Wednesday, February 27, 2008

கிருபா, சத்யாவிற்கு உண்மையான நண்பனாக இருந்தானா...? - “அஞ்சாதே” ஒரு மீள்பார்வை


சமீபத்தில் “அஞ்சாதே” திரைப்படம் குறித்து எழுதியிருக்கிறேன் . மேலும் எழுதத்தூண்டும் அளவுக்கு படத்தில் சரக்கு இருப்பதாக நினைப்பதால் இந்த பதிவை எழுதவிழைகிறேன். ஏற்கனவே எழுதிய பதிவிற்கு அப்படியொன்றும் பலமான வரவேற்பு (அதிக மறுமொழிகள் வாயிலாக) இல்லாத போதிலும், பரவலாக வாசிக்கப்பட்டதால் (எல்லாம் ஒரு நம்பிக்கைதான்) திரும்பவும் எழுதுகிறேன். அப்படி சிலாகிப்பதற்கு படத்தில் ஒன்றுமில்லையே என்று யோசிப்பவர்கள் இங்கே கழண்டு கொள்வதென்றாலும் சரி, தொடர்ந்து படித்து தங்கள் கருத்தை உறுதிப்படுத்திக் கொண்டாலும் சரி.


இந்த திரைப்படத்தின் கதாபாத்திரங்களை இயக்குனர் அமைத்தவிதம் குறித்து விமர்சனம் எழுதும் நோக்கோடு இதை எழுதவில்லை. அந்த கதாபாத்திரங்களை அவ்வவற்றின் இயல்போடு அப்படியே கிரகித்துக்கொண்டு அவர்களின் போக்கையும், செயல்பாடுகளையும் பற்றியுமே இங்கு எழுத முயல்கிறேன். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், பட்டிமன்றம், வழக்காடு மன்றங்களில் “வாலியை மறைந்திருந்து கொன்ற ராமன் குற்றவாளியே...” என்கிற ரீதியில் பேசப்படும் வாதங்களில், ராமனைப் பற்றியோ அல்லது வாலியைப் பற்றியோ தான் பேசப்படுமேயன்றி, அந்த பாத்திரங்களைப்படைத்த கம்பனைப் பற்றி பேசப்படமாட்டாது. அதாவது, கம்பன் இந்த பாத்திரத்தை படைத்த விதம் தவறு, சரி என்று விவாதிக்கப்படமாட்டாது. அந்தந்த பாத்திரங்களை அவற்றின் இயல்போடு கிரகித்துக்கொண்டு சூழல் அவர்களைப் படுத்தும் பாடு குறித்து விவாதிக்கப்படும். அப்படி ஒரு முயற்சியாகவே இந்த பதிவை எழுத முயற்சிக்கிறேன். இந்த புரிதல் அவசியம் என்று தோன்றியதால்தான், இந்த முன்னுரை தேவைப்பட்டது. இனி விஷயத்திற்கு வரலாம்...


“அஞ்சாதே” திரைப்படத்தின் அடிநாதமாக அமைந்திருப்பது நட்பு. அந்த நட்பிற்கு சத்யாவும், கிருபாவும் உண்மையாக இருந்திருக்கிறார்களா என்ற கேள்வியோடு அணுகும்போது, சத்யாவைவிட கிருபா தாழ்ந்துபோகிறான். தன் நண்பன் கிருபாவுக்காக சத்யா ஒவ்வொரு சூழ்நிலையிலும் தன்னாலான நல்லதைச் செய்ய ஓடுகிறான் (படத்தின் பெரும்பாலான காட்சிகளில் சத்யா ஓடுவது தனிக்கதை!). கிருபாவை அடித்தவர்களை ஓடிச்சென்று போய் கும்முவதிலும், கிருபா SI தேர்வில் தோல்வியடைந்ததைக் கேட்டு அதிர்ச்சியடைகையிலும், கிருபா தன் இயல்பிலிருந்து மாறி தாடியும் குடியுமாக தரம்புரள்பதைக் கண்டு பதைபதைப்பதிலும், தன் நண்பன் கெட்ட வழியில் சென்றுவிடாமலிருக்க அவனுக்காக முயற்சி எடுப்பதிலும், போலிஸ் ஸ்டேஷனிற்கு அழைத்துவரப்படும் கிருபாவுக்கு எதுவும் நேராமலிருக்க இன்ஸ்பெக்டரிடம் மன்றாடுவதிலும் - சத்யா கிருபாவிற்கு உண்மையான நண்பனாகவே இருக்கிறான்.


ஆனால் கிருபா, தான் SI தேர்வில் தோல்வியடைவதற்கே சத்யாதான் காரணம் என்கிற ரீதியில் தவறாக ஒரு கற்பிதத்தை வளர்த்துக்கொண்டு, சம்மந்தமே இல்லாமல் தனக்காக எதுவும் செய்யக்கூடிய தன் நண்பன் சத்யா மீது வன்மத்தை வளர்த்துக் கொள்கிறான். தன் முனைப்பின்றி எதெச்சையாக தயாவிடம் பழகத்துவங்கியபின், தன் வீட்டிலேயே “தண்டச்சோறாக” அறியப்பட்டபின், கிருபாவின் அடிப்படை எண்ணங்களில், செயல்பாடுகளில் எதிர்மறை எண்ணங்கள் வெகுவாக வளரத்துவங்குகின்றன. ஆயினும் கிருபா அடிப்படையில் நல்லவனாகவே இருக்கிறான் என்பது தயாவிடம் அவன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சியில் தெரிகிறது. ஹவாலா என்று முதலில் பொய்சொல்லி கிருபாவை தன்வசப்படுத்தும் தயாவின், நிஜமுகம் இளம்பெண்களை கடத்தி, கற்பழித்து பணம் பறிப்பதுதான் என்பதைத் தெரிந்து கொண்டவுடன் தயாவிடம் கிருபா செய்யும் வாக்குவாதம் அவர்களிருவரின் அடிப்படைத்தன்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.


ஆயினும் கிருபாவின் உக்கிரமான, குரூரமான முகம் ஒரு காட்சியில் வெளிப்பட்டு நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. சத்யாவின் தங்கையை தான் முழுதாக பார்த்ததாகவும், எங்கெங்கு மச்சம் இருக்கு சொல்லட்டுமாவென்று தயா சொல்லிவிட்டு தலையை உயர்த்தி வெற்றிக் கொக்கரிப்பு போல் சிரிக்கும்போது, தன் நண்பனின் சகோதரியைப்பற்றி இப்படி சொல்கிறானே என்று கோபமில்லாமல், துளி வருத்தம் கூட காட்டாமல் அந்த களிப்பில் தானும் பங்குகொள்ளும்போதே கிருபா தான் சத்யாவிடம் கொண்டிருந்த நட்புக்கு முடிவுரை எழுதிவிடுகிறான். இறுதிக்காட்சியில் தான் எப்போதோ வாங்கிக்கொடுத்த விரல்களில் நுழையாத மோதிரத்தை ருத்ராட்சக்கொட்டை போல் சத்யா தன் கழுத்தில் இட்டிருப்பதை பார்த்தபின், சத்யாவின் நட்பின் ஆழத்தைப்புரிந்து கொண்டு “சொல்லலையேடா...” என்ற கடைசிவார்த்தைகளோடு கிருபா விழி சொருகுவது நம்மை சற்று வருத்தப்படவைக்கிறது.


“அண்ணா சத்யா நல்லவன்...” என்று படத்தில் பல இடங்களில் கிருபாவின் தங்கை உத்ரா தன் அண்ணனிடம் சொல்லும் காட்சிகள் அருமை. அது படத்தின் உச்சகட்ட காட்சிவரை வந்து செல்கிறது.


தயாவைப்பற்றியும் நிச்சயம் சொல்ல வேண்டும். தயா அடிப்படையில் நல்லவனாக இருந்து மாறினானா இல்லை அவன் அடிப்படையிலேயே அப்படித்தானா என்ற கேள்வி தொக்கிநிற்கிறது. தான் மிலிட்டரியில் பணி புரிந்த போது, தன் சீனியர் ஆபிஸரின் மனைவி தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அதனைத்தொடர்ந்த நிகழ்வுகள் தன்னை இப்படியொரு பாதைக்கு வழி நடத்திவிட்டதாகவும், தன் தரப்பு நியாயத்தை கிருபாவிடம் சொல்லும் தயாவை நம்பலாமா வேண்டாமா என்ற ஐயத்தை உண்டாக்குகிறது.


தயா, லோகு, கிருபா மற்றும் மொட்டை என நான்கு பேர் இருக்கும் கூட்டணியில் இரண்டு பேர் மட்டும் தப்பிப்பதற்கு ஒரு கோழி வேனை தயா ஏற்பாடு செய்யும்போது, பதற்றப்படும் லோகு எங்கே ஒருவேளை தன்னை தயா கொன்றுவிடுவானோ என்றெண்ணி தன்னுடைய ஆளான மொட்டையிடம் தயாவை கொல்ல திட்டமிடுகிறான். ஆனால் நடக்கும் கதையே வேறு. நம்மிடம் இருக்கும் பதில் சொல்லப்படாத கேள்வி இதுதான். தயா திட்டமிட்டபடி தப்பிக்கும்பட்சத்தில் அவனோடு அழைத்துச் செல்லவிருந்த அந்த இன்னொரு நபர் யார்...? கிருபாவா, லோகுவா இல்லை மொட்டையா...?


படம் பார்த்த யாரேனும் உங்கள் கருத்தைச் சரியான காரணத்தோடு சொல்லுங்களேன்.


இப்படம் பற்றி மிக நீ.................ண்ட பதிவெழுதிய தோழர் உண்மைத்தமிழன் அவர்களை தன்னுடைய கருத்தைச்சொல்ல அன்போடு அழைக்கிறேன்.

2 comments:

 1. நித்யா,

  முதலில் உங்களுக்கு ஒரு வாழ்த்து..

  திரைப்படத்தை பார்ப்பதென்பது வெறும் பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி அதில் உள்ள ஒரு விஷயத்தை எடுத்து விவாதித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வந்திருக்கிறது பாருங்கள்.. அதற்கொரு பாராட்டுக்கள்..

  கிருபா சத்யாவிற்கு உண்மையாக இருந்தானா என்பதை நாம் சொல்வதைவிட இயக்குநர் சொல்வதுதான் மிகச் சரியாக இருக்கும்.

  ஆனால் இயக்குநர் தான் படைத்த பிம்பத்தை தனக்கேற்றாற்போல் செதுக்கிக் கொண்டதால் இந்த இடத்தில், இந்த விஷயத்தில் அவரிடம் போய் நான் எதையும் கேட்க முடியாது. நாமாக ஊகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.

  கிருபாவை முழுமையாக உள் வாங்க வேண்டுமெனில் அவனுடைய character sketch-ஆக இயக்குநர் படைத்திருந்ததை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

  தன்னை அடித்தவர்களை தேடிச் சென்று அடிக்கும் சத்யாவிடம் கிருபா கோபப்படும்போது மறக்காமல் சொல்கின்ற வார்த்தை.. ஏண்டா இப்படி இருக்குற? ஏன் இப்படி ரவுடித்தனம் பண்றே? நான் போலீஸாகப் போறேன்டா.." என்பது.

  அது அவனது வாழ்க்கை லட்சியம்.

  சத்யாவுடன் சேர்ந்து ஊர் சுற்றக்கூடாது என்று சொல்லி அவனைக் கட்டிலோடு கட்டிப் போட்டு படிக்க வைக்கும் தங்கை..

  "அவிழ்த்துவிடு" என்று கிருபா கேட்கும்போது கேட்ட கேள்விக்குப் பதில் சொல் என்று கேட்டு புத்தகத்தை வாங்கி கேள்வி கேட்கிறாள் தங்கை.

  கேட்கின்ற கேள்விகளுக்கெல்லாம் கேட்டு முடிப்பதற்குள் பதில் சொல்கிறான். ஒரே ஒரு கேள்வியைத் தவிர..

  அதற்கு தான் சொன்ன பதில் தவறு என்பதை உணர்ந்து அந்தப் பக்கத்தையே கிழித்து எறிகிறான் கிருபா. இது அவனது லட்சிய வெறி..

  ஜெயித்தே தீர வேண்டும் என்று வெறியாக இருந்தவனிடம் தோற்றுவிட்டாய் என்றால் முதலில் அதற்கான காரணத்தை அவன் தேடுவான்.. தேடினான்.. கிடைத்தது..

  சத்யா முறைகேடாக சிபாரிசு செய்து சீட் வாங்கியிருக்கிறான். ஒருவேளை அவன் போட்டிக்கு வராமல் போயிருந்தால் அந்த சீட் கண்டிப்பாக கிருபாவிற்கு கிடைத்திருக்கும். இந்த எண்ணமே கிருபாவின் மனதை மாற்றுகிறது.

  பல வெற்றி பெற்ற, தோல்வியடைந்த பிரபலங்களின் வாழ்க்கையை நோண்டித் துருவிப் பாருங்கள்.. இது போன்ற ஏதாவது ஒரு சம்பவம், ஒரு சொல், ஒரு வார்த்தை, ஒரு வாக்கியம் என்று ஒரு உந்துதல் சக்தி அவர்களுக்குக் கிடைத்திருக்கும்.

  அதில்தான் அவர்கள் தங்களது வாழ்க்கையைக் கண்டிருப்பார்கள் அல்லது தொலைத்திருப்பார்கள்.

  அப்படித்தான் நமது கிருபாவும்.

  சத்யா வேண்டுமென்றே செய்யவில்லை. கிருபா தோற்க வேண்டும். அவன் எப்பாடு பட்டாவது தோற்க வேண்டும். தான் மட்டுமே எஸ்.ஐ. ஆக வேண்டும் என்றெல்லாம் அவன் நினைக்கவே இல்லை.

  ஆனால் அவனது சூழ்நிலை.. செருப்பால் அடித்த தனது அப்பா தனக்கு சல்யூட் அடிக்க வேண்டும் என்ற வெறியில் அவனது செயல்பாடு இருந்தது. அதனுள் தீவிரமாக இறங்கி தனது குணத்தைக் காட்டியதால் அவன் வென்றான்.

  இதனை கிருபா எதிர்கொண்ட விதம்தான் திரைப்படத்தின் போக்கு. எனவே இதில் கிருபாவையோ, சத்யாவையோ நாம் குற்றம் சொல்ல முடியாது.

  இருவருமே சூழ்நிலைக் கைதிகள். அவரவர் நிலைமைகளுக்கேற்ப மாறிய வாழ்க்கை என்னும் சதுரங்கத்தில் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்பட்டார்கள். அவ்வளவே..

  சத்யாவின் தங்கையின் அழகை பார்த்தேன் என்று தயா வர்ணித்தபோது கிருபாவுக்கு கோபம் வரவில்லை. உண்மைதான்.

  வந்திருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது கதையின் போக்கிற்கு தடைக்கல்லாகிவிடும்.

  எப்பாடுபட்டாவது அவனை எதிலாவது மிஞ்ச வேண்டும் என்கிற லட்சியத்தில்தான் ஓடிக் கொண்டிருக்கிறான் கிருபா.

  இப்போது அவனுக்குள் நியாயம், அநியாயம், தர்மம், அதர்மம், நீதி, அநீதி இதையெல்லாம் சத்யா விஷயத்தில் யோசிக்க அவனால் முடியவில்லை.

  சத்யாவின் தங்கையை வர்ணித்ததை ஏற்றுக் கொண்டவன், தன்னுடைய கைலியால் போர்த்தப்பட்டு அலங்கோலமாக்கப்பபட்ட நிலையில் கடத்தப்பட்ட பெண் வேனிலிருந்து உருட்டிவிடப்படும்போது அதைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு போகிறானே.. அங்கே தெரிகிறது அவனது உண்மையான மனது..

  எப்பேர்ப்பட்ட நிலையிலும் சுயகுணம் நிச்சயம் வெளிப்பட்டே தீரும்.

  சத்யா விஷயத்தில் மட்டும் அந்த நேரத்தில் சத்யா என்ற பெயரைக் கேட்டவுடன் அவனுக்குள் எழுந்த வன்மம் அவனை அடக்கிவிட்டது எனலாம்.

  இறுதிக் காட்சியில் அந்தச் சோளக்காட்டுக்குள் சிறுமிகளை நெருங்கும் தயாவை துப்பாக்கியால் தடுத்து நிறுத்துகிறானே கிருபா.. எங்கிருந்து அவனுக்கு இந்த மனிதாபிமானம் வந்தது..?

  இப்போது சத்யா என்பவனுக்கும், அந்தச் சிறுமிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதனால்தான்.. இது இயல்பானதுதான்..

  நம்முடைய பகைவர்கள் என்று நாம் யாரை கருதுகிறோமோ அவர்களது வீட்டில் ஒரு மரணம் என்றால் உதடு வருத்தம் தெரிவித்தாலும், உள்ளம் 'போய்த் தொலையட்டுமே!' என்று கருதுமே.. அது போலத்தான்..

  சத்யாவைவிட கிருபாவின் பாத்திரப் படைப்புதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம் அவன்தான் விதி.. அவன்தான் வினை.. அவன்தான் காலம்..

  இறுதியிலும் தனக்குத்தானே முடிவைத் தேடிக் கொள்வதிலும் அவனே முந்துகிறானே..

  இந்தச் சிறுமிகளை நோக்கிச் சுடத் துவங்கிய பின்புதானே சத்யா கிருபாவைச் சுடுகிறான். அப்போதும் சத்யா சொல்கிறானே 'சுடாதடா' என்று.. கேட்டானா கிருபா..? இல்லையே..? அது அவனது விதியின் விளையாட்டு. முடிவை அவனே தேடிக் கொண்டான்..

  தயா மிலிட்டரி ஆபீஸர் மனைவி பற்றிச் சொல்லும் கதை கட்டுக்கதை என்பது அப்போதே எனக்குப் புரிந்துவிட்டது.

  தயாவின் அந்த மிலிட்டரி ஆபீஸர் மனைவி கதை பொய் என்று போலீஸார் துப்பறிந்து சொல்கிறார்களே.. தயாதான் காஷ்மீரில் பணியில் இருந்தபோது ஒரு மிலிட்டரி ஆபீஸரின் மனைவியைக் கற்பழித்துவிட்டு தப்பி ஓடி வந்துவிட்டான் என்று..

  அவன் ஒரு சைக்கோ என்பதைத்தான் கிருபாவின் தங்கை உடை மாற்றும்போது கண்ணாடியை வைத்து அழகு பார்க்கும் காட்சியில் இயக்குநர் சொல்லிவிட்டார்.

  அதையேதான் கடைசிக் காட்சியிலும தயா செய்கிறான்.

  கிணற்றடியில் ஆள் நின்று தண்ணீர் இறைக்கும் இடத்திலும் சத்யாவின் தங்கை மீது பாய்கிறானே.. இக்காட்சியே போதுமானதே..

  இவன் மீது யாருக்கும் பரிதாபம் வரக்கூடாது என்பதை மிகக் கவனத்தில் கொண்டிருக்கிறார் இயக்குநர்.

  தயாவோடு இறுதியில் தப்பிப் போக இருந்தவர் யார் என்று கேட்டுள்ளீர்கள்.

  எப்போது அவர்கள் அடையாளம் காணப்பட்டார்களோ அப்போதே கிடைக்கின்ற வழிகளில் தப்பிக்கலாம் என்றுதான் தயா செயலாற்றி வந்தான்.

  ஒரு சூழலில் லோகு கொல்லப்பட்ட பின்பு அவனுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு மொட்டையை நம்புவதுதான்.

  மொட்டையிடமே சொல்கிறானே.. "விசில் அடித்தவுடனேயே கிருபா ஓடி வருவான். பட்டென்று சுட்டுவிடு" என்று..

  அவனைப் பொறுத்தவரையில் கிருபா ஒரு கருவி.. பயன்படுத்த நினைக்கிறான். பயன்படுத்திக் கொண்டான்.. அவ்வளவுதான்..

  பாத்திரங்களை படைத்த இயக்குநரின் சிந்தனையில் இந்த அளவுக்கு நுணுக்கமாக கதாபாத்திரப் படைப்பு வெளி வந்திருக்கிறது எனில் இத்திரைப்படத்தைப் பற்றி நாம் பொதுவெளியில் விவாதிப்பது மிகச் சரியானதுதான்..

  நண்பர் நித்யகுமாரன் வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 2. உண்மைத்தமிழன்...

  வணக்கம். என் பதிவை விட நீளமான உங்களின் பின்னூட்டம் படித்தேன். மிக்க மகிழ்ச்சி.

  கிருபா குறித்த என் பார்வைக்கு, அவனுடைய வாழ்வியல் குறித்த பார்வையினடிப்படையில் நீங்கள் தந்திருக்கும் விளக்கம் மிகவும் பொருத்தமானதாகவே இருக்கிறது. கிருபா அடிப்படையில் நல்லவனாகவே இருக்கிறான். ஆனால் சத்யா விஷயத்தில் மட்டும்தான் இப்படி இருக்கிறான் என்பதை உதாரணங்களுடன் விளக்கிய உங்கள் பின்னூட்டப்பதிவு மிக அருமை.

  உங்களின் பார்வையின்படியே அதை நானும் ஒத்துக்கொள்கிறேன்.

  தயாவின் விஷயத்திற்கு வருவோம். சிகப்பு ரோஜாக்கள் கமல் கதாபாத்திரத்தைப் போன்று அந்த மிலிட்டரி ஆபிஸரின் மனைவியினால்தான் அவன் மனம் மாறினானா... இல்லை அவன் இயல்பிலேயே அப்படித்தானா என்றுதான் நான் சிந்தித்தேன். தயா கிருபாவிடம் பேசுகையில், அந்த மிலிட்டரி ஆபிஸரின் மனைவி பிளேட்டை மாற்றிப்போட்டு தன்மீது வீண்பழி சுமத்திவிட்டதாக சொல்கிறான். பிற்பாடு ACW குழுவின் குண்டு போலீஸ் அதிகாரி தகவல் கேட்டு சொல்கையிலும், துளசிலிங்கம் என்கிற தயா paramilitary force ல் பணியாற்றும்போது சீனியர் அதிகாரியின் மனைவியை கற்பழித்துவிட்டு தப்பியோடிவிட்டதாகத்தான் கூறுகிறார். தயாவின் கூற்றும் இதை ஒத்து இருப்பதால்தான் தயா paramilitary force ல் இணையும்வரை நல்லவனாகவே இருந்திருக்கின்றானோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. ஆயினும் இளம்பெண்களிடம் மோகம் கொண்டு அலையும் தயா அடிப்படையில் அவ்வளவு நல்லவனாகவும் இருந்திருக்க வாய்ப்பில்லைதான் என்றும் படுகிறது. மிஷ்கின் ஐயாதான் நம்முடைய கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.

  கடைசியாக தயா தன்னுடன் கடைசியாக அழைத்துச்செல்ல நினைத்த அந்த ஒரு கதாபாத்திரம் யார் என்ற விவாதத்திற்கு வருவோம். நிச்சயமாக அது கிருபா இல்லை என்பது உண்மை. நீங்கள் சொல்லியிருக்கும்படி அந்த task முடியும்வரை தயாவிற்கு கிருபாவின் தயவு தேவைப்பட்டது. அதன்பிறகு அவன் ஒரு தேவையில்லாத சுமைதான். அடுத்தது யாரை delete செய்வது.....? லோகுவையா அல்லது மொட்டையையா.....?

  லோகுவை கொலைசெய்வதற்கு முன்பே தயா இரண்டு பேர் என்று முடிவு செய்கிறான். பயந்துபோய் தயாவையே கொலைசெய்ய முயலும் லோகுவை தயா முந்திக்கொண்டு மொட்டையை வைத்தே தீர்த்துவிடுகிறான். ஒருவேளை லோகு நல்லபிள்ளையாக இருந்திருந்தால், தயா தன்னுடன் யாரைக்கூட்டிக்கொண்டு போயிருந்திருப்பான்.....?

  இப்படி பல கேள்விகளை நம்மைக் கேட்க வைத்திருக்கும் அஞ்சாதேவைப் பார்க்க யாரும் அஞ்சவேண்டாம்தானே.....?

  மிக்க அன்புடன்

  நித்யகுமாரன்

  ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar