங்க கலந்து கொள்ள முடிவெடுத்தேன்.


பீச் ஸ்டேஷன் வரை சென்று, வேளச்சேரி தடம் வழியாக திரும்பி வந்து சேப்பாக்கத்திலேயே இறங்கி பாரதியாரை கண்டு வணக்கம் சொல்லிவிட்டு போன் செய்தால் காந்தி சிலைக்கு வரவேண்டுமென்றார்கள். கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் நடக்க வேண்டியதாகிவிட்டது. கடற்கரையாக இருந்ததால் தப்பித்தேன். உலகம் இன்னும் சுற்றிக் கொண்டிருப்பதன் காரணம் விளங்கியது.


பெயர் மட்டுமே தெரி்ந்த (அவை கூட வலைப்பெயர்கள்தாம், நிஜப்பெயர் அல்ல) நண்பர்களை கண்ணுக்குக் கண் சந்திக்கும் நிகழ்வென்பதால் ஆர்வம் மிகுந்திருந்தது.


இனி சந்திப்புத்துளிகள்...


*** உண்மைத்தமிழன் அவர்கள் சுண்டல் வாங்கித்தந்தும் என்னை அறிமுகம் செய்து வைத்தும் நிரம்ப புண்ணியம் கட்டிக்கொண்டார். பிற பதிவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தே கொஞ்சம் சோர்ந்து போனார் என்றுதான் சொல்லவேண்டும். என் வலையை சிலர் வாசித்திருக்கிறார்கள்... பலருக்குச் சரிவரத் தெரியவில்லை. ஆயினும் என்ன எழுத வந்து இரண்டு மாதம் தானே ஆகிறது என்று எண்ணி தேற்றிக் கொண்டேன்.


*** நந்தா அவர்களை நண்பராக்கிக் கொண்டேன். எங்கோ திரும்பித்திரும்பி யோசித்துக்கொண்டிருந்தவரை என் பக்கம் திருப்பித்திருப்பி பேசிக்கொண்டிருந்தேன். இது போன்ற வலைப்பதிவர் சந்திப்புகளின் பயன் என்ன என்று கேட்டதற்கு பொட்டிலடித்தாற்போல் அவர் சொன்ன பதிலில் உண்மை இல்லாமலில்லை.


*** ஃபேசியல், பிளீச்சிங் இன்னபிற செய்த முகத்தோடும் (தகவல் உதவி பாலபாரதி), தமிழ்மணம் இலட்சிணை பொறித்த சட்டையோடும் லக்கிலுக் வந்திருந்தார். அவர் ஒரு most wanted person ஆக இருந்தமையால் அவரோடு அளவளாவும் என் அவா நிறைவேறவில்லை. இருப்பினும் என்னை புகைப்படத்தில் பார்த்தபடி செவப்பாக இல்லையென்று சொன்னார். அவருடைய பதிவுகளில் வழிந்தோடும் அங்கதத்திற்கேற்றபடி புன்னகை வழியம் முகத்தோடே காணப்பெற்றார். அவ்வப்போது தனியேயும் பாலபாரதியுடன் இணைந்தும் காணாமல் போய் திரும்பி வந்தார்.


*** பாலபாரதி பிறர் மீது வெளிச்சம் தூவும் மீடியாக்காரராகையால், அந்த நிகழ்வுகளின் சுவாரஸ்யங்கள் குறித்தும், சோகங்கள் குறித்தும் தன் உள்ளக்கிடக்கையினை பகிர்ந்து கொண்டார். குசும்பன் வரும்வரை centre of attraaction ஆக இவரே இருந்தார்.


*** ஜ்யோவ்ராம் சுந்தர் ஒரு 2 நிமிடம் கிடைத்தார். என்னுடைய பதிவில் வந்த ஏதோ ஒரு கவிதையைப்பற்றி பின்னூட்டுகையில் “இது ஹைக்கூ அல்ல பொய்க்கூ” என்று எழுதியிருந்தார். அதை இப்போது சொல்லி அவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். அவருடைய அ-கவிதைகள் பற்றி சொன்னார். மேலும் நான் எழுதிக் கொண்டிருப்பதெல்லாம் வாரமலர் கவிதைகளின் அடுத்தபடிதான் என்றும் உங்களின் காலச்சுவடு அளவுக்கு வர முயற்சிப்பதாகவும் சொன்ன போது, எழுத எழுத வந்துவிடும் என்றார்.


*** பைத்தியக்காரன் வரிசையாக வந்து எல்லா பதிவர்களிடமும் “பைத்தியக்காரன், பைத்தியக்காரன்” என்று சொல்லி்க்கொண்டே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு சென்றது, பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அவருடைய எழுத்துக்கும் அவர் தோற்றத்துக்கும் கிஞ்சித்தும் தொடர்பில்லை. மொக்கை எழுதும் மூன்றாம் தெரு முனுசாமி போல மிக இயல்பாக இருக்கும் இவரின் பதிவுகளை வாசிக்கத் துவங்கினால், நம்மை வேறு தளத்திற்கே அழைத்துச் செல்கிறார். உங்களைப் போன்று எழுதவெல்லாம் எனக்கு வரவே வராது, உங்களுக்கு பெரிய வணக்கம் என்று அவரிடம் உரிமையாகச் சொன்னபோது பயங்கரமாக கூச்சம் கொண்டார். அறிவுஜீவித்தனமாக எந்த போலி தோற்றமும் இல்லாமலிருந்த அவருடைய இயல்பு என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது.


*** சந்திப்பு நாயகர்கள் குசும்பனும் அபிஅப்பாவும் சொன்னபடி வந்தது மிகச் சிறப்பம்சம். அபிஅப்பாவின் பேச்சும் எள்ளல் தவழ அமைந்திருந்தது. குசும்பன் மிகவும் பவ்யமாக காணப்பட்டார். கல்யாணம் என்றவுடன் மக்கள் இப்படி ஆகிவிடுகிறார்களோ என்ற சந்தேகம் கூட தோன்றியது. அவர் திருமணத்திற்கு இப்போதே என் வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன்.


*** மா.சிவக்குமார் அவர்களிடமும் வினையூக்கி அவர்களிடமும் சிறிது உரையாடினேன். அதியமான், சுகுனாதிவாகர் போன்றோர் தீவிர சர்ச்சைகளில் படுதீவிரமாக பேசிக்கொண்டிருந்த படியால் அவர்களோடு அறிமுகப்படுத்திக் கொள்ள இயலவி்ல்லை. கடலையூர் செல்வம் மற்றும் ஆதிஷா போன்ற, புதிய பதிவர்களிடமும் சற்று உரையாட வாய்ப்பு கிட்டியது. இவர்தான் டோண்டு ராகவன் என்று பக்கத்தில் இருந்த யாரோ சொல்ல, “போலி டோண்டு” யாரென்று கேட்டுவிட எத்தனித்த நாக்கை கடித்து மடக்கி உள்ளே தள்ளினேன்.


யாரைப்பற்றியேனும் குறிப்பிடாமல் விட்டிருந்தால் அது மறதியினாலேதான் என்று சொல்லிக்கொள்கிறேன். மற்றபடி இந்த சந்திப்பு மனதிற்கு இனியதாக அமைந்திருந்தது. அனைத்து நண்பர்களுக்கும் என் வணக்கத்தையும் நன்றியையும் உரித்தாக்கிக் கொள்கின்றேன்.


டெய்ல் பீஸ் : இனி வாராவாரம் வியாழன் தோறும் “காண்டு கஜேந்திரனின் கேள்வி பதில்” பகுதி ஆரம்பம் என்று லக்கிலுக் சொன்னது சும்மா லுலுவாவா இல்லை உண்மையாகவா என்று அவரிடமே கேட்டுக் கொள்ளவும்.

டெஸ்ட் மேட்சா இல்ல 20 -20 மேட்சா...


இந்திய அணி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆமதாபாத் டெஸ்ட் போட்டியில் வெகுசிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறது...

ஒரே ஒரு வருத்தம்தான். 20-20 மேட்ச் என்று நினைத்து விளையாடிவிட்டார்கள் போல... சரியாக 20 ஓவர்களுக்குள், சிங்கத்தை அதன் குகைக்குள் சென்று வென்று வந்துவிட்டதாக, எல்லா பத்திரிக்கை பத்திகளிலும் புகழ்ந்து சொல்லப்பட்ட நம் இந்திய அணி தன் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து... 76 ரன்கள் என்னும் இமாலய எண்ணிக்கையை பெற்றுள்ளது...

இங்கே போய் ஸ்கோர் கார்டு பார்த்து உள்ளம் பூரிப்படையவும்...
எல்லாரும் ஜோரா ஒரு தபா கை தட்டுங்க...

Thursday, March 13, 2008

கோபங்களும் ஊசிகளும்...

உன்
நிகழ்வுகளால் உண்டாகும்
கோபக் குமிழ்கள்
உன் நினைவூசிகளால்
சிதறிப்போகின்றன...

Wednesday, March 12, 2008

லௌகீக வலிகள்...


தாய் மற்றும் மனைவியின்
இருத்தலுக்கான
பிரயத்தனங்களினிடையே
கணவனின் இருத்தல்
வெற்றிடம் பார்த்து விரவுகிறது...

Tuesday, March 11, 2008

காலைக் கடன்..!


கதிர் கரங்களால்
சோம்பல் முறித்து
ஆதவன் வர முயலும் பொழுதில்...

விலக மறுக்கும் இமைகளோடு
படுக்கையில் தடவி
உனைத்தேடுகிறேன்...

எனக்குப்பிடித்த நீலநிற புடவையில்
ஈரஞ்சொட்ட தலைதுவட்டி
குறுஞ்சிரிப்போடு நிற்கிறாய்...

“ஜன்னல் அணி்ந்திருக்கிறதே
உனக்கும் எதற்கென்று”
உன் ஆடைதொட நானும்
துள்ளியோட நீயும்
எத்தனிக்கும் பொழுதில்...

தலையிலடித்துக் கொண்டே
கலைந்திருந்த படுக்கை
மீண்டும் கலையத்தயாராகிறது....

நன்றி குறிப்பு : நாடோடி இலக்கியனின் இந்த கவிதையே இதை எழுதத் தூண்டிய காரணி

Saturday, March 8, 2008

வெள்ளித்திரை - திரைப்பார்வை


“மொழி” வெற்றிப்படத்திற்குப் பிறகு, பிரகாஷ் ராஜின் Duet Movies நிறுவனம் Moser baer உடன் இணைந்து தந்திருக்கும் திரைப்படம். படத்தின் தலைப்புப்படி திரைத்துறையைச் சார்ந்து இயங்குகிறது கதை. இன்னும் சிறப்பாக சுவாரஸ்யமாக அமைந்திருக்கலாமோ என்ற கேள்வியுடன் முடிவடைகிறது படம்.

கதாநாயக ஆர்வத்திலிருக்கும் கன்னையாவும் (பிரகாஷ் ராஜ்), இயக்குநர் ஆர்வத்திலிருக்கும் சரவணனும் (பிருத்விராஜ்) நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளமுடியாதபடிக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். சரவணனின் கதையைத்திருடி தன் பெயரில் பதிவு செய்து அந்தக்கதையின் மூலம் கதாநாயகனாகிறான் கன்னையா. முன்னணி கதாநாயகி மைதிலியுடன் (கோபிகா) காதல் கொண்டு, அவள் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டவுடன் அவளை கரம்பிடிக்கிறான் சரவணன். உப்புசப்பில்லாத காரணங்காட்டி மைதிலி சரவணனைப்பிரிய, ரோட்டில் அமர்ந்து புலம்பும் சரவணனுக்கு அந்த பழைய தயாரிப்பாளரே வாய்ப்பு (!) தர, கன்னையனை வைத்தே “பிரம்மா” என்றொரு படம் எடுக்கிறான் சரவணன். நாயக அந்தஸ்தில் இருக்கும் கன்னையன், தன் முன்னால் நண்பனுக்கு முடிந்த அளவு டார்ச்சர் கொடுத்து கடைசியில் கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்கமுடியாதென அடம்பிடித்து கிளம்ப, சரவணன் இயல்பாக நடக்கும்படியாகவே கன்னையன் செயல்படுவதை மறைத்து வைக்கப்பட்ட கேமராக்கள் மூலம் படம்பிடித்து படத்தை முடித்து வெளியிடுகிறான். கன்னையா திருந்த, சரவணன் மைதிலி சேர படம் சுபம்.

மிக ஆர்வமாக படம் பார்க்கப்போன நம்மை நடுமண்டையில் நச்சென அடித்து உட்கார வைக்கிறார்கள். திரைத்துறையைச் சுற்றிச்சுழலும் கதையில் சுவாரஸ்யம், நாம் எதிர்பார்த்த அளவைவிட மிகக் குறைவுதான். பிரகாஷ்ராஜ் தன் பாத்திரத்தில் சிறப்பாக பொருந்துகிறார். 80% சோகம் பூசிக்கொண்டே வரும் கதாபாத்திரத்தில் வரும் பிருத்விராஜ், படம் முழுக்க சந்தோஷமாகவே காணப்படவில்லை. கோபிகா நிலை இன்னும் பாவம். அழுகிறார், அழுகிறார் அழுது கொண்டேயிருக்கிறார்.

கன்னையாவின் பாத்திரம் முற்றிலும் வில்லத்தனமாக அமைந்து தன் குணாதிசியத்தை இறுதியில் இழந்து நம் மனதில் பதிய மறுக்கிறது. ஆரம்பத்தில் மைதிலி மீது மையல் கொண்டு மகிழும் கன்னையா பிறகு பெரிய நட்சத்திரமானபின் மைதிலியின் அண்ணனிடம் அவளை தன்னோடு சேர்த்துக்கொள்ள விருப்பம் தெரிவிக்கிறான். இதற்கிடையில் மைதிலி சரவணனிடம் திருமணமாகி தற்காலிகமாக விலகி இருக்கிறாள். அந்த அண்ணனும் எந்த வில்லத்தனமும் செய்யாமல் அவ்வப்போது வந்து மைதிலியை அடிப்பதோடு சரி. ரொம்ப கேட்டால் நமக்கும் நாலு அறை விழும்போல இருக்கிறது.

மைதிலியும் சரவணனும் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாகவாவது இருந்தார்களா என்றால் அதுவும் இல்லை. மைதிலி சரவணனைப் பிரிவதும் பின்பு இணைவதும், அந்த நிகழ்வுகளை சரவணன் எடுத்துக்கொள்ளும் விதமும் நம் சிற்றறிவிற்கு பொருந்தும்படி இல்லை.

சரத்பாபு, எம்.எஸ். பாஸ்கர், சார்லி போன்றோர் சிறு பாத்திரங்களில் வந்து நிறைவாகச் செய்திருக்கிறார்கள். அவ்வப்போது வந்து ஸ்பீட்பிரேக்கர் போடும் பாடல்கள் மட்டும் நம்மை சற்று ஆசுவாசப்படுத்துகின்றன (சற்று வெளியே செல்லலாமில்லையா...!). ஒரேயொரு சோகப் பாடலைத்தவிர்த்து மற்ற பாடல்களில் சுவாரஸ்யமில்லை. பின்னணி இசை சத்தம் அதிகம்.

இயக்குனராக முதல் படம் செய்யவந்திருக்கும் விஜியின் உழைப்பு இறுதிக்காட்சியில் தெரிகிறது. இறுதிக்காட்சிக்கான திரைக்கதையும் திட்டமிடல்களும் நன்று. வேறொரு கதையை அவர் தேர்வு செய்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுவதை சொல்லாமலிருக்க முடியில்லை.

செலவு செய்ய நிறைய நேரமும் பணமும் வைத்திருப்பவர்கள் தாராளமாகப் பார்க்கலாம். என்னைக் கேட்டால் வீட்டில் அமர்ந்து விட்டத்தைப் பார்த்திருப்பதே மதி என்பேன்...!

Friday, February 29, 2008

சமீபத்திய பதிவுகளும், ஒரு புதிய பதிவனும்...


எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்கள் மறைந்தபின் எழுந்த அஞ்சலிகளும், அதைத் தொடர்ந்து அந்த அஞ்சலிகளை எதிர்த்துப் பிறந்த பதிவுகளும் என்னுள் மிகுந்த மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தின. நம் மனத்தில் தோன்றும் (பிரசுரிக்கும்படியான) கருத்துக்களை எழுதுவதற்கே நாம் blog எழுதுகிறோம். அப்படியென்றால், இந்த பதிவுகளைப்பற்றி கருத்து சொல்வதில் தப்பேதும் இல்லையே என்று மனதில் பட்டது.

கடந்த இரண்டு மாதங்களாக நான் தமிழ்ப்பதிவுகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு மாத காலமாக blog எழுதிக்கொண்டிருக்கிறேன். இங்கு நான் காணும் பல விஷயங்கள் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக எழுதப் பட்டவையோ என்று எண்ண வைக்கும் வகையில் எழுதப்படுகின்றன. தாம் கவனிக்கப்படவேண்டும் என்பதற்காக எழுதப்படும் எழுத்துக்களையும் நான் காண்கிறேன். இங்கு அதிக ஹிட்களை பெறுவதே பிரதானமாக காணப்படுகிறது. அதுதான் குறிக்கோள் என்று செயல்படும் பதிவுகளை எளிதாக கண்டுகொள்ள முடிகிறது. அவர்கள் எழுதும் பதிவுகளின் தலைப்புகளிலேயே அது தென்படுகிறது.

இனி தொடர்ந்து பதிவுகளை எழுதலாமா அல்லது விட்டுவிடலாமா என்பது போன்ற எண்ணங்களும் என்னுள் எழுகின்றன. இங்கு எப்படிப்பட்ட விஷயங்களுக்கு முன்னுரிமையும், வரவேற்பும் தரப்படுகின்றது என்பது தமிழ்மணத்தின் சூடான இடுகைகளைப்பார்க்கையில் வெள்ளிடை மலையாகிறது. இங்கு பல்வேறு குழுக்களாக பதிவர்கள் செயல்பட்டு அவர்களுக்குள் நடைபெறும் விவாதங்களே பதிவுகளாக வருகின்றன. அவை சூடான இடுகைகளில் இடம் பிடித்து, சூடான இடுகைகளுக்கான இயல்புகள் என்னவென்பதை வெட்டவெளிச்சமாக்குகின்றன.

சுஜாதா என்ற ஓர் எழுத்தாளன் தன் 73ம் வயதில் இறந்தபிறகு, இங்கு எழுதப் படும் பதிவுகள் அவற்றின் தரம்பற்றி தாமே சொல்கின்றன. அடிப்படை நாகரீகப்பண்பின்றி எழுதப்படும் பதிவுகளுக்கும் குடைபிடிக்கும் போக்கு இந்த தளத்தில் இயங்குபவர்களுக்கு இருக்கும்பட்சத்தில் இது எனக்கு உகந்த தளம் அல்ல என்று உணர்கிறேன். நானொன்றும் தமிழ் எழுத்துலகின் தவிர்க்க முடியாத எழுத்தாளன் அல்ல. நல்ல எழுத்துக்களை நாடி வாசிக்கும் ஒரு வாசகன். படைப்புலகச் சிந்தனையோடு வலைய வரும் ஒரு வாசகன். அவ்வளவே...

மூன்றாந்தர வார்த்தைகளை மிகச் சாதாரணமாக பயன்படுத்தும் போக்கும் இங்கு வெகு இயல்பாகவே உள்ளது. அதற்கு ஆயிரத்தெட்டு வியாக்யானம் சொல்பவர்களின் வார்த்தைகளை கேட்கும் பக்குவம் எனக்கு வரவில்லையென்று அவர்கள் சொல்லிக்கொள்ளட்டும்.

இந்த வலைத்தளத்திரட்டிகளில் முதன்மையாக செயல்படுவோரிடத்திலும் வியாபார சூட்சுமங்களே முதலிடம் வகிக்கின்றன. அவர்களின் பதிவுகளின் தன்மை அதனால் மங்கிப்போகவும் வாய்ப்புள்ளதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவனம் கொள்ளவில்லை. இன்றைய தேதியில் என்ன நடக்கிறது என்பதுதான் பிரதானமாக இருக்கிறது.

தான் சார்ந்த சமூத்தின் நிலைகுறித்தும் அதன் வளர்ச்சிக்காகவும் எழுதப்படும் வார்த்தைகளே காலத்தால் குறித்துவைத்துக்கொள்ளப்படும். தனிமனித காழ்ப்புணர்ச்சியோ அல்லது துவேஷமோ, குழு மனப்பான்மையின் போதையோடமைந்த வார்த்தை விளையாட்டுக்களோ நிச்சயமாக நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்லும் வாகனங்களாக அமையாது என்பது என் எண்ணம்.

என்னுடைய வாழ்க்கைச்சூழலில் நான் வரையறுத்து ஒதுக்கும் காலத்தில், இந்த வலைப்பதிவுகளில் நான் இயங்க விரும்பும் விஷயங்கள், மேற்கண்டவை குறித்த விவாதங்களோ அல்லது விருப்பு வெறுப்பு அபிப்பிராய பேதங்கள் குறித்த வெட்டி வாதங்களோ அல்ல. “வாசித்தோமா... போனோமா...” என்ற மனநிலை விரைவில் வாய்க்கும்பட்சத்தில் “அடப்போங்கப்பா....” என்று சொல்லி ஒதுங்கிப்போகப்போகிறேன். அந்த கால கட்டம் வரும்வரை இந்த பதிவை எண்ணிக்கொண்டு நான் சற்றேனும் இளைப்பாற விரும்புகிறேன்.

Thursday, February 28, 2008

அரங்கமாநகருளானே...


அரங்கமாநகருளானே...
அவரை
அங்கேனும்
பத்திரமாய் பார்த்துக்கொள்...

ஈரவிழிகளுடன்,
நித்யகுமாரன்

Wednesday, February 27, 2008

ம் சீக்கிரம்...

விரைவில் முடிவெடு
நான் எங்கு முடிச்சிடுவது...?
உன் கழுத்திலா...
என் கழுத்திலா...

கிருபா, சத்யாவிற்கு உண்மையான நண்பனாக இருந்தானா...? - “அஞ்சாதே” ஒரு மீள்பார்வை


சமீபத்தில் “அஞ்சாதே” திரைப்படம் குறித்து எழுதியிருக்கிறேன் . மேலும் எழுதத்தூண்டும் அளவுக்கு படத்தில் சரக்கு இருப்பதாக நினைப்பதால் இந்த பதிவை எழுதவிழைகிறேன். ஏற்கனவே எழுதிய பதிவிற்கு அப்படியொன்றும் பலமான வரவேற்பு (அதிக மறுமொழிகள் வாயிலாக) இல்லாத போதிலும், பரவலாக வாசிக்கப்பட்டதால் (எல்லாம் ஒரு நம்பிக்கைதான்) திரும்பவும் எழுதுகிறேன். அப்படி சிலாகிப்பதற்கு படத்தில் ஒன்றுமில்லையே என்று யோசிப்பவர்கள் இங்கே கழண்டு கொள்வதென்றாலும் சரி, தொடர்ந்து படித்து தங்கள் கருத்தை உறுதிப்படுத்திக் கொண்டாலும் சரி.


இந்த திரைப்படத்தின் கதாபாத்திரங்களை இயக்குனர் அமைத்தவிதம் குறித்து விமர்சனம் எழுதும் நோக்கோடு இதை எழுதவில்லை. அந்த கதாபாத்திரங்களை அவ்வவற்றின் இயல்போடு அப்படியே கிரகித்துக்கொண்டு அவர்களின் போக்கையும், செயல்பாடுகளையும் பற்றியுமே இங்கு எழுத முயல்கிறேன். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், பட்டிமன்றம், வழக்காடு மன்றங்களில் “வாலியை மறைந்திருந்து கொன்ற ராமன் குற்றவாளியே...” என்கிற ரீதியில் பேசப்படும் வாதங்களில், ராமனைப் பற்றியோ அல்லது வாலியைப் பற்றியோ தான் பேசப்படுமேயன்றி, அந்த பாத்திரங்களைப்படைத்த கம்பனைப் பற்றி பேசப்படமாட்டாது. அதாவது, கம்பன் இந்த பாத்திரத்தை படைத்த விதம் தவறு, சரி என்று விவாதிக்கப்படமாட்டாது. அந்தந்த பாத்திரங்களை அவற்றின் இயல்போடு கிரகித்துக்கொண்டு சூழல் அவர்களைப் படுத்தும் பாடு குறித்து விவாதிக்கப்படும். அப்படி ஒரு முயற்சியாகவே இந்த பதிவை எழுத முயற்சிக்கிறேன். இந்த புரிதல் அவசியம் என்று தோன்றியதால்தான், இந்த முன்னுரை தேவைப்பட்டது. இனி விஷயத்திற்கு வரலாம்...


“அஞ்சாதே” திரைப்படத்தின் அடிநாதமாக அமைந்திருப்பது நட்பு. அந்த நட்பிற்கு சத்யாவும், கிருபாவும் உண்மையாக இருந்திருக்கிறார்களா என்ற கேள்வியோடு அணுகும்போது, சத்யாவைவிட கிருபா தாழ்ந்துபோகிறான். தன் நண்பன் கிருபாவுக்காக சத்யா ஒவ்வொரு சூழ்நிலையிலும் தன்னாலான நல்லதைச் செய்ய ஓடுகிறான் (படத்தின் பெரும்பாலான காட்சிகளில் சத்யா ஓடுவது தனிக்கதை!). கிருபாவை அடித்தவர்களை ஓடிச்சென்று போய் கும்முவதிலும், கிருபா SI தேர்வில் தோல்வியடைந்ததைக் கேட்டு அதிர்ச்சியடைகையிலும், கிருபா தன் இயல்பிலிருந்து மாறி தாடியும் குடியுமாக தரம்புரள்பதைக் கண்டு பதைபதைப்பதிலும், தன் நண்பன் கெட்ட வழியில் சென்றுவிடாமலிருக்க அவனுக்காக முயற்சி எடுப்பதிலும், போலிஸ் ஸ்டேஷனிற்கு அழைத்துவரப்படும் கிருபாவுக்கு எதுவும் நேராமலிருக்க இன்ஸ்பெக்டரிடம் மன்றாடுவதிலும் - சத்யா கிருபாவிற்கு உண்மையான நண்பனாகவே இருக்கிறான்.


ஆனால் கிருபா, தான் SI தேர்வில் தோல்வியடைவதற்கே சத்யாதான் காரணம் என்கிற ரீதியில் தவறாக ஒரு கற்பிதத்தை வளர்த்துக்கொண்டு, சம்மந்தமே இல்லாமல் தனக்காக எதுவும் செய்யக்கூடிய தன் நண்பன் சத்யா மீது வன்மத்தை வளர்த்துக் கொள்கிறான். தன் முனைப்பின்றி எதெச்சையாக தயாவிடம் பழகத்துவங்கியபின், தன் வீட்டிலேயே “தண்டச்சோறாக” அறியப்பட்டபின், கிருபாவின் அடிப்படை எண்ணங்களில், செயல்பாடுகளில் எதிர்மறை எண்ணங்கள் வெகுவாக வளரத்துவங்குகின்றன. ஆயினும் கிருபா அடிப்படையில் நல்லவனாகவே இருக்கிறான் என்பது தயாவிடம் அவன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சியில் தெரிகிறது. ஹவாலா என்று முதலில் பொய்சொல்லி கிருபாவை தன்வசப்படுத்தும் தயாவின், நிஜமுகம் இளம்பெண்களை கடத்தி, கற்பழித்து பணம் பறிப்பதுதான் என்பதைத் தெரிந்து கொண்டவுடன் தயாவிடம் கிருபா செய்யும் வாக்குவாதம் அவர்களிருவரின் அடிப்படைத்தன்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.


ஆயினும் கிருபாவின் உக்கிரமான, குரூரமான முகம் ஒரு காட்சியில் வெளிப்பட்டு நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. சத்யாவின் தங்கையை தான் முழுதாக பார்த்ததாகவும், எங்கெங்கு மச்சம் இருக்கு சொல்லட்டுமாவென்று தயா சொல்லிவிட்டு தலையை உயர்த்தி வெற்றிக் கொக்கரிப்பு போல் சிரிக்கும்போது, தன் நண்பனின் சகோதரியைப்பற்றி இப்படி சொல்கிறானே என்று கோபமில்லாமல், துளி வருத்தம் கூட காட்டாமல் அந்த களிப்பில் தானும் பங்குகொள்ளும்போதே கிருபா தான் சத்யாவிடம் கொண்டிருந்த நட்புக்கு முடிவுரை எழுதிவிடுகிறான். இறுதிக்காட்சியில் தான் எப்போதோ வாங்கிக்கொடுத்த விரல்களில் நுழையாத மோதிரத்தை ருத்ராட்சக்கொட்டை போல் சத்யா தன் கழுத்தில் இட்டிருப்பதை பார்த்தபின், சத்யாவின் நட்பின் ஆழத்தைப்புரிந்து கொண்டு “சொல்லலையேடா...” என்ற கடைசிவார்த்தைகளோடு கிருபா விழி சொருகுவது நம்மை சற்று வருத்தப்படவைக்கிறது.


“அண்ணா சத்யா நல்லவன்...” என்று படத்தில் பல இடங்களில் கிருபாவின் தங்கை உத்ரா தன் அண்ணனிடம் சொல்லும் காட்சிகள் அருமை. அது படத்தின் உச்சகட்ட காட்சிவரை வந்து செல்கிறது.


தயாவைப்பற்றியும் நிச்சயம் சொல்ல வேண்டும். தயா அடிப்படையில் நல்லவனாக இருந்து மாறினானா இல்லை அவன் அடிப்படையிலேயே அப்படித்தானா என்ற கேள்வி தொக்கிநிற்கிறது. தான் மிலிட்டரியில் பணி புரிந்த போது, தன் சீனியர் ஆபிஸரின் மனைவி தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அதனைத்தொடர்ந்த நிகழ்வுகள் தன்னை இப்படியொரு பாதைக்கு வழி நடத்திவிட்டதாகவும், தன் தரப்பு நியாயத்தை கிருபாவிடம் சொல்லும் தயாவை நம்பலாமா வேண்டாமா என்ற ஐயத்தை உண்டாக்குகிறது.


தயா, லோகு, கிருபா மற்றும் மொட்டை என நான்கு பேர் இருக்கும் கூட்டணியில் இரண்டு பேர் மட்டும் தப்பிப்பதற்கு ஒரு கோழி வேனை தயா ஏற்பாடு செய்யும்போது, பதற்றப்படும் லோகு எங்கே ஒருவேளை தன்னை தயா கொன்றுவிடுவானோ என்றெண்ணி தன்னுடைய ஆளான மொட்டையிடம் தயாவை கொல்ல திட்டமிடுகிறான். ஆனால் நடக்கும் கதையே வேறு. நம்மிடம் இருக்கும் பதில் சொல்லப்படாத கேள்வி இதுதான். தயா திட்டமிட்டபடி தப்பிக்கும்பட்சத்தில் அவனோடு அழைத்துச் செல்லவிருந்த அந்த இன்னொரு நபர் யார்...? கிருபாவா, லோகுவா இல்லை மொட்டையா...?


படம் பார்த்த யாரேனும் உங்கள் கருத்தைச் சரியான காரணத்தோடு சொல்லுங்களேன்.


இப்படம் பற்றி மிக நீ.................ண்ட பதிவெழுதிய தோழர் உண்மைத்தமிழன் அவர்களை தன்னுடைய கருத்தைச்சொல்ல அன்போடு அழைக்கிறேன்.

Monday, February 25, 2008

ஆனந்தவிகடனின் போக்கு - ஒரு வாசகனின் பார்வை


மூன்று ரூபாய்க்கு ஆனந்தவிகடன் விற்ற காலத்திலிருந்து, விகடன் வாசித்து வருகிறேன். அவ்வப்போது விகடனின் தோற்றம் மற்றும் உள்ளீடு மாறும். ஒவ்வொரு மாற்றமும் முன்பில்லாத அளவுக்கு இதழை பொலிவுபடுத்தியே வைத்திருந்தது என்பதில் ஐயமில்லை. புத்தம்புதிய பகுதிகள், பரீட்சார்த்த முயற்சிகள் என விகடனின் அனைத்து அவதாரங்களும் பெரிதும் மகிழ்ந்து கொண்டாடப்பட்டவையே. மதன், சுஜாதா, வைரமுத்து ஆகியோரின் பங்கு மிகவும் சிறப்பாக இருந்த நேரத்தில் மற்ற பகுதிகளும் இவற்றிற்கு இணையாக வரவேண்டுமென்று மிக சிரத்தையோடு எழுதப்பட்டன. விகடனின் ஜோக்குகளுக்கென்று இன்றும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றதென்பது உண்மை.

விகடனிலிருந்து மதன் விலகியதும், சீனிவாசன் பொறுப்பேற்றதும் மிக முக்கியமான நிகழ்வுகளாக நான் பார்க்கிறேன். ஆயினும் மதன் விலகியதை மிகவும் நாகரிகமாக பாலசுப்ரமணியன் கையாண்டார். அவருடைய “வணக்கம்” கட்டுரை விகடனின் வாசகர்களின் மனதில் இன்றும் நிற்கிறது. அந்த நிகழ்விற்கு பின்னர் மதன் “விண் நாயகன்” எனும் இதழைத்தொடங்கி (“இந்தியா டுடே” சைஸில்) நடத்த, அந்த பத்திரிகையைப்பற்றி குமுதம் அரசு பதில்களில் “எழுந்து நின்று பாராட்டி வரவேற்பதாக” எழுதப்பட்டது. ஆயினும் அந்த இதழ் சொற்ப நாட்களில் நின்றுபோயிற்று. இவை நடந்து கொண்டிருந்தபோதிலும் மதன் தன் “ஹாய் மதன்” பகுதியை நிறுத்தாமல் விகடனில் எழுதிக்கொண்டுதானிருந்தார். மதன் விகடனிலிருந்து விலகிய சூட்டோடு குமுதத்தில்கூட ஒரு கட்டுரைத்தொடர் எழுதினார் (பெயர் நினைவிலில்லை).

விகடனில், தலையங்கம் மற்றும் கார்ட்டூன் இரண்டு பக்கங்களில் வரும். சில காலம் மதனின் கார்ட்டூன் இல்லாமலேயே விகடன் வந்ததாகக்கூட நினைவு. பின்பு ஹரனின் கார்ட்டூன்கள் முழுப்பக்க அளவில் ஆசிரியரின் ஒரு பக்க கடிதத்தோடு வரத்துவங்கின. இது கிட்டத்தட்ட இரண்டாவது தலையங்கம் மற்றும் இரண்டாவது முழுப்பக்க கார்ட்டூனாகவே அமைந்தது. மதனை முழுமையாக விலக்கிவிட இயலாத தன்மையாலோ, அடுத்த ஸ்டெப்னி போன்று ஹரனை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்ற உந்துதலினாலோ இது நடந்திருக்கலாம். இது விகடனின் ஆசிரியர் குழுவின் முடிவாக இருக்கலாம். அது நமக்குத் தேவையில்லை. ஆயினும் கார்ட்டூன் ஸ்பெஷலிஸ்ட்டாக விகடன் கொண்டாடிய மதன் இருக்கையிலேயே, இன்னொருவரின் முழுப்பக்க கார்ட்டூனை தொடர்ந்து வெளியிடுவது மதனுக்கு எப்படிவொரு அசூசையான உணர்வைக் கொடுத்திருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தார்களா என்று தெரியவில்லை.

ஹாய் மதனும் இப்போது நான்கு பக்கங்களில் வருவதில், இரண்டு பக்கங்களுக்குக் குறையாமல் புகைப்படங்கள் (பெரும்பாலும் கவர்ச்சிப் படங்கள்) எடுத்துக்கொள்கின்றன. கல்லூரிக்காலத்தில் மதனுக்கு கேள்வி எழுதிப்போட்டு விகடனை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த வாசகன்தான் நான். இப்போது இந்நிலையைப் பார்க்கையில் வருத்தமாகத்தான் இருக்கிறது.

மேலும் சமீபத்திய ஞாநி மற்றும் ஜெயமோகன் விவகாரங்களில், ஆனந்த விகடனின் நிலைப்பாட்டினை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இது இப்படித்தான், இவர்கள் இப்படித்தான் செய்வார்கள் என்று ஆனந்தவிகடனையும் அதே தட்டில் வைத்து அளந்து பார்த்துவிட முடியவில்லை. ஆனந்தவிகடனின் மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையோ அல்லது ஆனந்தவிகடன் என் மீது செம்மைப்படுத்தியிருந்த நம்பிக்கையோ தான் என்னுடைய இந்த சிந்தனைக்குக்காரணம் என்று நினைக்கிறேன்.

மேலும் சமீபத்திய ஆனந்தவிகடனின் கவர்ஸ்டோரிகளும் யூகத்திலான விஷயங்களைக்கொண்டே எழுதப்படுகின்றன. உதாரணம் 1 - “ஷங்கர் இயக்கத்தில் ரோபோவில் அஜீத் தான் நடிக்கிறார் - பேசி விட்டார்கள் - அந்த வட்டாரம் சொல்கிறது - கோடம்பாக்கம் பற்றிக்கொண்டு திகுதிகு வென்று எரிகிறது” - என்கிற ரீதியில் ஒரு அட்டைப்படக் கட்டுரை பரபரப்பாக வெளியானது. மற்ற பத்திரிகைகளில் வராத ஒரு விஷயத்தை தான் முந்தித் தந்து விட்டோம் என்று பறைசாற்றத்தான் இந்த அட்டைப்பட கட்டுரை. ஆனால் நடந்த கதையோ வேறு.

சமீபத்திய விகடனின் அட்டைப்படக் கட்டுரையும் ( “வயசுக்குத் தகுந்த வேஷம்தான் போடணும்!” - அமிதாப் வழியில் ரஜினி) யூகங்களைக் கொண்டே எழுதப்பட்டிருக்கிறது. தலைப்பில் சொல்லப்பட்ட விஷயத்தைப்பற்றி சம்பந்தப்பட்டவர்கள் பேசாத நிலையிலும் கிராபிக்ஸ் செய்யப்பட்ட இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. விகடன் ஆசிரியர் குழு நம்முடைய தமிழ் ப்ளாக்குகளை சமீபகாலமாக படிக்க ஆரம்பித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். கவர்ச்சியான தலைப்பு வைத்து விட்டு அதைப்பற்றி பேசாமல் எழுதப்படும் பதிவுகளின் பாதிப்பாகத்தான் இந்த கட்டுரை வந்திருக்கிறது என்று எண்ணுகிறேன்.

ஆனந்தவிகடனின் தரம் இறங்கி வந்திருப்பதாகவே என் எண்ணத்தில் தோன்றுகிறது. இனியும் என்னால் முன்பு போல ஆவலாவலாக விகடனைத் தேடிப் பிடித்து வாங்கி வரி விடாமல் ஒவ்வொரு படைப்பையும் படிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். இதை எழுதுகையில் கூட ஒரு சொல்லமுடியாத வலியை உணர்கிறேன்.

Saturday, February 23, 2008

கனியிருப்பக் காய்கவர்ந்தற்று...



உன்னை
நினைத்துக்கொண்டே
பேருந்தில் ஏறி
ஏதோ ஒரு நீலச்சுடிதாரை
எட்டிப்பார்த்தபோது
பேருந்திலிருந்து
வள்ளுவன் சொன்னான்...

“கனியிருப்பக் காய்கவர்ந்தற்று...”

கண் கொத்திக் காதல்...




“நீ
திரும்பியே பார்க்காததால்
என் கண்களைக் குத்திக்கொள்ள
முடிவெடுத்திருக்கிறேன்...”

“ஏன் என்னிடம் சொல்கிறாய்..”
என்று கேட்கிறாயா...?

நீதானேடி ஹேர்பின் தரப்போகிறாய்...!

என்ன பார்வையடி...



என்ன பார்வை
உன் பார்வை...
ஒரு பார் (BAR) வை

Friday, February 22, 2008

காதோரக்கவிதைகள்...



உன்
எந்தவொரு சின்ன அசைவினுக்கும்
சந்தோஷக்கூத்தாடும்
உன் காதணி பற்றி என்ன சொல்வது...

“என்னைப்போல இன்னொன்று...”


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


நிமிடத்திற்கொருமுறை
முகத்தில் தவழும்
கூந்தல் குழந்தைகளையெல்லாம்
ஆட்காட்டி விரலால்
சேர்த்தெடுத்து
காதோரம் செருகும்போது
முடிக்கற்றைகளை மட்டுமா
செருகுகிறாய்...
என் மனதையும் சேர்த்துத்தான்

அஞ்சாதே - திரைப்படப் பார்வை


மிக நீ..........ண்ட இடைவெளிக்குப் பிறகு, நல்ல படம் பார்த்த திருப்தியைத்தந்த படம். நட்பை அடிநாதமாக அமைத்து பல தளங்களில் இயங்குகிறது படம். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக அமையும் வாழ்வின் எதார்த்தம்தான் படத்தின் திருப்புமுனை. SI ஆவதே தன் வாழ்நாள் லட்சியமாக செயல்படும் கிருபாவும்(அஜ்மல்), “நான் போலீஸ் வேலைக்கு போகமாட்டேன். எல்லாரும் மாமான்னு கூப்பிடுவாங்க..” என்று சொல்லிக்கொண்டு இலக்கில்லாமல் சுற்றித்திரியும் சத்யாவும் (நரேன்) மிக நெருங்கிய நண்பர்கள். இருவரின் அப்பாக்களும் போலீஸ்காரர்கள். துரத்தும் வாழ்க்கைச்சூழலில் சத்யா SI தேர்வில் (குறுக்கு வழியில்) தேர்ச்சியடைய, கிருபா தோல்வியடைந்து இலக்கின்றி குடித்து அலையும் நிலைக்கு வருகிறான்.


பெண்களை கடத்திவந்து, கற்பழித்து, பணம் பறிக்கும் கும்பலாக லோகுவும் (பாண்டியராஜன்), தயாவும் (பிரசன்னா) இருக்கிறார்கள். இவர்களுடன் தன்முனைப்பின்றி கிருபா இணைகிறான். உச்சபட்சமாக இவர்கள் போலீஸ் IG யின் பெண்களை கடத்துகிறார்கள். அதன் பின் போலீஸ் இவர்களை எப்படி வளைக்கிறது... தயா மற்றும் லோகு என்ன ஆனார்கள்... தன் நண்பன் கிருபாவுக்காக சத்யா என்ன செய்கிறான்... இப்படி பல கேள்விகளுக்கான பதிலை எதார்த்தத்துடன் தருகிறது படம்.


நரேன், அஜ்மல் மற்றும் பிரசன்னா அனைவருக்கும் அற்புதமான களம் அமைத்து தந்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். மூவரும் அதை அற்புதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் படத்தின் அழகு. “அழகிய தீயே...” படத்தில் பார்த்த பிரசன்னாவா இது என்று ஆச்சரியப்படவைக்கும் விதத்தில் மிகவும் தைரியமாக வி்ல்லன் பாத்திரத்தை ஏற்று அசத்தியிருக்கிறார். நீண்ட குர்தாவும், வலது கையில் பெண்கள் ஸ்டைலில் கடிகாரம் கட்டிக்கொண்டு அடிக்கொருமுறை கையைத்திருப்பி மணிபார்க்கும் மேனரிஸமும், வழிந்து தொங்கும் தலைமுடிக்கிடையே சாதாரணமாக ஆனால் கூர்ந்து பார்க்கும் பார்வையுமாக அனைத்து பாராட்டுகளையும் தட்டிச்செல்கிறார் பிரசன்னா. அவருடைய இளமையான குரல் இந்த பாத்திரத்துக்கும் பொருந்தி வந்திருப்பது ஆச்சரியமான மகிழ்ச்சி. இனி இவர் அதிகம் கவனிக்கப்படுவார்.


படத்தின் அறிமுகக்காட்சியிலிருந்து கடைசிவரை பரபரப்பாக வரும் நரேன் சத்யா பாத்திரத்தில் ஜோராக பொருந்துகிறார். ஓவர் ஆக்டிங் போலத்தெரியும் அவருடைய சில பாடி லாங்வேஜ் உறுத்தலாக இருந்தாலும் போகப்போக அது நமக்கு பழகிப் போகும் என்றே தோன்றுகிறது. மலையாள வாசனையோடு அவர் பேசும் தமிழும் அப்படியே. தான் ஏற்றிருக்கும் பாத்திரத்தின் கனமறிந்து ஒவ்வொரு காட்சியிலும் தன்னை முழுமையாக தந்திருக்கும் நரேன் பாராட்டிற்குரியவர். தண்ணி அடித்துவிட்டு வந்து வீட்டுக்குள் வரமாட்டேன் என்று சலம்பும் போதும், தியேட்டரில் “தவமாய் தவமிருந்து..” ராஜ்கிரணைப் பார்த்து விட்டு... “இவன்தாண்டா அப்பன்...” என்று ரவுசு விடும்போதும் நம்மையும் ரசிக்க வைக்கிறார்.


கிருபா எனும் பரிதாபத்துக்குரிய பாத்திரத்தில் தமிழில் அறிமுகமாயிருக்கும் அஜ்மல் ஒரு குறிப்பிடத்தக்க புதுவரவு. கிருபாவின் தங்கையாக வரும் விஜயலட்சுமிக்கும் கதையோட்டத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் அதை பயன்படுத்திக்கொண்டிருப்பதும் சிறப்பு. குருவி என்கிற பாத்திரத்தில் வரும் கை ஊனமானவர் (பெயர் தெரியவில்லை), கால் ஊனமான இன்னொருவர் (அவர் பெயரும் தெரியவில்லை), பாண்டியராஜன், பொன்வண்ணன், MS பாஸகர், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட மற்ற அனைத்து பாத்திரங்களும் தேவையறிந்து படைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பாத்திரமும் சிரத்தையுடன் செதுக்கப்பட்டிருக்கிறது. அனைவரின் பங்களிப்பும் பிரமாதம்.


படத்தின் கேப்டன் மிஷ்கினுக்கு ஆளுயுர பொக்கே கொடுத்து பாராட்டலாம். இந்த திரைக்கதை மிகவும் அற்புதமாக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. தொய்வே ஏற்படாமலும், அதே நேரம் விலாவரியாகவும் சொல்லப்படும் காட்சிகள் மிகப் பிரமாதம். ஒவ்வொரு காட்சியும் மிக நுணுக்கமாக ஆராயப்பட்டு, தேர்ந்த தேடலுக்குப்பின், அந்த சூழலுக்கேற்ப காட்சிப்படுத்தப்பட்டு நம் மனதைக்கவர்கிறது. அடுத்து என்ன அடுத்து என்ன என்ற பதட்டத்தில் நம்மை கடைசிவரை வைத்திருப்பதில் இயக்குனர் வெற்றியடைகிறார். படத்தில் வரும் சின்னச்சின்ன ட்விஸ்ட்டுகளும் லாஜிக்கோடு அமைந்திருப்பது மிகச்சிறப்பு.


சுந்தர் சி.பாபுவின் பாடல்களை தியேட்டரில் தம்மடிக்க வெளியே போகாமல் அமர்ந்து கேட்கலாம். படத்தின் பின்னணி இசைச்சேர்ப்பும் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட்டிருக்கிறது. மகேஷின் ஒளிப்பதிவு ஒவ்வொரு சூழலிலும் அந்த தன்மைக்கேற்ப செயல்படுகிறது. படத்தின் முதல் காட்சி, தரையோடு தரையாக கேமரா சுழலும் காட்சி என தன் இருப்பை பறைசாற்றுகிறார் ஒளிப்பதிவாளர்.


“எனக்கு ஒரு ஃபுல் ஒரிஜினல் சரக்கு வேணும்...” என பிரசன்னா ஒவ்வொரு முறை கேட்கும் போதும் நம் டாஸ்மாக்கில் எல்லாம் டூப்ளிகெட் சரக்குதானோ என்ற அங்கதக்கேள்வி எழுகிறது. குறுக்கு வழியில் SI தேர்வில் தேர்ச்சியடைவதற்கு சத்யா செய்யும் முயற்சிகளும் அந்த செயல்களும் மிகவும் அங்கதத்தோடு நம் சமூக அமைப்பை சாடுகின்றன. ரோட்டில் வெட்டுப்பட்டு உயிருக்குப் போராடிக்கிடக்கும் ஒருவனை காப்பாற்ற சத்யா செய்யும் முயற்சிகளும் அதன் விளைவும் அச்சு அசல் உண்மை நிலையை அப்பட்டமாக காண்பிக்கின்றன. IG யின் பெண் பிள்ளைகள் கடத்தப்பட்டால் போலீஸ் டிபார்ட்மெண்ட் என்ன செய்யும்... சுற்றி நம்மை போலீஸ் வளைக்கும் சூழலில் அதிலிருந்து தப்ப சமூகவிரோதிகள் என்னவெல்லாம் செய்வார்கள்... இப்படி பல சூழ்நிலைகளை ஆய்ந்து நம்பும் விதத்தில் காட்சியமைத்திருப்பது சிறப்பு.


மிகவும் அரிதாக வரும் தரமான படங்களின் வரிசையில் இப்படமும் சேர்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்கும்படியான விஷயங்களும், புத்திசாலித்தனமான ட்விஸ்ட்டுகளும் படத்தை மீண்டும் பார்க்கத்தூண்டும்.

இயக்குனர் மிஷ்கினின் அடுத்த படத்தை எந்த கேள்வியும் கேட்காமல் பார்க்க நான் ரெடி. That is what the promise he is providing in this film. NOT TO BE MISSED MOVIE.


பின்குறிப்பு : இந்த படம் பார்க்கச்செல்லும் அளவு மொக்கை போட்ட நண்பர் முத்தையாவுக்கும், எந்தக்கேள்வியும் கேட்காமல் “சரி போகலாம்...” என்று சொல்லி படம் பார்த்து சிலாகித்த நண்பர் ராகவனுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Friday, February 15, 2008

தேகசாலையில் நடந்து போகையில்...


போக்குவரத்து விதிகளில் சிலவற்றை பொருத்திப் பார்க்கையில் சில சுவாரஸ்யங்கள் முளைத்தன. இனி இந்த விதிகளையெல்லாம் உங்கள் கற்பனையில் பொருத்திப்பாருங்கள். அதற்கெல்லாம் நான் பொறுப்பல்ல...!




நில்
கவனி
செல்


அபாயகரமான
வளைவுகள் முன்னே...
பார்த்துச்செல்லவும்


ஒலி எழுப்பாதீர்கள்



குடித்து விட்டு
வாகனம் ஓட்டாதீர்கள்...

தலைக்கவசம்

உயிர்காக்கும்




Thursday, February 14, 2008

அழகு குத்தியவள்...


உனக்கு வலிக்கவில்லையாடி...
உடல் முழுக்க இப்படி
அழகு குத்தி வைத்திருக்கிறாயே...


காதல் வணக்கம்

காதலே
வணங்குகிறேன் உன்னை...

உன் விஸ்வரூபத்தின் முன்னால்
மிகவும் எளியவனாய் நானிருக்கிறேன்...

மழையாய் வந்து குளிர்வி்த்து செல்கிறாய்...
சுனாமியாய் வந்து விழுங்கியும் செல்கிறாய்...

விழுதுகளால் ஊஞ்சல் கட்டியும் தருகிறாய்...
வேர்களாய் மறைந்து மறைந்தும் போகிறாய்...

ஒளி தந்து வாழ்க்கைப் பாதை காட்டுகிறாய்...
வெப்பமேற்றி மோகத்தீயில் வாட்டுகிறாய்...

தென்றலாய் வந்து தாலாட்டுவதும் நீயே...
சூறாவளியாய் வந்து சுருட்டுவதும் நீயே...

நாளெல்லாம் பரவசப்படுத்துவதும் நீதான்...
நொடிப்பொழுதில் கலவரப்படுத்துவதும் நீதான்...

வயிறுவலிக்க சிரிக்கவைப்பதும் நீதான்...
கண்ணீர் வற்ற அழவைப்பதும் நீதான்...

கடந்தவாரம் கடவுளைக் கூட பார்த்துக் கேட்டேன்...
அவனும் கூட புலம்பிவிட்டுத்தான் போகிறான்...

உன் விஷயம் தெரியாமல்
விஸ்ரூபம் புரியாமல்
கண்ணை மூடி காதலித்துவரும்
அத்துனை பேரையும்
இமை மூடி காத்துவருகிறாய்...

ஆதி அந்தம் புரியாத இறையே...
உனை வணங்குகிறேன்...

போகும் வழியில் அவளைப் பார்த்தால்
சொல்லிவிட்டுப் போ...

“போடி போ... அங்கொருவன்
விழியிரண்டை வீதியில் விட்டு விட்டு
வீட்டுக்குள் குருடனாயிருக்கிறான்...”

Wednesday, February 13, 2008

உன் காதலும்... என் காதலும்...


எனை தூரப்பார்த்து உற்சாகப்படுவதிலும்
பக்கத்தில் வந்து பதட்டப்படுவதிலும்
இடம்வலம்இடம்வலம்இடம்வலம்
என அல்லோலகல்லோலப்படும் உன் விழிகளிலும்
பேசவரும் வார்த்தைகளையெல்லாம்
உதடுமடித்து எனக்கே வலிக்குமளவு நீ கடித்தலிலும்
நீண்டும்சுருங்கியும் நீண்டும்சுருங்கியும்
பாடுபடும் உன் உதடுகளின் ஓரவஞ்சனை சிரிப்புகளிலும்
சரியாயிருக்கும் ஆடையை சரிப்படுத்திக்கொண்டேயிருக்கும்
உன் பதட்டம் தோய்ந்த மென்காந்தள் விரல்களிலும்
வழிந்தோடுகிறது
என் மீதான உன் காதல்

இதையெல்லாம்
கண்டு ரசித்து உண்டு கொழுத்து
பேரண்டமாய் விரிந்து வளர்ந்து
எனை படுத்துகிறது
உன் மீதான என் காதல்

Monday, February 11, 2008

திரைப்பாடல்களில் காதல் கவிநயம்...

அன்பானவர்களுக்கு வணக்கம்...

சமீபத்தில் என் நண்பர் கதிரவனுடன் உரையாடிக்கொண்டிருந்த போது சிவாஜி படப்பாடலில் இருந்து

“ அடடா... குமரியின் வளங்கள்...
குழந்தையின் சிணுங்கல்...
முரண்பாட்டு மூட்டை நீ...” - என்று நாயகியை நாயகன் வர்ணிக்கும் வரிகளைப்பற்றிச் சொன்னபோது “அட இதை கவனிக்கவில்லையே” என்று சொன்னார். இதைப்போன்று பல பாடல்களில் கவனிக்கத்தக்க சிந்தனைகள் உள்ளன. ஆனால் அவை தனியாக வெளிச்சம் போட்டு சொல்லப்படாததால் கவனிக்கப்படாமலேயிருக்கின்றன.

அப்படி கவனிக்கப்படாமல் விடப்பட்ட வரிகளை நாம் தேடிக்கண்டுபிடித்து, மகிழ்ந்து, எழுதி, பிறரையும் மகிழ்விக்கலாமென்று எண்ணினேன். எனக்கு சட்டென்று நினைவிற்கு வரும் வரிகளை இப்போது இங்கு குறிப்பிடுகிறேன். உங்களுக்குத் தோன்றும் வரிகளை மறுமொழியில் சொல்லுங்களேன்...

ஒரே ஒரு விதி மட்டுமே : அவை காதல் வரிகளாக இருக்கட்டும்... இது காதல் மாதமல்லவா...

“கடவுள் கிட்ட கருவறை கேட்டு உன்னை சுமக்கவா...
உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா...
மையிட்ட கண்ணே உன்னை
மறந்தா... இறந்தே போவேன்....” - “உருகுதே... மருகுதே...”

“வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்...
இலையுதிர்காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேராவேன்...” - “ரோஜாவைத்தாலாட்டும் தென்றல்...”

“மறுபடி ஒருமுறை பிறந்தேனே...
விரல்தொட புருவம் சிவந்தேனே...

எனதிரவினில் கசிகிற நிலவொளி நீயே... படர்வாயே..
நெருங்குவதாலே நொறுங்கிவிடாது இருபது வருடம்...” - “ரகசிய கனவுகள்...”

“என்னைவிடவும் என்னை அறிந்தும்... யார் நீ என்று கேட்காதே...
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்
என்னையும் கவிஞன் ஆக்காதே...” - “ குல்முகர் மலரே...”

“இரவைத்திறந்தால் பகல் இருக்கும்
என் இமையைத்திறந்தால் நீயிருப்பாய்...”- “என்மேல் விழுந்த மழைத்துளியே...”

“தனிமையே போ... இனிமையே வா...
நீரும் வேரும் சேர வேண்டும்...” - “பனி விழும் இரவு...”

“கொடி ஒன்று கனி ரெண்டு
தாங்காமல் தாங்காதம்மா....” - “சிங்களத்துச் சின்னக்குயிலே...”

“நீ வெட்டி வெட்டி போடும் நகத்திலெல்லாம்
குட்டி குட்டி நிலவு தெரியுதடி...” - “நீ கட்டும் சேலை...”

“மாமர இலைமேலே மார்கழி் பனி போலே
பூமகள் மடிமீது நான் தூங்கவோ...” - “தூங்காத விழிகள் ரெண்டு...”

“கூந்தலென்னும் ஏணியேறி முத்தமிட ஆசைகள் உண்டு...
நெற்றி மூக்கு உதடு என்றே...
இறங்கி வர படிகளும் உண்டு...” - “ கேளாமல் கையிலே...”

இனி உங்கள் விருப்பங்கள் தொடரலாம்...

Saturday, February 9, 2008

இது முத்தக்காலம்...


உனக்கான வார்த்தைகளை
சேர்த்து வைத்து சேர்த்து வைத்து
சுமக்க முடியாமல் தடுமாறுகிறேன்...

உனக்கான முத்தங்களையெல்லாம்
எப்படி சேகரம் செய்வதென்று
புரியாமல் தடுமாறுகிறேன்...

வார்த்தைகள்
தாமதமாய் வந்தாலும்
அதன் தரம் மறையாது...

ஆனால்
முத்தங்கள் அப்படியா...

ஈரம் காய்வதற்குள்
வாங்கிக்கொள்ள வேண்டாமா...

எத்தனை முறைதான்
ஈரப்படுத்தித் தயார்நிலையில்
வைத்திருப்பதென் உதடுகளை...

உதடுகளும் முத்தங்களும்
மாறி மாறி கேலி செய்கின்றன...

இனி மொத்த காலமும் முத்தக்காலமே...

விரைந்து வா அன்பே...

Friday, February 8, 2008

இனி கவிதை வரும் காலம்...


“நாங்கள்
செய்த தவறென்ன...
எங்களுக்கு ஏன்
சொர்க்கத்தில் இடமில்லை...?”

கேட்டோரிடம்
ஆண்டவன் சொன்னான்...

“கடற்கரைக்குச் சென்று
கால் நனைக்காதோருக்கும்...
பூமிக்குச் சென்று
காதலிக்காதோருக்கும்...
மோட்சத்தில் இடமில்லை...”

Thursday, February 7, 2008

வருவாயா...?


உன்
காதோர
வளைவு முடிகளில்
ஊஞ்சலாட ஆசை...

வருவாயா...
தருவாயா...



“கோல்” - புத்தகப்பார்வை


Eliyahu M. Goldratt என்கிற இஸ்ரேலைச்சேர்ந்த இவர் எழுதிய புத்தகம் 'The Goal' என்கிற பெயரில் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இயற்பியல் பட்டதாரியாக இருந்து Business Consultant ஆக மாறியவர் இவர். இவருடைய ' The Goal ' என்கிற புத்தகத்தை ஒரு தொடராக ஆனந்தவிகடன் வெளியிட்டது. திரு. பாலசுப்ரமணியன் அவர்களின் புதல்வர் திரு.பா.சீனிவாசன் அவர்கள் ஆனந்தவிகடன் பொறுப்பேற்றுக்கொண்டபின் நடந்த சில குறிப்பிட்ட மாற்றங்களில் இதுவும் ஒன்று.

விகடனில் வெளியானபோது தொடர்ச்சியாக படிக்க இயலவில்லை. இதே புத்தகத்தின் ஆங்கில மூலத்தை வாங்கி வைத்தும் பல மாதங்களாகிவிட்டன. ஆனால், சமீபத்திய சென்னை Book Fair-ல் இதன் தமிழ்ப்பதிப்பை வாங்கியிருந்தேன். நேற்றுதான் வாசிக்கலாம் என்று எடுத்தேன். கீழே வைக்க மனம் வரவில்லை. முழுவதுமாக வாசித்துமுடித்துவிட்டேன்.

மிகவும் சுவாரஸ்யமான கதை வடிவில் இந்த புத்தகம் இருப்பதே இதன் வெற்றிக்கு அடிப்படையாகும். ஆனால், வெறும் கதை படிப்பதில் மட்டும் ஆர்வம் இருப்பவர்களால் இந்த புத்தகத்தை படிக்கவியலாது. முப்பதுகளில் இருக்கும், வாழ்க்கைத்தேடலுள்ள, முன்னேறும் எண்ணம் உறுதியாக உள்ள, சற்றேனும் அறிவியல் படித்த எந்த இளைஞனுக்கும், யுவதிக்கும் இந்த புத்தகம் ஒரு வரப்பிரசாதம்.

இந்த புத்தகத்தில் - வெவ்வேறு விதமான மனிதர்களின் சிந்தனைகளும், பிரச்சனைகளின் விஸ்வரூபங்களும், நம்மீதான அலுவலகம் மற்றும் குடும்பம் சார்ந்த எதிர்பார்ப்புகளும், சிந்தனைக்கும் செயலுக்குமான இடைவெளிகளும் - மிக மிக அழகாக விளக்கப்பட்டிருக்கின்றன.

வாழ்க்கையில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளிலிருந்தே Business Management பாடங்களைக் கற்றுக்கொள்ளும் விதம் மிகவும் நேர்த்தியாக சொல்லப் பட்டிருக்கிறது. அதுவும் Herby என்ற மாணவனை தன் Plant - ல் இருக்கும் Machinery களோடு ஒப்பிட்டு தன் பிள்ளைகளோடு கதை நாயகன் விவாதிக்கும் காட்சிகள் இன்னும் மனக்கண்ணில் ஓடுகின்றன.

ஒரு நாவலுக்கான திருப்பங்களுடன் அத்தனை விஷயங்களும் இதில் சொல்லப்பட்டிருப்பதுதான் இந்த புத்தகத்தின் சிறப்பு. கதைமாந்தர்களின் பெயர்கள் நமக்கு சற்று அந்நியப்பட்டு இருக்கலாம். உதாரணம் - பாப் டொனாவன், ஸ்டேஸி, ஜோனா இப்படி பல. நம் கதாநாயகனின் பெயர் கூட அலெக்ஸ் ரோகோ. ஆயினும், உள்ளடக்கத்தை நோக்குகையில் இந்த புத்தகம் மிகவும் பயனுடையதாகத் தெரிகிறது. அதனாலேயே இந்தப்பக்கத்தில் இதை எழுதுகிறேன்.

பதிப்பு - விகடன் பிரசுரம்
தமிழில் எழுதியவர் - அஞ்சனா தேவ்
பக்கங்கள் - 287
விலை - ரூபாய் 100

Wednesday, February 6, 2008

ரோஜா. . .


காலையில் சிரித்த
உன் கூந்தல் ரோஜா
மாலையில் வாடியது ஏன்...?


உன் முகம் பார்க்க
முயன்று முயன்று முடியாததாலா...!

Tuesday, February 5, 2008

இரவு... நிலவு...


இரவு நேர பேருந்து பயணம்
ஜன்னலோர இருக்கை
கூடவே வந்தது நிலவு...


பக்கத்தில் அமர்ந்து

Saturday, February 2, 2008

இந்திரலோகத்தில் நா.அழகப்பன் மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி


நேற்று நடந்த இரண்டு நிகழ்வுகளில் இருந்த ஓர் ஒற்றுமை என்னை வியப்பில் ஆழ்த்தியது.

20 - 20 உலக சாம்பியன் இந்திய அணியும், இதுவரை இந்தியாவிடம் 20 - 20 போட்டிகளில் தோல்வியடைந்தே வந்த ஆஸ்திரேலிய அணியும் ஒரே ஒரு 20 - 20 போட்டியில் மோதின.

“இம்சைஅரசன் 23-ம் புலிகேசி” - என்ற வெற்றிப்படத்தை தந்து, அதே பாதையில் இரண்டாவது முறையாக கதாநாயகன் வேடம் தரித்து வடிவேலு நடித்த “இந்திரலோகத்தில் நா.அழகப்பன்” படம் வெளியானது.

இரண்டு நிகழ்வுகளின் முடிவுகளும் எதிர்பார்க்காதவையாக இருந்தன.

ஹர்பஜன்சிங் வழக்கில் கிடைத்த எதிர்பாராத முடிவிற்கும், இதுவரை இந்தியாவை வெல்ல முடியாமல் இருந்த கடுப்பிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் வஞ்சம் தீர்த்துக் கொண்டனர். இந்திய அணி வென்றுவிடலாம் என்ற அதீத நம்பி்க்கையில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சேவாக் விக்கெட் வீழ்ந்தபிறகு, அணியை வழிநடத்தி செல்லும் ஆட்டம் வழங்க அனுபவ வீரர்கள் யாரும் இல்லை. இந்த அணிதான் கோப்பையை கைப்பற்றியதா என்ற வினா எழுந்தது உண்மைதான். தோனி உள்ளிட்ட வீரர்கள் சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் சோபிக்காத நிலையில், அணியை தங்கள் கட்டுக்கோப்பில் வைத்திருக்க தடுமாறியிருக்கலாம். யுவராஜ் இருந்திருந்தாலும் என்ன செய்திருப்பார் என்பதும் கேள்விக்குறிதான். பதான் மட்டும் இரட்டை இலக்க எண் ஓட்டங்கள் எடுத்தார் என்பது மிகவும் கேவலமான நிலையில் இந்திய பேட்டிங் உள்ளதை உலகிற்கு எடுத்துக்காட்டியது.

அடுத்து வரும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எவ்வளவு தடுமாறப்போகிறது என்பதை நினைத்தால் இப்போதே பயமாக இருக்கிறது. இந்த முறை இறுதி ஆட்டத்தை இந்திய வீரர்கள் பெவிலியனில் அமர்ந்துதான் பார்க்கப்போகிறார்கள் என்று பட்சி சொல்கிறது. பார்க்கலாம்.

இப்படி ஒரு மேட்சிற்கு பிறகு, மனம் நொந்த நிலையில் நம்ம வடிவேலு நடித்த படம் வெளியாகியிருக்கிறதே, அதைப்பார்த்து மனதை தேற்றிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து நண்பர் ராகவனும், நானும் மாயாஜால் செல்ல முடிவெடுத்தோம். மாயாஜால் வலைத்தளத்தில் சென்று பார்த்தால், இரவு 8-30 காட்சிக்கு முன்பக்க ரோவில் மட்டுமே இடம் இருந்தது. நேரில் சென்று பார்க்கலாம், யாரேனும் நண்பர்கள் வராத போது எந்த புண்ணியவானேனும் டிக்கெட்டுகளை விற்கலாம், பின்பக்க ரோவில் அமர வாய்ப்பு கிடைக்கும் என்றெண்ணி கிளம்பி விட்டோம். அப்போது எங்களுக்கு தெரியவில்லை நாங்கள் எப்படி மாட்டப் போகிறோம் என்று... (இது ராஜேஸ்குமார் ஸ்டைல்)

நினைத்தபடியே சற்று பின்புறமாக இரண்டு டிக்கெட்டுகள் கிடைத்தன. படம் ஆரம்பித்த 15 நிமிடங்களிலேயே நெளியத்தொடங்கி விட்டோம். மடமடவென விக்கெட்டுகள் விழுந்த இந்திய அணிபோல படம் தொய்யத்தொடங்கியது. இடைவேளை வரும் வரைக்கே போதும் போதும் என்றாகிவிட்டது. அதன்பிறகும் படம் சூடுபிடிக்கவில்லை. படத்தைப்பற்றி எழுதும் அளவுக்கு படத்தில் ஏதுமில்லை, அந்த பிரமாண்ட அரங்குகளைத்தவிர... யமலோகம் அரங்க நிர்மாணம் பிரமாதம். அவ்வப்போது சிரிப்பலைகளை எழுப்பியதைத்தவிர படம் பெரிதாக ஏதும் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. ஸ்ரேயா அய்யோ பாவம். படம் முழுக்க வயிறைக் காட்டிக்கொண்டு வரும் அந்த ரம்பையும் (கதாநாயகியாம்) அந்தோ பரிதாபம். நாசர் நிலைமை - நாராயண நாராயண. நகைச்சுவைத்தோரணங்களாக தெரியும் படியான காட்சியமைப்புளும், கடைசிவரை வேகமெடுக்காத திரைக்கதையும் நம்மை மிகவும் சோர்வடையச் செய்கின்றன. உலகத்தொலைக்காட்சிகளில் முதன்முறையாக வரும்போது நேரமிருந்தால் பாருங்கள். இப்போதே பார்ப்பேன் என்று அடம்பிடித்தால் நான் சொல்வதற்கு ஒன்று மட்டுமே உள்ளது. முடியல

ஆகவே அடுத்தமுறை வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் படத்தையோ, இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 20-20 போட்டியையோ முறையே டிவியிலும், ஹைலைட்ஸிலும் பார்ப்பது இருதயம் பலவீனமாக இருப்பவர்களுக்கு மிக மிக நல்லது.

Friday, February 1, 2008

சபை வணக்கம்...


அனைவருக்கும் இனிய வணக்கம்.


எந்த எதிர்பார்ப்பும் இன்றி தினம் தினம் சிரிப்போடு மலர்கின்ற மலர்களை, எப்படி நாம் ஊன்றி கவனிப்பதில்லையோ அதைப்போலவே நம் எண்ணத்தில் எழும் பல சிந்தனை ஓட்டங்களையும் நாம் உற்றுக் கவனிப்பதில்லை. எழுதத்துவங்கினால் மட்டுமே நமக்கும் எழுத வருமா வராதா என்கிற உண்மை புரியும். நேரமில்லை என்கிற வறட்டு வார்த்தைகளினால் பயனேதுமில்லை. சரி ஒரு கை பார்த்துவிடலாம் - நமக்கு எழுதவந்தால் நல்லது. சரிவர வரவி்ல்லையென்றால் அதுவும் நல்லது - நம்மைப்பற்றிய புரிதலுக்கு உதவுமே.


கல்லூரி காலத்தில் இருந்த ஆர்வம் இப்போது சற்று மட்டுப்பட்டிருப்பது உண்மைதான் எனினும், இப்போது எழுதுகையில் வார்த்தைகள் இன்னும் வலிமையோடு வரும் என்பதில் உறுதியுள்ளது.


ஏதேனும் கருத்து மாறுபாடுகளோ, வாழ்த்துக்களோ, வருத்தங்களோ எதுவாக இருந்தாலும் பதியுங்கள். அது நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.


இன்று முதல் என்னையும் இந்த வலையுலக வட்டத்திற்குள் இணைத்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.


உங்கள் இதயங்களில் இடம் கொடுங்கள் என்று அன்போடு வேண்டுகிறேன். (இதில் அரசியல் ஏதுமில்லை!!!)



நம்பிக்கையுடன்,

நித்யகுமாரன்


Follow @ersenthilkumar