
சமீபத்திய பாடல்களில் இந்த பாடல் வசீகரித்ததைப் போல வேறெந்த பாடலும் என்னை வசீகரிக்கவில்லை. காரணங்கள் பற்பல.
ஒலியும் ஒளியுமாக நம்மை அடையும் பாடல்களில் பெரும்பாலானவற்றில் ஏதேனும் ஒரு தன்மையே அதிகப்படியான கவனத்தோடு பதிவு செய்யப்படுகிறது. சில பாடல்களை கேட்டு ரசித்துவிட்டு திரையில் பார்க்கும்போது ஒருவித அந்நியத்தன்மையைக் கூட உணர்ந்திருக்கிறேன். அப்படிப்பட்ட பாடலுக்கான மிகச்சிறந்த உதாரணம் ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற, “கண்ணோடு காண்பதெல்லாம்..” என்ற பாடல். நித்யஸ்ரீ மகாதேவனின் குரலில் அந்த பாடலை ரசித்து உணர்ந்துவிட்டு திரையில் பார்த்தபின் மிகவும் வருத்தமடைந்தேன்.
சுப்ரமணியபுரத்தில் அமைந்த இந்த பாடலில் இசையும் காட்சியமைப்புகளும் இரண்டறக்கலந்து ஓர் அற்புதமான கலவையாகி நம் மனதைக் கொள்ளையடிக்கிறது. கண்களால் கதைபேசிக் கசிந்துருகும் காதல்தான் களம். பல வீரர்கள் செஞ்சுரி அடித்த அதே களத்தில் இயக்குநர் சசிக்குமார் மிகவும் சாதாரணமாக கலக்கியிருக்கிறார். மிகவும் இயல்பானவர்களாக வரும் நாயகனும் நாயகியும் தனி அழகு. சுவாதியின் தாவணிக்கட்டும் எளிமையான மேக்கப்பும் வெகுசிறப்பு. அவருடைய கண்களே இந்த பாடலின் மிகப்பெரிய பலம்.
மெலிதான இசையுடன் தொடங்கி, தொடங்கிய கோட்டுக்குள்ளேயே பயணித்து அங்கங்கு அழகை தூவிச்செல்லும் இசை அற்புதம். ஜேம்ஸ் வசந்தனுக்கு பிரத்யேகமான பூங்கொத்துகள். மிகவும் எளிதான வரிகளில் காதலின் தகிப்பை வெளிப்படுத்திச் செல்லும் தாமரையின் பேனாவுக்கும் ஒரு சபாஷ். தனித்துத்தெரியாத ஒளிப்பதிவும், மிகவும் நாசூக்கான எடிட்டிங்கும் இந்த பாடலை அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்கின்றன.
காதலியை impress செய்வதற்காக காதலன் செய்யும் துடிப்பான, துறுதுறுப்பான செயல்களும் அதன் எதிர்வினைகளின் முரண்களும் அழகாக பதிவு செய்யப்படுகின்றன. “தோற்றவரே வென்றவர்...” என்று சொல்கிற வள்ளுவத்தைப் போல, தன் செயல்களில் இடரிவிழுந்தாலும், அதன் காரணமாகவே தன் காதலியின் உள்ளத்தில் உச்சாணிக்கொம்பில் ஏறி நிற்கிறான் காதலன். இப்பாடலின் வரிகளை
இந்த பதிவில் கண்டும், கேட்டும் மகிழுங்கள்.
நீண்ட நாட்களுக்கு மனதில் நின்று தாலாட்டும் அழகிய திரைப்பாடலைத் தந்த சுப்ரமணியபுரம் குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
பின்குறிப்பு : நினைவுப் புதையல்களிலிருந்து காயத்ரியையும், அமராவதியையும் மீட்டுத்தந்து ஞாபகப்படுத்தியமைக்கு மீண்டும் ஒரு நன்றியை நவில்கிறேன்.