எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்கள் மறைந்தபின் எழுந்த அஞ்சலிகளும், அதைத் தொடர்ந்து அந்த அஞ்சலிகளை எதிர்த்துப் பிறந்த பதிவுகளும் என்னுள் மிகுந்த மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தின. நம் மனத்தில் தோன்றும் (பிரசுரிக்கும்படியான) கருத்துக்களை எழுதுவதற்கே நாம் blog எழுதுகிறோம். அப்படியென்றால், இந்த பதிவுகளைப்பற்றி கருத்து சொல்வதில் தப்பேதும் இல்லையே என்று மனதில் பட்டது.
கடந்த இரண்டு மாதங்களாக நான் தமிழ்ப்பதிவுகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு மாத காலமாக blog எழுதிக்கொண்டிருக்கிறேன். இங்கு நான் காணும் பல விஷயங்கள் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக எழுதப் பட்டவையோ என்று எண்ண வைக்கும் வகையில் எழுதப்படுகின்றன. தாம் கவனிக்கப்படவேண்டும் என்பதற்காக எழுதப்படும் எழுத்துக்களையும் நான் காண்கிறேன். இங்கு அதிக ஹிட்களை பெறுவதே பிரதானமாக காணப்படுகிறது. அதுதான் குறிக்கோள் என்று செயல்படும் பதிவுகளை எளிதாக கண்டுகொள்ள முடிகிறது. அவர்கள் எழுதும் பதிவுகளின் தலைப்புகளிலேயே அது தென்படுகிறது.
இனி தொடர்ந்து பதிவுகளை எழுதலாமா அல்லது விட்டுவிடலாமா என்பது போன்ற எண்ணங்களும் என்னுள் எழுகின்றன. இங்கு எப்படிப்பட்ட விஷயங்களுக்கு முன்னுரிமையும், வரவேற்பும் தரப்படுகின்றது என்பது தமிழ்மணத்தின் சூடான இடுகைகளைப்பார்க்கையில் வெள்ளிடை மலையாகிறது. இங்கு பல்வேறு குழுக்களாக பதிவர்கள் செயல்பட்டு அவர்களுக்குள் நடைபெறும் விவாதங்களே பதிவுகளாக வருகின்றன. அவை சூடான இடுகைகளில் இடம் பிடித்து, சூடான இடுகைகளுக்கான இயல்புகள் என்னவென்பதை வெட்டவெளிச்சமாக்குகின்றன.
சுஜாதா என்ற ஓர் எழுத்தாளன் தன் 73ம் வயதில் இறந்தபிறகு, இங்கு எழுதப் படும் பதிவுகள் அவற்றின் தரம்பற்றி தாமே சொல்கின்றன. அடிப்படை நாகரீகப்பண்பின்றி எழுதப்படும் பதிவுகளுக்கும் குடைபிடிக்கும் போக்கு இந்த தளத்தில் இயங்குபவர்களுக்கு இருக்கும்பட்சத்தில் இது எனக்கு உகந்த தளம் அல்ல என்று உணர்கிறேன். நானொன்றும் தமிழ் எழுத்துலகின் தவிர்க்க முடியாத எழுத்தாளன் அல்ல. நல்ல எழுத்துக்களை நாடி வாசிக்கும் ஒரு வாசகன். படைப்புலகச் சிந்தனையோடு வலைய வரும் ஒரு வாசகன். அவ்வளவே...
மூன்றாந்தர வார்த்தைகளை மிகச் சாதாரணமாக பயன்படுத்தும் போக்கும் இங்கு வெகு இயல்பாகவே உள்ளது. அதற்கு ஆயிரத்தெட்டு வியாக்யானம் சொல்பவர்களின் வார்த்தைகளை கேட்கும் பக்குவம் எனக்கு வரவில்லையென்று அவர்கள் சொல்லிக்கொள்ளட்டும்.
இந்த வலைத்தளத்திரட்டிகளில் முதன்மையாக செயல்படுவோரிடத்திலும் வியாபார சூட்சுமங்களே முதலிடம் வகிக்கின்றன. அவர்களின் பதிவுகளின் தன்மை அதனால் மங்கிப்போகவும் வாய்ப்புள்ளதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவனம் கொள்ளவில்லை. இன்றைய தேதியில் என்ன நடக்கிறது என்பதுதான் பிரதானமாக இருக்கிறது.
தான் சார்ந்த சமூத்தின் நிலைகுறித்தும் அதன் வளர்ச்சிக்காகவும் எழுதப்படும் வார்த்தைகளே காலத்தால் குறித்துவைத்துக்கொள்ளப்படும். தனிமனித காழ்ப்புணர்ச்சியோ அல்லது துவேஷமோ, குழு மனப்பான்மையின் போதையோடமைந்த வார்த்தை விளையாட்டுக்களோ நிச்சயமாக நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்லும் வாகனங்களாக அமையாது என்பது என் எண்ணம்.
என்னுடைய வாழ்க்கைச்சூழலில் நான் வரையறுத்து ஒதுக்கும் காலத்தில், இந்த வலைப்பதிவுகளில் நான் இயங்க விரும்பும் விஷயங்கள், மேற்கண்டவை குறித்த விவாதங்களோ அல்லது விருப்பு வெறுப்பு அபிப்பிராய பேதங்கள் குறித்த வெட்டி வாதங்களோ அல்ல. “வாசித்தோமா... போனோமா...” என்ற மனநிலை விரைவில் வாய்க்கும்பட்சத்தில் “அடப்போங்கப்பா....” என்று சொல்லி ஒதுங்கிப்போகப்போகிறேன். அந்த கால கட்டம் வரும்வரை இந்த பதிவை எண்ணிக்கொண்டு நான் சற்றேனும் இளைப்பாற விரும்புகிறேன்.