தமிழ் சினிமாவில் அத்திப்பூ பூத்திருக்கிறது.
மிஷ்கினின் நந்தலாலா அற்புதமான திரைப்படமாக வந்திருக்கிறது. சித்திரம் பேசுதடி மற்றும் அஞ்சாதே இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த படங்கள்.அஞ்சாதேயின் திரைக்கதையும் கதாபாத்திரங்களும் இன்னும் மனதை விட்டு நீங்காமலிருக்கின்றன.

பாஸ்கர் மணி (மிஷ்கின்), அகில்(அஸ்வத் ராம்) – இருவரும் முக்கிய கதாபாத்திரங்கள். பள்ளியில் படிக்கும் அகில் சிறு வயதிலேயே தன்னை விட்டுச்சென்ற தன் அம்மாவைத் தேட பள்ளி சுற்றுலாவை கட் அடித்துவிட்டு பயணிக்கிறான். சிறுவயதிலேயே மனநல மருத்துவமனையில் தன்னை விட்டுவிட்ட தன் தாயை வெறுத்து நொந்துபோன பாஸ்கர் மருத்துவமனையிலிருந்து தப்பித்து வெளியே வருகிறான். இருவரும் சந்திக்கிறார்கள். சந்தர்ப்பங்கள் அவர்களை இணைத்து ஒரு நேர்கோட்டில் பயணிக்க வைக்கின்றன. அம்மாவைத் தேடும் இரண்டு பேர் தங்கள் பயணத்தில் சந்தித்த விஷயங்கள் என்ன? இறுதியல் தத்தம் அன்னையரை கண்டு கொண்டார்களா? என்பனவற்றை தயவுசெய்து தியேட்டரில் பாருங்கள். இந்த படம் வெற்றி அடைந்தால்தான் நல்ல படங்கள் செய்ய இயக்குநர்கள் முன்வருவார்கள். தமிழ் சினிமாவை நேசிப்பவர்கள் இந்த படத்தை கட்டாயம் நேசிப்பார்கள்.


அகிலாக வரும் அஸ்வத்ராம் இன்னொரு ஆச்சரியம். குழந்தை நட்சத்திரம் குழந்தையாகவே நடித்திருப்பது இன்னொரு சிறப்பு. ஸ்கூல் யூனிபார்மோடு, ஷூ சாக்ஸ், பாடப்புத்தக மூட்டை, வாட்டர் பாட்டில் சகிதம் – படம் முழுக்க தன் அப்பாவி முகத்தோடு, தன் குடும்பத்தின் மேக்ஸி சைஸ் கலர் போட்டோவுடன் தன் அம்மாவைத் தேடி அலைகிறான். ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பு. நந்தலாலா நல்ல தொடக்கம். அஸ்வத் செல்லவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.