Monday, January 31, 2011

எஸ்ராவுடன் ஓர் உரையாடல்

நீல ஜீன்ஸில் எஸ்ராவும் நானும்
சமீபத்திய புத்தகக் கண்காட்சியில் எஸ்ரா அவர்களின் “உப பாண்டவம்” நாவலை வாங்கினேன். அந்த நாவலை அணுகும் முறைமை பற்றி யாரேனும் நண்பர்களிடம் விவாதிக்க எண்ணியிருந்தேன். அதற்கான வாய்ப்பு அமைய வில்லை. ஆனால் அதை நான் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களிடமே கேட்டுத் தெளிவேன் என்று எண்ணவில்லை.

அது ஒரு மிக மகிழ்ச்சியான இரவு. அரை மணிநேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தது மிகவும் பயனுடையதாயிருந்தது.

வம்சி பதிப்பகத்தின் இரண்டு புத்தகங்கள் வெளியீட்டு விழா நேற்று (29.01.11 - சனிக்கிழமை) பிரசாத் லேபில் நடைபெற்றது. பாலுமகேந்திரா அவர்களின் “கதை நேரம் பாகம் - 2” புத்தகத்தை எஸ்ரா வெளியிட ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக் கொ்ணடார். மிஷ்கின் மொழியாக்கம் (transcreation - நன்றி: பிரபஞ்சன்) செய்த 100 ஹைக்கூ கவிதைகள் அடங்கிய “நத்தை போன பாதையில்” என்கிற புத்தகத்தை ஓவியர் டிராட்ஸ்கி மருது வெளியிட 10 ஒளிப்பதிவாளர்கள் பெற்றுக் கொண்டனர்.


**************************

இந்த விழா இரண்டு அமர்வாக நடந்தது. முதல் அமர்வில் தான் எஸ்ரா அவர்கள் உரையாற்றினார்.

அவருடைய உரைதான் இந்த அமர்வின் ஹைலைட் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க இயலாது. 52 எழுத்தாளர்களின் சிறுகதைகளை எடுத்து அவற்றுக்குப் பொருத்தமான திரைக்கதையாக்கம் செய்து குறும்படமாக வெளியிட்ட பாலுமகேந்திராவின் பங்கு தேசிய அளவில் வேறெந்த மொழியிலும் எந்த கலைஞனாலும் செய்யப்பட்டிராத ஒரு நிகழ்வு என எஸ்ரா சுட்டினார்.

இந்த ஒரு விஷயத்திற்காகவே தமிழ் எழுத்தாளர் குலாம் பாலுமகேந்திராவுக்கு நன்றி செலுத்த கடமைப் பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆறு கதைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு குறும்படங்களாக பரிணமித்த விதத்தை script ஆக ஒரு புத்தகமாகவும், ஒரு cd யில் அந்த குறும்படங்களையும் இணைத்து வெளியிட்டவிதம் வெகு சிறப்பு. திரைத்துறை நண்பர்களுக்கு இது ஒரு சிறந்த பாடப்புத்தகமாக இருக்கும் என்பது என் எண்ணம்.

தான் பேசுகின்ற மையக் கருத்தை ஒத்து தன்னுடைய அனுபவங்களை சரியான விகிதத்தில் இணைக்கும் கலை எஸ்ராவிற்கு அற்புதமாக கைவரப் பெற்றிருக்கிறது. மனுஷ்யபுத்திரன் அவர்கள் ஒரு மேடையில் எஸ்ராவைப் பற்றி சொல்கையில் “அவரிடம் பேசுவதற்கு எப்போதுமே புதிய புதிய விஷயங்கள் இருக்கின்றன” என்றார். அது எவ்வளவு உண்மை என்பதை அவரை பின்தொடரும் வாசகன் நன்கறிவான்.

Tokyo Story என்கிற திரைப்படத்தைப் பற்றி அவர் பகிர்ந்ததும் அப்படித்தான். அந்த படத்தின் காட்சியமைப்புகளை அப்படியே நம் மனக் கண்ணில் பேச்சின் வழியாக மட்டுமே பதிய வைக்கும் திறன் அபாரம்.

தங்களின் வயோதிகத்தில் டோக்கியோவில் இருக்கும் தம் பிள்ளைகளின் வீடுகளுக்கு செல்ல முடிவெடுக்கின்றனர் ஒரு தம்பதியினர். அந்த பிள்ளைகள் ஒவ்வொருவரும் அவர்களை அங்குமிங்குமாக பந்தாட ஒரு பெண்ணின் வீட்டில் அம்மாவை மட்டும் வைத்துக் கொண்டு அப்பாவை வேறிடத்திற்கு செல்லச் சொல்கிறார்கள். எப்போதும் குடையோடு பயணிக்கும் அவர் மறதியில் விட்டு வந்த குடையை எடுத்துக் கொண்டு வரும் தன் மனையியிடம் அவர் சொல்கிறார் “ எப்போதும் ஒன்றாக இருந்த நம்மை வந்த அன்றே இவர்கள் பிரித்து விட்டார்கள்”.

தன் மனைவி இல்லாமல்தான் தான் உயிரோடு இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாக இருப்பதை எண்ணுகிறார் அவர். ஆனால் அவரின் மனைவி இறந்து போக, அப்போதும் துணைக்கு வராத தன் பிள்ளைகளை எண்ணி வருந்தி தன் ஊருக்கு திரும்புகிறார் அவர்.

அவரிடம் ஒருவர் ஒரு ட்ரெயினை சுட்டிக் காட்டி, “அது டோக்கியோவிற்குத்தானே செல்கிறது. நீங்கள் அங்கு திரும்ப செல்வீர்களா?” என்று கேட்க “நான் ஒருமுறை டோக்கியோ சென்று என் மனைவியையே இழந்து விட்டேன். திரும்ப செல்வேனா...?” எனக் கேட்கிறார். அந்த ட்ரெயின் தடதடத்துப் பயணிக்கிறது. அந்த காட்சியில் ஓடுகின்ற ட்ரெயின் நம் மனதில் வெகுவாக பதிகிறது.

பாலுமகேந்திரா ஆண் பெண் உறவுச் சிக்கல்களையே அதிநுணுக்கமாக பதிவு செய்திருப்பதைச் சொன்ன எஸ்ரா, செக்காவின் திருமண வாழ்வு பற்றி நம்மிடையே பகிர்கிறார்.

செக்காவ் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள போடும் நிபந்தனை ஆச்சரியமானது. “திருமணத்திற்குப் பிறகு, நீ உன் ஊரிலேயே இரு, நான் இங்கேயே இருக்கிறேன். வாரம் ஒருமுறை நாம் சந்திக்கலாம். நீ இங்கு வரும் நாளுக்காக நான் இன்றிருக்கும் அதே காதலோடே காத்திருப்பேன். அதே போலே நீயும் காத்திருக்கலாம்.  நாம் என்றும் காதலர்களாகவே இருப்போம். நம் காதலைப் போற்றி வளர்ப்போம்” - இந்த சிந்தனை இந்த வாழ்வுமுறை நமக்கு எந்தளவு இன்றைய சூழலில் ஒத்துவரும் என்பதை விட, அந்த வாழ்வு சிந்தனை நமக்கு தேவையாயிருக்கிறது.

உடைந்து போகும் இந்த வாழ்வின் உறவுகளை, நாம் ஒரு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய வேண்டிய சூழலில் அதன் பல்வேறு பரிமாணங்கள் மற்றும் வழிவகைகள் பற்றி அறிய வேண்டியது அவசியமாகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்த ஒரு வாழ்வை நாம் இன்றும் உற்று நோக்கி பார்க்க வேண்டியதன் அவசியத்தை சொல்கிறார் எஸ்ரா.


**************************

விழா முடிந்தபிறகு, வந்தவர்களும் வாகனங்களும் விரைய விரைய மிச்சமீதமிருந்த சொச்ச நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கையில் எஸ்ரா காணக்கிடைத்தார். அவருடைய openness நேரில் கண்டு மகிழ வேண்டிய ஒன்று.

நான் உங்களின் எளிய வாசகன் என அறிமுகப்படுத்திக் கொண்டு உப பாண்டவம் வாசிக்க வேண்டிய மனோநிலை பற்றி கேட்டேன். அப்படியே நிகழ்ந்த அந்த உரையாடல் அரை மணிநேரம் வரை நீண்டது பேருவகை தந்தது.


தமிழில் டிவியில் நாமெல்லாம் கண்டு ரசித்த மகாபாரதம் மூல புத்தகத்திற்கு justify செய்திருப்பதாகச் சொல்கிறார். ஆங்கிலத்தில் மகாபாரதம் படிக்க சரியான author, Ganguly என்பது அவர் கருத்து.

“உப பாண்டவம் எழுதப் பட வேண்டியதன் அவசியம்தான் என்ன?” என்ற என்னுடைய அதிகப் பிரசிங்கித்தனமான கேள்விக்கும் பொறுமையாக பதிலுரைத்தார் எஸ்ரா. 

“ மகாபாரதம் என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம். காஷ்மீரில் இருக்கும் ஒருவனுக்கும் கன்னியாகுமரியில் உள்ள ஒருவனுக்கும் தெரிந்த கதை மகாபாரதம். அப்படிப்பட்ட தேசிய அடையாளத்தை எழுதிப் பார்க்க நான் ஆசைப் பட்டேன். நான்கு ஆண்டுகள் மிகப் பெரிய கடின உழைப்பை அதற்காகத் தரவேண்டியிருந்தது. இன்று தேசிய அளவில் பாண்டவம் பற்றி எழுதப்பட்ட பல புத்தகங்களில் சிறந்தவற்றை பட்டியலிடுகையில்,  10 சிறந்த புத்தகங்களில் ஒன்றாகவும், 5 சிறந்த புத்தகங்களில் ஒன்றாகவும், 3 சிறந்த புத்தகங்களில் ஒன்றாகவும் “உப பாண்டவம்” உள்ளது. விரைவில் Penguin பதிப்பகத்தில் இருந்து ஆங்கிலத்தில் வெளிவர உள்ளது. மலையாளத்திலும் அது வெளிவர உள்ளது.” - என குறிப்பிட்டார்.


கௌரவர்கள் 100 பேருக்கு ஒரு தங்கை இருப்பது பற்றி சொல்கிறார்.  நமக்கு பரவலாகத் தெரியாத பல விஷயங்கள் மகாபாரதத்தில் உள்ளது.  “அம்மாவை விட வயதான மகன்” என்கிற ஒரு weird logic கொண்டு தேடினாலும் மகாபாரதத்தில் ஒரு பாத்திரம் கிடைக்கிறது என்கிறார்.

திரைப்படங்கள் பக்கம் பேச்சு திரும்பியது. “திரைப்படம் எழுத்து என இரு துறைகளிலும் தனிப்பட்டு பயணிக்க, இரு துறைகளிலும் நிகழும் அனைத்து விஷயங்களைப் பற்றிய தெளிவோடு இருக்க வேண்டிதன் அவசியம் புரிகிறது. எப்படி அதற்கு உங்களை தயார்ப் படுத்துகிறீர்கள் ? ” என வினவினேன். தான் ஒரு தீவிரமான திரைப்பட ரசிகனாக இருப்பது ஒரு முக்கிய காரணம் என்றார். ஆனாலும் தற்போது வெளியாகும் எல்லா திரைப்படங்களையும் முழுமையாக பார்க்க வேண்டியதன் வருத்தத்தையும் பதிவு செய்கிறார்.

“திரைப்படத்தை ஒரு தொழில்நுட்பமாக பார்க்கும் நிலையில் இருக்கும் நீங்கள், திரையில் பார்த்து மகிழும் ஒரு ரசிகனின் மனோநிலையை இழந்து விட்டீர்களா?” - என்ற என் கேள்வியை சிரிப்போடு ஒத்துக் கொள்கிறார்.

“அடுத்த ஷாட் என்ன? அது எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது?  எங்கு வசனம் தேவையாயிருக்கிறது?  எங்கு தேவையில்லாமல் வசனம் எழுதப்பட்டிருக்கிறது?” - இப்படி பல தகவல்களை தான் மனக்குறிப்பில் பதிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் வந்திருப்பதையும் குறிப்பிடுகிறார்.  100 அடி ஷாட்டுக்கு எவ்வளவு நீள வசனம் தேவை என்பதை தான் இப்போது வெகுவாக உணர்ந்திருப்பதாகச் சொல்கிறார்.

இப்படியாக அவருடன் பேசிய தருணங்கள் மிகவும் இனியவையாக மனதில் பதிகின்றன.  நண்பர் ஜாக்கிசேகர் மற்றும் உண்மைத்தமிழன் உடன் இருந்து சுவாரஸ்யப்படுத்தினர்.

எஸ்ரா அவர்களுக்கு மிக்க நன்றி.

8 comments:

 1. // நீல ஜீன்ஸில் எஸ்ராவும் நானும் //

  இதையே தலைப்பாக வைத்திருக்கலாமே...

  ReplyDelete
 2. ///
  Philosophy Prabhakaran said...
  // நீல ஜீன்ஸில் எஸ்ராவும் நானும் //

  இதையே தலைப்பாக வைத்திருக்கலாமே...
  ///

  அட நல்ல ஐடியாதான்... இனி அப்படியும் யோசிப்போம்.

  நன்றி

  அன்பு நித்யன்

  ReplyDelete
 3. எல்லாத்தையும் நினைவு வைத்து எழுதி இருக்கிங்க... நன்றி...

  ReplyDelete
 4. http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_1145.html

  ReplyDelete
 5. “அம்மாவை விட வயதான மகன்” - பீஷ்மர்

  பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 6. ஒரு நல்ல அனுபவத்தை பகிர்ந்திருக்கிறீர்கள்.....

  நியூட்டனின் 3ம் விதி

  ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar