Thursday, January 22, 2009

”எங்க ராஜ்மோகன் சார்”





ராஜ்மோகன் சாரைப் பத்தி நான் முதன் முதலா கேள்விப்பட்ட விஷயமே என்னை பயங்கொள்ளச் செய்தது எனலாம். அப்போது நான் திருச்சியில் திரு. சண்முகம் Architect அவர்களிடம் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அடுத்ததாக நான் ஸ்ரீரங்கம் , ராகவேந்திராபுரம் “"Suriya Towers Phase I " project டிற்கு மாற்றப்பட வாய்ப்பிருப்பதாக அறிந்தவுடன் அலுவலகத்தில் எல்லாரும் சொன்னார்கள் : “அவரு கிட்ட போறியா... நல்லா மாட்டப் போறடி...”.




ராஜ்மோகன் சார் ஒரு building promoter. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், ஹோலிகிராஸ் college அருகே அமைந்திருக்கிற Suriya Towers என்கிற commercial complex அவரோடதுதான் (with his partners). அவருடைய அடுத்த Residential project ஸ்ரீரங்கத்தில் தொடங்கவிருந்தது. அந்த project டிற்கான site engineer ஆக என்னை நியமிக்க எங்கள் Architect உத்தேசித்திருந்தார். அப்போது Engineering முடித்து இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்தன. சற்று raw வாக இருந்தேன் என்று சொல்லலாம். என்னை பண்படுத்தியவர் அவரென்றால் அது மிகையில்லை.




அவர் ஒரு terror என்பதில் மாற்றுக்கருத்துக்கள் எழ வாய்ப்பில்லை. “ரௌத்திரம் பழகு” என்று பாரதி சொல்வதை நான் அவரிடம் தான் கற்றுக் கொண்டேன். அவரிடம் பலமுறை நானும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன். பலமுறை சொல்லுவார் : “ இங்கேயிருந்து வெளிய போனா, முழுசா தயாராகிப் போயிடனும்..”. எந்தவொரு விஷயத்தை எடுத்தாலும் அதை முழுமையாக அலசி ஆராய்ந்து முடிக்கும் வரை அவர் கைவிடமாட்டார். தன்னைப் பார்த்தேனும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவரது எண்ணம்.




Weekly payment வாங்குவதற்கு மட்டுமே அவரைப் பார்த்தால் போதுமென்று மற்ற நாட்களில் அவரை நெருங்கவே பயந்து ஓடும் contractor களை பார்த்திருக்கிறேன். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் வந்தால் அவரைப் பார்க்க மனதில் தனி மரியாதையே வரும். அவருடைய கோபத்தின் அளவு எவ்வளவு என்பதை ஒருமுறை நான் நேரில் கண்டேன். ஏதோ தவறு செய்துவிட்டதற்காக site watchman ஒருமுறை அவரிடம் அடி வாங்கியதை இன்றும் என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது.




அதே போல், அடுத்தவர்களுக்கு ஏதெனும் செய்யவேண்டுமென்று நினைத்து விட்டால், மனிதர் சளைக்காமல் செய்வார். உண்மையாக உழைப்பதாக அவர் உணர்ந்தால் போதும் மனிதர் தாங்குவார். ஒருமுறை கட்டுக்கம்பி காலில் குத்தி இரத்தம் வழிய நான் வந்தபோது Rs.100/- பணம் கொடுத்து உடனடியாக ஆஸ்பத்திரிக்கு போகச் சொன்னார். “இதெல்லாம் ஒன்னுமில்லை சார் பாத்துக்கலாம் ” என்று சொல்லியும் விடவில்லை. அவருடைய partner சரவணன் அவர்களின் சிறுவயது பெண்குழந்தை ஒரு நாள் காலையில் 'happy birthday' என்று சொல்லி chocolate கொண்டு வந்தபோது, அடடா என்று பதறியபடி தன் சட்டைப் பைக்குள் கை விட்டு அப்படியே கையில் வந்த ரூபாய் நோட்டுகள் அத்தனையும் கொடுத்து வாழ்த்தினார்.




ஆன்மிகத்தில் மிகப்பெரும் நாட்டம் கொண்டவர் அவர். அவர் ஒரு சீரிய ஷீரடி சாய்பாபா பக்தர். ஜோதிடம் பார்க்கத் தெரியும். அவருடைய இஸ்லாம் நண்பர்களுக்குக் கூட ஜாதகம் எழுதித்தந்ததாக பிற்பாடு கேள்விப் பட்டேன். ”உங்க ஜாதகப் படி நீங்கள் எங்கும் வேலைபார்க்கும் வாய்ப்பு பிற்காலத்தில் இல்லை. தனியாகத் தொழில் செய்யத்தான் வாய்ப்புண்டு ” என்று அப்போதே சொன்னார். L&T யில் பணிபுரியும் வரையிலும் எனக்கு அந்த நம்பிக்கை பெரிதாக வரவில்லை. ஆனால் இன்று நான் தனியாக தொழில் செய்கிறேன். அந்த எண்ணங்கள் மனதில் வளர அன்று நல்லதொரு விதையை ஊன்றி அவர்தான் வளர்த்தார் எனலாம்.




ஆன்மிக நாட்டமும் மிகப் பெரிதாக என்னில் இருந்ததில்லை. முருகனையும் பிள்ளையாரையும், திருவெள்ளரை பெருமாளையும் கும்பிடுவதும் அப்பாவுக்காக செய்யும் காரியமாகத்தான் இருந்தது. ஷீரடி சாய்பாபாவை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்து, “இவரைத்தான் நீங்கள் பற்றிக்கொள்ள வேண்டும்” என்று குருஸ்தானத்தில் இருந்து வழிகாட்டியவரும் அவர்தான். பிற்பாடுதான் நான் செல்லும் பலவிடங்களில் சாய்பாபா அவர்களின் படமும் தொடர்ந்து வந்ததை நான் அறிந்துகொண்டேன். “அவரு நினைக்காம நீங்க அவரைப் பார்க்க முடியாது” என்று அவர் பாபாவைப் பற்றி அடிக்கடி கூறுவார். “அவனருளாளே அவன் தாள் பணிந்து” என்று வரிகளை நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.




ராஜ்மோகன் சார் பெரிதாக ஒன்றும் படிக்க வில்லை. சைக்கிள் கடையில் வேலைபார்த்தது முதல் பல விஷயங்களை என்னிடம் அவர் பகிர்ந்ததுண்டு. “இதை எவனும் சொல்லிக் கொடுக்க மாட்டான் ” என்று ஆரம்பித்தே பல விஷயங்களை எனக்கு சொல்லிக்கொடுத்தார். வியாபாரத்தில் சூழல் சரியில்லை என்றால் நான் அவரிடம் தான் உடனடியாக செல்வேன். திருச்சிக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் அவரை சந்திக்க நான் தவறுவதில்லை. என்னுடைய திருமணத்திற்கு தம்பதி சமேதமாக வந்து வாழ்த்தினார்.




அவருடைய சம்பந்தி வீட்டிற்கு சமீபத்தில் அவர் சென்னை வந்தபோது அவரை நேரில் சென்று (வாடகைக்) காரில் அழைத்து வந்து, மேடவாக்கத்தில் உள்ள என்னுடைய project site ஐ பெருமிதத்துடன் காட்டினேன். ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பாபா கோயிலுக்கு சென்றுவந்தோம். அவருடன் நான் பாபா கோயிலுக்குச் சென்றது அந்த ஒருமுறைதான். அந்த தருணம் மிகவும் திவ்யமானது. என்னைப் பற்றி தன் துணைவியாரிடம், “சின்னப்பையன் நல்லா பொறுப்பா பன்றான்” என்று சொன்னதாக பிற்பாடு கேள்விப்பட்டேன். மிக்க சந்தோஷமாகவிருந்தது.




கடந்த மாதத்தில் சென்னையில் உலகத் திரைப்பட விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் தவறாது சென்று வந்தேன். ஒரு நாள் காலை அங்கு பயணித்திருக்கும் போது வந்திருந்த call ஒன்றை நான் தவறவிட்டேன். Woodlands தியேட்டர் சென்று அடைந்தவுடன்தான் missed call ல் கண்டேன். குறித்து வைக்காத திருச்சி landline எண்ணிலிருந்து இரண்டு முறை call வந்திருந்தது. யாராகவிருக்கும் என்றெண்ணி தொலைபேசியபோது ராஜ்மோகன் சாரின் துணைவியார் பேசினார். “உங்க ராஜ்மோகன் சார் நம்மள விட்டு போய்ட்டாருய்யா... வெந்து சாம்பலா போய்ட்டாருய்யா...” என்று துவங்கி ஓலமிட்ட அந்த குரலை கேட்கும் சக்தி எனக்கில்லை. ஆளரவம் எண்ணாமல் நான் ஓங்கிப் பெருங்குரலெடுத்து அழத்துவங்கினேன். Car parking ஐ ஒட்டிய சுவரில் முட்டி சுற்றுப் புறம் மறந்து அழத் துவங்கினேன். அப்பக்கம் அந்நேரம் தம்மடிக்க வந்த இயக்குநர் ஸ்டான்லி உள்ளிட்ட இருவர் என்னை வித்தியாசமாக பார்த்து நகர்ந்தனர்.




இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே எங்க சார் heart attack ஆல் இறந்து போயிருந்தார். நான் பணிபுரிந்த அலுவலக நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ள முடியாது போனதாக பின்பு வருத்தப்பட்டனர். என்னுடைய மொபைல் நம்பரை அவருடைய மொபைல் போனில் இருந்து கண்டெடுத்து பின்பு எனக்கு போன் பண்ணியிருக்கிறார்கள் என்று பின்பு தெரிந்து கொண்டேன்.
சுற்றம் மறந்து நான் அழுதது எனக்கு நினைவு தெரிந்து அன்றுதான். மிகப்பெரிய சூன்யம் என்னை நெருங்கி அரவணைத்து உலுக்கத் தொடங்கியது. அந்த நிகழ்வை என்னால் ஒத்துக்கொள்ளவே முடியவில்லை. எனக்கு நினைவு தெரிந்து என்னை பாதிக்கும் அளவு எந்த பெரிய மரணமும் இது வரை நிகழவில்லை. இதை ஜீரணிக்க மிகவும் கஷ்டப் பட வேண்டியிருந்தது.




பாபா கோயிலுக்கு போவதைக்கூட நிறுத்திவிட எண்ணினேன். என்னுடைய பிரத்யேக முயற்சியில்லாமலேயே அதே ஈஞ்சம்பாக்கம் பாபா கோயிலுக்கு 2009 ஜனவரி 1 அன்று செல்ல நேரிட்டது. “அவரு நினைக்காம நீங்க அவரைப் பார்க்க முடியாது” என்று அவர் பாபாவைப் பற்றிச் சொன்னது நினைவுக்கு வந்தது. பாபாவிடம் வேண்டிக்கொள்ள ஆயிரம் இருந்தாலும் ராஜ்மோகன் சாரின் நினைவுகள் மட்டுமே சூழ்ந்து வந்தன. அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டி வந்தேன்.




புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை மொபைல் போனில் உள்ள ஒவ்வொரு எண்ணுக்கும் SMS அனுப்பிக் கொண்டே வருகையில் Rajmohan sir என்கிற அவருடைய பெயர் வந்து நிற்கிறது. விரல்கள் நடுங்க அடுத்த பெயரை தேடிச் செல்கிறேன். மொபைலில் இருந்து அவருடைய எண்ணை என்னால் நிச்சயமாக அழிக்கவே முடியாது என்பது மட்டும் நிதர்சனம்.

7 comments:

  1. பலமுறை சொல்லுவார் : “ இங்கேயிருந்து வெளிய போனா, முழுசா தயாராகிப் போயிடனும்..”. எந்தவொரு விஷயத்தை எடுத்தாலும் அதை முழுமையாக அலசி ஆராய்ந்து முடிக்கும் வரை அவர் கைவிடமாட்டார். தன்னைப் பார்த்தேனும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவரது எண்ணம்.//


    இது போன்ற மனிதர்கள் கிடைத்ததுதான் இப்போதைய உங்களின் வளர்ச்சியின் உரம்

    ReplyDelete
  2. புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை மொபைல் போனில் உள்ள ஒவ்வொரு எண்ணுக்கும் SMS அனுப்பிக் கொண்டே வருகையில் Rajmohan sir என்கிற அவருடைய பெயர் வந்து நிற்கிறது. விரல்கள் நடுங்க அடுத்த பெயரை தேடிச் செல்கிறேன். மொபைலில் இருந்து அவருடைய எண்ணை என்னால் நிச்சயமாக அழிக்கவே முடியாது என்பது மட்டும் நிதர்சனம்.///


    எவ்வளவோ வெட்டிகளின் நட்பர் இருக்கம் போது அந்த நம்பர் என்ன செய்து விட போகிறத அதை அழிக்காதிர்கள்

    ReplyDelete
  3. ராஜ்மோகன் சார் பெரிதாக ஒன்றும் படிக்க வில்லை. சைக்கிள் கடையில் வேலைபார்த்தது முதல் பல விஷயங்களை என்னிடம் அவர் பகிர்ந்ததுண்டு. “இதை எவனும் சொல்லிக் கொடுக்க மாட்டான் ” என்று ஆரம்பித்தே பல விஷயங்களை எனக்கு சொல்லிக்கொடுத்தார்.//


    ராஜ்குமார்சாரின் கோபத்துக்கான காரணம் அந்த சின்ன வயது சைக்கிள் கடை உழைப்பினால்தான் என்பேன். அது கோபம் அல்ல நல்ல நிலையில் அந்த புராடக்ட் வர தன் உழைப்பாளர் எல்லோரிட்மும் அந்த நேர்த்தி வர போராடுவது...

    ReplyDelete
  4. எங்க அறிவியல் டீச்சர் திடிரென 40+ வயதிலேயே இறந்த போது இதே மாதிரியான சூழ்நிலையில் நானும் பலர் சுற்றியிருக்க என்னையுமறியாமல் உறக்க அழுதிருக்கிறேன்.
    உங்களின் உணர்வை அப்படியே உணருகிறேன் நண்பா.

    ReplyDelete
  5. ஆன்மிகத்தில் மிகப்பெரும் நாட்டம் கொண்டவர் அவர். அவர் ஒரு சீரிய ஷீரடி சாய்பாபா பக்தர். ஜோதிடம் பார்க்கத் தெரியும். அவருடைய இஸ்லாம் நண்பர்களுக்குக் கூட ஜாதகம் எழுதித்தந்ததாக பிற்பாடு கேள்விப் பட்டேன். ”உங்க ஜாதகப் படி நீங்கள் எங்கும் வேலைபார்க்கும் வாய்ப்பு பிற்காலத்தில் இல்லை. தனியாகத் தொழில் செய்யத்தான் வாய்ப்புண்டு ” என்று அப்போதே சொன்னார். L&T யில் பணிபுரியும் வரையிலும் எனக்கு அந்த நம்பிக்கை பெரிதாக வரவில்லை. ஆனால் இன்று நான் தனியாக தொழில் செய்கிறேன். அந்த எண்ணங்கள் மனதில் வளர அன்று நல்லதொரு விதையை ஊன்றி அவர்தான் வளர்த்தார் எனலாம்.


    enakkum ninaivirukkiirathu vaasthukaaga avar maatriya no of columns. Really shocking news.

    ReplyDelete
  6. DEAR NITHYA,

    NANUM TRICHY THAN,INTHA RAJKUMAR SARA PATHI PADITHU UNMAIYAKA ENAKU MASU SARI ILLAI...ROMBA FILLINGA IRUKKU..ITHU POLA NALLA MANITHAR UNGAL VALKAIEL KIDATHATHU NEENGAL SEITHA PAKKIYAM...

    Thanks regards
    Mohammed Ithris
    Dubai.
    ithris@rocketmail.com

    ReplyDelete
  7. en manam kavarntha senthil kumar sir-ku ( soory )nithyakumaran sir-ku en nanri...

    unga mail kandavudan enakku mikka magilchi sir..

    nenga innum niraiya kaviyam padaikka ungal nanbanin valthukkal..

    intha site enakku eppadi kidaithathu sariya ninaivu..illai
    anal intha sitetai ninaikama irukka mudiyallai....
    athuvum rajmohan sir & ootai pai
    ellam manasula alagia ninaiva vattam poduthu..
    nengal varaithirukkum oviyam ellam ungal manathil mangamal irukkum manikka karkal..athanai enakkum pagirenthamaikku mikka nanri sir.....

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar