Friday, September 26, 2008

காதலில் விழுந்தேன் - திரைப்பார்வை


புத்தம்புதிய இயக்குநர், புத்தம்புதிய தயாரிப்புக்குழு, பிரபலமாகாத நாயகன் (பாய்ஸ் படத்தில் முள்ளம்பன்றித் தலையோடு வருவாரே அவர்தான்) என்று தயாரிக்கத் துவங்கியபோது இப்படம் பெரிதாக தனக்கான பிம்பம் ஏதுமின்றி வளரத்துவங்கியது. ஒலித்தட்டு வெளியானது. பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பத்துவங்கியது “நாக்க முக்க” பாடல். இந்த பாட்டு எந்த படம் என்பதே கேள்வியானது. படம் பார்த்து பிடித்துப் போனதால் சன் குழுமம் இப்படத்தை வாங்கி வெளியிடத் தயாரானது. பிறகு படத்தின் வீச்சின் நிலையே முற்றிலுமாக மாறி விட்டது. ரசிகர்களையெல்லாம் தியேட்டருக்கு வரவழைக்கும் சக்தியோடு அதிரடிப் பாடல் தயார். அசுரத்தனமான விளம்பர விளிம்பில் நிற்கும் சன் குழுமத்தால் படத்திற்கு அதிரடி விளம்பரங்கள் தயார். அதிகபட்ச தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தயார். புதுமுக நாயகன், நாயகி, இயக்குநர் கூட்டணிக்கு இப்படிப்பட்ட opening கிடைப்பதென்பது மிகப் பெரிய விஷயம். இந்த வாய்ப்பை புதுமுக இயக்குநர் P.V. பிரசாத் எப்படி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று பார்த்தால், நம்மை “அட...” போட வைக்கிறார். களேபரப்படுத்தியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.


பணக்கார நாயகி - ஏழை நாயகன் - விபத்தில் பிறக்கும் அன்பு - பரிமளிக்கும் காதல் - என அரதப் பழசான பாதையிலேயே முன்பாதி படம் நகர்ந்தாலும், மெலடிகளால் நிறைந்து வழிந்தாலும் - “நாக்க முக்க” பாடலும், சுனேனாவின் இயல்பாய் பரிமளிக்கும் அழகும், இயக்குநரின் சின்னச்சின்ன அழகிய ஐடியாக்களும் படத்தை தெம்பாய் தூக்கி நிறுத்துகின்றன. இடைவேளைக்குப் பிறகு நாம் எதிர்பாராத திருப்பம் வந்தவுடன் படத்தில் அசுர வேகம் வந்து ஒட்டிக்கொள்கிறது. அந்த டெம்போ கடைசி வரை தடம்பிறளாமல் கொண்டு சென்றது இயக்குநரின் திறன். படத்தின் கதையினைச் சொல்லி உங்களின் ஆர்வத்தைக் குறைக்க விரும்பவில்லை. வெண்திரையில் பாருங்கள்.


சபா நாயகன். மீரா நாயகி. காதலைச் சொல்லத் தயங்கும் முரளி போல் இருக்கும் நாயகனுக்கு நாயகியே தரும் வழி அற்புதம். தன் கவலையை மறக்க மீரா சொல்லும் பலூன் பாடம் அழகு. தன்னுடைய கல்லூரியிலிருந்து விலகி சபாவின் கல்லூரிக்கு வரும் மீரா, “அம்மா அனுப்பினாங்க” என்றபடி சபாவின் கை கோர்க்கும் இடம் படத்தின் அதியற்புதமான கவிதை.


தன் விழிகளால் மீராவாக வரும் சுனேனா ஸ்கோர் செய்கிறார். படத்தின் இன்னொரு ஆச்சரியம் நகுல். சபாவாக வாழ்ந்திருக்கிறார். முகமூடி அணிந்து பேருந்தில் இடும் சண்டையில் காட்டும் வேகத்திலாகட்டும், “நாக்க முக்க” பாடலின் அதிரடி நடனத்திலாகட்டும், இடைவேளைக்குப் பிந்தைய வனாந்திரப் பகுதியில் வரும் ஆக்ரோஷமான உக்கிரப் பார்வையோடு அரற்றும் நடிப்பிலாகட்டும் - நம்மை கவர்கிறார். சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் நம்மை வெகுவாய் கவர்ந்த ஜெய்யை போன்று இவரும் தொடர்ந்து முன்னேற பலமான வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளன. சம்பத்குமார், லிவிங்ஸ்டன் என்று அனுபவ நடிகர்களின் பங்கும் படத்திற்கு பலம்.


“நாக்க முக்க” மட்டுமல்லாமல் படத்தின் மற்ற அழகிய மெலடிகளிலும் நம்மை மெய்மறக்கச் செய்யும் விஜய் ஆண்டனி படத்தின் அடுத்த ஹீரோ. படத்தின் முன்பாதியில் நிறைந்து வழியும் மென்மை மெட்டுக்களிலும் ரசிகர்களை இருக்கையோடு கட்டிப்போடுகிறார் இசையமைப்பாளர். வனாந்திரத்தை பயத்தோடு நாம் நோக்கும் வண்ணம் தன் திறனை வெளிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளரும் கவனிக்கப்படவேண்டியவர். மற்ற தொழில்நுட்பத் துறைகளும் படத்தின் கதையோட்டத்திலிருந்து நம்மை திசைதிருப்பா வண்ணம் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.


புதிய இயக்குநர் P.V. பிரசாத்தின் பங்கு படமெங்கும் தெரிகிறது. தண்ணீர் குடிக்காமல் குடிக்கும் காதல் மான்களின் கதையில் ஓர் அழகிய க்ளைமாக்ஸை இணைத்திருக்கும் அந்த குணா பாணி வசன பாடல் மிக்க அழகு. ஒரே ப்ரேமில் லாங் ஷாட்டில் ஒரு சண்டைக்காட்சியை படைத்திருக்கும் விதம் அழகு. கேமராவின் சின்னச்சின்ன சிணுங்கல்களிலும், பிண்னணி இசையிலும் அந்த காட்சி ஜொலிக்கிறது. ஒரு நிஜக்கதையின் inspiration ல் கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். உலகப்பட DVDக்களில் கதைதேடும் இந்தக்காலத்தில் Discovery Channel ல் கதை கண்டுபிடித்திருக்கும் இயக்குநருக்கு பாராட்டுக்கள்.
“காதலில் விழுந்தேன்” படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.

10 comments:

 1. எதுக்கு ஒருமாதிரி விளக்கெண்ணெய் குடிச்ச நடையில் எழுதரீங்க

  ReplyDelete
 2. \\எதுக்கு ஒருமாதிரி விளக்கெண்ணெய் குடிச்ச நடையில் எழுதரீங்க\\
  அதானே!!

  ReplyDelete
 3. பார்க்க வேணாம்னு நினைச்சிட்டிருக்கேன்.. பார்த்துதான் தொலைவோமேன்னு நினைக்கத் தோணுது..

  குட்..

  ReplyDelete
 4. நல்ல விமர்சனம் நன்றி
  அந்த அனானி பின்னோட்டத்தை போட்டது லக்குலுக்காக இருக்க வேண்டும். அதை அழித்து விடவும்

  ReplyDelete
 5. பதிவ படிக்கிறப்ப பாக்கலாம் போல தோணுது!!

  ReplyDelete
 6. //மங்களூர் சிவா said...
  பதிவ படிக்கிறப்ப பாக்கலாம் போல தோணுது!!//

  Repeateyyy.......

  ReplyDelete
 7. //
  இந்த வாய்ப்பை புதுமுக இயக்குநர் P.V. பிரசாத் எப்படி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று பார்த்தால், நம்மை “அட...” போட வைக்கிறார்
  //

  ஏன்பா இந்த கொலவெறி இந்த படத்தை உன் பதிவ படிச்சிட்டு போய் பாத்து கழுத்து காது மூக்குல ரத்தம் வந்ததுதான் மிச்சம்
  :((((((((((((((((((

  ReplyDelete
 8. உண்மை தமிழன் அண்ணே வேண்டாம்ணே வாழ்க்கைல இவ்ளோ பெரிய ரிஸ்க்கு

  ReplyDelete
 9. //மங்களூர் சிவா said...
  உண்மை தமிழன் அண்ணே வேண்டாம்ணே வாழ்க்கைல இவ்ளோ பெரிய ரிஸ்க்கு//

  என்னங்கடா இது ரோதனையா போச்சு.. அத்தனை வயசுப் பசங்களும் இந்த ஒரு படத்துக்கு மட்டும் மாத்தி, மாத்தி எழுதுறீங்க.. ஒண்ணும் புரியல..

  ReplyDelete
 10. நேரம் கிடைக்கும் போது காதலில் விழுந்தேன் பாத்தாப்போச்சு.

  - சாந்தி -

  ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar