Tuesday, September 15, 2009

முன்னாள் காதலிக்கு ஒரு கடிதம்...


வணக்கத்திற்குரிய முன்னாள் காதலிக்கு...


இப்போது திருமணம் முடித்து மக்களைப் பெற்று மனமகிழ்வோடு வாழ்ந்து கொண்டிருப்பாய் என நம்புகிறேன். நானும் அப்படியேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இப்போது என்ன அவசியம் எனக்கு கடிதம் எழுத வேண்டி வந்தது? என்று யோசித்து சினங்கொள்ள வேண்டாம். ஏதோ தோணுச்சு. நண்பர் நாடோடி இலக்கியன் நானும் அவள்களும் என்று ஒரு கதை (?) எழுதியிருந்தார். நமக்கு புனைவு அந்தளவு பிரமாதமாக வராது என்பதால் கடிதமாக உள்ளதைச் சொல்லி விடலாமென்றுதான் இந்த திடீர் கடிதம்.

நிற்க. நீ, உன் கணவன் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் மிக்க நலமொடு இருப்பீர்கள் என நம்புகிறேன். காதலித்து கல்யாணம் செய்து கொள்ள உலகத்தில் சிலருக்குத் தான் வாய்ப்பு அமைகிறது. என் உடன்பிறந்த சகோதரியும் காதல் திருமணம்தான் செய்தாள். ஒரு திரைப்படம் கூட விடாமல் விமர்சனம் செய்யும் நண்பர் ஜாக்கி சேகரும் காதல் திருமணம்தான். விதி மிகவும் வலியதாக இருக்கிறது. காதல் வலி தாங்கும் சக்தியை வாரி வழங்கும் என சொல்கிறார்கள். நமக்கு அது சரிவர கைவரவில்லையோ என்னவோ...?

என்னுடைய காதல்கள் எதுவும் தீவிரமானதாக இல்லையென்பதே உண்மை. நான் மனதில் நினைத்து விளிக்கும் என் காதலிகள் எல்லாருக்கும் நான் அவர்களை காதலித்தது தெரியும் என்றும் சொல்வதற்கில்லை. இதயம் பட முரளி போல சொல்லாமல் போனவையே அதிகம்.

பள்ளி காலம் மற்றும் கல்லூரி காலத்திய காதலைப் பற்றி பேசுகையில் அது வெறும் Infatuation என்று சொல்லி விவாதிப்பவர்களை நான் விலக்கித்தான் பார்க்கிறேன். எனக்கு அவளை பிடித்திருக்கிறது. நான் அவளை நன்றாக பார்த்துக் கொள்வேன். அவள் என்னோடு இருந்தால்தான் நன்றாக இருப்பாள். அவ்வளவுதான். இதுதான் காதல். “ காதல் என்பது விட்டுக் கொடுப்பது... சில சமயம் காதலையே கூட விட்டுக் கொடுப்பது...” என்பது போன்ற பாலகுமாரனின் ஜல்லியடித்தல்களை நான் வன்மையாக இல்லாவிட்டாலும் மென்மையாகவாவது கண்டிக்கிறேன்.

இந்த சினிமாப் பாடல்கள் மட்டும் இல்லாவிட்டால் காதல் இந்தளவு கண்ணாபின்னாவென்று வளராது என்பது மட்டும் அசைக்க முடியாத உண்மை. “சிறு பொன்மணி அசையும்..” எனத் தொடங்கும் இளையராஜாவின் பாடலை சுப்ரமணியபுரம் படத்தில் பார்த்தேன்.

“அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா... பறிபோனது போனது நெஞ்சம்... இது வாலிப சோதனையா...
பனி ரோஜா கூட்டம்தான் ஒரு சேலை கட்டியதா...

அட உங்கள் கண் இன்று என் மேலே ஒட்டியதா...

இது கதையா கற்பனையா?

அட இன்னும் தெரியலையா...? ”

எனத் துவங்கும் ஏதோ ஒரு கார்த்திக் படப் பாடல் என் நெஞ்செங்கும் இன்று வரை நினைவிருக்கிறது. இதைப்போல உனக்கும் எதாவது ஒரு மொக்கைப் பாடல் நினைவிலிருக்கலாம். ஏதாவது ஒரு மதிய நேரம் மின்சாரம் இல்லாத பொழுதில் சட்டென நினைவு வரலாம். ஆயிரத்தெட்டு இசைச் சேனல்களில் எவனாவது ஒருவன் அந்தப் பாடலை உனக்குக் காட்டி புண்ணியம் கட்டிக் கொள்ளலாம். வலிய உட்கார்ந்து நீயே யோசித்துப் பார்க்கலாம். என்னவோ போ... நேரம் மட்டும்தான் எதுவும் நிகழக் காத்திராமல் விறுவிறு வென்று ஓடிக் கொண்டேயிருக்கிறது.

உன்னால் நான் தவித்துப் பிரசவித்த பல கவிதைக் குழந்தைகளை நீ சீண்டாமலே போயிருக்கிறாய். பாவம் அவை அன்றிலிருந்து தாய்ப்பாசத்திற்காக இந்த பேரண்ட பெருவெளியெங்கும் இன்றுவரை ஒடிந்து போன எழுத்துக்களோடு சுற்றித்திரியலாம். அவற்றில் வாசம் இல்லாமல் போயிருக்கலாம் ஆனால் ஜீவனிருக்கும். அவை வெறும் வார்த்தைகள் அல்ல அன்றைய என் வாழ்க்கையின் பிரதிகள்.

பிரதிபலன் பார்க்காத அன்பை நான் உன்மீது கொண்டிருக்கவி்ல்லை, நான் உன்னிடம் பிரதி அன்பை எதிர்பார்த்தேன். உனக்காக நானே எனக்குள் வரைந்து கொண்ட ஓவியங்களை நீ உதாசீனப் படுத்தியாக இன்று புலம்புவதில் பொருளில்லை.

அடைகாத்த முட்டையிலிருந்து குஞ்சு வெளிவருகையில் சிதறும் முட்டை ஓடுகளைப் போல இந்த கடிதம் ஒரு சீரான கட்டமைப்பில் இல்லை என்பதை நான் உணர்கிறேன். உடைந்த இதயத்திலிருந்து வரும் உடைந்த வார்த்தைகள் நல்ல உருவமாவது எப்படி?

இப்போது அதுவல்ல பிரச்சனை. நானென்ன பைத்தியக்காரன் நடத்தும் சிறுகதைப் போட்டிக்கா எழுதிக் கொண்டிருக்கிறேன்... கட்டுக்களை எண்ணி வருத்தப்பட...

இவன் எனக்கு எந்தளவுக்கு பொருத்தமாக இருப்பான்? என ஒருமுறையேனும் நீ எண்ணி என்னை விலக்கியிருக்கலாம். வாய்ப்பிருக்கிறது. இப்போதும் அப்படித்தான் நினைக்கிறாயா...? இந்த கேள்விக்கான பதில் ஒரு மனநிலை பிறழ்ந்தவனாக என்னை மாற்றிவிடும் அபாயத்தில் இருப்பதால் இதை விட்டுத் தொலைப்போம்.

சரி இந்த ஜென்மத்தில மேட்டர் ஓவர். திடீர் நிகழ்வுகளையும் அதிரடி சந்தோஷங்களையும் அடக்கி வைத்திருக்கும் இந்த வாழ்க்கைச் சுழற்சியில் முயற்சிக்காமல் உன்னை திடீரென சந்திக்க ஆசை. அதிகம் பேச ஆசைப்படும் உன் கண்களிடமிருந்து விரைந்து விலகவும் ஆசை. பின்பு நினைவுச் சுழலில் சிக்கி சின்னாபின்னமாக ஆசை.

இவருதான் என் வீட்டுக்காரர் என்று ஒரு நபரைக் காட்ட அவரிடம் பேசும் தைரியமும் அந்த நிலைமையை எதிர்கொள்ளும் பக்குவமும் இன்னும் வராத காரணத்தால் அப்படி நிகழாமல் இருக்க உண்மைத்தமிழனின் ஆதர்ச கடவுளான முருகப் பெருமானை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

மற்றபடி உங்க சார் மற்றும் குழந்தைகளுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். அனைவரையும் விசாரித்ததாகச் சொல்லவும்.

தோன்றினால் பிறகு எழுதுகிறேன்.

அன்பு டன்,
நித்யகுமாரன்.

Saturday, September 12, 2009

கடன்காரி


உன் வெட்கம் முடிந்த போது

இரவு வடிந்து விட்டது...


காலைக்கடன்களை முடித்துவிட்டு வா...

நேற்றைய

இரவுக்கடனே

மீதமிருக்கிறது...
Follow @ersenthilkumar