Friday, November 26, 2010

நந்தலாலா - மிஷ்கினின் கரங்களுக்கு முத்தமிட விரும்புகிறேன்...!

தமிழ் சினிமாவில் அத்திப்பூ பூத்திருக்கிறது.

மிஷ்கினின் நந்தலாலா அற்புதமான திரைப்படமாக வந்திருக்கிறது. சித்திரம் பேசுதடி மற்றும் அஞ்சாதே இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த படங்கள்.அஞ்சாதேயின் திரைக்கதையும் கதாபாத்திரங்களும் இன்னும் மனதை விட்டு நீங்காமலிருக்கின்றன.
பாஸ்கர் மணி (மிஷ்கின்), அகில்(அஸ்வத் ராம்) – இருவரும் முக்கிய கதாபாத்திரங்கள். பள்ளியில் படிக்கும் அகில் சிறு வயதிலேயே தன்னை விட்டுச்சென்ற தன் அம்மாவைத் தேட பள்ளி சுற்றுலாவை கட் அடித்துவிட்டு பயணிக்கிறான். சிறுவயதிலேயே மனநல மருத்துவமனையில் தன்னை விட்டுவிட்ட தன் தாயை வெறுத்து நொந்துபோன பாஸ்கர் மருத்துவமனையிலிருந்து தப்பித்து வெளியே வருகிறான். இருவரும் சந்திக்கிறார்கள். சந்தர்ப்பங்கள் அவர்களை இணைத்து ஒரு நேர்கோட்டில் பயணிக்க வைக்கின்றன. அம்மாவைத் தேடும் இரண்டு பேர் தங்கள் பயணத்தில் சந்தித்த விஷயங்கள் என்ன? இறுதியல் தத்தம் அன்னையரை கண்டு கொண்டார்களா? என்பனவற்றை தயவுசெய்து தியேட்டரில் பாருங்கள். இந்த படம் வெற்றி அடைந்தால்தான் நல்ல படங்கள் செய்ய இயக்குநர்கள் முன்வருவார்கள். தமிழ் சினிமாவை நேசிப்பவர்கள் இந்த படத்தை கட்டாயம் நேசிப்பார்கள்.
மிஷ்கின் தவிர வேறு யாரும் இந்த கதாபாத்திரத்தை சிறப்புறச் செய்திருப்பார்களா என்று தெரியவில்லை. நம் கதாநாயகர்களின் இமேஜ் வளையத்திற்குள் இந்த பாஸ்கர் நிச்சயம் பொருந்த மாட்டான். மிஷ்கினின் அசாத்தியமான உடல்மொழி அவரது கதாபாத்திரத்தை அற்புதமாக தாங்கி நிற்கிறது. முடிந்த போது அடிப்பதும் முடியாத போது அடிவாங்கி கதறுவதுமாக அந்த பாத்திரம் இயல்பாக செதுக்கப்பட்டிருக்கிறது. பாஸ்கரின் மனப் பிறழ்வின் நீள அகலங்கள் காட்சியைப் பொறுத்து பதமாக வெளிப்படுகிறது. “மென்டல்என அவரை திட்டியவனை புரட்டியெடுக்கும் காட்சியாகட்டும், “போடா மென்டல்என அகியே அவனை திட்டும் போது ஆற்றாமையில் அரற்றும் அந்த நடிப்பாகட்டும், கீழே விழுந்த தாவணிப்பெண்ணின் முட்டிக் காயத்தை எச்சில் தொட்டு ஆற்றும் போது, அறை வாங்கிக்கொண்டே “வலிக்குதா..?எனக் கேட்பதாகட்டும், “மழையில நனைஞ்சா எல்லா நாத்தமும் போயிடும்என ஸ்நிக்தாவை இழுத்து மழையில் நனைப்பதாகட்டும், திட்டிக்கொண்டே வந்து வீட்டின் பின்புறம் இருக்கும் தன் அம்மாவின் (ரோகிணி) நிலையைப் பார்த்து கதறி தூக்கிக் கொண்டே ஓடி அழுவதாகட்டும், தான் அடிவாங்கும் போது பைக்கில் வந்து சேரும் மிலிட்டரி இரட்டையர்களை பார்த்து மகிழ்ந்து அவர்களிடம் ஓடிச்சென்று தோளில் கைபோட்டு கட்டிக்கொண்டு (ஒரு கையால் பேண்ட்டை பிடித்துக் கொண்டே) “எங்காளு வந்துட்டான் பாரு, இப்ப என்ன பண்ணுவஎன்கிற ரீதியில் முதுகுப் பக்கமாக மட்டுமே உடல் மொழியில் பின்னுவதாகட்டும் – மனிதர் படம் முழுக்க வாழ்கிறார். தேசிய விருது தராவிட்டால் அது மிஷ்கினுக்கு இழப்பல்ல. இப்படி நான் எழுதுவது நிச்சயமாக மிகையில்லை.


அகிலாக வரும் அஸ்வத்ராம் இன்னொரு ஆச்சரியம். குழந்தை நட்சத்திரம் குழந்தையாகவே நடித்திருப்பது இன்னொரு சிறப்பு. ஸ்கூல் யூனிபார்மோடு, ஷூ சாக்ஸ், பாடப்புத்தக மூட்டை, வாட்டர் பாட்டில் சகிதம் – படம் முழுக்க தன் அப்பாவி முகத்தோடு, தன் குடும்பத்தின் மேக்ஸி சைஸ் கலர் போட்டோவுடன் தன் அம்மாவைத் தேடி அலைகிறான். ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பு. நந்தலாலா நல்ல தொடக்கம். அஸ்வத் செல்லவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

இளையராஜா படத்தின் மிகப்பெரிய பலம். அமைதிகாக்க வேண்டிய இடத்தில் அமைதிகாத்து ஆர்ப்பரிக்கும் இடத்தில் கொப்பளித்து வெளிவரும் ஆவேசப் புயலாகவும், தென்றலென தாலாட்ட வேண்டிய பொழுதில் மயிலிறகாய் வருடவும் செய்யும் பிண்னணி இசை தமிழனுக்கே பெருமை. அகிலின் அம்மா பாஸ்கரின் காலைப் பிடித்து கதறும் காட்சியில் வரும் பிண்னணி இசை ஒரு சோறு.

படத்தின் முதல் பிரேமிலேயே இது என்ன மாதிரியான படம் என்பதை மிஷ்கின் தெளிவு படுத்தி விடுகிறார். படத்தின் கேமரா கோணங்கள் நாம் படத்தை அணுக வேண்டிய விதத்தை சொல்லாமல் சொல்கின்றன. அகலமான கேமரா கோணங்களில் தூர வரும் உருவம், பிண்னணி இசையில்லாமல் வரும் வேளைகளும் நம்மை ஆட்கொள்கின்றன. Children of Heaven ல் பார்த்த அக்கா தம்பி கதாபாத்திரங்கள் போல இவ்விரண்டு கதாபாத்திரங்களும் நம்மை கொள்ளை கொள்கின்றன.

ஒரு சூழ்நிலை விபசாரியாக (எல்லாருமே அப்படித்தானோ) வரும் ஸ்நிக்தாவும் கவர்கிறார். பொசுக்கென்று ஆடை அவிழ்க்கும் அவள், ஒரு ஆணின் பேண்ட்டை கீழே விழா வண்ணம் இறுகக்கட்டும் அந்த மழைக் காட்சி ஓர் அழகான முரண்.

லாரி டிரைவர், சைக்கிள் தாவணிப்பெண், பைக் இளைஞர்கள், தேனிலவு தம்பதியர், கால் ஊனமுற்ற நபர், காரில் வரும் பீர் இளைஞர்கள், அகிலின் வீட்டு வேலைக்காரப் பெண், டிவிஎஸ் பைக்கில் வரும் ஐஸ் வண்டிக்காரர், விபசாரியைத் துரத்தி வரும் தாத்தா தலைமையிலான கோஷ்டி - என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் வந்து போகும் காட்சிகள் அனைத்தும் சிறப்பான சிறுகதை வடிவில் அமைந்து அழகூட்டுகின்றன.

தமிழில் இப்படியெல்லாம் ஒரு படம் வருமா என்ற நீண்ட நாள் ஏக்கத்தை நிறைவேற்றியிருக்கும் மிஷ்கினுக்கு எனது அன்புகள். இந்த திரைக்கதை எழுதிய அவர் கைகளை நான் முத்தமிட விரும்புகிறேன்.

அன்பு நித்யன்.

Monday, August 16, 2010

எண்ணச் சிதறல்கள் – 16.08.10


இனிய நண்பர்களுக்கு வணக்கம்.


ஓசூருக்கு சமீபத்தில் சென்று வந்தேன். தங்கை குடும்பத்தில் வீடு கட்டுகிறார்கள். பெங்களுர் ஹைரோடில் இடது ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த போக்குவரத்துத் துறை வாசகங்கள் காமெடியாகவே இருந்தன. If you want to stay married, divorce speed என்ற வாசகம் முரண் நகையாக இருந்தது. “கவனமாய்ப் போய் வா ரோட்டில் மனைவி காத்திருப்பாள் வீட்டில் என்ற வாசகத்தை முன்பு கவனித்த ஞாபகம். “இதை இப்பவே ஞாபகப் படுத்தறாங்கப்பா...என்று நண்பர் அங்கலாய்த்ததும் நினைவிற்கு வந்தது. வீட்டுக்கு வீடு வாசற்படி.


சென்னைக்கு பேருந்துப் பயணம். ஜன்னலோர இருக்கை. கிட்டத்தட்ட ஆறரை மணி நேரம். அல்ட்ரா டீலக்ஸ் அரசுப் பேருந்து. பயணக்கட்டணம் 175 இந்தியப் பணம் மட்டுமே. நிச்சயமாக தனியார் பேருந்தாக இருந்திருந்தால் குறைந்தது 300 இந்தியப் பணம் கறந்திருப்பார்கள். இருக்கை பின்புறம் எளிதாகவே சாய்ந்தது. முன்புற இருக்கையில் அமர்ந்திருந்த பருவ வயது யுவதி பாதிக்கு மேற்பட்ட நேரம் கைபேசியில் பேசிக்கொண்டே வந்தார். குசுகுசுவென்று ஆங்கிலத்தில். அவ்வப்போது shut up மட்டும் கேட்டது. அந்தப் பக்கமிருந்தது யாரோ என்னவோ? அந்தப் பெண்ணின் தோழனாகவோ தோழியாகவோ இருக்கலாம். காதலனாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன். காதலியாகக் கூட இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் அதை lateral thinking ஆக எடுத்துக் கொள்ளலாம்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


ஒரு அற்புதமான தமிழ்ச் சொல் பற்றி நாம் பார்க்கலாம். ஜன்னல் என்பது போர்த்துக்கீசியச் சொல் என்று பத்தாம் வகுப்பில் படித்ததாக நினைவு. ஜன்னல் என்கிற வார்த்தை இன்று நம்மிடையே மிக மிக நெருக்கமாகிவிட்டது. பல மொழி வார்த்தைகளை தன்னிடம் சேர்த்துக் கொண்டதால்தான் ஆங்கிலம் எல்லாவிடங்களிலும் உயிர் வாழ்கிறது என்பது என் எண்ணம்.


ஜன்னல் என்கிற சொல்லுக்கான தமிழ் வார்த்தை காலதர் என்பதாகும். கால் + அதர் = காலதர். கால் என்றால் காற்று. அதர் என்றால் வழி. காற்று வரும் வழி, அதுவே காலதர். அதர் என்ற பதம் திருக்குறளில் வெகு அற்புதமான ஒரு குறளில் வருகிறது.


ஆக்கம் அதர்வினாய் செல்லும் அசைவிலா

ஊக்கம் உடையான் உலை.


செல்வமானது(ஆக்கம்) வழிகேட்டுச் செல்லும் அசைவில்லாத

ஊக்கம் இருப்பவனிடத்தில்.


வள்ளுவர் வள்ளுவர்தான்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


ஓ பக்கங்கள் கல்கியில் ஆரம்பமாகிவிட்டது. சமரசம் செய்து கொள்ளாத ஞானியின் பண்பு அற்புதம். தான் குரல் தரும் எந்த ஒரு களத்திலும் பொருள் பொதிந்த வாதங்களை முன்வைக்கும் ஞானியிடம் எனக்கு மரியாதை உண்டு. சில மாதங்களுக்கு முன்பு வலைப்பதிவர்களின் நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்ட நிகழ்வில் அவா கலந்து கொண்ட போது, “நான் எப்போதும் குமுதத்தில் எழுதிக்கொண்டே இருந்துவிடப் போவதில்லை“ எனப் பேசினார். அந்த நிகழ்ச்சியில்தான் பெயர் சுருக்கிக் கூப்பிடுவதில் சாரு நிவேதிதாவை “சாநி“ என்று சொல்லலாமா? என விளித்து நகைக்க வைத்தார்.


அந்த மேடையில் பெரிதாய் கண்டனம் தெரிவிக்காத சாரு பிற்பாடு எழுதிய கட்டுரையில், தன் வயதொத்த ஞானி குரல் கமறி கமறி பேசுவதாகச் சொல்லி அவரை உடல் ரீதியாக தாக்கினார். மனுஷ்யபுத்திரனின் உடல் குறையை சுட்டிக்காட்டியதாக ஜெயமோகனிடம் மல்லுக்கு நின்றவரும் இவரே. “உன்னைப் போல் ஒருவனில்மனுஷ்யபுத்திரன் எழுதிய பாடலைப் பற்றி வியந்தோதுகையில் கந்தசாமியில் எழுதப்பட்ட பாடலை ஆகக் கேவலமாக விமரிசித்தவரும் இவரே. சாருவிடம் நடுநிலைத்தன்மை இல்லை. எனவே நம்பகத்தன்மையும் குறைவே.


எண்ணம்போல் எழுதினால் இதுதான் தொல்லை. ஞானியில் ஆரம்பித்தது சாநியில் முடிகிறது.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


திருமதி.செல்வம்


அம்மாவும் தம்பியும்

செல்வத்திற்கு துரோகம்

செய்யமாட்டார்கள்


குடித்து விட்டு

செல்வத்தின் அப்பா

ஆட மாட்டார்


கணவன் முன்னாலேயே

காவ்யாவுக்கு ராம்

பாலியல் தொந்தரவு செய்யமாட்டான்.


யாரு புருஷன் என்று

கல்யாணமாகாத கர்ப்பத்தைக்

காட்டி ப்ரியாவை யாரும்

தர்மசங்கடப் படுத்த மாட்டார்கள்


இரண்டு நாள் தப்பித்தோம்

நாமும் அவர்களும்.


சனி ஞாயிறு வந்துவிட்டது.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

மீண்டும் சந்திப்போம்


அன்பு நித்யன்.

Tuesday, August 10, 2010

எண்ணச் சிதறல்கள் - 10.08.10

ப்ரிய நண்பர்களுக்கு வணக்கம்.


Life is running between pillar and post.வாழ்க்கை எப்போதும் தெளிந்த நீரோடையாக இருந்து விடுவதில்லை. அதனுடைய சுவாரஸ்யமே அதுதான். நம் வாழ்க்கை எனும் நதி நிறைய மாற்றங்களோடு கடலை சென்றடைகிறது. “பொங்கு பல சமயமெனும்...எனத்துவங்கும் கடவுள் வாழ்த்துப் பாடல் நினைவிற்கு வருகிறது. அனைத்து மதங்களையும் நதிகளாக உருவகித்து எழுதப்பட்டிருக்கும் அப்பாடல், இறுதியில் நதிகள் எல்லாம் கடலிலே சென்று கலப்பது போல எல்லா மதங்களும் இறைவனையே சென்றடைகின்றன எனச் சொல்கிறது. அதனைப் போல நம் வாழ்க்கையை இறுதியில் கடலை சென்றடையும் நதியோடு ஒப்பிடுகையில் ஒரு நதியின் பயணம் போலவே நம் வாழ்க்கைப் பயணமும் மிகுந்த சிரமங்கள் நிறைந்ததாகவே இருக்கின்றது. ஆயினும் நதி கடலைச் சென்றடைவதில் எந்த சிரமமும் கொள்வதில்லை. அதனுடைய தன்மைதான் அதற்கு்க் காரணம். நீர் தனக்கென்று எந்த வடிவத்தையும் கொள்வதில்லை.பாறையோ முள்ளோ எது இடைப்பட்டாலும் இடைப்பட்ட வழியில் அது வழிந்தோடி விடுகிறது. அப்படி நாம் இருக்க முடியுமா?


She stole my heart


சமீபத்தில் இந்தப்பாடல் என்னையும் என் பையனையும் கவர்ந்து வைத்திருக்கிறது. Skyscraper களுக்கிடையே அனுஷ்கா போடும் குத்தாட்டம் 10 வினாடிகளே வந்தாலும் கலக்கலாக உள்ளது. சரியான படங்களைத் தேர்வு செய்து நடித்தால் அனுஷ்கா இன்னும் அழுத்தமாய் தன் அடையாளத்தைத் தமிழில் பதிவு செய்யலாம்.


Its Fun and fun only.


சமீபத்தில் நண்பரின் 5 வயது பெண்குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டேன். பிரமாண்ட கேக், உள் அலங்காரங்களை விடவும் மிகவும் பிடித்ததாக அமைந்தது, அங்கு வந்து அலும்பு செய்து கொண்டிருந்த குட்டிக் குழந்தைகள்தான். கிழிந்து கிடக்கும் முகமூடிகளும், உடையும் பலூன் சப்தங்களும், வீலென்று அழுகைகளும்,சின்ன விஷயங்களுக்கே அவர்கள் சந்தோஷப் படுவதுமாக குழந்தைகளின் உலகமே தனிதான். “சந்தோஷம்கிறது நாம அனுபவிக்கிறப்ப தெரியாதுஎன விருமாண்டியில் விருமாண்டி சொல்வது போல, நாம் குழந்தையாய் இருந்தபோது இருந்த மகிழ்வான தருணங்கள் அப்போது நமக்குப் புரிவதில்லைதானோ?


Endhiran counting starts…


ஷங்கரின் எந்திரன் பட ட்ரெயிலரைப் பார்த்தபின்பு உடனே படம் பார்க்கும் ஆர்வம் எகிறியிருக்கிறது. ஒரு ரஜினி இருந்தாலே கொண்டாட்டம். இந்தப் படத்தில் இரண்டு ரஜினிகள். ஆட்டம் பட்டையக் கிளப்பப் போகிறது. ராஜாதி ராஜா படத்தில் பார்த்த ரஜினி கொள்ளை அழகு. அந்த முன்முடியை இழந்த ரஜினியை பார்க்க வருத்தமாயிருக்கிறது, எந்திரன் வெளியீட்டு விழாவில் அவர் பேசிய பேச்சு வெகுவாக என்னைக் கவர்ந்தது. He deserve more than what he is today.


Schumacher on the rise…!


என் பையன் ஒரு கார்ப் பிரியனாக இருக்கிறான். மற்ற எந்த விளையாட்டுப் பொருட்களையும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. Marie பிஸ்கெட் தவிர வேறெதையும் விரும்பி சாப்பிடுவதில்லை. இதைத் தெரிந்து உங்களுக்கு என்னவாகப் போகிறது? சரி விடுங்கள்.


Left eye or right one?


சமீபத்தில் உடனடியாக அடுத்தடுத்து இடைவெளியில்லாமல் இரண்டு படங்களைப் பார்த்து நான் படாதபாடு பட்டேன். இரண்டுமே தியேட்டரில்தான்.அங்காடித்தெரு மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா. இரண்டு படங்களும் முழுமையாக மனதை ஆக்கிரமித்துக் கொண்டன. அப்போதுதான் முடிவு செய்தேன். ஒரு நல்ல படத்தைப் பார்த்த பின் சிறிது இடைவெளி விட்டுத்தான் அடுத்த படம் பார்க்கவேண்டுமென்று. இன்னும் “விண்ணைத்தாண்டி வருவாயாபாடல்களிலேயே மூழ்கி, அதன் hangover லிருந்து இன்னும் வெளிவரவில்லை. எந்திரன் வந்துவிட்டான் அதகளம் பண்ணுவதற்கு. என்ன பண்ணுவதென்று புரியவில்லை.


விரைவில் சந்திக்கலாம்.


We will meet ..... will meet .... meet. (அய்யோ அய்யோ...!)


அன்பு நித்யன்.

Thursday, July 29, 2010

இருப்பைச் சொல்வதைத் தவிர வேறென்ன?


சீரியல் வேளைகளில்

கவனிக்கப்படா குழந்தையின்

ஓங்கி அரற்றிய அழுகையிலும்...


நல்ல சாப்பாட்டையும்

சாப்பிட முடியாத தாத்தா

உப்பில்லையென சடாரென படும் கோபத்திலும்...


புதுச் சுடிதார் கேட்டு ஒரு மாதம்

கடந்தும் கண்டுக்காத கணவனிடம்

“என்ன சொகத்தைக் கண்டேன்...”

எனத் துவங்கும் ஒரு கண் கசப்பிலும்...


பண்டிகைத் துணி எடுக்க

கணக்கு போடுகையில்

படுக்கையறையிலிருந்து வரும்

அம்மாவின் வயதான இருமலிலும்...


ஒரு மாசமாச்சே எனும் நினைப்பில்

ஓட்டே வராத மொக்கைக் கவிதை

எழுதும் நாலு வரி பதிவிலும்...


இருப்பதென்னவோ

“இருப்பைச் சொல்லும்“

ஆதியுணர்வேயன்றி வேறில்லை...


குறிப்பு

இதை எழுதுகையில் கூடவே இருந்து தன் இருப்பைக் காட்ட நக்கீரன் போல் குற்றம் கண்டுபிடித்து திருத்தும் முயற்சியில் ஈடுபட்ட என் மனைவிக்கு நன்றி.

Tuesday, July 27, 2010

மெட்டி...


தோடு
வளையல்
சங்கிலி
மோதிரம்
கொலுசு

அப்பாடா அவ்வளவுதான்...

கொஞ்சம் பொறு
மெட்டியோடு வருகிறேன்.

Thursday, July 22, 2010

நாய்ப்பொழப்பு


கல்லெடுக்கையில்
ஓங்கி குரலெடுத்து
புறமுதுகிட்டு ஓடும்
நாயைப் பார்க்கையில்...

தனியனில்லை
எனும் நம்பிக்கை
குரூரப் புன்னகையுடன்
மேலெலுகிறது...

“வலியார்முன் தன்னை நினைக்க...”
என்று குறள் சொல்லி
திரும்பி வந்தாலும்
“ரௌத்திரம் பழகச்...”
சொன்ன பாரதி
கனவில் வந்து
செருப்பாலடிக்கிறான்...

Wednesday, July 21, 2010

நாட்காட்டி


நல்லநேரம்
ராகு காலம்
எமகண்டம்
குளிகை
வாஸ்து
பொன்மொழி
ராசிபலன்
விடுமுறை

இப்படி எல்லாம் சொல்கிறது...

உன் வருகையைத்தவிர...

பொய்யாகவேனும் சொல்லலாமே
உன்னைப் போல...

Tuesday, July 20, 2010

போ... போ...


எப்போதுமில்லாமல்
எப்போதேனும்
வருவதால்தான்...

அது அழகு...

தொடர்ந்து இருந்தால்
வானவில் கூட
சலித்துப்போகலாம்...

சரி சரி
சீக்கிரம் கிளம்பு...

Thursday, April 29, 2010

லிங்கு, கனி மற்றும் ஜெஸ்ஸி, கார்த்திக் - சிறு குறிப்புஅன்பு நண்பர்களுக்கு ப்ரிய வணக்கங்கள்.

சமீபத்தில் திரையில் பார்த்து லயித்த படங்கள் இரண்டு. விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அங்காடித்தெரு.
ஒன்றுக்கொன்று சற்றும் சம்பந்தம் சொல்லமுடியாத திரைப்படங்கள். கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி மனதில் நின்று கொண்டிருந்தார்கள். பாவம் கார்த்தி. He deserve something better than Jessy என்று மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. த்ரிஷா ஒரு பேட்டியில் சொன்னதைப்போல கார்த்திக்கும் ஜெஸ்ஸியும் சேர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று மனதில் பட்டது.

But one fine morning, ஜெஸ்ஸி எப்படி தன் இருப்பைக் காட்டிக்கொள்வாள் என்பதில் சந்தேகம் வந்து, கார்த்திக்கை ஜெஸ்ஸியிடம் இருந்து காப்பாற்றிய விதிக்கு (கௌதம் வாசுதேவ் மேனன்) நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு திரைப்படமாக மிகச் சிறப்பான அம்சங்களோடு மிளிரும் படம் இது. திரைக்கதை உத்திகள் அற்புதம். நம் அல்லா ரக்கா ரஹ்மானின் பாடல்கள் இன்று வரை மனதை மிகவும் படுத்திக் கொண்டே இருக்கின்றன. அற்புதமான Album. Master piece என்று சொன்னது கூட உண்மைதான்.

சிம்புவின் நடிப்பு ஒரு அற்புதமான கட்டத்தை எட்டியிருக்கிறது. த்ரிஷாவும் சிரிக்காமல் சிரித்து, அழகாய் மழுப்பி, ஆசையில் திளைத்து, மீள முடியாமலும், ஆள முடியாமலும் தவித்த தவிப்பு - அற்புதம். She is too hot.

கௌதமின் படைப்புகளில் இது ஓர் அழகு நிறைந்த படைப்பு. அவர் ஒரு பேட்டியில் சொன்னதைப் போல, தோற்றுப் போகும் காதல்தான் ஒரு படைப்பாக நிற்கும் என்பதும் உண்மைதான். Dr.விஜய் நடித்த பாசிலின் “காதலுக்கு மரியாதை” வேறொரு விதமான தளத்தில் மின்னியதும் தற்போது நினைவிற்கு வருகிறது.

* * * * * * * * * * * * * * * * * * * * * * *
“அங்காடித்தெரு” தமிழில் ஒரு தைரியமான, சுதந்திரமான, தேவையான, காத்திரமான படைப்பு. கனியும் லிங்குவும் நம் கண் முன்னே நடமாடும் மனிதர்கள். அவர்களின் வாழ்க்கைக் களம் இதுவரை explore செய்யப்படாததாக அமைந்தது இயக்குநரின் பலம் மற்றும் பலவீனம். அதை அவர் கையாண்ட விதத்தில் அவர் அபரிமிதமான வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

வசந்தபாலனின் வெயில் அதிகம் வெக்கையையே கக்கியது. அங்காடித்தெரு இயல்பாக மெதுவாக சந்தோஷமாகத்தான் பயணிக்கிறது.

வெயிலில் ஒரு காட்சி வரும். தியேட்டர் ஆபரேட்டிங் அறையில் பசுபதியும் கதை நாயகியும் கையுங்களவுமாக பிடிபட, அதைத் தொடர்ந்து வரும் காட்சி. அதே போல் காதல் திரைப்படத்தில் பரத்தையும் சந்தியாவையும் அவர்களின் திருமணத்திற்குப்பிறகு சென்னையில் கண்டு பிடித்து, மதுரைக்கு அழைத்து வந்து பரத்தை உருட்டிவிட்டு உதைக்கும் காட்சி. இந்த காட்சிகள் நீண்ட காலத்திற்கு மனதை பிசைந்து வந்தது. ஆனால், கௌதமின் விண்ணைத்தாண்டி வருவாயாவில் கார்த்திக் ஜெஸ்ஸியை அவள் வீட்டு தோட்டத்தில், இரவு நேரத்தில் Just like that வந்து பார்த்து, ஊடோடி, கட்டிப்பிடித்து,..... என்னென்னவோ செய்துவிட்டு மாட்டிக்கொள்ளாமல் போய்விடுவார்.

அங்காடித்தெருவில் லிங்கு கனியுடன் வேலைசெய்யும் இன்னொரு ஜோடி மாட்டிக் கொள்ளும் காட்சியும் அப்படித்தான் தடதடவென படபடக்கிறது.

ஜெயமோகனின் one liner கள் படத்தை மேலும் சுவாரஸ்யப்படுத்துகின்றன. கனியாக வாழ்ந்திருக்கும் அஞ்சலியின் நடிப்பு அற்புதம். படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்தப் பெண்ணை நான் காதலிக்கத் தொடங்கிவிட்டதாக படம் பார்க்க வந்த நண்பர் ஜாக்கி சேகர் சொன்னார். கற்றது தமிழிலேயே அஞ்சலி அற்புதம்.

அற்புதமான திரைப்படம். உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * *

நண்பர் ஜாக்கிசேகர் அவர்கள் பணிபுரிந்த விஜய் படம் நாளை திரைக்கு வருகிறது. சன் டிவியில் 30 நிமிடத்திற்கு மூன்று முறை வரும் சுறா விளம்பரத்தை பொது நல வழக்கு போட்டு தடுக்க வாய்ப்பிருக்கிறதா?

நண்பரோடு நாளை படம் பார்த்துவிட்டு உடல் நலக்குறைவு ஏற்படாமல் இருந்தால் சுறாவைப் பற்றி புட்டு வைக்கிறேன். “சுறாப்புட்டு” - அட தலைப்பு கூட சிக்கி விட்டதே.

அன்புடன்,
நித்யகுமாரன்.

Wednesday, March 24, 2010

ஜாக்கி சேகர் பதிவெழுதாததன் மர்மம் என்ன?
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

மிக நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு பதிவு. உண்மையை சொல்ல வந்தேன்.

சமீபத்தில் நண்பர் ஜாக்கி சேகரின் புதுமனை புகுவிழாவிற்கு கொளப்பாக்கம் சென்று வந்தேன். அண்ணன் உண்மைத்தமிழன், பைத்தியக்காரன் உள்ளிட்ட நண்பர்களைக் கண்டு உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி.
கடல் கடந்து பெரும்பாலும் மன உதவி (ஆறுதல்) கிடைக்கும். ஆனால் ஜாக்கிக்குக் கிடைத்ததோ பண உதவி. ஜாக்கி தம்பதியர் என் வீட்டுக்கு வந்திருந்த போது, என்னிடம் சொல்லிச் சொல்லி அசந்து போனார் வலையுலக அண்ணி. எனக்கு “கண்கள் பனித்தன இதயம் இனித்தது”. கல்கி ஆசிரமத்து சீடர்களைப் போல பரமானந்தத்தில் இருந்தார் ஜாக்கி. இன்னும் கொஞ்சம் கையைக் கடிப்பதாக சொல்லுகிறார். வர வேண்டிய இடத்திலிருந்து வரவேண்டும் போலிருக்கிறது. வரட்டும்.
நண்பர் ஜாக்கி, பட்டை தீட்டப்படாத வைரம் போன்றவர். புறப் பார்வைக்கு அவரின் அருமை தெரியாது. அவரைப் புரிந்து கொண்டால் அது சிறப்பான அறிமுகமாக இருக்கும். எந்த நேரம் வீட்டுக்குப் போனாலும் ஏதாவது ஒரு மொக்கைப் படமேனும் பார்த்துக் கொண்டிருப்பார்.
அவரிடம் நான் ஆச்சரியப்பட்டுப் பார்க்கும் விஷயம் என்னவென்றால், அவர் ஆங்கிலப் படங்களைப் பார்க்கும் வழக்கம். அதுவும் தேடித்தேடி... ஆங்கிலப் படங்கள் மட்டுமல்லாமல் உலகப்படங்களையும் பார்த்து ரசிக்கிறார். இதில் ஆச்சரியப் பட என்னவிருக்கிறது? அவருடைய படிப்பிற்கு இன்று சப் டைட்டிலோடு வரும் ஆங்கிலப்படங்களை பார்த்து அர்த்தம் புரிந்து கொண்டு, ரசித்து, பகிர்ந்து.... அவரின் உழைப்பும் ஆர்வமும் மெச்சத்தக்கது.

வாயைத்திறந்தால் காக்க காக்க வில்லனைப் போல் கெட்ட வார்த்தைகள் சரளமாக வந்து விழும் அவருடைய பழக்கம், அவருடைய வாழ்க்கைச் சூழல் கொண்டு வந்து தந்தது. அவருடைய இந்த transition க்குப் பின் அண்ணி அவர்கள் இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.
அண்ணி அவர்கள் என்னோடு பணி புரிந்தார்கள். அப்போதுதான் “சேகர்” (அண்ணி அப்படித்தான் அழைப்பார்), எனக்குப் பழக்கம். “உங்களைப் பத்தி சொல்லிட்டேயிருப்பா... அவளோட கணக்கு தப்பாயிருக்காது...” என்று அப்போது ஜாக்கி சொல்லுவார். அவரோட நேர்மை எனக்குப் பிடிச்சிருந்தது.

“யோவ் கொஞ்சம் வெயிட் பண்ணுய்யா, நம்ம ப்ராஜெக்ட்லயே ஒரு வீடு கட்டித்தாரேன்னு” எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அண்ணனும் அண்ணியும் கேட்கவேயில்லை. இப்போது குடி புகுந்திருக்கும் வீட்டைப் பார்த்தபோது, கருத்துச் சொல்ல அழைத்தனர். Violation க்கான எல்லையை கடந்து கட்டப் பட்டிருந்த apartment அது. “இதுல விதிமுறைகள் கன்னாபின்னானு மீறப்பட்டிருக்கு. என்ன ஆனாலும் இந்த வீட்டைதான் நான் வாங்குவேன்னு ஒத்தக் கால்ல நின்னீங்கன்னா, வாங்குங்க. நாளைக்கு பிரச்சனைனு வந்தா உங்க ப்ளாட்டை ஒண்ணும் பண்ண மாட்டாங்க.” ன்னு சொல்லிட்டேன்.
வீடு பொதுவாகவே எல்லோரின் கனவு. ஜாக்கியின் வரலாற்றை அவரது ப்ளாக்கில் படித்தவர்களுக்கு அவரைப் பொறுத்தவரை வீடு என்பது அவருக்கு எவ்வளவு முக்கியமானதென்பது புரியும்.

சரி விஷயத்திற்கு வருவோம். புதுமனை புகுவிழாவிற்கு வந்திருந்த முன்னாள் இன்னாள் பதிவர்கள், வாழ்த்து தெரிவித்த பதிவர்கள், வாசகர்கள் உள்ளிட்ட அத்துனை பேருக்கும் நன்றி தெரிவித்து ஒரு பதிவு போட்ட பின்பு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக அடுத்த பதிவு அவர் போடாமலே இருக்கிறார். இதன் காரணம் என்ன?
உண்மைத்தமிழன் தமிழ்மண நட்சத்திரமானதைக் கண்டு அதிர்ச்சியில் பதிவுலகம் மீதிருந்த அவர் நம்பிக்கை போய்விட்டதா?

கூடவே இருந்து மைனஸ் குத்து குத்தி வாழ்த்து கூட சொல்லாமல் போன சக முன்னாள் நண்பர்கள் மீது வருத்தத்தில் ஆழ்ந்து போய்விட்டாரா?

புது வீடு போன மகிழ்ச்சியில் பதிவுலகை மறந்து அந்த ஏரியா மகளிர் கணக்கு எடுக்க போய் விட்டாரா?

ஏதேனும் ஒரு மொக்கை கமர்சியல் படத்திற்கு ஒளி ஓவியப் பணிக்காகப் பறந்து விட்டாரா?

அவருடைய தொலைபேசியில் பிடிக்கவே முடியவில்லை. மிகவும் பிசியாகவே இருந்தது. பிறகுதான் சொன்னார். எப்ப போடுவீங்க? எப்ப போடுவீங்க? அடுத்த அபார பதிவு எப்ப போடுவீங்கன்னு வாசகர்கள் அழைத்த வண்ணம் இருக்கிறார்களாம். அதான்யா நானும் கேட்கிறேன் என்ற பிறகு அந்த உண்மையை சொன்னார்.

அவர் சமீபத்தில் குடிபுகுந்த ஏரியாவில் Airtel இணைய இணைப்பே இல்லையாம். BSNL நண்பர்களும் அந்த ஏரியாவிற்கு அருகில் இருக்கிறார்கள் ஆனால் வரவி்ல்லையாம். Reliance நண்பர்களிடம் இவர் எதிர்பார்க்கும் package இல்லையாம். அதிக கணிணிகளை இணைக்கும் package மட்டுமே உள்ளதாம்.

சரி இப்பதான் pendrive லயே அதிவேக இணையம் வந்துடுச்சேன்னு கேட்டா, “அது எப்படி இருக்கும்னு தெரியல... வேகமா இருக்குமா? சொதப்புமா? ” என்று கேள்வி மேல் கேள்வி. ஆராய்ந்து பார்த்தால், பூனை வெளியே வந்தது. “அதுக்காக இப்ப 3000 ரூபா அட்வான்ஸ் பேமண்ட் பண்ணணுமே...!”.
ஜாக்கி அண்ணாவிற்கு பதிவர்கள் சார்பாக ஒரு வேண்டுகோள்:

உங்க icici, hdfc, axix bank, sbi, sbh, canara bank, iob, indian bank, co-operative bank உள்ளிட்ட எந்த கணக்கின் எண்ணையும் கொடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். (பார்த்துக் கொள்வோம் அவ்வளவுதான்!)

இடைக்காலத் தடைகள் நீங்கி பொங்கி வரும் புது வெள்ளமாக, கதவைத் திறந்தால் வரும் காற்றைப் போல ஜாக்கியின் பதிவுகள் பதிவுலகத்தைத் தாக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.


பேரன்பு பிரியங்களுடன்,

நித்யகுமாரன்.


Follow @ersenthilkumar