Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, August 16, 2010

எண்ணச் சிதறல்கள் – 16.08.10


இனிய நண்பர்களுக்கு வணக்கம்.


ஓசூருக்கு சமீபத்தில் சென்று வந்தேன். தங்கை குடும்பத்தில் வீடு கட்டுகிறார்கள். பெங்களுர் ஹைரோடில் இடது ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த போக்குவரத்துத் துறை வாசகங்கள் காமெடியாகவே இருந்தன. If you want to stay married, divorce speed என்ற வாசகம் முரண் நகையாக இருந்தது. “கவனமாய்ப் போய் வா ரோட்டில் மனைவி காத்திருப்பாள் வீட்டில்” – என்ற வாசகத்தை முன்பு கவனித்த ஞாபகம். “இதை இப்பவே ஞாபகப் படுத்தறாங்கப்பா...” என்று நண்பர் அங்கலாய்த்ததும் நினைவிற்கு வந்தது. வீட்டுக்கு வீடு வாசற்படி.


சென்னைக்கு பேருந்துப் பயணம். ஜன்னலோர இருக்கை. கிட்டத்தட்ட ஆறரை மணி நேரம். அல்ட்ரா டீலக்ஸ் அரசுப் பேருந்து. பயணக்கட்டணம் 175 இந்தியப் பணம் மட்டுமே. நிச்சயமாக தனியார் பேருந்தாக இருந்திருந்தால் குறைந்தது 300 இந்தியப் பணம் கறந்திருப்பார்கள். இருக்கை பின்புறம் எளிதாகவே சாய்ந்தது. முன்புற இருக்கையில் அமர்ந்திருந்த பருவ வயது யுவதி பாதிக்கு மேற்பட்ட நேரம் கைபேசியில் பேசிக்கொண்டே வந்தார். குசுகுசுவென்று ஆங்கிலத்தில். அவ்வப்போது shut up மட்டும் கேட்டது. அந்தப் பக்கமிருந்தது யாரோ என்னவோ? அந்தப் பெண்ணின் தோழனாகவோ தோழியாகவோ இருக்கலாம். காதலனாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன். காதலியாகக் கூட இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் அதை lateral thinking ஆக எடுத்துக் கொள்ளலாம்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


ஒரு அற்புதமான தமிழ்ச் சொல் பற்றி நாம் பார்க்கலாம். ஜன்னல் என்பது போர்த்துக்கீசியச் சொல் என்று பத்தாம் வகுப்பில் படித்ததாக நினைவு. ஜன்னல் என்கிற வார்த்தை இன்று நம்மிடையே மிக மிக நெருக்கமாகிவிட்டது. பல மொழி வார்த்தைகளை தன்னிடம் சேர்த்துக் கொண்டதால்தான் ஆங்கிலம் எல்லாவிடங்களிலும் உயிர் வாழ்கிறது என்பது என் எண்ணம்.


ஜன்னல் என்கிற சொல்லுக்கான தமிழ் வார்த்தை காலதர் என்பதாகும். கால் + அதர் = காலதர். கால் என்றால் காற்று. அதர் என்றால் வழி. காற்று வரும் வழி, அதுவே காலதர். அதர் என்ற பதம் திருக்குறளில் வெகு அற்புதமான ஒரு குறளில் வருகிறது.


ஆக்கம் அதர்வினாய் செல்லும் அசைவிலா

ஊக்கம் உடையான் உலை.


செல்வமானது(ஆக்கம்) வழிகேட்டுச் செல்லும் அசைவில்லாத

ஊக்கம் இருப்பவனிடத்தில்.


வள்ளுவர் வள்ளுவர்தான்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


ஓ பக்கங்கள் கல்கியில் ஆரம்பமாகிவிட்டது. சமரசம் செய்து கொள்ளாத ஞானியின் பண்பு அற்புதம். தான் குரல் தரும் எந்த ஒரு களத்திலும் பொருள் பொதிந்த வாதங்களை முன்வைக்கும் ஞானியிடம் எனக்கு மரியாதை உண்டு. சில மாதங்களுக்கு முன்பு வலைப்பதிவர்களின் நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்ட நிகழ்வில் அவா கலந்து கொண்ட போது, “நான் எப்போதும் குமுதத்தில் எழுதிக்கொண்டே இருந்துவிடப் போவதில்லை“ எனப் பேசினார். அந்த நிகழ்ச்சியில்தான் பெயர் சுருக்கிக் கூப்பிடுவதில் சாரு நிவேதிதாவை “சாநி“ என்று சொல்லலாமா? என விளித்து நகைக்க வைத்தார்.


அந்த மேடையில் பெரிதாய் கண்டனம் தெரிவிக்காத சாரு பிற்பாடு எழுதிய கட்டுரையில், தன் வயதொத்த ஞானி குரல் கமறி கமறி பேசுவதாகச் சொல்லி அவரை உடல் ரீதியாக தாக்கினார். மனுஷ்யபுத்திரனின் உடல் குறையை சுட்டிக்காட்டியதாக ஜெயமோகனிடம் மல்லுக்கு நின்றவரும் இவரே. “உன்னைப் போல் ஒருவனில்” மனுஷ்யபுத்திரன் எழுதிய பாடலைப் பற்றி வியந்தோதுகையில் கந்தசாமியில் எழுதப்பட்ட பாடலை ஆகக் கேவலமாக விமரிசித்தவரும் இவரே. சாருவிடம் நடுநிலைத்தன்மை இல்லை. எனவே நம்பகத்தன்மையும் குறைவே.


எண்ணம்போல் எழுதினால் இதுதான் தொல்லை. ஞானியில் ஆரம்பித்தது சாநியில் முடிகிறது.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


திருமதி.செல்வம்


அம்மாவும் தம்பியும்

செல்வத்திற்கு துரோகம்

செய்யமாட்டார்கள்


குடித்து விட்டு

செல்வத்தின் அப்பா

ஆட மாட்டார்


கணவன் முன்னாலேயே

காவ்யாவுக்கு ராம்

பாலியல் தொந்தரவு செய்யமாட்டான்.


யாரு புருஷன் என்று

கல்யாணமாகாத கர்ப்பத்தைக்

காட்டி ப்ரியாவை யாரும்

தர்மசங்கடப் படுத்த மாட்டார்கள்


இரண்டு நாள் தப்பித்தோம்

நாமும் அவர்களும்.


சனி ஞாயிறு வந்துவிட்டது.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

மீண்டும் சந்திப்போம்


அன்பு நித்யன்.

Thursday, July 29, 2010

இருப்பைச் சொல்வதைத் தவிர வேறென்ன?


சீரியல் வேளைகளில்

கவனிக்கப்படா குழந்தையின்

ஓங்கி அரற்றிய அழுகையிலும்...


நல்ல சாப்பாட்டையும்

சாப்பிட முடியாத தாத்தா

உப்பில்லையென சடாரென படும் கோபத்திலும்...


புதுச் சுடிதார் கேட்டு ஒரு மாதம்

கடந்தும் கண்டுக்காத கணவனிடம்

“என்ன சொகத்தைக் கண்டேன்...”

எனத் துவங்கும் ஒரு கண் கசப்பிலும்...


பண்டிகைத் துணி எடுக்க

கணக்கு போடுகையில்

படுக்கையறையிலிருந்து வரும்

அம்மாவின் வயதான இருமலிலும்...


ஒரு மாசமாச்சே எனும் நினைப்பில்

ஓட்டே வராத மொக்கைக் கவிதை

எழுதும் நாலு வரி பதிவிலும்...


இருப்பதென்னவோ

“இருப்பைச் சொல்லும்“

ஆதியுணர்வேயன்றி வேறில்லை...


குறிப்பு

இதை எழுதுகையில் கூடவே இருந்து தன் இருப்பைக் காட்ட நக்கீரன் போல் குற்றம் கண்டுபிடித்து திருத்தும் முயற்சியில் ஈடுபட்ட என் மனைவிக்கு நன்றி.

Thursday, July 22, 2010

நாய்ப்பொழப்பு


கல்லெடுக்கையில்
ஓங்கி குரலெடுத்து
புறமுதுகிட்டு ஓடும்
நாயைப் பார்க்கையில்...

தனியனில்லை
எனும் நம்பிக்கை
குரூரப் புன்னகையுடன்
மேலெலுகிறது...

“வலியார்முன் தன்னை நினைக்க...”
என்று குறள் சொல்லி
திரும்பி வந்தாலும்
“ரௌத்திரம் பழகச்...”
சொன்ன பாரதி
கனவில் வந்து
செருப்பாலடிக்கிறான்...

Wednesday, July 21, 2010

நாட்காட்டி


நல்லநேரம்
ராகு காலம்
எமகண்டம்
குளிகை
வாஸ்து
பொன்மொழி
ராசிபலன்
விடுமுறை

இப்படி எல்லாம் சொல்கிறது...

உன் வருகையைத்தவிர...

பொய்யாகவேனும் சொல்லலாமே
உன்னைப் போல...

Tuesday, July 20, 2010

போ... போ...


எப்போதுமில்லாமல்
எப்போதேனும்
வருவதால்தான்...

அது அழகு...

தொடர்ந்து இருந்தால்
வானவில் கூட
சலித்துப்போகலாம்...

சரி சரி
சீக்கிரம் கிளம்பு...

Friday, January 23, 2009

“இந்த ஏழு நாட்கள்“

இல்லாளின் ஒரு வாரப் பிரிவும் இல்லாமலிருத்தலும்




நீ
தளும்ப தளும்ப தரும்
காபி குவளைகள்
காலியாகவிருக்கின்றன

தளும்புகின்றன...

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

நடுநிசி வந்து
பூட்டிய கதவு திறந்து
அசந்து படுத்தாலும்
என்னோடு சேர்ந்து
உறங்க மறுத்து
உன் ஞாபக அலையடிக்கிறது
மாத காலண்டர்...

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

நீ
திட்டித்திட்டி செய்யாததையெல்லாம்
அனிச்சையாய் செய்கிறேன்...

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

வேண்டுமட்டும் தூங்கலாம்
ஆப்பாயில் சாப்பிடலாம்
10 மணி தாண்டி வீடு வரலாம்

இந்த எந்த சுதந்திரமும் வேண்டாம்
விரைந்து வா....

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

குடிக்க சுடுதண்ணீர் போடுகையிலும்
உள்ளாடை துவைக்கையிலும்
தெரிந்து போகிறது...

என்னை எந்தளவு
கெடுத்து வைத்திருக்கிறாயென்று...

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

நீ
திரும்பிவரும் நாள்வரை
மொத்தமாய் கிழித்தபின்
காலண்டரும் எனைப்பார்த்து
கைகொட்டி நகைக்கிறது

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Wednesday, July 9, 2008

தலைப்படாததால் தலைப்பில்லை


நீ
இயல்பாய் பார்ப்பதாய்
நினைத்து
எத்தனை முறை
என்னை நானே
ஏமாற்றிக்கொண்டேன்...

Wednesday, March 12, 2008

லௌகீக வலிகள்...


தாய் மற்றும் மனைவியின்
இருத்தலுக்கான
பிரயத்தனங்களினிடையே
கணவனின் இருத்தல்
வெற்றிடம் பார்த்து விரவுகிறது...

Tuesday, March 11, 2008

காலைக் கடன்..!


கதிர் கரங்களால்
சோம்பல் முறித்து
ஆதவன் வர முயலும் பொழுதில்...

விலக மறுக்கும் இமைகளோடு
படுக்கையில் தடவி
உனைத்தேடுகிறேன்...

எனக்குப்பிடித்த நீலநிற புடவையில்
ஈரஞ்சொட்ட தலைதுவட்டி
குறுஞ்சிரிப்போடு நிற்கிறாய்...

“ஜன்னல் அணி்ந்திருக்கிறதே
உனக்கும் எதற்கென்று”
உன் ஆடைதொட நானும்
துள்ளியோட நீயும்
எத்தனிக்கும் பொழுதில்...

தலையிலடித்துக் கொண்டே
கலைந்திருந்த படுக்கை
மீண்டும் கலையத்தயாராகிறது....

நன்றி குறிப்பு : நாடோடி இலக்கியனின் இந்த கவிதையே இதை எழுதத் தூண்டிய காரணி

Wednesday, February 27, 2008

ம் சீக்கிரம்...

விரைவில் முடிவெடு
நான் எங்கு முடிச்சிடுவது...?
உன் கழுத்திலா...
என் கழுத்திலா...

Saturday, February 23, 2008

கனியிருப்பக் காய்கவர்ந்தற்று...



உன்னை
நினைத்துக்கொண்டே
பேருந்தில் ஏறி
ஏதோ ஒரு நீலச்சுடிதாரை
எட்டிப்பார்த்தபோது
பேருந்திலிருந்து
வள்ளுவன் சொன்னான்...

“கனியிருப்பக் காய்கவர்ந்தற்று...”

கண் கொத்திக் காதல்...




“நீ
திரும்பியே பார்க்காததால்
என் கண்களைக் குத்திக்கொள்ள
முடிவெடுத்திருக்கிறேன்...”

“ஏன் என்னிடம் சொல்கிறாய்..”
என்று கேட்கிறாயா...?

நீதானேடி ஹேர்பின் தரப்போகிறாய்...!

என்ன பார்வையடி...



என்ன பார்வை
உன் பார்வை...
ஒரு பார் (BAR) வை

Friday, February 22, 2008

காதோரக்கவிதைகள்...



உன்
எந்தவொரு சின்ன அசைவினுக்கும்
சந்தோஷக்கூத்தாடும்
உன் காதணி பற்றி என்ன சொல்வது...

“என்னைப்போல இன்னொன்று...”


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


நிமிடத்திற்கொருமுறை
முகத்தில் தவழும்
கூந்தல் குழந்தைகளையெல்லாம்
ஆட்காட்டி விரலால்
சேர்த்தெடுத்து
காதோரம் செருகும்போது
முடிக்கற்றைகளை மட்டுமா
செருகுகிறாய்...
என் மனதையும் சேர்த்துத்தான்

Thursday, February 14, 2008

அழகு குத்தியவள்...


உனக்கு வலிக்கவில்லையாடி...
உடல் முழுக்க இப்படி
அழகு குத்தி வைத்திருக்கிறாயே...


காதல் வணக்கம்

காதலே
வணங்குகிறேன் உன்னை...

உன் விஸ்வரூபத்தின் முன்னால்
மிகவும் எளியவனாய் நானிருக்கிறேன்...

மழையாய் வந்து குளிர்வி்த்து செல்கிறாய்...
சுனாமியாய் வந்து விழுங்கியும் செல்கிறாய்...

விழுதுகளால் ஊஞ்சல் கட்டியும் தருகிறாய்...
வேர்களாய் மறைந்து மறைந்தும் போகிறாய்...

ஒளி தந்து வாழ்க்கைப் பாதை காட்டுகிறாய்...
வெப்பமேற்றி மோகத்தீயில் வாட்டுகிறாய்...

தென்றலாய் வந்து தாலாட்டுவதும் நீயே...
சூறாவளியாய் வந்து சுருட்டுவதும் நீயே...

நாளெல்லாம் பரவசப்படுத்துவதும் நீதான்...
நொடிப்பொழுதில் கலவரப்படுத்துவதும் நீதான்...

வயிறுவலிக்க சிரிக்கவைப்பதும் நீதான்...
கண்ணீர் வற்ற அழவைப்பதும் நீதான்...

கடந்தவாரம் கடவுளைக் கூட பார்த்துக் கேட்டேன்...
அவனும் கூட புலம்பிவிட்டுத்தான் போகிறான்...

உன் விஷயம் தெரியாமல்
விஸ்ரூபம் புரியாமல்
கண்ணை மூடி காதலித்துவரும்
அத்துனை பேரையும்
இமை மூடி காத்துவருகிறாய்...

ஆதி அந்தம் புரியாத இறையே...
உனை வணங்குகிறேன்...

போகும் வழியில் அவளைப் பார்த்தால்
சொல்லிவிட்டுப் போ...

“போடி போ... அங்கொருவன்
விழியிரண்டை வீதியில் விட்டு விட்டு
வீட்டுக்குள் குருடனாயிருக்கிறான்...”

Wednesday, February 13, 2008

உன் காதலும்... என் காதலும்...


எனை தூரப்பார்த்து உற்சாகப்படுவதிலும்
பக்கத்தில் வந்து பதட்டப்படுவதிலும்
இடம்வலம்இடம்வலம்இடம்வலம்
என அல்லோலகல்லோலப்படும் உன் விழிகளிலும்
பேசவரும் வார்த்தைகளையெல்லாம்
உதடுமடித்து எனக்கே வலிக்குமளவு நீ கடித்தலிலும்
நீண்டும்சுருங்கியும் நீண்டும்சுருங்கியும்
பாடுபடும் உன் உதடுகளின் ஓரவஞ்சனை சிரிப்புகளிலும்
சரியாயிருக்கும் ஆடையை சரிப்படுத்திக்கொண்டேயிருக்கும்
உன் பதட்டம் தோய்ந்த மென்காந்தள் விரல்களிலும்
வழிந்தோடுகிறது
என் மீதான உன் காதல்

இதையெல்லாம்
கண்டு ரசித்து உண்டு கொழுத்து
பேரண்டமாய் விரிந்து வளர்ந்து
எனை படுத்துகிறது
உன் மீதான என் காதல்

Monday, February 11, 2008

திரைப்பாடல்களில் காதல் கவிநயம்...

அன்பானவர்களுக்கு வணக்கம்...

சமீபத்தில் என் நண்பர் கதிரவனுடன் உரையாடிக்கொண்டிருந்த போது சிவாஜி படப்பாடலில் இருந்து

“ அடடா... குமரியின் வளங்கள்...
குழந்தையின் சிணுங்கல்...
முரண்பாட்டு மூட்டை நீ...” - என்று நாயகியை நாயகன் வர்ணிக்கும் வரிகளைப்பற்றிச் சொன்னபோது “அட இதை கவனிக்கவில்லையே” என்று சொன்னார். இதைப்போன்று பல பாடல்களில் கவனிக்கத்தக்க சிந்தனைகள் உள்ளன. ஆனால் அவை தனியாக வெளிச்சம் போட்டு சொல்லப்படாததால் கவனிக்கப்படாமலேயிருக்கின்றன.

அப்படி கவனிக்கப்படாமல் விடப்பட்ட வரிகளை நாம் தேடிக்கண்டுபிடித்து, மகிழ்ந்து, எழுதி, பிறரையும் மகிழ்விக்கலாமென்று எண்ணினேன். எனக்கு சட்டென்று நினைவிற்கு வரும் வரிகளை இப்போது இங்கு குறிப்பிடுகிறேன். உங்களுக்குத் தோன்றும் வரிகளை மறுமொழியில் சொல்லுங்களேன்...

ஒரே ஒரு விதி மட்டுமே : அவை காதல் வரிகளாக இருக்கட்டும்... இது காதல் மாதமல்லவா...

“கடவுள் கிட்ட கருவறை கேட்டு உன்னை சுமக்கவா...
உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா...
மையிட்ட கண்ணே உன்னை
மறந்தா... இறந்தே போவேன்....” - “உருகுதே... மருகுதே...”

“வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்...
இலையுதிர்காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேராவேன்...” - “ரோஜாவைத்தாலாட்டும் தென்றல்...”

“மறுபடி ஒருமுறை பிறந்தேனே...
விரல்தொட புருவம் சிவந்தேனே...

எனதிரவினில் கசிகிற நிலவொளி நீயே... படர்வாயே..
நெருங்குவதாலே நொறுங்கிவிடாது இருபது வருடம்...” - “ரகசிய கனவுகள்...”

“என்னைவிடவும் என்னை அறிந்தும்... யார் நீ என்று கேட்காதே...
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்
என்னையும் கவிஞன் ஆக்காதே...” - “ குல்முகர் மலரே...”

“இரவைத்திறந்தால் பகல் இருக்கும்
என் இமையைத்திறந்தால் நீயிருப்பாய்...”- “என்மேல் விழுந்த மழைத்துளியே...”

“தனிமையே போ... இனிமையே வா...
நீரும் வேரும் சேர வேண்டும்...” - “பனி விழும் இரவு...”

“கொடி ஒன்று கனி ரெண்டு
தாங்காமல் தாங்காதம்மா....” - “சிங்களத்துச் சின்னக்குயிலே...”

“நீ வெட்டி வெட்டி போடும் நகத்திலெல்லாம்
குட்டி குட்டி நிலவு தெரியுதடி...” - “நீ கட்டும் சேலை...”

“மாமர இலைமேலே மார்கழி் பனி போலே
பூமகள் மடிமீது நான் தூங்கவோ...” - “தூங்காத விழிகள் ரெண்டு...”

“கூந்தலென்னும் ஏணியேறி முத்தமிட ஆசைகள் உண்டு...
நெற்றி மூக்கு உதடு என்றே...
இறங்கி வர படிகளும் உண்டு...” - “ கேளாமல் கையிலே...”

இனி உங்கள் விருப்பங்கள் தொடரலாம்...

Saturday, February 9, 2008

இது முத்தக்காலம்...


உனக்கான வார்த்தைகளை
சேர்த்து வைத்து சேர்த்து வைத்து
சுமக்க முடியாமல் தடுமாறுகிறேன்...

உனக்கான முத்தங்களையெல்லாம்
எப்படி சேகரம் செய்வதென்று
புரியாமல் தடுமாறுகிறேன்...

வார்த்தைகள்
தாமதமாய் வந்தாலும்
அதன் தரம் மறையாது...

ஆனால்
முத்தங்கள் அப்படியா...

ஈரம் காய்வதற்குள்
வாங்கிக்கொள்ள வேண்டாமா...

எத்தனை முறைதான்
ஈரப்படுத்தித் தயார்நிலையில்
வைத்திருப்பதென் உதடுகளை...

உதடுகளும் முத்தங்களும்
மாறி மாறி கேலி செய்கின்றன...

இனி மொத்த காலமும் முத்தக்காலமே...

விரைந்து வா அன்பே...

Friday, February 8, 2008

இனி கவிதை வரும் காலம்...


“நாங்கள்
செய்த தவறென்ன...
எங்களுக்கு ஏன்
சொர்க்கத்தில் இடமில்லை...?”

கேட்டோரிடம்
ஆண்டவன் சொன்னான்...

“கடற்கரைக்குச் சென்று
கால் நனைக்காதோருக்கும்...
பூமிக்குச் சென்று
காதலிக்காதோருக்கும்...
மோட்சத்தில் இடமில்லை...”

Follow @ersenthilkumar