Sunday, January 23, 2011

ஜெயமோகனின் உலோகம்



சமீபத்திய புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகனின் உலோகம் நாவலை உடுமலையில் வாங்கினேன்.

பத்து வருடங்களுக்கு முன் பாலகுமாரன் நாவல்கள் வாசித்தபோது கிடைத்த மனவெழுச்சி உண்டானது. போகிற போக்கில் பொட்டிலத்தாற் போல் வாழ்வின் தேவைக்கான பல்வேறு கூறுகளையும் நுட்பமான உடல்மொழி குறிப்புகளையும் அனாயசமாக எழுதிச் செல்கிறார் ஜெமோ.

சாகச எழுத்து வடிவில் இது ஒரு புது விதமான எழுத்து. ஜெயமோகனால் மட்டுமே இப்படி எழுதமுடியும் என எண்ணுகிறேன்.

சார்லஸ் என்கிற சாந்தனின் வாழ்க்கை, அவன் பிறந்த தேசம் அவன் வரித்துக் கொண்ட வாழ்வுமுறை எனஅதன் தளம் அற்புத சித்தரிப்பு. கொள்ளை போன பக்கத்து வீட்டை குறுகுறுப் பார்வையுடன் பார்ப்பது போல இலங்கை நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருக்கும் கண்களுக்கு அந்த களத்தின் நிதர்சனங்களையும் அவர்களின் உலகப் பார்வை மற்றும் வாழ்வு குறித்தான பார்வைகளையும் கோடிட்டுக் காட்டி ரத்தமும் சதையுமான அந்த உலகை நமக்கு இந்த 216 பக்க நாவலில் அறிமுகப் படுத்துகிறார் ஜெமோ.

கதாபாத்திரங்களின் மனவோட்டத்தை விவரிக்கும் போது கதையோட்டத்தில் பயணிக்கும் ஒரு வாசகனுக்கும் அந்த இடம் பொருள் குறித்தான அறச் சிக்கலைத் தோற்றுவிக்கும் விவரணைகள் அற்புதம்.

சுடிதார் துப்பட்டாவின் நுனித்துணியின் தழுவல் சுகத்தையே மாதக்கணக்கில் மனமெங்கும் சுமந்து சுகந்து கொண்டிருக்கும் ஒருவனும், எதிராளியை பாய்ண்ட் பிளாங்கில் சுட்டுத்தள்ளி எந்த மனக்கிலேசம் கொள்ளாமல் கடந்து போகும் ஒருவனும், ஒருவனேயாகும் அதிசயம் இந்த நாவலில் நடக்கிறது. வாழ்க்கை நம்மை எப்படியெல்லாம் அலைக்கழித்து அதன் போக்கினை நம்மிடம் போக்குக் காட்டுகிறது.

ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு வாசகனுக்கும், அவனது வாழ்வனுபவத்தைப் பொறுத்து அந்த கதையோட்டத்தின் களத்தை மனப் பிம்பமாக கட்டமைக்கிறது. உதாரணமாக இந்த நாவலில் வரும் பொன்னம்பலத்தாரின் வீட்டு காம்பௌண்ட் எனக்கு ஒரு விதமாக மனதில் பதியும் மற்றொருவருக்கு வேறு விதமாக பதியும். ஜோர்ஜ் மனைவியின் நிர்வாணமும் அப்படித்தான்.

நாவலின் குன்றாத சுவைக்குக் காரணமான காரணிகள் எல்லாம் இந்த கட்டமைப்புக் களத்தைப் பொறுத்தே அமைகின்றதாக எண்ணுகிறேன்.

ரத்தம் தெறிக்கும் வீச்சையும் அந்த வீச்சத்தையும் என் நாசி உணர்வதை உணர முடிகிறது.

ஜோர்ஜின் மனைவியுடன் சார்லஸ் கலவி முடிந்தபின், அவள் படுத்திருக்கும் காட்சிப்படிமம் இன்னும் மனதில் நிற்கிறது.

மற்றபடி இந்த நாவல் கட்டமைக்கும் அரசியல் சார்ந்த பின்புலன்கள் ஜெமோவே சொல்வதைப் போல விரிவானவை அல்ல. இந்த நாவலின் நோக்கமும் அதுவல்ல எனினும் அவை சற்று அதிர்ச்சி தரக்கூடியவையே.

உலோகம் என்ற தலைப்பிற்கான காரணத்தை முதல் அத்தியாயத்திலேயே ஜெமோ சொல்லும் விதம் அழகு. அது ஜெயமோகன் அவர்களின் திறன்.

புத்தக அட்டையில் குறிப்பிட்டிருப்பதைப் போல இந்த கதையின் களம் நாம் நெருங்கி சுவாசிக்க முடியும் அருகாமையில் அமைந்திருப்பது வாசிப்பு அனுபவத்தில் புதிய தளத்தை அமைக்கிறது.

சார்லஸின் குண்டடிபட்ட காயத்தை வருடிக்கொடுக்கும் எண்ணம் வருவது இந்த உலோகத்தின் வெற்றி.

கிழக்கு பதிப்பக வெளியீடு

GenreNovel
Book Titleஉலோகம்
Pages216
FormatPrinted
Year Published2010
Price:Rs 100.00

10 comments:

  1. எப்போதாவது எழுதும் பதிவுக்கு என்ன சொல்லி பின்னுட்டம் இடுவது.

    ReplyDelete
  2. ம்ம்ம்..ரசனைகள்தான் எப்படி மாறுபடுகின்றன..நிறைய எழுதுங்க நித்யா...

    ReplyDelete
  3. ///
    ஜாக்கி சேகர் said...
    எப்போதாவது எழுதும் பதிவுக்கு என்ன சொல்லி பின்னுட்டம் இடுவது
    ///

    இப்டிக்கூட போடலாமோ?

    அன்பு நித்யன்

    ReplyDelete
  4. ///
    மணிஜீ...... said...
    ம்ம்ம்..ரசனைகள்தான் எப்படி மாறுபடுகின்றன..நிறைய எழுதுங்க நித்யா..
    ///

    உங்க ஆசீர்வாதம் தலைவரே..

    அன்பு நித்யன்.

    ReplyDelete
  5. எனக்கு பிடிக்கலை..

    ReplyDelete
  6. அநிருத்தன்Tuesday, January 25, 2011 6:36:00 PM

    கேபிள் சார்,

    நீங்க எழுதும் சிறுகதைகளை விடவா மோசமா இருக்கு ? படிக்க தெரியலைன்னு சொல்லுங்க.

    ReplyDelete
  7. ///
    Cable Sankar said...
    எனக்கு பிடிக்கலை..
    ///

    வேறொரு ஒத்த புள்ளியில் சந்திக்கலாம் தலைவரே...

    அன்பு நித்யன்

    ReplyDelete
  8. ///
    அநிருத்தன் said...
    கேபிள் சார்,

    நீங்க எழுதும் சிறுகதைகளை விடவா மோசமா இருக்கு ? படிக்க தெரியலைன்னு சொல்லுங்க
    ///

    தனி மனித தாக்குதல் இங்கு தேவையில்லை. அவரவர் ரசனை விருப்பம் தனித்தன்மையானவை. நீங்கள் பெயரில்லாமல் வந்து பேசுவதும் முறையல்ல.

    அன்பு நித்யன்

    ReplyDelete
  9. நல்லா எழுதியிருக்கீங்க.’உலோகம்’ வேகம்.

    ReplyDelete
  10. ///

    மரா said...
    நல்லா எழுதியிருக்கீங்க.’உலோகம்’ வேகம்.
    ///

    நன்றி நண்பரே...

    திரில்லரில் நாயகன் சாகசம் செய்யவேண்டியது அவசியம் என எனக்குப் படவில்லை. பரபரவென பக்கத்துக் பக்கம் பறக்கும் திரில்லர்களோடு ஒப்பிட்டு இந்த நாவலை நாம் வாசிக்கக்கூடாது. அந்த நாவல்கள் கடைசி அத்தியாயத்தின் கடைசி வார்த்தையில் முடிபவை. அதன் பின் அவை மறுவாசிப்புக்கு உதவாதவை. உலோகம் அப்படியல்ல. ஆகையாலேயே அது நம் வழக்கமான திரில்லர்களிடமிருந்து தனித்து நிற்கிறது.

    பாசாங்கற்ற ஒரு திகைப்பூட்டும் பயணம்தான் உலோகம்.

    அன்பு நித்யன்.

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar