Monday, August 16, 2010

எண்ணச் சிதறல்கள் – 16.08.10


இனிய நண்பர்களுக்கு வணக்கம்.


ஓசூருக்கு சமீபத்தில் சென்று வந்தேன். தங்கை குடும்பத்தில் வீடு கட்டுகிறார்கள். பெங்களுர் ஹைரோடில் இடது ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த போக்குவரத்துத் துறை வாசகங்கள் காமெடியாகவே இருந்தன. If you want to stay married, divorce speed என்ற வாசகம் முரண் நகையாக இருந்தது. “கவனமாய்ப் போய் வா ரோட்டில் மனைவி காத்திருப்பாள் வீட்டில் என்ற வாசகத்தை முன்பு கவனித்த ஞாபகம். “இதை இப்பவே ஞாபகப் படுத்தறாங்கப்பா...என்று நண்பர் அங்கலாய்த்ததும் நினைவிற்கு வந்தது. வீட்டுக்கு வீடு வாசற்படி.


சென்னைக்கு பேருந்துப் பயணம். ஜன்னலோர இருக்கை. கிட்டத்தட்ட ஆறரை மணி நேரம். அல்ட்ரா டீலக்ஸ் அரசுப் பேருந்து. பயணக்கட்டணம் 175 இந்தியப் பணம் மட்டுமே. நிச்சயமாக தனியார் பேருந்தாக இருந்திருந்தால் குறைந்தது 300 இந்தியப் பணம் கறந்திருப்பார்கள். இருக்கை பின்புறம் எளிதாகவே சாய்ந்தது. முன்புற இருக்கையில் அமர்ந்திருந்த பருவ வயது யுவதி பாதிக்கு மேற்பட்ட நேரம் கைபேசியில் பேசிக்கொண்டே வந்தார். குசுகுசுவென்று ஆங்கிலத்தில். அவ்வப்போது shut up மட்டும் கேட்டது. அந்தப் பக்கமிருந்தது யாரோ என்னவோ? அந்தப் பெண்ணின் தோழனாகவோ தோழியாகவோ இருக்கலாம். காதலனாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன். காதலியாகக் கூட இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் அதை lateral thinking ஆக எடுத்துக் கொள்ளலாம்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


ஒரு அற்புதமான தமிழ்ச் சொல் பற்றி நாம் பார்க்கலாம். ஜன்னல் என்பது போர்த்துக்கீசியச் சொல் என்று பத்தாம் வகுப்பில் படித்ததாக நினைவு. ஜன்னல் என்கிற வார்த்தை இன்று நம்மிடையே மிக மிக நெருக்கமாகிவிட்டது. பல மொழி வார்த்தைகளை தன்னிடம் சேர்த்துக் கொண்டதால்தான் ஆங்கிலம் எல்லாவிடங்களிலும் உயிர் வாழ்கிறது என்பது என் எண்ணம்.


ஜன்னல் என்கிற சொல்லுக்கான தமிழ் வார்த்தை காலதர் என்பதாகும். கால் + அதர் = காலதர். கால் என்றால் காற்று. அதர் என்றால் வழி. காற்று வரும் வழி, அதுவே காலதர். அதர் என்ற பதம் திருக்குறளில் வெகு அற்புதமான ஒரு குறளில் வருகிறது.


ஆக்கம் அதர்வினாய் செல்லும் அசைவிலா

ஊக்கம் உடையான் உலை.


செல்வமானது(ஆக்கம்) வழிகேட்டுச் செல்லும் அசைவில்லாத

ஊக்கம் இருப்பவனிடத்தில்.


வள்ளுவர் வள்ளுவர்தான்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


ஓ பக்கங்கள் கல்கியில் ஆரம்பமாகிவிட்டது. சமரசம் செய்து கொள்ளாத ஞானியின் பண்பு அற்புதம். தான் குரல் தரும் எந்த ஒரு களத்திலும் பொருள் பொதிந்த வாதங்களை முன்வைக்கும் ஞானியிடம் எனக்கு மரியாதை உண்டு. சில மாதங்களுக்கு முன்பு வலைப்பதிவர்களின் நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்ட நிகழ்வில் அவா கலந்து கொண்ட போது, “நான் எப்போதும் குமுதத்தில் எழுதிக்கொண்டே இருந்துவிடப் போவதில்லை“ எனப் பேசினார். அந்த நிகழ்ச்சியில்தான் பெயர் சுருக்கிக் கூப்பிடுவதில் சாரு நிவேதிதாவை “சாநி“ என்று சொல்லலாமா? என விளித்து நகைக்க வைத்தார்.


அந்த மேடையில் பெரிதாய் கண்டனம் தெரிவிக்காத சாரு பிற்பாடு எழுதிய கட்டுரையில், தன் வயதொத்த ஞானி குரல் கமறி கமறி பேசுவதாகச் சொல்லி அவரை உடல் ரீதியாக தாக்கினார். மனுஷ்யபுத்திரனின் உடல் குறையை சுட்டிக்காட்டியதாக ஜெயமோகனிடம் மல்லுக்கு நின்றவரும் இவரே. “உன்னைப் போல் ஒருவனில்மனுஷ்யபுத்திரன் எழுதிய பாடலைப் பற்றி வியந்தோதுகையில் கந்தசாமியில் எழுதப்பட்ட பாடலை ஆகக் கேவலமாக விமரிசித்தவரும் இவரே. சாருவிடம் நடுநிலைத்தன்மை இல்லை. எனவே நம்பகத்தன்மையும் குறைவே.


எண்ணம்போல் எழுதினால் இதுதான் தொல்லை. ஞானியில் ஆரம்பித்தது சாநியில் முடிகிறது.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


திருமதி.செல்வம்


அம்மாவும் தம்பியும்

செல்வத்திற்கு துரோகம்

செய்யமாட்டார்கள்


குடித்து விட்டு

செல்வத்தின் அப்பா

ஆட மாட்டார்


கணவன் முன்னாலேயே

காவ்யாவுக்கு ராம்

பாலியல் தொந்தரவு செய்யமாட்டான்.


யாரு புருஷன் என்று

கல்யாணமாகாத கர்ப்பத்தைக்

காட்டி ப்ரியாவை யாரும்

தர்மசங்கடப் படுத்த மாட்டார்கள்


இரண்டு நாள் தப்பித்தோம்

நாமும் அவர்களும்.


சனி ஞாயிறு வந்துவிட்டது.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

மீண்டும் சந்திப்போம்


அன்பு நித்யன்.

Tuesday, August 10, 2010

எண்ணச் சிதறல்கள் - 10.08.10

ப்ரிய நண்பர்களுக்கு வணக்கம்.


Life is running between pillar and post.வாழ்க்கை எப்போதும் தெளிந்த நீரோடையாக இருந்து விடுவதில்லை. அதனுடைய சுவாரஸ்யமே அதுதான். நம் வாழ்க்கை எனும் நதி நிறைய மாற்றங்களோடு கடலை சென்றடைகிறது. “பொங்கு பல சமயமெனும்...எனத்துவங்கும் கடவுள் வாழ்த்துப் பாடல் நினைவிற்கு வருகிறது. அனைத்து மதங்களையும் நதிகளாக உருவகித்து எழுதப்பட்டிருக்கும் அப்பாடல், இறுதியில் நதிகள் எல்லாம் கடலிலே சென்று கலப்பது போல எல்லா மதங்களும் இறைவனையே சென்றடைகின்றன எனச் சொல்கிறது. அதனைப் போல நம் வாழ்க்கையை இறுதியில் கடலை சென்றடையும் நதியோடு ஒப்பிடுகையில் ஒரு நதியின் பயணம் போலவே நம் வாழ்க்கைப் பயணமும் மிகுந்த சிரமங்கள் நிறைந்ததாகவே இருக்கின்றது. ஆயினும் நதி கடலைச் சென்றடைவதில் எந்த சிரமமும் கொள்வதில்லை. அதனுடைய தன்மைதான் அதற்கு்க் காரணம். நீர் தனக்கென்று எந்த வடிவத்தையும் கொள்வதில்லை.பாறையோ முள்ளோ எது இடைப்பட்டாலும் இடைப்பட்ட வழியில் அது வழிந்தோடி விடுகிறது. அப்படி நாம் இருக்க முடியுமா?


She stole my heart


சமீபத்தில் இந்தப்பாடல் என்னையும் என் பையனையும் கவர்ந்து வைத்திருக்கிறது. Skyscraper களுக்கிடையே அனுஷ்கா போடும் குத்தாட்டம் 10 வினாடிகளே வந்தாலும் கலக்கலாக உள்ளது. சரியான படங்களைத் தேர்வு செய்து நடித்தால் அனுஷ்கா இன்னும் அழுத்தமாய் தன் அடையாளத்தைத் தமிழில் பதிவு செய்யலாம்.


Its Fun and fun only.


சமீபத்தில் நண்பரின் 5 வயது பெண்குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டேன். பிரமாண்ட கேக், உள் அலங்காரங்களை விடவும் மிகவும் பிடித்ததாக அமைந்தது, அங்கு வந்து அலும்பு செய்து கொண்டிருந்த குட்டிக் குழந்தைகள்தான். கிழிந்து கிடக்கும் முகமூடிகளும், உடையும் பலூன் சப்தங்களும், வீலென்று அழுகைகளும்,சின்ன விஷயங்களுக்கே அவர்கள் சந்தோஷப் படுவதுமாக குழந்தைகளின் உலகமே தனிதான். “சந்தோஷம்கிறது நாம அனுபவிக்கிறப்ப தெரியாதுஎன விருமாண்டியில் விருமாண்டி சொல்வது போல, நாம் குழந்தையாய் இருந்தபோது இருந்த மகிழ்வான தருணங்கள் அப்போது நமக்குப் புரிவதில்லைதானோ?


Endhiran counting starts…


ஷங்கரின் எந்திரன் பட ட்ரெயிலரைப் பார்த்தபின்பு உடனே படம் பார்க்கும் ஆர்வம் எகிறியிருக்கிறது. ஒரு ரஜினி இருந்தாலே கொண்டாட்டம். இந்தப் படத்தில் இரண்டு ரஜினிகள். ஆட்டம் பட்டையக் கிளப்பப் போகிறது. ராஜாதி ராஜா படத்தில் பார்த்த ரஜினி கொள்ளை அழகு. அந்த முன்முடியை இழந்த ரஜினியை பார்க்க வருத்தமாயிருக்கிறது, எந்திரன் வெளியீட்டு விழாவில் அவர் பேசிய பேச்சு வெகுவாக என்னைக் கவர்ந்தது. He deserve more than what he is today.


Schumacher on the rise…!


என் பையன் ஒரு கார்ப் பிரியனாக இருக்கிறான். மற்ற எந்த விளையாட்டுப் பொருட்களையும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. Marie பிஸ்கெட் தவிர வேறெதையும் விரும்பி சாப்பிடுவதில்லை. இதைத் தெரிந்து உங்களுக்கு என்னவாகப் போகிறது? சரி விடுங்கள்.


Left eye or right one?


சமீபத்தில் உடனடியாக அடுத்தடுத்து இடைவெளியில்லாமல் இரண்டு படங்களைப் பார்த்து நான் படாதபாடு பட்டேன். இரண்டுமே தியேட்டரில்தான்.அங்காடித்தெரு மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா. இரண்டு படங்களும் முழுமையாக மனதை ஆக்கிரமித்துக் கொண்டன. அப்போதுதான் முடிவு செய்தேன். ஒரு நல்ல படத்தைப் பார்த்த பின் சிறிது இடைவெளி விட்டுத்தான் அடுத்த படம் பார்க்கவேண்டுமென்று. இன்னும் “விண்ணைத்தாண்டி வருவாயாபாடல்களிலேயே மூழ்கி, அதன் hangover லிருந்து இன்னும் வெளிவரவில்லை. எந்திரன் வந்துவிட்டான் அதகளம் பண்ணுவதற்கு. என்ன பண்ணுவதென்று புரியவில்லை.


விரைவில் சந்திக்கலாம்.


We will meet ..... will meet .... meet. (அய்யோ அய்யோ...!)


அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar