விஜய் டிவியின் தனித்தன்மை வாய்ந்த நிகழ்ச்சிகள் இன்றும் அந்த தொலைக்காட்சிக்கு பெயர் பெற்றுத்தருபவையே. ஆரம்பத்தில் வெற்றிகரமாக வெளிவந்த “நையாண்டி தர்பார்” நிகழ்ச்சியின் வெற்றி குறிப்பிடத்தக்கது. யுகிசேதுவின் அறிவார்ந்த சிந்தனையும் அவரின் மிகப்பெரிய பலமான டைமிங் சென்சும் அந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு உறுதுணையென்றால், அந்த நிகழ்ச்சியை பரிட்சித்து பார்க்கும் தைரியம் பெற்றமைக்காக நாம் விஜய் தொலைக்காட்சியை பாராட்டலாம்.
அவர்களுடைய ஸ்டார் குரூப்பில் மிகப் பெரும் வெற்றியடைந்த “The great laughter challenge" நிகழ்ச்சியை தமிழில் “கலக்கப்போவது யாரு?” என கொண்டுவந்தார்கள் விஜய் டிவியினர். ஹிந்தியில் நவ்ஜோத் சித்துவும் மற்றொரு காமெடி நடிகரும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதால், இங்கே தமிழில் நம்ம ரமேஷ் மற்றும் ஒரு காமெடி நடிகரும் (யாரென்று நினைவில்லை, தெரிந்தால் சொல்லுங்களேன்) தொகுத்து வழங்கினர். விஜய் டிவி நிர்வாகத்திற்கும் அந்த நிகழ்ச்சியின் இயக்குநருக்கும் ஏதோ பிரச்சனை வந்தபின், சன் தொழிலாளர்களை கலைஞர் தொலைக்காட்சி வளைத்தது போல, சன் டிவி அந்த டீமையே வளைத்துப்போட்டு “அசத்தப்போவது யாரு?” என்று அளப்பரையை ஆரம்பித்தது. அரசியல் பின்னணியிலிருந்து வந்தவர்களுக்கு சொல்லித்தரவா வேண்டும்.
பிற்பாடு இதே நிகழ்ச்சியின் பல பிரதிகள் நாம் திருப்பும் டிவி தோறும் வந்து கொண்டேயிருக்கின்றன. பிற்பாடு விஜய் டிவி நிகழ்ச்சியில் அப்போது அதிமுகவில் இருந்த S V சேகர் கலந்து கொண்டு வாராவாரம் சன் டிவியை கலாய்த்துக் கொண்டேயிருந்தார். இப்போது S V சேகர் எந்த கட்சியில் இருக்கிறார் என்று அவருக்கே சந்தேகம் வருகிறதாம். ஏதோ போகிற போக்கில் இதை நான் சொல்லவில்லை. உலகத் திரைப்பட விழாவில் நடந்த ஒரு press meet ல் அவரே சொன்ன வாசகம்தான் இது.
இதே போலத்தான் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியும்... முதன்முதலில் விஜய் டிவியில் வந்தபோது (அதாவது சீசன் 1 என்று வைத்துக்கொள்ளுங்கள்) அந்த நிகழ்ச்சி மிகப் பெரும் கவனிப்பை ஏற்படுத்தியது என்பது உண்மை. இதைக்கண்ட சன் அந்த நிகழ்ச்சியின் மற்றொரு பிரதியையும் ஏற்படுத்தியது. பிற்பாடு வந்த கலைஞர் தொலைக்காட்சி டான்ஸ் மாஸ்டர் கலாவையே அமுக்கி “மானாட மயிலாட”ச் செய்தது. இப்போது இந்த ரெகார்ட் டான்ஸ் நிகழ்ச்சிகளை எந்த சானலில் காட்டினாலும் சகிக்கவேயில்லை.
முன்பு சன்டிவியில் சமக தலைவர் சரத்குமாரு நடத்திய “கோடீஸ்வரனை” நக்கலடித்து, ஜெயா டிவியில் வந்தது “பிச்சாதிபதி”. அதன் பிறகு ஜெயா தொலைக்காட்சி இந்த போட்டிகளிலெல்லாம் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை எனலாம். குஷ்பு வின் “ஜாக்பாட்” நிகழ்ச்சியே போதுமென்றிருக்கிறார்களோ என்னவோ...! அந்த நிகழ்ச்சிக்காக வாராவாரம் புதுப்புது ஜாக்கெட் களுடன் குஷ்பு வருவதாகக் கேள்வி.
தற்போது விஜய் டிவியில் வரும் உருப்படியான சில நிகழ்ச்சிகளுக்கு மற்ற சேனல்களிடமிருந்து போட்டியே கிடையாது. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் : “நடந்தது என்ன?”, “நீயா நானா”, “இப்படிக்கு ரோஸ்”, “காபி வித் அனு”, “ கணா காணும் காலங்கள்”, “லொள்ளுசபா” இப்படி நீள்கின்றன....
அதுவும் லொள்ளுசபாவின் “பேக்கரி” (போக்கிரியின் காமெடி வெர்ஷன்), இன்றும் என்னுடைய பேவரிட். சந்தானத்திற்குப் பிறகு ஜீவா அழகாக அந்த இடத்தை நிரப்பினார் எனலாம். ஆனால் இப்போது அப்படி ஒரு ஆள் கிடைக்காமல் அந்த நிகழ்ச்சி தடுமாறினாலும், அதன் பலமான script இன்றும் பட்டையக் கிளப்பும் மொக்கைக் காமெடிகளைக் கொண்டு கலக்கி வருகிறது.
“காபி வித் அனு”, “இப்படிக்கு ரோஸ்” போன்ற வித்தியாசமான சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒன்றுக்கொன்று ஒன்றுபடாமல் தனித்தன்மையுடன் விளங்குவது மிகச்சிறப்பு. இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியில் காம்பியரர் ஒரு திருநங்கை (இந்த வார்த்தை வலை இயங்குதளத்தில் பரவலாக வரக் காரணமானவர் லிவிங் ஸ்மைல் வித்யா தான்...), என்பது மட்டும் வித்தியாசமல்ல. அவர்கள் கையாளும் பிரச்சனைகளும் அப்படித்தான். ஒரு திருநங்கையுடன் மக்கள் சாதாரணமாக பேசுவதே வித்தியாசமாக சிந்திக்கப்பட்ட சமுதாயத்தில், மக்கள் தங்கள் அந்தரங்க பிரச்சனைகளை சொல்லி அழும் ஒரு புகலிடமாக மாற்றியது மிகப் பெரிய விஷயம். இப்படிப்பட்ட ஒரு மாற்றத்தை சத்தமில்லாமல் செய்த அந்த நிகழ்ச்சி பாராட்டத்தக்கது.

“காபி வித் அனு” ஒரு கொண்டாட்டம் என்று சொல்லலாம். அனுஹாசனின் நேர்மையான அணுகுமுறையும், இயல்பான பேச்சும், அழகு சிரிப்பும் (கல்யாணமாகாத பொண்ணப் பத்தி இப்படி பேசலாமா?), பேட்டியை எடுத்துச்செல்லும் பாங்கும் அசாத்தியமானது. இந்த பாணியில் சன்டிவியில் கௌதமி ஆரம்பித்த ஒரு நிகழ்ச்சி சுவடு தெரியாமல் காணாமல் போனதாக ஞாபகம். கௌதமியின் நிகழ்ச்சியில் முதல் guest ஆக வந்தவர் கமல்ஹாசன். அந்த நிகழ்ச்சியும் அந்த backdrop ம் இன்னும் ஞாபக அடுக்குகளில் இருக்கிறது.
“நடந்தது என்ன?” மற்றும் “நீயா? நானா?” போன்ற நிகழ்ச்சிகளின் வழியே ஒரு தொலைத்தொடர்பு சாதனம் தான் செய்யவேண்டிய பணியை சிறப்பாக செய்கிறது எனலாம். Infotainment என்ற பதத்திற்கு உதாரணமாக இந்த நிகழ்ச்சிகளை நான் சொல்வேன். இந்த நிகழ்ச்சிகளின் காம்பியரர் கோபிநாத் அவர்களின் குரல் வளமும், தெளிவான தமிழ் உச்சரிப்பும் மிக்க அழகு. நிகழ்வை நடத்திச் செல்லும் அவருடைய ஆளுமைத்தன்மையும், மிகவும் சீரிய editing ம் இந்த நிகழ்ச்சிகளின் தரத்தை பன்மடங்கு உயர்த்திக் காண்பிக்கின்றன.
அதிகாரத்தையும், பண பலத்தையும் கொண்டு சினிமாக்களை வாங்கிக் குவிக்கும் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள், அதே பலங்களைக் கொண்டு மிகவும் தரமான நிகழ்ச்சிகளையும் வழங்கலாமே...! ஊதுற சங்கை ஊதி வைப்பதில் எனக்கு எப்போதுமே பிரியம் உண்டு.
விஜய் தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.