Friday, June 10, 2011

ஆரண்ய காண்டம்ரொம்ப நாளாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த படம்.  எக்கச்சக்க எதிர்பார்ப்பை எகிறவிட்டிருந்தார்கள்.  The film deserve all those.

ஒரு Gangster கதைதான்.  முதல் காட்சியில் ஆரம்பித்து திசைக்கு ஒன்றாக கிளைத்து விரியும் படம் ஆரம்பம் முதல் கடைசி வரை கட்டிப் போடுகிறது.  ஓர் இயக்குநர் ஒரு திரைப்படத்திற்காக மெனக்கெடும் அளவிற்கு இந்த படம் அற்புதமான உதாரணம்.   எந்த ஒரு கதாபாத்திரமும் எங்கும் overact செய்யவில்லை.  குறிப்பாக அந்த சிறுவனின் பாத்திரம் வெகு இயல்பு. அவன் dialogue delivery is Excellent.  திரையில் கைதட்டல் வாங்குவதும் அவனது வசனங்கள்தான்.

ஜாக்கி ஷெராப் எந்தளவிற்கு இப்படத்திற்கு தேவையென்ற எண்ணம் எனக்கிருந்தது.  ஆயினும் முதல் மரியாதை சிவாஜியைப் போல இந்த பாத்திரத்தை அவர் தனக்காக வரித்துக் கொண்டு திரையில் கலக்கியிருக்கும் விதம் தமிழ் திரையில் காணக் கிடைக்காத அருகி வரும் விஷயம்.  “ஈஈஈஈ” என அவர் பல்லிளிக்கும் mannerism தனித்துவமாக வருகிறது.

சிறுவனுக்கும் அவன் தந்தைக்குமான உணர்வு பரிமாற்றம் மற்றும் உறவு புரிதல்களை இவ்வளவு குறைவான காட்சிகளில் அவ்வளவு solid ஆக சொல்லப்பட்டிருப்பது அற்புதம்.  அவன் தந்தையின் குரல் quite unique.  உங்களால் அவரது குரலின் தனித்தன்மையை கேட்ட உடனே உணர முடியும்.  உடைந்து வழியும் அந்த குரல் அந்த கதாபாத்திரத்திற்கு அப்படிப் பொருந்திப் போகிறது.

7G யில் பார்த்த ரவிகிருஷ்ணா அப்படியேயிருக்கிறார்.  இந்த பாத்திரத்தை ஒத்துக் கொண்டு அவர் நடித்திருப்பது அவருக்கு நல்லது.  ஹீரோவாகத்தான் வேஷம் கட்டுவேன் என படுத்தாமல் இப்படிப்பட்ட பாத்திரங்களை தேடித் தேடி நடித்தால் அவருக்கான இன்னொரு 7G அமையும் வரையில் நீடித்திருக்கலாம்.

சம்பத் ராஜ் அந்த பாத்திரத்திற்கு கனகச்சிதம்.  சிறுவனுடன் வரும் அவருடைய உரையாடல் சூப்பர்.

ஆரம்பத்தில் வரும் ஆண்ட்டி உஷார் பண்ணுவது பற்றிய விவரணைகள் படத்தின் தன்மையை பார்வையாளனுக்கு உணர்த்தி விடுகின்றன.  இது பவுடர் பூசி பொட்டு வைத்து அலங்கரித்து வரும் மேலோட்டமான படமல்லவென்று.  கடைசியில் அந்தப் பெண்ணின் மனக்குரலாய் வரும் “எனக்கு இந்த சப்பையும்  ஒரு ஆம்பளைதான், எல்லா ஆம்பளைங்களும் சப்பைதான்” என்ற வசனம் இந்த survival of the fittest society யின் ஒரு பரிமாணத்தின் ஒரு துண்டுப் பார்வை.

படத்தின் இசை யுவன். உலகத்தர படத்திற்கு அந்த தரத்திலேயே இசை. Class.

நிறைய காட்சிகளைப் படமாக்கியிருக்கும் விதம் இந்த படத்தின் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரின் ரசனைக்கு சான்று. ரவிகிருஷ்ணா அந்தப் பெண்ணுடன் சுற்றி வரும் Water tank இடமும், நகரும் கேமரா கோணமும் ஒரு உதாரணம்.

எழுதினால் நிறைய எழுதலாம்.  திரையில் பாருங்கள்.
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கும், தயாரிப்பாளர் சரண் அவர்களுக்கும் மரியாதை கலந்த நன்றிகள்.

மக்கள் இப்படத்தை கொண்டாடினால் மேலும் நல்ல படங்கள் வரும்.

அண்ணன் உண்மைத் தமிழனும், தண்டோராஜியும் கேட்டுக் கொண்டதால் எழுதினேன்.  ரொம்ப மாசம் gap விட்டாச்சு.
  

Monday, January 31, 2011

எஸ்ராவுடன் ஓர் உரையாடல்

நீல ஜீன்ஸில் எஸ்ராவும் நானும்
சமீபத்திய புத்தகக் கண்காட்சியில் எஸ்ரா அவர்களின் “உப பாண்டவம்” நாவலை வாங்கினேன். அந்த நாவலை அணுகும் முறைமை பற்றி யாரேனும் நண்பர்களிடம் விவாதிக்க எண்ணியிருந்தேன். அதற்கான வாய்ப்பு அமைய வில்லை. ஆனால் அதை நான் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களிடமே கேட்டுத் தெளிவேன் என்று எண்ணவில்லை.

அது ஒரு மிக மகிழ்ச்சியான இரவு. அரை மணிநேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தது மிகவும் பயனுடையதாயிருந்தது.

வம்சி பதிப்பகத்தின் இரண்டு புத்தகங்கள் வெளியீட்டு விழா நேற்று (29.01.11 - சனிக்கிழமை) பிரசாத் லேபில் நடைபெற்றது. பாலுமகேந்திரா அவர்களின் “கதை நேரம் பாகம் - 2” புத்தகத்தை எஸ்ரா வெளியிட ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக் கொ்ணடார். மிஷ்கின் மொழியாக்கம் (transcreation - நன்றி: பிரபஞ்சன்) செய்த 100 ஹைக்கூ கவிதைகள் அடங்கிய “நத்தை போன பாதையில்” என்கிற புத்தகத்தை ஓவியர் டிராட்ஸ்கி மருது வெளியிட 10 ஒளிப்பதிவாளர்கள் பெற்றுக் கொண்டனர்.


**************************

இந்த விழா இரண்டு அமர்வாக நடந்தது. முதல் அமர்வில் தான் எஸ்ரா அவர்கள் உரையாற்றினார்.

அவருடைய உரைதான் இந்த அமர்வின் ஹைலைட் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க இயலாது. 52 எழுத்தாளர்களின் சிறுகதைகளை எடுத்து அவற்றுக்குப் பொருத்தமான திரைக்கதையாக்கம் செய்து குறும்படமாக வெளியிட்ட பாலுமகேந்திராவின் பங்கு தேசிய அளவில் வேறெந்த மொழியிலும் எந்த கலைஞனாலும் செய்யப்பட்டிராத ஒரு நிகழ்வு என எஸ்ரா சுட்டினார்.

இந்த ஒரு விஷயத்திற்காகவே தமிழ் எழுத்தாளர் குலாம் பாலுமகேந்திராவுக்கு நன்றி செலுத்த கடமைப் பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆறு கதைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு குறும்படங்களாக பரிணமித்த விதத்தை script ஆக ஒரு புத்தகமாகவும், ஒரு cd யில் அந்த குறும்படங்களையும் இணைத்து வெளியிட்டவிதம் வெகு சிறப்பு. திரைத்துறை நண்பர்களுக்கு இது ஒரு சிறந்த பாடப்புத்தகமாக இருக்கும் என்பது என் எண்ணம்.

தான் பேசுகின்ற மையக் கருத்தை ஒத்து தன்னுடைய அனுபவங்களை சரியான விகிதத்தில் இணைக்கும் கலை எஸ்ராவிற்கு அற்புதமாக கைவரப் பெற்றிருக்கிறது. மனுஷ்யபுத்திரன் அவர்கள் ஒரு மேடையில் எஸ்ராவைப் பற்றி சொல்கையில் “அவரிடம் பேசுவதற்கு எப்போதுமே புதிய புதிய விஷயங்கள் இருக்கின்றன” என்றார். அது எவ்வளவு உண்மை என்பதை அவரை பின்தொடரும் வாசகன் நன்கறிவான்.

Tokyo Story என்கிற திரைப்படத்தைப் பற்றி அவர் பகிர்ந்ததும் அப்படித்தான். அந்த படத்தின் காட்சியமைப்புகளை அப்படியே நம் மனக் கண்ணில் பேச்சின் வழியாக மட்டுமே பதிய வைக்கும் திறன் அபாரம்.

தங்களின் வயோதிகத்தில் டோக்கியோவில் இருக்கும் தம் பிள்ளைகளின் வீடுகளுக்கு செல்ல முடிவெடுக்கின்றனர் ஒரு தம்பதியினர். அந்த பிள்ளைகள் ஒவ்வொருவரும் அவர்களை அங்குமிங்குமாக பந்தாட ஒரு பெண்ணின் வீட்டில் அம்மாவை மட்டும் வைத்துக் கொண்டு அப்பாவை வேறிடத்திற்கு செல்லச் சொல்கிறார்கள். எப்போதும் குடையோடு பயணிக்கும் அவர் மறதியில் விட்டு வந்த குடையை எடுத்துக் கொண்டு வரும் தன் மனையியிடம் அவர் சொல்கிறார் “ எப்போதும் ஒன்றாக இருந்த நம்மை வந்த அன்றே இவர்கள் பிரித்து விட்டார்கள்”.

தன் மனைவி இல்லாமல்தான் தான் உயிரோடு இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாக இருப்பதை எண்ணுகிறார் அவர். ஆனால் அவரின் மனைவி இறந்து போக, அப்போதும் துணைக்கு வராத தன் பிள்ளைகளை எண்ணி வருந்தி தன் ஊருக்கு திரும்புகிறார் அவர்.

அவரிடம் ஒருவர் ஒரு ட்ரெயினை சுட்டிக் காட்டி, “அது டோக்கியோவிற்குத்தானே செல்கிறது. நீங்கள் அங்கு திரும்ப செல்வீர்களா?” என்று கேட்க “நான் ஒருமுறை டோக்கியோ சென்று என் மனைவியையே இழந்து விட்டேன். திரும்ப செல்வேனா...?” எனக் கேட்கிறார். அந்த ட்ரெயின் தடதடத்துப் பயணிக்கிறது. அந்த காட்சியில் ஓடுகின்ற ட்ரெயின் நம் மனதில் வெகுவாக பதிகிறது.

பாலுமகேந்திரா ஆண் பெண் உறவுச் சிக்கல்களையே அதிநுணுக்கமாக பதிவு செய்திருப்பதைச் சொன்ன எஸ்ரா, செக்காவின் திருமண வாழ்வு பற்றி நம்மிடையே பகிர்கிறார்.

செக்காவ் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள போடும் நிபந்தனை ஆச்சரியமானது. “திருமணத்திற்குப் பிறகு, நீ உன் ஊரிலேயே இரு, நான் இங்கேயே இருக்கிறேன். வாரம் ஒருமுறை நாம் சந்திக்கலாம். நீ இங்கு வரும் நாளுக்காக நான் இன்றிருக்கும் அதே காதலோடே காத்திருப்பேன். அதே போலே நீயும் காத்திருக்கலாம்.  நாம் என்றும் காதலர்களாகவே இருப்போம். நம் காதலைப் போற்றி வளர்ப்போம்” - இந்த சிந்தனை இந்த வாழ்வுமுறை நமக்கு எந்தளவு இன்றைய சூழலில் ஒத்துவரும் என்பதை விட, அந்த வாழ்வு சிந்தனை நமக்கு தேவையாயிருக்கிறது.

உடைந்து போகும் இந்த வாழ்வின் உறவுகளை, நாம் ஒரு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய வேண்டிய சூழலில் அதன் பல்வேறு பரிமாணங்கள் மற்றும் வழிவகைகள் பற்றி அறிய வேண்டியது அவசியமாகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்த ஒரு வாழ்வை நாம் இன்றும் உற்று நோக்கி பார்க்க வேண்டியதன் அவசியத்தை சொல்கிறார் எஸ்ரா.


**************************

விழா முடிந்தபிறகு, வந்தவர்களும் வாகனங்களும் விரைய விரைய மிச்சமீதமிருந்த சொச்ச நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கையில் எஸ்ரா காணக்கிடைத்தார். அவருடைய openness நேரில் கண்டு மகிழ வேண்டிய ஒன்று.

நான் உங்களின் எளிய வாசகன் என அறிமுகப்படுத்திக் கொண்டு உப பாண்டவம் வாசிக்க வேண்டிய மனோநிலை பற்றி கேட்டேன். அப்படியே நிகழ்ந்த அந்த உரையாடல் அரை மணிநேரம் வரை நீண்டது பேருவகை தந்தது.


தமிழில் டிவியில் நாமெல்லாம் கண்டு ரசித்த மகாபாரதம் மூல புத்தகத்திற்கு justify செய்திருப்பதாகச் சொல்கிறார். ஆங்கிலத்தில் மகாபாரதம் படிக்க சரியான author, Ganguly என்பது அவர் கருத்து.

“உப பாண்டவம் எழுதப் பட வேண்டியதன் அவசியம்தான் என்ன?” என்ற என்னுடைய அதிகப் பிரசிங்கித்தனமான கேள்விக்கும் பொறுமையாக பதிலுரைத்தார் எஸ்ரா. 

“ மகாபாரதம் என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம். காஷ்மீரில் இருக்கும் ஒருவனுக்கும் கன்னியாகுமரியில் உள்ள ஒருவனுக்கும் தெரிந்த கதை மகாபாரதம். அப்படிப்பட்ட தேசிய அடையாளத்தை எழுதிப் பார்க்க நான் ஆசைப் பட்டேன். நான்கு ஆண்டுகள் மிகப் பெரிய கடின உழைப்பை அதற்காகத் தரவேண்டியிருந்தது. இன்று தேசிய அளவில் பாண்டவம் பற்றி எழுதப்பட்ட பல புத்தகங்களில் சிறந்தவற்றை பட்டியலிடுகையில்,  10 சிறந்த புத்தகங்களில் ஒன்றாகவும், 5 சிறந்த புத்தகங்களில் ஒன்றாகவும், 3 சிறந்த புத்தகங்களில் ஒன்றாகவும் “உப பாண்டவம்” உள்ளது. விரைவில் Penguin பதிப்பகத்தில் இருந்து ஆங்கிலத்தில் வெளிவர உள்ளது. மலையாளத்திலும் அது வெளிவர உள்ளது.” - என குறிப்பிட்டார்.


கௌரவர்கள் 100 பேருக்கு ஒரு தங்கை இருப்பது பற்றி சொல்கிறார்.  நமக்கு பரவலாகத் தெரியாத பல விஷயங்கள் மகாபாரதத்தில் உள்ளது.  “அம்மாவை விட வயதான மகன்” என்கிற ஒரு weird logic கொண்டு தேடினாலும் மகாபாரதத்தில் ஒரு பாத்திரம் கிடைக்கிறது என்கிறார்.

திரைப்படங்கள் பக்கம் பேச்சு திரும்பியது. “திரைப்படம் எழுத்து என இரு துறைகளிலும் தனிப்பட்டு பயணிக்க, இரு துறைகளிலும் நிகழும் அனைத்து விஷயங்களைப் பற்றிய தெளிவோடு இருக்க வேண்டிதன் அவசியம் புரிகிறது. எப்படி அதற்கு உங்களை தயார்ப் படுத்துகிறீர்கள் ? ” என வினவினேன். தான் ஒரு தீவிரமான திரைப்பட ரசிகனாக இருப்பது ஒரு முக்கிய காரணம் என்றார். ஆனாலும் தற்போது வெளியாகும் எல்லா திரைப்படங்களையும் முழுமையாக பார்க்க வேண்டியதன் வருத்தத்தையும் பதிவு செய்கிறார்.

“திரைப்படத்தை ஒரு தொழில்நுட்பமாக பார்க்கும் நிலையில் இருக்கும் நீங்கள், திரையில் பார்த்து மகிழும் ஒரு ரசிகனின் மனோநிலையை இழந்து விட்டீர்களா?” - என்ற என் கேள்வியை சிரிப்போடு ஒத்துக் கொள்கிறார்.

“அடுத்த ஷாட் என்ன? அது எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது?  எங்கு வசனம் தேவையாயிருக்கிறது?  எங்கு தேவையில்லாமல் வசனம் எழுதப்பட்டிருக்கிறது?” - இப்படி பல தகவல்களை தான் மனக்குறிப்பில் பதிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் வந்திருப்பதையும் குறிப்பிடுகிறார்.  100 அடி ஷாட்டுக்கு எவ்வளவு நீள வசனம் தேவை என்பதை தான் இப்போது வெகுவாக உணர்ந்திருப்பதாகச் சொல்கிறார்.

இப்படியாக அவருடன் பேசிய தருணங்கள் மிகவும் இனியவையாக மனதில் பதிகின்றன.  நண்பர் ஜாக்கிசேகர் மற்றும் உண்மைத்தமிழன் உடன் இருந்து சுவாரஸ்யப்படுத்தினர்.

எஸ்ரா அவர்களுக்கு மிக்க நன்றி.

Thursday, January 27, 2011

சாருவின் போத்தல்கள்...


இந்தியாவின் ஒரே Auto Fiction எழுத்தாளர் சாருவின் சரக்கு போத்தல்கள் காலியாகி விட்டன. ஆட்டோ ஓட்டிக்கொண்டே fiction எழுதும் திறன் இந்திய துணைக்கண்டத்தில் யாருக்கும் வாய்க்கவில்லை என்பது இங்கு நாம் கட்டாயம் குறிப்பிடவேண்டிய ஒரு விஷயம்.

சமீபத்திய அவருடைய எழுத்துக்களை வாசிக்கையில் நமக்கு தெள்ளத்தெளிவாக தெரிவது அவருடைய சரக்கு போத்தல்கள் காலியான விஷயம்தான். லெதர் பாரில் இதை நிரப்பிக் கொள்ள இயலாது.

சமீபத்தில் என் நண்பர் ஒரு பின் நவீனத்துவ கவிதை எழுதினார்...

ப்ளாட்பாரத்தில்
ஸ்கேல் பென்சில்
விற்பவனிடம்
ஏதேனும் வாங்குங்கள்

அவன் யாருக்கும்
குப்பி கொடுப்பதில்லை
விந்து விற்பதில்லை
கொடுமையாய் எழுதுவதில்லை

அவனிடம்
ஏதேனும் வாங்குங்கள்

அவன் அப்படியே
இருந்து விட்டு்ப் போகட்டும்
ஏதேனும் வாங்குங்கள்

இது ஒரு “பின்” நவீனத்துவக்கவிதை என்பதை சாருவை வாசித்தவர்கள் எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.

வாழ்க்கையை தன் விருப்பப்படி வாழ ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரம் இருக்கிறது. அதனை ஒரு கௌரவமாக வரையறுத்துக் கொள்வது அவரவர் விருப்பம்.

என் நண்பர் ஜாக்கிசேகர் மெரீனா பீச் ப்ளாட்பாரத்தில் ப்ரிடடானியா மில்க் பிகீஸ் அட்டையில் உறங்கிதான் வாழ்க்கையின் இருபதுகளை நகர்த்தினார். அவர் பார்க்காத வேலையில்லை. ஆயினும் குப்பி கொடுக்கவோ கூட்டிக் கொடுக்கவோ அவர் போகவில்லை. அவர் இன்று அவருடைய சொந்த வீட்டில் வாழ்கிறார்.

தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடம் பிடிக்க போராடும் ஒவ்வொரு இளைஞனும் படும் வாழ்க்கைப் போராட்டம் எப்படிப்பட்டது? அவர்களெல்லாம் குப்பி கொடுக்க நினைத்தால் என்னவாகும்? ஒரு ஐந்து கிலோமீட்டர் நீளத்திற்கு வரிசையாக புட்டங்களை காட்டியபடி நிறைய பேரை நிற்க வைக்கலாம். அதை புகைப்படம் எடுக்க நண்பர் ஜாக்கியையே அழைக்கலாம். அதைப்பற்றிய கட்டுரையை சுடச்சுட எழுதும் முதல் எழுத்தாளர் சாருவாகத்தான் இருப்பார்.

இரத்த வங்கியில் இரத்தம் கொடுத்து வாழ்ந்தவர்கள் பற்றிய வரலாற்றைக் கூட நாம் கேட்டுக் கொள்ளலாம். ஆனால் விந்து வங்கியில் விந்து கொடுத்து வாழ்க்கையை நடத்தியது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. வாழ்வின் போக்கு அப்படி...

******

சாருவின் பத்து புத்தகங்களை 1000 ரூபாய்க்கு சல்லிசான விலையில் வெளியிட்ட அன்றே வாங்கியவன் நான். ஆனால் சமீபத்தில் சரோஜாதேவி வெளியீட்டில் தேகம் மட்டும்தான் வாங்கினேன். திரு. எஸ். ராமகிருஷ்ணனி்ன் அன்றைய உரை வெகுவாக பலரைக் கவர்ந்தது. அவர் வாதையைப் பற்றி பேசினார். தேகம் போன்ற ஒரு நாவலை நான் எழுத மாட்டேன். ஆனால் அது எழுதப்பட வேண்டும் என்ற ஒரே ஒரு கருத்தை மட்டுமே அவர் தேகம் சார்ந்து சொன்னார்.

அப்படி தேகம் எழுதப்பட வேண்டியதன் அவசியம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக அதை வாங்கினேன். அதற்கு முன்பாக சாருவை வலையிலே வாசித்தால் மட்டுமே போதும் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டேன். தேகத்தை வாசிப்பதே ஒரு வாதை என்பதை பின்புதான் தெரிந்து கொண்டேன். டவுசர் கிழிந்து தாவு தீர்கிறது என்ற நண்பர் லக்கியின் பிரபல சொலவடையை நான் இங்கு பயன்படுத்த விரும்புகிறேன்.

******

இயக்குனர் மிஷ்கின் அவர்களை சாருவுடனான மேடைகளில் கண்டிருக்கிறேன். அந்த மேடைகளில் பேசுகையில் மட்டும் தான் தன்னால் மனம் விட்டு பல உண்மைகளைப் பேச முடிகின்றதென்று அவர் அந்த மேடைகளிலேயே சொல்லியிருக்கிறார். கடந்த ஆண்டுகளில் ஒருமுறை அவர் நந்தலாலா திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே ஒரு மேடையில் முழுக்க முழுக்க நந்தலாலா பற்றித்தான் பேசினார். சாருவின் புத்தகத்தைப் பற்றி பேசவே இல்லை. அப்போதெல்லாம் சாருவிற்கு மிஷ்கினின் மேல் கோபம் வரவில்லை.

சமீபத்திய கன்னடத்துப் பைங்கிளி பேச்சின் போதுதான் அவருக்கு தீராக் கோபம் தலைக்கேறிவிட்டது. “என்னுடைய எழுத்தை படிக்காமலேயே, நீ மலிவான மஞ்சள் புத்தகங்களுக்கு ஈடானதாக சொல்லிவிட்டாய். நான் உன்னைத் தவிர்க்கிறேன். இனி உன் பேச்சு கா.” - என்று சொல்லிவிட்டு நகர்ந்திருந்தால் அது வேறு.

ஆனால் சாரு பக்கம் பக்கமாக அத்தியாயம் அத்தியாயமாக மிஷ்கினை திட்ட ஆரம்பித்தார். “என்னைச் சொல்கிறாயே... நீ ரொம்ப ஒழுக்கமா? ரெமி மார்ட்டின் இரவுகளில் நீ பகிர்ந்ததை எல்லாம் நான் சொல்லவா...? அப்படிச் சொன்னால் உன்னை தமிழ்நாட்டிலேயே இருக்க விட மாட்டார்கள். நான் சொல்லவா? ஆனால் சொல்லமாட்டேன்... நான் சொல்லவா? ஆனால் சொல்லமாட்டேன்... நான் சொல்லவா? ஆனால் சொல்லமாட்டேன்... நான் சொல்லவா?” - என்று மானிட்டர் (வார்த்தை உதவி தலைவர் தண்டோரா அவர்கள்) அடித்ததைப் போல் புலம்பி வசை பாட ஆரம்பித்தார்.

இந்த துரோகக் கட்டுரைகளின் தொகுப்பு “நண்பனின் துரோகம்” என புத்தகமாக உயிர்மையிலிருந்து வந்து விடுமோ என துர்க்கனவுகள் வர ஆரம்பித்திருக்கின்றன. மனுஷ்ய புத்திரன் அந்தளவு இறங்க மாட்டார் என நம்புகிறேன்.

இதே போன்றதொரு பிணக்கு எஸ்ரா, ஜெமோ போன்றவர்களுக்கு நிகழ்ந்திருந்தால் ஓரிரண்டு வருத்தப் பதிவுகளோடு அடுத்த கட்டங்களுக்குச் சென்றிருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். ஏனென்றால் அவர்கள் உருப்படியாகச் செய்வதற்கு வேறு பல விஷயங்கள் உள்ளன.

குறுக்குச் சாலில் என்ன ஓட்டுகிறார் என்று பார்த்தால் அங்கும் மிஷ்கினின் படம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

அடப்போங்கப்பா என்றாகிவிட்டது.

மிஷ்கின் மேல் எனக்கு ஒரு தனிப்பட்ட வருத்தம் வேறு இருக்கிறது. தேகத்தை சரோஜாதேவிக்கு இணையாக இருக்கிறது என்று சொன்னார். அப்படிச் சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை என்பதே என் கருத்து. சரோஜாதேவி வாசிக்கும் போது கிடைக்கும் எந்த ஒரு மன எழுச்சியும் உடல் சார்ந்த எழுச்சியும் தேகத்தால் கிடைப்பதில்லை. “பின்ன எதை வச்சிக்கிட்டு இந்த மூஞ்சியை சிவாஜின்னும் அந்த மூஞ்சியை பத்மினின்னும் சொன்ன...?” என்று கவுண்டமணி சார் கேட்பதுபோல் கேட்கத் தோன்றுகிறது.

மிஷ்கினும், எஸ்ராவும் சொன்னதால்தான் தேகம் வாங்கினேன். வதைபடுகிறேன். இப்போது ஒத்துக் கொள்கிறேன் தேகம் வாதையைப் பற்றியதுதான் என்று.

சமீபத்திய விஜய் டிவி நிகழ்ச்சியில் மிஷ்கின் அவர்கள் சாருவின் அவதூறு கட்டுரைகளுக்கு, கோர்ட் டவாலி போன்று இவ்வாறு பதிலளித்தார் : “ சாருநிவேதிதா என் நண்பர்... சாருநிவேதிதா என் நண்பர்... சாருநிவேதிதா என் நண்பர்...”.

யுத்தம் செய் படத்திற்கு படம் வருவதற்கு முன்பாக சாரு விமர்சனம் ஏதும் எழுதாததால் அந்தப்படம் நிச்சயம் வெற்றி அடையும் என்று மிஷ்கின் தன் நண்பர்களிடம் சரக்கு இல்லாமலேயே பேசிக் கொண்டதாக கோடம்பாக்கத்து பட்சி சொல்கிறது.

சாரு யுத்தம் செய் பற்றி எதுவும் எழுதாததால் தான் மிஷ்கின் அவரை தன் நண்பர் என்று சொல்லிக் கொண்டிருப்பதாக நாம் கருதுவதற்கும் இடமிருக்கிறது.


******

பெரியவர் சாருவிற்கு (மிஷ்கினும் சசிகுமாரும் தன் மகன் ஸ்தானத்தில் உள்ளவர்கள் என்று அவரே சொல்கிறார்) Auto fiction ஒன்று மட்டுமே வரும். கூடுதலாக பத்தி எழுதுவார். புனைவெழுத்துக்கள் அவருக்கு வருவதில்லை. அது ஒன்றும் தவறில்லை. ஒவ்வொருவருக்குமான பலம் மற்றும் பலவீனங்கள் வேறு வேறானவை.

இனியும் நாம் சாருவை வாசிக்க வேண்டுமானால் அவர் Auto ஓட்டுவதற்கு தேவையான விஷயங்களை புதிதாக வாழ்ந்து விட்டு வந்து பிறகு ஓட்ட ஆரம்பிக்கலாம்.

அது வரை அவர் மூடிக் கொண்டிருக்கலாம்................. தன் பேனாவை.Sunday, January 23, 2011

ஜெயமோகனின் உலோகம்சமீபத்திய புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகனின் உலோகம் நாவலை உடுமலையில் வாங்கினேன்.

பத்து வருடங்களுக்கு முன் பாலகுமாரன் நாவல்கள் வாசித்தபோது கிடைத்த மனவெழுச்சி உண்டானது. போகிற போக்கில் பொட்டிலத்தாற் போல் வாழ்வின் தேவைக்கான பல்வேறு கூறுகளையும் நுட்பமான உடல்மொழி குறிப்புகளையும் அனாயசமாக எழுதிச் செல்கிறார் ஜெமோ.

சாகச எழுத்து வடிவில் இது ஒரு புது விதமான எழுத்து. ஜெயமோகனால் மட்டுமே இப்படி எழுதமுடியும் என எண்ணுகிறேன்.

சார்லஸ் என்கிற சாந்தனின் வாழ்க்கை, அவன் பிறந்த தேசம் அவன் வரித்துக் கொண்ட வாழ்வுமுறை எனஅதன் தளம் அற்புத சித்தரிப்பு. கொள்ளை போன பக்கத்து வீட்டை குறுகுறுப் பார்வையுடன் பார்ப்பது போல இலங்கை நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருக்கும் கண்களுக்கு அந்த களத்தின் நிதர்சனங்களையும் அவர்களின் உலகப் பார்வை மற்றும் வாழ்வு குறித்தான பார்வைகளையும் கோடிட்டுக் காட்டி ரத்தமும் சதையுமான அந்த உலகை நமக்கு இந்த 216 பக்க நாவலில் அறிமுகப் படுத்துகிறார் ஜெமோ.

கதாபாத்திரங்களின் மனவோட்டத்தை விவரிக்கும் போது கதையோட்டத்தில் பயணிக்கும் ஒரு வாசகனுக்கும் அந்த இடம் பொருள் குறித்தான அறச் சிக்கலைத் தோற்றுவிக்கும் விவரணைகள் அற்புதம்.

சுடிதார் துப்பட்டாவின் நுனித்துணியின் தழுவல் சுகத்தையே மாதக்கணக்கில் மனமெங்கும் சுமந்து சுகந்து கொண்டிருக்கும் ஒருவனும், எதிராளியை பாய்ண்ட் பிளாங்கில் சுட்டுத்தள்ளி எந்த மனக்கிலேசம் கொள்ளாமல் கடந்து போகும் ஒருவனும், ஒருவனேயாகும் அதிசயம் இந்த நாவலில் நடக்கிறது. வாழ்க்கை நம்மை எப்படியெல்லாம் அலைக்கழித்து அதன் போக்கினை நம்மிடம் போக்குக் காட்டுகிறது.

ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு வாசகனுக்கும், அவனது வாழ்வனுபவத்தைப் பொறுத்து அந்த கதையோட்டத்தின் களத்தை மனப் பிம்பமாக கட்டமைக்கிறது. உதாரணமாக இந்த நாவலில் வரும் பொன்னம்பலத்தாரின் வீட்டு காம்பௌண்ட் எனக்கு ஒரு விதமாக மனதில் பதியும் மற்றொருவருக்கு வேறு விதமாக பதியும். ஜோர்ஜ் மனைவியின் நிர்வாணமும் அப்படித்தான்.

நாவலின் குன்றாத சுவைக்குக் காரணமான காரணிகள் எல்லாம் இந்த கட்டமைப்புக் களத்தைப் பொறுத்தே அமைகின்றதாக எண்ணுகிறேன்.

ரத்தம் தெறிக்கும் வீச்சையும் அந்த வீச்சத்தையும் என் நாசி உணர்வதை உணர முடிகிறது.

ஜோர்ஜின் மனைவியுடன் சார்லஸ் கலவி முடிந்தபின், அவள் படுத்திருக்கும் காட்சிப்படிமம் இன்னும் மனதில் நிற்கிறது.

மற்றபடி இந்த நாவல் கட்டமைக்கும் அரசியல் சார்ந்த பின்புலன்கள் ஜெமோவே சொல்வதைப் போல விரிவானவை அல்ல. இந்த நாவலின் நோக்கமும் அதுவல்ல எனினும் அவை சற்று அதிர்ச்சி தரக்கூடியவையே.

உலோகம் என்ற தலைப்பிற்கான காரணத்தை முதல் அத்தியாயத்திலேயே ஜெமோ சொல்லும் விதம் அழகு. அது ஜெயமோகன் அவர்களின் திறன்.

புத்தக அட்டையில் குறிப்பிட்டிருப்பதைப் போல இந்த கதையின் களம் நாம் நெருங்கி சுவாசிக்க முடியும் அருகாமையில் அமைந்திருப்பது வாசிப்பு அனுபவத்தில் புதிய தளத்தை அமைக்கிறது.

சார்லஸின் குண்டடிபட்ட காயத்தை வருடிக்கொடுக்கும் எண்ணம் வருவது இந்த உலோகத்தின் வெற்றி.

கிழக்கு பதிப்பக வெளியீடு

GenreNovel
Book Titleஉலோகம்
Pages216
FormatPrinted
Year Published2010
Price:Rs 100.00
Follow @ersenthilkumar