Thursday, April 3, 2008

சமீபத்திய பதிவர் சந்திப்பு - என் பார்வையில்...


இனிய நண்பர்களுக்கு...


வணக்கம். சமீபத்திய பதிவர் சந்திப்பில் நானும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. வலையுலக வரலாற்றின் நீண்ட பதிவுகளையெல்லாம் எழுதி அதனால் மட்டுமல்லாமல் மற்ற பல காரணங்களுக்காகவும் வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் முருகனடிமை (மாலடிமை என்ற அரசியல் வார்த்தைச்சுவைக்கிணையாக ஒரு வார்த்தை) அவர்கள் என்னை கட்டாயம் வந்து பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார். அண்ணார் அவர்களின் ஆணைக்கிணங்க கலந்து கொள்ள முடிவெடுத்தேன்.


பீச் ஸ்டேஷன் வரை சென்று, வேளச்சேரி தடம் வழியாக திரும்பி வந்து சேப்பாக்கத்திலேயே இறங்கி பாரதியாரை கண்டு வணக்கம் சொல்லிவிட்டு போன் செய்தால் காந்தி சிலைக்கு வரவேண்டுமென்றார்கள். கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் நடக்க வேண்டியதாகிவிட்டது. கடற்கரையாக இருந்ததால் தப்பித்தேன். உலகம் இன்னும் சுற்றிக் கொண்டிருப்பதன் காரணம் விளங்கியது.


பெயர் மட்டுமே தெரி்ந்த (அவை கூட வலைப்பெயர்கள்தாம், நிஜப்பெயர் அல்ல) நண்பர்களை கண்ணுக்குக் கண் சந்திக்கும் நிகழ்வென்பதால் ஆர்வம் மிகுந்திருந்தது.


இனி சந்திப்புத்துளிகள்...


*** உண்மைத்தமிழன் அவர்கள் சுண்டல் வாங்கித்தந்தும் என்னை அறிமுகம் செய்து வைத்தும் நிரம்ப புண்ணியம் கட்டிக்கொண்டார். பிற பதிவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தே கொஞ்சம் சோர்ந்து போனார் என்றுதான் சொல்லவேண்டும். என் வலையை சிலர் வாசித்திருக்கிறார்கள்... பலருக்குச் சரிவரத் தெரியவில்லை. ஆயினும் என்ன எழுத வந்து இரண்டு மாதம் தானே ஆகிறது என்று எண்ணி தேற்றிக் கொண்டேன்.


*** நந்தா அவர்களை நண்பராக்கிக் கொண்டேன். எங்கோ திரும்பித்திரும்பி யோசித்துக்கொண்டிருந்தவரை என் பக்கம் திருப்பித்திருப்பி பேசிக்கொண்டிருந்தேன். இது போன்ற வலைப்பதிவர் சந்திப்புகளின் பயன் என்ன என்று கேட்டதற்கு பொட்டிலடித்தாற்போல் அவர் சொன்ன பதிலில் உண்மை இல்லாமலில்லை.


*** ஃபேசியல், பிளீச்சிங் இன்னபிற செய்த முகத்தோடும் (தகவல் உதவி பாலபாரதி), தமிழ்மணம் இலட்சிணை பொறித்த சட்டையோடும் லக்கிலுக் வந்திருந்தார். அவர் ஒரு most wanted person ஆக இருந்தமையால் அவரோடு அளவளாவும் என் அவா நிறைவேறவில்லை. இருப்பினும் என்னை புகைப்படத்தில் பார்த்தபடி செவப்பாக இல்லையென்று சொன்னார். அவருடைய பதிவுகளில் வழிந்தோடும் அங்கதத்திற்கேற்றபடி புன்னகை வழியம் முகத்தோடே காணப்பெற்றார். அவ்வப்போது தனியேயும் பாலபாரதியுடன் இணைந்தும் காணாமல் போய் திரும்பி வந்தார்.


*** பாலபாரதி பிறர் மீது வெளிச்சம் தூவும் மீடியாக்காரராகையால், அந்த நிகழ்வுகளின் சுவாரஸ்யங்கள் குறித்தும், சோகங்கள் குறித்தும் தன் உள்ளக்கிடக்கையினை பகிர்ந்து கொண்டார். குசும்பன் வரும்வரை centre of attraaction ஆக இவரே இருந்தார்.


*** ஜ்யோவ்ராம் சுந்தர் ஒரு 2 நிமிடம் கிடைத்தார். என்னுடைய பதிவில் வந்த ஏதோ ஒரு கவிதையைப்பற்றி பின்னூட்டுகையில் “இது ஹைக்கூ அல்ல பொய்க்கூ” என்று எழுதியிருந்தார். அதை இப்போது சொல்லி அவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். அவருடைய அ-கவிதைகள் பற்றி சொன்னார். மேலும் நான் எழுதிக் கொண்டிருப்பதெல்லாம் வாரமலர் கவிதைகளின் அடுத்தபடிதான் என்றும் உங்களின் காலச்சுவடு அளவுக்கு வர முயற்சிப்பதாகவும் சொன்ன போது, எழுத எழுத வந்துவிடும் என்றார்.


*** பைத்தியக்காரன் வரிசையாக வந்து எல்லா பதிவர்களிடமும் “பைத்தியக்காரன், பைத்தியக்காரன்” என்று சொல்லி்க்கொண்டே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு சென்றது, பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அவருடைய எழுத்துக்கும் அவர் தோற்றத்துக்கும் கிஞ்சித்தும் தொடர்பில்லை. மொக்கை எழுதும் மூன்றாம் தெரு முனுசாமி போல மிக இயல்பாக இருக்கும் இவரின் பதிவுகளை வாசிக்கத் துவங்கினால், நம்மை வேறு தளத்திற்கே அழைத்துச் செல்கிறார். உங்களைப் போன்று எழுதவெல்லாம் எனக்கு வரவே வராது, உங்களுக்கு பெரிய வணக்கம் என்று அவரிடம் உரிமையாகச் சொன்னபோது பயங்கரமாக கூச்சம் கொண்டார். அறிவுஜீவித்தனமாக எந்த போலி தோற்றமும் இல்லாமலிருந்த அவருடைய இயல்பு என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது.


*** சந்திப்பு நாயகர்கள் குசும்பனும் அபிஅப்பாவும் சொன்னபடி வந்தது மிகச் சிறப்பம்சம். அபிஅப்பாவின் பேச்சும் எள்ளல் தவழ அமைந்திருந்தது. குசும்பன் மிகவும் பவ்யமாக காணப்பட்டார். கல்யாணம் என்றவுடன் மக்கள் இப்படி ஆகிவிடுகிறார்களோ என்ற சந்தேகம் கூட தோன்றியது. அவர் திருமணத்திற்கு இப்போதே என் வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன்.


*** மா.சிவக்குமார் அவர்களிடமும் வினையூக்கி அவர்களிடமும் சிறிது உரையாடினேன். அதியமான், சுகுனாதிவாகர் போன்றோர் தீவிர சர்ச்சைகளில் படுதீவிரமாக பேசிக்கொண்டிருந்த படியால் அவர்களோடு அறிமுகப்படுத்திக் கொள்ள இயலவி்ல்லை. கடலையூர் செல்வம் மற்றும் ஆதிஷா போன்ற, புதிய பதிவர்களிடமும் சற்று உரையாட வாய்ப்பு கிட்டியது. இவர்தான் டோண்டு ராகவன் என்று பக்கத்தில் இருந்த யாரோ சொல்ல, “போலி டோண்டு” யாரென்று கேட்டுவிட எத்தனித்த நாக்கை கடித்து மடக்கி உள்ளே தள்ளினேன்.


யாரைப்பற்றியேனும் குறிப்பிடாமல் விட்டிருந்தால் அது மறதியினாலேதான் என்று சொல்லிக்கொள்கிறேன். மற்றபடி இந்த சந்திப்பு மனதிற்கு இனியதாக அமைந்திருந்தது. அனைத்து நண்பர்களுக்கும் என் வணக்கத்தையும் நன்றியையும் உரித்தாக்கிக் கொள்கின்றேன்.


டெய்ல் பீஸ் : இனி வாராவாரம் வியாழன் தோறும் “காண்டு கஜேந்திரனின் கேள்வி பதில்” பகுதி ஆரம்பம் என்று லக்கிலுக் சொன்னது சும்மா லுலுவாவா இல்லை உண்மையாகவா என்று அவரிடமே கேட்டுக் கொள்ளவும்.

20 comments:

 1. நண்பரே..

  சுருக்கமான உங்களது பதிவைப் பார்த்ததும் எனக்கு வெட்கமாகப் போய்விட்டது.

  எனக்கு மட்டும் ஏன் இப்படி 'சுருக்'கென்று எழுத வர மாட்டேங்கிறது என்பது எனக்குப் புரிய மாட்டேங்குது..

  நன்று.. நன்று.. நன்று..

  வாழ்த்துகள்..

  ReplyDelete
 2. தலைவரே...

  உங்களோட சிறப்பே உங்களின் உயரமான பதிவுகள்தான்...

  இதை எழுதுவதற்குள் வலையுலக வார்த்தைப்படி சொல்லவேண்டுமானால் தாவு தீர்ந்து விட்டது...

  வருகைக்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி உண்மைத்தமிழரே...

  ReplyDelete
 3. உங்களைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 4. நேரில் கண்டதுபோல் உள்ளது...

  பகிர்விற்கு மிக்க நன்றி..

  ReplyDelete
 5. 'குமுதம்' எஸ்.ஏ.பி. பாணியில் சந்திப்பை துளித்துளியாக அளித்திருக்கிறீர்கள்.

  நண்பர் உண்மைத்தமிழன் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. மொழி விளையாட்டில் அவரவர் ஆட்டத்தை அவரவர் ஆடிக் கொண்டிருக்கிறோம். இதில் 'சுருக்' பதிவோ, 'உயரமான' பதிவோ... விளையாட்டை பொறுத்தே அமைகிறது. விளையாட்டில் நுழையும் அரசியலும் அதை தீர்மானிக்கிறது.

  சகபயணிகளான உங்கள் அனைவரையும் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.

  பயணத்தை தொடர்வோம்.

  ReplyDelete
 6. ஜ்யோவ்ராம் சுந்தர் said...
  உங்களைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.

  * * * * * *

  எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே சுந்தர்...

  அன்பு நித்யன்

  ReplyDelete
 7. பேரரசன் said...
  நேரில் கண்டதுபோல் உள்ளது...

  பகிர்விற்கு மிக்க நன்றி..

  * * * * * * * * *

  வெறும் வருகையோடு நின்றுவிடாமல் தங்களின் பங்காக இந்த வாழ்த்து வார்த்தைகளையும் விட்டுப்போன உங்களுக்கு மிக்க நன்றி பேரரசன்...

  அன்பு நித்யன்

  ReplyDelete
 8. //எனக்கு மட்டும் ஏன் இப்படி 'சுருக்'கென்று எழுத வர மாட்டேங்கிறது என்பது எனக்குப் புரிய மாட்டேங்குது..//

  உண்மைத்தமிழன் அண்ணே!

  உங்க தொழில் அப்படி!

  குயிலை புடிச்சி கூண்டில் அடைச்சி கூவச்சொல்லுகிற உலகம், மயிலை புடிச்சி காலை உடைச்சி ஆட சொல்லுகிற உலகம். அது எப்படி பாடுமய்யா, இது எப்படி ஆடுமய்யா என்று பாடவேண்டும் போலிருக்கிறது.

  மெகாசீரியல் எழுத்தாளரான உங்களிடம் சுருக்கமாக எழுதச்சொல்வது மகாபாவம் என்று எங்களை போன்ற பாவிகளுக்கு தெரியவில்லை. கர்த்தர் எம்மை மன்னிக்கட்டும்!

  ReplyDelete
 9. பைத்தியக்காரன் said...

  'குமுதம்' எஸ்.ஏ.பி. பாணியில் சந்திப்பை துளித்துளியாக அளித்திருக்கிறீர்கள்.

  சகபயணிகளான உங்கள் அனைவரையும் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.

  பயணத்தை தொடர்வோம்.

  * * * * * * * * * * *

  ரை ரைட்....

  அன்பு நித்யன்

  ReplyDelete
 10. //நண்பர் உண்மைத்தமிழன் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. மொழி விளையாட்டில் அவரவர் ஆட்டத்தை அவரவர் ஆடிக் கொண்டிருக்கிறோம். இதில் 'சுருக்' பதிவோ, 'உயரமான' பதிவோ... விளையாட்டை பொறுத்தே அமைகிறது. விளையாட்டில் நுழையும் அரசியலும் அதை தீர்மானிக்கிறது.//

  இதை வெறும் ‘விளையாட்டு' என்று சொல்லி சிறுமைப்படுத்தி விடாமல் “ஆட்டை” என்று சொல்லி கவுரவப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 11. நந்தா சொன்ன பதிலைச் சொல்லுங்கள். தலை வெடித்துவிடும் போல இருக்கிறது

  ReplyDelete
 12. சனிக்கிழமை தான் காண்டு கஜேந்திரன் கைவரிசையை காட்டுவார்

  ReplyDelete
 13. நித்யகுமாரன்...பதிவு நன்றாக வந்துள்ளது.உங்களுடன் பேசியது மகிழ்ச்சி.அனைவருடனும் பேச ஆசையாக இருந்தாலும் நேரமின்மை காரணமாக இயலவில்லை.அதற்கென்ன..அடுத்தடுத்த சந்திப்பில் பேசினால் போச்சு..

  ReplyDelete
 14. அதென்னங்க ஓசைபடாம மகளிரைக் கழட்டிவிட்டுட்டீங்களா?

  இன்னும் சில முக்கியமானவைகளைப் பதிய வீட்டுப் போயிருக்கு.....
  ஒன்லி சுண்டல்?(-:

  ஆனாலும் சுருக் நல்லாவே இருக்கு. நன்றி.

  ReplyDelete
 15. குசும்பன் வரும்வரை centre of attraaction ஆக இவரே இருந்தார்.

  ithuthaan kusumbuthanam enpathu

  mattapadi ungal viyakiyanam nantagavae irunthathu

  ReplyDelete
 16. லக்கிலுக் said...
  //நண்பர் உண்மைத்தமிழன் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. மொழி விளையாட்டில் அவரவர் ஆட்டத்தை அவரவர் ஆடிக் கொண்டிருக்கிறோம். இதில் 'சுருக்' பதிவோ, 'உயரமான' பதிவோ... விளையாட்டை பொறுத்தே அமைகிறது. விளையாட்டில் நுழையும் அரசியலும் அதை தீர்மானிக்கிறது.//

  இதை வெறும் ‘விளையாட்டு' என்று சொல்லி சிறுமைப்படுத்தி விடாமல் “ஆட்டை” என்று சொல்லி கவுரவப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  * * * * * * * * * * * * *

  மொழி ஆட்டையில் உண்மைத்தமிழனின் பாணியே தனி...

  லக்கிலுக்கின் வார்த்தைகள் சிறப்பே...

  ReplyDelete
 17. முரளிகண்ணன் said...
  நந்தா சொன்ன பதிலைச் சொல்லுங்கள். தலை வெடித்துவிடும் போல இருக்கிறது

  * * * * * * * * * * *

  ஓவர் டு நந்தா

  ReplyDelete
 18. முரளிகண்ணன் said...
  சனிக்கிழமை தான் காண்டு கஜேந்திரன் கைவரிசையை காட்டுவார்

  * * * * * * * * * * * *

  வெயிட்டிங்...

  ReplyDelete
 19. செல்வம் said...
  நித்யகுமாரன்...பதிவு நன்றாக வந்துள்ளது.உங்களுடன் பேசியது மகிழ்ச்சி.அனைவருடனும் பேச ஆசையாக இருந்தாலும் நேரமின்மை காரணமாக இயலவில்லை.அதற்கென்ன..அடுத்தடுத்த சந்திப்பில் பேசினால் போச்சு..

  * * * * * * * * * *

  அதான் அதேதான்...

  ReplyDelete
 20. துளசி கோபால் said...
  அதென்னங்க ஓசைபடாம மகளிரைக் கழட்டிவிட்டுட்டீங்களா?

  இன்னும் சில முக்கியமானவைகளைப் பதிய வீட்டுப் போயிருக்கு.....
  ஒன்லி சுண்டல்?(-:

  ஆனாலும் சுருக் நல்லாவே இருக்கு. நன்றி.

  * * * * * * * * * * * * *

  பாலபாரதியிடம் கேட்க வேண்டிய கேள்வி...

  மற்றபடி சைட் டிஷ் பற்றி மட்டுமே பேச அனுமதி... :-)

  நன்றிகள் கோடி...

  அன்புடன் நித்யகுமாரன்

  ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar