
சமீபத்தில் “அஞ்சாதே” திரைப்படம் குறித்து எழுதியிருக்கிறேன் . மேலும் எழுதத்தூண்டும் அளவுக்கு படத்தில் சரக்கு இருப்பதாக நினைப்பதால் இந்த பதிவை எழுதவிழைகிறேன். ஏற்கனவே எழுதிய பதிவிற்கு அப்படியொன்றும் பலமான வரவேற்பு (அதிக மறுமொழிகள் வாயிலாக) இல்லாத போதிலும், பரவலாக வாசிக்கப்பட்டதால் (எல்லாம் ஒரு நம்பிக்கைதான்) திரும்பவும் எழுதுகிறேன். அப்படி சிலாகிப்பதற்கு படத்தில் ஒன்றுமில்லையே என்று யோசிப்பவர்கள் இங்கே கழண்டு கொள்வதென்றாலும் சரி, தொடர்ந்து படித்து தங்கள் கருத்தை உறுதிப்படுத்திக் கொண்டாலும் சரி.
இந்த திரைப்படத்தின் கதாபாத்திரங்களை இயக்குனர் அமைத்தவிதம் குறித்து விமர்சனம் எழுதும் நோக்கோடு இதை எழுதவில்லை. அந்த கதாபாத்திரங்களை அவ்வவற்றின் இயல்போடு அப்படியே கிரகித்துக்கொண்டு அவர்களின் போக்கையும், செயல்பாடுகளையும் பற்றியுமே இங்கு எழுத முயல்கிறேன். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், பட்டிமன்றம், வழக்காடு மன்றங்களில் “வாலியை மறைந்திருந்து கொன்ற ராமன் குற்றவாளியே...” என்கிற ரீதியில் பேசப்படும் வாதங்களில், ராமனைப் பற்றியோ அல்லது வாலியைப் பற்றியோ தான் பேசப்படுமேயன்றி, அந்த பாத்திரங்களைப்படைத்த கம்பனைப் பற்றி பேசப்படமாட்டாது. அதாவது, கம்பன் இந்த பாத்திரத்தை படைத்த விதம் தவறு, சரி என்று விவாதிக்கப்படமாட்டாது. அந்தந்த பாத்திரங்களை அவற்றின் இயல்போடு கிரகித்துக்கொண்டு சூழல் அவர்களைப் படுத்தும் பாடு குறித்து விவாதிக்கப்படும். அப்படி ஒரு முயற்சியாகவே இந்த பதிவை எழுத முயற்சிக்கிறேன். இந்த புரிதல் அவசியம் என்று தோன்றியதால்தான், இந்த முன்னுரை தேவைப்பட்டது. இனி விஷயத்திற்கு வரலாம்...
“அஞ்சாதே” திரைப்படத்தின் அடிநாதமாக அமைந்திருப்பது நட்பு. அந்த நட்பிற்கு சத்யாவும், கிருபாவும் உண்மையாக இருந்திருக்கிறார்களா என்ற கேள்வியோடு அணுகும்போது, சத்யாவைவிட கிருபா தாழ்ந்துபோகிறான். தன் நண்பன் கிருபாவுக்காக சத்யா ஒவ்வொரு சூழ்நிலையிலும் தன்னாலான நல்லதைச் செய்ய ஓடுகிறான் (படத்தின் பெரும்பாலான காட்சிகளில் சத்யா ஓடுவது தனிக்கதை!). கிருபாவை அடித்தவர்களை ஓடிச்சென்று போய் கும்முவதிலும், கிருபா SI தேர்வில் தோல்வியடைந்ததைக் கேட்டு அதிர்ச்சியடைகையிலும், கிருபா தன் இயல்பிலிருந்து மாறி தாடியும் குடியுமாக தரம்புரள்பதைக் கண்டு பதைபதைப்பதிலும், தன் நண்பன் கெட்ட வழியில் சென்றுவிடாமலிருக்க அவனுக்காக முயற்சி எடுப்பதிலும், போலிஸ் ஸ்டேஷனிற்கு அழைத்துவரப்படும் கிருபாவுக்கு எதுவும் நேராமலிருக்க இன்ஸ்பெக்டரிடம் மன்றாடுவதிலும் - சத்யா கிருபாவிற்கு உண்மையான நண்பனாகவே இருக்கிறான்.
ஆனால் கிருபா, தான் SI தேர்வில் தோல்வியடைவதற்கே சத்யாதான் காரணம் என்கிற ரீதியில் தவறாக ஒரு கற்பிதத்தை வளர்த்துக்கொண்டு, சம்மந்தமே இல்லாமல் தனக்காக எதுவும் செய்யக்கூடிய தன் நண்பன் சத்யா மீது வன்மத்தை வளர்த்துக் கொள்கிறான். தன் முனைப்பின்றி எதெச்சையாக தயாவிடம் பழகத்துவங்கியபின், தன் வீட்டிலேயே “தண்டச்சோறாக” அறியப்பட்டபின், கிருபாவின் அடிப்படை எண்ணங்களில், செயல்பாடுகளில் எதிர்மறை எண்ணங்கள் வெகுவாக வளரத்துவங்குகின்றன. ஆயினும் கிருபா அடிப்படையில் நல்லவனாகவே இருக்கிறான் என்பது தயாவிடம் அவன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சியில் தெரிகிறது. ஹவாலா என்று முதலில் பொய்சொல்லி கிருபாவை தன்வசப்படுத்தும் தயாவின், நிஜமுகம் இளம்பெண்களை கடத்தி, கற்பழித்து பணம் பறிப்பதுதான் என்பதைத் தெரிந்து கொண்டவுடன் தயாவிடம் கிருபா செய்யும் வாக்குவாதம் அவர்களிருவரின் அடிப்படைத்தன்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
ஆயினும் கிருபாவின் உக்கிரமான, குரூரமான முகம் ஒரு காட்சியில் வெளிப்பட்டு நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. சத்யாவின் தங்கையை தான் முழுதாக பார்த்ததாகவும், எங்கெங்கு மச்சம் இருக்கு சொல்லட்டுமாவென்று தயா சொல்லிவிட்டு தலையை உயர்த்தி வெற்றிக் கொக்கரிப்பு போல் சிரிக்கும்போது, தன் நண்பனின் சகோதரியைப்பற்றி இப்படி சொல்கிறானே என்று கோபமில்லாமல், துளி வருத்தம் கூட காட்டாமல் அந்த களிப்பில் தானும் பங்குகொள்ளும்போதே கிருபா தான் சத்யாவிடம் கொண்டிருந்த நட்புக்கு முடிவுரை எழுதிவிடுகிறான். இறுதிக்காட்சியில் தான் எப்போதோ வாங்கிக்கொடுத்த விரல்களில் நுழையாத மோதிரத்தை ருத்ராட்சக்கொட்டை போல் சத்யா தன் கழுத்தில் இட்டிருப்பதை பார்த்தபின், சத்யாவின் நட்பின் ஆழத்தைப்புரிந்து கொண்டு “சொல்லலையேடா...” என்ற கடைசிவார்த்தைகளோடு கிருபா விழி சொருகுவது நம்மை சற்று வருத்தப்படவைக்கிறது.
“அண்ணா சத்யா நல்லவன்...” என்று படத்தில் பல இடங்களில் கிருபாவின் தங்கை உத்ரா தன் அண்ணனிடம் சொல்லும் காட்சிகள் அருமை. அது படத்தின் உச்சகட்ட காட்சிவரை வந்து செல்கிறது.
தயாவைப்பற்றியும் நிச்சயம் சொல்ல வேண்டும். தயா அடிப்படையில் நல்லவனாக இருந்து மாறினானா இல்லை அவன் அடிப்படையிலேயே அப்படித்தானா என்ற கேள்வி தொக்கிநிற்கிறது. தான் மிலிட்டரியில் பணி புரிந்த போது, தன் சீனியர் ஆபிஸரின் மனைவி தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அதனைத்தொடர்ந்த நிகழ்வுகள் தன்னை இப்படியொரு பாதைக்கு வழி நடத்திவிட்டதாகவும், தன் தரப்பு நியாயத்தை கிருபாவிடம் சொல்லும் தயாவை நம்பலாமா வேண்டாமா என்ற ஐயத்தை உண்டாக்குகிறது.
தயா, லோகு, கிருபா மற்றும் மொட்டை என நான்கு பேர் இருக்கும் கூட்டணியில் இரண்டு பேர் மட்டும் தப்பிப்பதற்கு ஒரு கோழி வேனை தயா ஏற்பாடு செய்யும்போது, பதற்றப்படும் லோகு எங்கே ஒருவேளை தன்னை தயா கொன்றுவிடுவானோ என்றெண்ணி தன்னுடைய ஆளான மொட்டையிடம் தயாவை கொல்ல திட்டமிடுகிறான். ஆனால் நடக்கும் கதையே வேறு. நம்மிடம் இருக்கும் பதில் சொல்லப்படாத கேள்வி இதுதான். தயா திட்டமிட்டபடி தப்பிக்கும்பட்சத்தில் அவனோடு அழைத்துச் செல்லவிருந்த அந்த இன்னொரு நபர் யார்...? கிருபாவா, லோகுவா இல்லை மொட்டையா...?
படம் பார்த்த யாரேனும் உங்கள் கருத்தைச் சரியான காரணத்தோடு சொல்லுங்களேன்.
இப்படம் பற்றி மிக நீ.................ண்ட பதிவெழுதிய தோழர் உண்மைத்தமிழன் அவர்களை தன்னுடைய கருத்தைச்சொல்ல அன்போடு அழைக்கிறேன்.