Thursday, January 27, 2011

சாருவின் போத்தல்கள்...


இந்தியாவின் ஒரே Auto Fiction எழுத்தாளர் சாருவின் சரக்கு போத்தல்கள் காலியாகி விட்டன. ஆட்டோ ஓட்டிக்கொண்டே fiction எழுதும் திறன் இந்திய துணைக்கண்டத்தில் யாருக்கும் வாய்க்கவில்லை என்பது இங்கு நாம் கட்டாயம் குறிப்பிடவேண்டிய ஒரு விஷயம்.

சமீபத்திய அவருடைய எழுத்துக்களை வாசிக்கையில் நமக்கு தெள்ளத்தெளிவாக தெரிவது அவருடைய சரக்கு போத்தல்கள் காலியான விஷயம்தான். லெதர் பாரில் இதை நிரப்பிக் கொள்ள இயலாது.

சமீபத்தில் என் நண்பர் ஒரு பின் நவீனத்துவ கவிதை எழுதினார்...

ப்ளாட்பாரத்தில்
ஸ்கேல் பென்சில்
விற்பவனிடம்
ஏதேனும் வாங்குங்கள்

அவன் யாருக்கும்
குப்பி கொடுப்பதில்லை
விந்து விற்பதில்லை
கொடுமையாய் எழுதுவதில்லை

அவனிடம்
ஏதேனும் வாங்குங்கள்

அவன் அப்படியே
இருந்து விட்டு்ப் போகட்டும்
ஏதேனும் வாங்குங்கள்

இது ஒரு “பின்” நவீனத்துவக்கவிதை என்பதை சாருவை வாசித்தவர்கள் எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.

வாழ்க்கையை தன் விருப்பப்படி வாழ ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரம் இருக்கிறது. அதனை ஒரு கௌரவமாக வரையறுத்துக் கொள்வது அவரவர் விருப்பம்.

என் நண்பர் ஜாக்கிசேகர் மெரீனா பீச் ப்ளாட்பாரத்தில் ப்ரிடடானியா மில்க் பிகீஸ் அட்டையில் உறங்கிதான் வாழ்க்கையின் இருபதுகளை நகர்த்தினார். அவர் பார்க்காத வேலையில்லை. ஆயினும் குப்பி கொடுக்கவோ கூட்டிக் கொடுக்கவோ அவர் போகவில்லை. அவர் இன்று அவருடைய சொந்த வீட்டில் வாழ்கிறார்.

தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடம் பிடிக்க போராடும் ஒவ்வொரு இளைஞனும் படும் வாழ்க்கைப் போராட்டம் எப்படிப்பட்டது? அவர்களெல்லாம் குப்பி கொடுக்க நினைத்தால் என்னவாகும்? ஒரு ஐந்து கிலோமீட்டர் நீளத்திற்கு வரிசையாக புட்டங்களை காட்டியபடி நிறைய பேரை நிற்க வைக்கலாம். அதை புகைப்படம் எடுக்க நண்பர் ஜாக்கியையே அழைக்கலாம். அதைப்பற்றிய கட்டுரையை சுடச்சுட எழுதும் முதல் எழுத்தாளர் சாருவாகத்தான் இருப்பார்.

இரத்த வங்கியில் இரத்தம் கொடுத்து வாழ்ந்தவர்கள் பற்றிய வரலாற்றைக் கூட நாம் கேட்டுக் கொள்ளலாம். ஆனால் விந்து வங்கியில் விந்து கொடுத்து வாழ்க்கையை நடத்தியது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. வாழ்வின் போக்கு அப்படி...

******

சாருவின் பத்து புத்தகங்களை 1000 ரூபாய்க்கு சல்லிசான விலையில் வெளியிட்ட அன்றே வாங்கியவன் நான். ஆனால் சமீபத்தில் சரோஜாதேவி வெளியீட்டில் தேகம் மட்டும்தான் வாங்கினேன். திரு. எஸ். ராமகிருஷ்ணனி்ன் அன்றைய உரை வெகுவாக பலரைக் கவர்ந்தது. அவர் வாதையைப் பற்றி பேசினார். தேகம் போன்ற ஒரு நாவலை நான் எழுத மாட்டேன். ஆனால் அது எழுதப்பட வேண்டும் என்ற ஒரே ஒரு கருத்தை மட்டுமே அவர் தேகம் சார்ந்து சொன்னார்.

அப்படி தேகம் எழுதப்பட வேண்டியதன் அவசியம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக அதை வாங்கினேன். அதற்கு முன்பாக சாருவை வலையிலே வாசித்தால் மட்டுமே போதும் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டேன். தேகத்தை வாசிப்பதே ஒரு வாதை என்பதை பின்புதான் தெரிந்து கொண்டேன். டவுசர் கிழிந்து தாவு தீர்கிறது என்ற நண்பர் லக்கியின் பிரபல சொலவடையை நான் இங்கு பயன்படுத்த விரும்புகிறேன்.

******

இயக்குனர் மிஷ்கின் அவர்களை சாருவுடனான மேடைகளில் கண்டிருக்கிறேன். அந்த மேடைகளில் பேசுகையில் மட்டும் தான் தன்னால் மனம் விட்டு பல உண்மைகளைப் பேச முடிகின்றதென்று அவர் அந்த மேடைகளிலேயே சொல்லியிருக்கிறார். கடந்த ஆண்டுகளில் ஒருமுறை அவர் நந்தலாலா திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே ஒரு மேடையில் முழுக்க முழுக்க நந்தலாலா பற்றித்தான் பேசினார். சாருவின் புத்தகத்தைப் பற்றி பேசவே இல்லை. அப்போதெல்லாம் சாருவிற்கு மிஷ்கினின் மேல் கோபம் வரவில்லை.

சமீபத்திய கன்னடத்துப் பைங்கிளி பேச்சின் போதுதான் அவருக்கு தீராக் கோபம் தலைக்கேறிவிட்டது. “என்னுடைய எழுத்தை படிக்காமலேயே, நீ மலிவான மஞ்சள் புத்தகங்களுக்கு ஈடானதாக சொல்லிவிட்டாய். நான் உன்னைத் தவிர்க்கிறேன். இனி உன் பேச்சு கா.” - என்று சொல்லிவிட்டு நகர்ந்திருந்தால் அது வேறு.

ஆனால் சாரு பக்கம் பக்கமாக அத்தியாயம் அத்தியாயமாக மிஷ்கினை திட்ட ஆரம்பித்தார். “என்னைச் சொல்கிறாயே... நீ ரொம்ப ஒழுக்கமா? ரெமி மார்ட்டின் இரவுகளில் நீ பகிர்ந்ததை எல்லாம் நான் சொல்லவா...? அப்படிச் சொன்னால் உன்னை தமிழ்நாட்டிலேயே இருக்க விட மாட்டார்கள். நான் சொல்லவா? ஆனால் சொல்லமாட்டேன்... நான் சொல்லவா? ஆனால் சொல்லமாட்டேன்... நான் சொல்லவா? ஆனால் சொல்லமாட்டேன்... நான் சொல்லவா?” - என்று மானிட்டர் (வார்த்தை உதவி தலைவர் தண்டோரா அவர்கள்) அடித்ததைப் போல் புலம்பி வசை பாட ஆரம்பித்தார்.

இந்த துரோகக் கட்டுரைகளின் தொகுப்பு “நண்பனின் துரோகம்” என புத்தகமாக உயிர்மையிலிருந்து வந்து விடுமோ என துர்க்கனவுகள் வர ஆரம்பித்திருக்கின்றன. மனுஷ்ய புத்திரன் அந்தளவு இறங்க மாட்டார் என நம்புகிறேன்.

இதே போன்றதொரு பிணக்கு எஸ்ரா, ஜெமோ போன்றவர்களுக்கு நிகழ்ந்திருந்தால் ஓரிரண்டு வருத்தப் பதிவுகளோடு அடுத்த கட்டங்களுக்குச் சென்றிருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். ஏனென்றால் அவர்கள் உருப்படியாகச் செய்வதற்கு வேறு பல விஷயங்கள் உள்ளன.

குறுக்குச் சாலில் என்ன ஓட்டுகிறார் என்று பார்த்தால் அங்கும் மிஷ்கினின் படம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

அடப்போங்கப்பா என்றாகிவிட்டது.

மிஷ்கின் மேல் எனக்கு ஒரு தனிப்பட்ட வருத்தம் வேறு இருக்கிறது. தேகத்தை சரோஜாதேவிக்கு இணையாக இருக்கிறது என்று சொன்னார். அப்படிச் சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை என்பதே என் கருத்து. சரோஜாதேவி வாசிக்கும் போது கிடைக்கும் எந்த ஒரு மன எழுச்சியும் உடல் சார்ந்த எழுச்சியும் தேகத்தால் கிடைப்பதில்லை. “பின்ன எதை வச்சிக்கிட்டு இந்த மூஞ்சியை சிவாஜின்னும் அந்த மூஞ்சியை பத்மினின்னும் சொன்ன...?” என்று கவுண்டமணி சார் கேட்பதுபோல் கேட்கத் தோன்றுகிறது.

மிஷ்கினும், எஸ்ராவும் சொன்னதால்தான் தேகம் வாங்கினேன். வதைபடுகிறேன். இப்போது ஒத்துக் கொள்கிறேன் தேகம் வாதையைப் பற்றியதுதான் என்று.

சமீபத்திய விஜய் டிவி நிகழ்ச்சியில் மிஷ்கின் அவர்கள் சாருவின் அவதூறு கட்டுரைகளுக்கு, கோர்ட் டவாலி போன்று இவ்வாறு பதிலளித்தார் : “ சாருநிவேதிதா என் நண்பர்... சாருநிவேதிதா என் நண்பர்... சாருநிவேதிதா என் நண்பர்...”.

யுத்தம் செய் படத்திற்கு படம் வருவதற்கு முன்பாக சாரு விமர்சனம் ஏதும் எழுதாததால் அந்தப்படம் நிச்சயம் வெற்றி அடையும் என்று மிஷ்கின் தன் நண்பர்களிடம் சரக்கு இல்லாமலேயே பேசிக் கொண்டதாக கோடம்பாக்கத்து பட்சி சொல்கிறது.

சாரு யுத்தம் செய் பற்றி எதுவும் எழுதாததால் தான் மிஷ்கின் அவரை தன் நண்பர் என்று சொல்லிக் கொண்டிருப்பதாக நாம் கருதுவதற்கும் இடமிருக்கிறது.


******

பெரியவர் சாருவிற்கு (மிஷ்கினும் சசிகுமாரும் தன் மகன் ஸ்தானத்தில் உள்ளவர்கள் என்று அவரே சொல்கிறார்) Auto fiction ஒன்று மட்டுமே வரும். கூடுதலாக பத்தி எழுதுவார். புனைவெழுத்துக்கள் அவருக்கு வருவதில்லை. அது ஒன்றும் தவறில்லை. ஒவ்வொருவருக்குமான பலம் மற்றும் பலவீனங்கள் வேறு வேறானவை.

இனியும் நாம் சாருவை வாசிக்க வேண்டுமானால் அவர் Auto ஓட்டுவதற்கு தேவையான விஷயங்களை புதிதாக வாழ்ந்து விட்டு வந்து பிறகு ஓட்ட ஆரம்பிக்கலாம்.

அது வரை அவர் மூடிக் கொண்டிருக்கலாம்................. தன் பேனாவை.



Sunday, January 23, 2011

ஜெயமோகனின் உலோகம்



சமீபத்திய புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகனின் உலோகம் நாவலை உடுமலையில் வாங்கினேன்.

பத்து வருடங்களுக்கு முன் பாலகுமாரன் நாவல்கள் வாசித்தபோது கிடைத்த மனவெழுச்சி உண்டானது. போகிற போக்கில் பொட்டிலத்தாற் போல் வாழ்வின் தேவைக்கான பல்வேறு கூறுகளையும் நுட்பமான உடல்மொழி குறிப்புகளையும் அனாயசமாக எழுதிச் செல்கிறார் ஜெமோ.

சாகச எழுத்து வடிவில் இது ஒரு புது விதமான எழுத்து. ஜெயமோகனால் மட்டுமே இப்படி எழுதமுடியும் என எண்ணுகிறேன்.

சார்லஸ் என்கிற சாந்தனின் வாழ்க்கை, அவன் பிறந்த தேசம் அவன் வரித்துக் கொண்ட வாழ்வுமுறை எனஅதன் தளம் அற்புத சித்தரிப்பு. கொள்ளை போன பக்கத்து வீட்டை குறுகுறுப் பார்வையுடன் பார்ப்பது போல இலங்கை நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருக்கும் கண்களுக்கு அந்த களத்தின் நிதர்சனங்களையும் அவர்களின் உலகப் பார்வை மற்றும் வாழ்வு குறித்தான பார்வைகளையும் கோடிட்டுக் காட்டி ரத்தமும் சதையுமான அந்த உலகை நமக்கு இந்த 216 பக்க நாவலில் அறிமுகப் படுத்துகிறார் ஜெமோ.

கதாபாத்திரங்களின் மனவோட்டத்தை விவரிக்கும் போது கதையோட்டத்தில் பயணிக்கும் ஒரு வாசகனுக்கும் அந்த இடம் பொருள் குறித்தான அறச் சிக்கலைத் தோற்றுவிக்கும் விவரணைகள் அற்புதம்.

சுடிதார் துப்பட்டாவின் நுனித்துணியின் தழுவல் சுகத்தையே மாதக்கணக்கில் மனமெங்கும் சுமந்து சுகந்து கொண்டிருக்கும் ஒருவனும், எதிராளியை பாய்ண்ட் பிளாங்கில் சுட்டுத்தள்ளி எந்த மனக்கிலேசம் கொள்ளாமல் கடந்து போகும் ஒருவனும், ஒருவனேயாகும் அதிசயம் இந்த நாவலில் நடக்கிறது. வாழ்க்கை நம்மை எப்படியெல்லாம் அலைக்கழித்து அதன் போக்கினை நம்மிடம் போக்குக் காட்டுகிறது.

ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு வாசகனுக்கும், அவனது வாழ்வனுபவத்தைப் பொறுத்து அந்த கதையோட்டத்தின் களத்தை மனப் பிம்பமாக கட்டமைக்கிறது. உதாரணமாக இந்த நாவலில் வரும் பொன்னம்பலத்தாரின் வீட்டு காம்பௌண்ட் எனக்கு ஒரு விதமாக மனதில் பதியும் மற்றொருவருக்கு வேறு விதமாக பதியும். ஜோர்ஜ் மனைவியின் நிர்வாணமும் அப்படித்தான்.

நாவலின் குன்றாத சுவைக்குக் காரணமான காரணிகள் எல்லாம் இந்த கட்டமைப்புக் களத்தைப் பொறுத்தே அமைகின்றதாக எண்ணுகிறேன்.

ரத்தம் தெறிக்கும் வீச்சையும் அந்த வீச்சத்தையும் என் நாசி உணர்வதை உணர முடிகிறது.

ஜோர்ஜின் மனைவியுடன் சார்லஸ் கலவி முடிந்தபின், அவள் படுத்திருக்கும் காட்சிப்படிமம் இன்னும் மனதில் நிற்கிறது.

மற்றபடி இந்த நாவல் கட்டமைக்கும் அரசியல் சார்ந்த பின்புலன்கள் ஜெமோவே சொல்வதைப் போல விரிவானவை அல்ல. இந்த நாவலின் நோக்கமும் அதுவல்ல எனினும் அவை சற்று அதிர்ச்சி தரக்கூடியவையே.

உலோகம் என்ற தலைப்பிற்கான காரணத்தை முதல் அத்தியாயத்திலேயே ஜெமோ சொல்லும் விதம் அழகு. அது ஜெயமோகன் அவர்களின் திறன்.

புத்தக அட்டையில் குறிப்பிட்டிருப்பதைப் போல இந்த கதையின் களம் நாம் நெருங்கி சுவாசிக்க முடியும் அருகாமையில் அமைந்திருப்பது வாசிப்பு அனுபவத்தில் புதிய தளத்தை அமைக்கிறது.

சார்லஸின் குண்டடிபட்ட காயத்தை வருடிக்கொடுக்கும் எண்ணம் வருவது இந்த உலோகத்தின் வெற்றி.

கிழக்கு பதிப்பக வெளியீடு

GenreNovel
Book Titleஉலோகம்
Pages216
FormatPrinted
Year Published2010
Price:Rs 100.00

Friday, November 26, 2010

நந்தலாலா - மிஷ்கினின் கரங்களுக்கு முத்தமிட விரும்புகிறேன்...!

தமிழ் சினிமாவில் அத்திப்பூ பூத்திருக்கிறது.

மிஷ்கினின் நந்தலாலா அற்புதமான திரைப்படமாக வந்திருக்கிறது. சித்திரம் பேசுதடி மற்றும் அஞ்சாதே இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த படங்கள்.அஞ்சாதேயின் திரைக்கதையும் கதாபாத்திரங்களும் இன்னும் மனதை விட்டு நீங்காமலிருக்கின்றன.




பாஸ்கர் மணி (மிஷ்கின்), அகில்(அஸ்வத் ராம்) – இருவரும் முக்கிய கதாபாத்திரங்கள். பள்ளியில் படிக்கும் அகில் சிறு வயதிலேயே தன்னை விட்டுச்சென்ற தன் அம்மாவைத் தேட பள்ளி சுற்றுலாவை கட் அடித்துவிட்டு பயணிக்கிறான். சிறுவயதிலேயே மனநல மருத்துவமனையில் தன்னை விட்டுவிட்ட தன் தாயை வெறுத்து நொந்துபோன பாஸ்கர் மருத்துவமனையிலிருந்து தப்பித்து வெளியே வருகிறான். இருவரும் சந்திக்கிறார்கள். சந்தர்ப்பங்கள் அவர்களை இணைத்து ஒரு நேர்கோட்டில் பயணிக்க வைக்கின்றன. அம்மாவைத் தேடும் இரண்டு பேர் தங்கள் பயணத்தில் சந்தித்த விஷயங்கள் என்ன? இறுதியல் தத்தம் அன்னையரை கண்டு கொண்டார்களா? என்பனவற்றை தயவுசெய்து தியேட்டரில் பாருங்கள். இந்த படம் வெற்றி அடைந்தால்தான் நல்ல படங்கள் செய்ய இயக்குநர்கள் முன்வருவார்கள். தமிழ் சினிமாவை நேசிப்பவர்கள் இந்த படத்தை கட்டாயம் நேசிப்பார்கள்.




மிஷ்கின் தவிர வேறு யாரும் இந்த கதாபாத்திரத்தை சிறப்புறச் செய்திருப்பார்களா என்று தெரியவில்லை. நம் கதாநாயகர்களின் இமேஜ் வளையத்திற்குள் இந்த பாஸ்கர் நிச்சயம் பொருந்த மாட்டான். மிஷ்கினின் அசாத்தியமான உடல்மொழி அவரது கதாபாத்திரத்தை அற்புதமாக தாங்கி நிற்கிறது. முடிந்த போது அடிப்பதும் முடியாத போது அடிவாங்கி கதறுவதுமாக அந்த பாத்திரம் இயல்பாக செதுக்கப்பட்டிருக்கிறது. பாஸ்கரின் மனப் பிறழ்வின் நீள அகலங்கள் காட்சியைப் பொறுத்து பதமாக வெளிப்படுகிறது. “மென்டல்” என அவரை திட்டியவனை புரட்டியெடுக்கும் காட்சியாகட்டும், “போடா மென்டல்” என அகியே அவனை திட்டும் போது ஆற்றாமையில் அரற்றும் அந்த நடிப்பாகட்டும், கீழே விழுந்த தாவணிப்பெண்ணின் முட்டிக் காயத்தை எச்சில் தொட்டு ஆற்றும் போது, அறை வாங்கிக்கொண்டே “வலிக்குதா..?” எனக் கேட்பதாகட்டும், “மழையில நனைஞ்சா எல்லா நாத்தமும் போயிடும்” என ஸ்நிக்தாவை இழுத்து மழையில் நனைப்பதாகட்டும், திட்டிக்கொண்டே வந்து வீட்டின் பின்புறம் இருக்கும் தன் அம்மாவின் (ரோகிணி) நிலையைப் பார்த்து கதறி தூக்கிக் கொண்டே ஓடி அழுவதாகட்டும், தான் அடிவாங்கும் போது பைக்கில் வந்து சேரும் மிலிட்டரி இரட்டையர்களை பார்த்து மகிழ்ந்து அவர்களிடம் ஓடிச்சென்று தோளில் கைபோட்டு கட்டிக்கொண்டு (ஒரு கையால் பேண்ட்டை பிடித்துக் கொண்டே) “எங்காளு வந்துட்டான் பாரு, இப்ப என்ன பண்ணுவ” என்கிற ரீதியில் முதுகுப் பக்கமாக மட்டுமே உடல் மொழியில் பின்னுவதாகட்டும் – மனிதர் படம் முழுக்க வாழ்கிறார். தேசிய விருது தராவிட்டால் அது மிஷ்கினுக்கு இழப்பல்ல. இப்படி நான் எழுதுவது நிச்சயமாக மிகையில்லை.


அகிலாக வரும் அஸ்வத்ராம் இன்னொரு ஆச்சரியம். குழந்தை நட்சத்திரம் குழந்தையாகவே நடித்திருப்பது இன்னொரு சிறப்பு. ஸ்கூல் யூனிபார்மோடு, ஷூ சாக்ஸ், பாடப்புத்தக மூட்டை, வாட்டர் பாட்டில் சகிதம் – படம் முழுக்க தன் அப்பாவி முகத்தோடு, தன் குடும்பத்தின் மேக்ஸி சைஸ் கலர் போட்டோவுடன் தன் அம்மாவைத் தேடி அலைகிறான். ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பு. நந்தலாலா நல்ல தொடக்கம். அஸ்வத் செல்லவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

இளையராஜா படத்தின் மிகப்பெரிய பலம். அமைதிகாக்க வேண்டிய இடத்தில் அமைதிகாத்து ஆர்ப்பரிக்கும் இடத்தில் கொப்பளித்து வெளிவரும் ஆவேசப் புயலாகவும், தென்றலென தாலாட்ட வேண்டிய பொழுதில் மயிலிறகாய் வருடவும் செய்யும் பிண்னணி இசை தமிழனுக்கே பெருமை. அகிலின் அம்மா பாஸ்கரின் காலைப் பிடித்து கதறும் காட்சியில் வரும் பிண்னணி இசை ஒரு சோறு.

படத்தின் முதல் பிரேமிலேயே இது என்ன மாதிரியான படம் என்பதை மிஷ்கின் தெளிவு படுத்தி விடுகிறார். படத்தின் கேமரா கோணங்கள் நாம் படத்தை அணுக வேண்டிய விதத்தை சொல்லாமல் சொல்கின்றன. அகலமான கேமரா கோணங்களில் தூர வரும் உருவம், பிண்னணி இசையில்லாமல் வரும் வேளைகளும் நம்மை ஆட்கொள்கின்றன. Children of Heaven ல் பார்த்த அக்கா தம்பி கதாபாத்திரங்கள் போல இவ்விரண்டு கதாபாத்திரங்களும் நம்மை கொள்ளை கொள்கின்றன.

ஒரு சூழ்நிலை விபசாரியாக (எல்லாருமே அப்படித்தானோ) வரும் ஸ்நிக்தாவும் கவர்கிறார். பொசுக்கென்று ஆடை அவிழ்க்கும் அவள், ஒரு ஆணின் பேண்ட்டை கீழே விழா வண்ணம் இறுகக்கட்டும் அந்த மழைக் காட்சி ஓர் அழகான முரண்.

லாரி டிரைவர், சைக்கிள் தாவணிப்பெண், பைக் இளைஞர்கள், தேனிலவு தம்பதியர், கால் ஊனமுற்ற நபர், காரில் வரும் பீர் இளைஞர்கள், அகிலின் வீட்டு வேலைக்காரப் பெண், டிவிஎஸ் பைக்கில் வரும் ஐஸ் வண்டிக்காரர், விபசாரியைத் துரத்தி வரும் தாத்தா தலைமையிலான கோஷ்டி - என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் வந்து போகும் காட்சிகள் அனைத்தும் சிறப்பான சிறுகதை வடிவில் அமைந்து அழகூட்டுகின்றன.

தமிழில் இப்படியெல்லாம் ஒரு படம் வருமா என்ற நீண்ட நாள் ஏக்கத்தை நிறைவேற்றியிருக்கும் மிஷ்கினுக்கு எனது அன்புகள். இந்த திரைக்கதை எழுதிய அவர் கைகளை நான் முத்தமிட விரும்புகிறேன்.

அன்பு நித்யன்.

Monday, August 16, 2010

எண்ணச் சிதறல்கள் – 16.08.10


இனிய நண்பர்களுக்கு வணக்கம்.


ஓசூருக்கு சமீபத்தில் சென்று வந்தேன். தங்கை குடும்பத்தில் வீடு கட்டுகிறார்கள். பெங்களுர் ஹைரோடில் இடது ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த போக்குவரத்துத் துறை வாசகங்கள் காமெடியாகவே இருந்தன. If you want to stay married, divorce speed என்ற வாசகம் முரண் நகையாக இருந்தது. “கவனமாய்ப் போய் வா ரோட்டில் மனைவி காத்திருப்பாள் வீட்டில்” – என்ற வாசகத்தை முன்பு கவனித்த ஞாபகம். “இதை இப்பவே ஞாபகப் படுத்தறாங்கப்பா...” என்று நண்பர் அங்கலாய்த்ததும் நினைவிற்கு வந்தது. வீட்டுக்கு வீடு வாசற்படி.


சென்னைக்கு பேருந்துப் பயணம். ஜன்னலோர இருக்கை. கிட்டத்தட்ட ஆறரை மணி நேரம். அல்ட்ரா டீலக்ஸ் அரசுப் பேருந்து. பயணக்கட்டணம் 175 இந்தியப் பணம் மட்டுமே. நிச்சயமாக தனியார் பேருந்தாக இருந்திருந்தால் குறைந்தது 300 இந்தியப் பணம் கறந்திருப்பார்கள். இருக்கை பின்புறம் எளிதாகவே சாய்ந்தது. முன்புற இருக்கையில் அமர்ந்திருந்த பருவ வயது யுவதி பாதிக்கு மேற்பட்ட நேரம் கைபேசியில் பேசிக்கொண்டே வந்தார். குசுகுசுவென்று ஆங்கிலத்தில். அவ்வப்போது shut up மட்டும் கேட்டது. அந்தப் பக்கமிருந்தது யாரோ என்னவோ? அந்தப் பெண்ணின் தோழனாகவோ தோழியாகவோ இருக்கலாம். காதலனாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன். காதலியாகக் கூட இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் அதை lateral thinking ஆக எடுத்துக் கொள்ளலாம்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


ஒரு அற்புதமான தமிழ்ச் சொல் பற்றி நாம் பார்க்கலாம். ஜன்னல் என்பது போர்த்துக்கீசியச் சொல் என்று பத்தாம் வகுப்பில் படித்ததாக நினைவு. ஜன்னல் என்கிற வார்த்தை இன்று நம்மிடையே மிக மிக நெருக்கமாகிவிட்டது. பல மொழி வார்த்தைகளை தன்னிடம் சேர்த்துக் கொண்டதால்தான் ஆங்கிலம் எல்லாவிடங்களிலும் உயிர் வாழ்கிறது என்பது என் எண்ணம்.


ஜன்னல் என்கிற சொல்லுக்கான தமிழ் வார்த்தை காலதர் என்பதாகும். கால் + அதர் = காலதர். கால் என்றால் காற்று. அதர் என்றால் வழி. காற்று வரும் வழி, அதுவே காலதர். அதர் என்ற பதம் திருக்குறளில் வெகு அற்புதமான ஒரு குறளில் வருகிறது.


ஆக்கம் அதர்வினாய் செல்லும் அசைவிலா

ஊக்கம் உடையான் உலை.


செல்வமானது(ஆக்கம்) வழிகேட்டுச் செல்லும் அசைவில்லாத

ஊக்கம் இருப்பவனிடத்தில்.


வள்ளுவர் வள்ளுவர்தான்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


ஓ பக்கங்கள் கல்கியில் ஆரம்பமாகிவிட்டது. சமரசம் செய்து கொள்ளாத ஞானியின் பண்பு அற்புதம். தான் குரல் தரும் எந்த ஒரு களத்திலும் பொருள் பொதிந்த வாதங்களை முன்வைக்கும் ஞானியிடம் எனக்கு மரியாதை உண்டு. சில மாதங்களுக்கு முன்பு வலைப்பதிவர்களின் நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்ட நிகழ்வில் அவா கலந்து கொண்ட போது, “நான் எப்போதும் குமுதத்தில் எழுதிக்கொண்டே இருந்துவிடப் போவதில்லை“ எனப் பேசினார். அந்த நிகழ்ச்சியில்தான் பெயர் சுருக்கிக் கூப்பிடுவதில் சாரு நிவேதிதாவை “சாநி“ என்று சொல்லலாமா? என விளித்து நகைக்க வைத்தார்.


அந்த மேடையில் பெரிதாய் கண்டனம் தெரிவிக்காத சாரு பிற்பாடு எழுதிய கட்டுரையில், தன் வயதொத்த ஞானி குரல் கமறி கமறி பேசுவதாகச் சொல்லி அவரை உடல் ரீதியாக தாக்கினார். மனுஷ்யபுத்திரனின் உடல் குறையை சுட்டிக்காட்டியதாக ஜெயமோகனிடம் மல்லுக்கு நின்றவரும் இவரே. “உன்னைப் போல் ஒருவனில்” மனுஷ்யபுத்திரன் எழுதிய பாடலைப் பற்றி வியந்தோதுகையில் கந்தசாமியில் எழுதப்பட்ட பாடலை ஆகக் கேவலமாக விமரிசித்தவரும் இவரே. சாருவிடம் நடுநிலைத்தன்மை இல்லை. எனவே நம்பகத்தன்மையும் குறைவே.


எண்ணம்போல் எழுதினால் இதுதான் தொல்லை. ஞானியில் ஆரம்பித்தது சாநியில் முடிகிறது.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


திருமதி.செல்வம்


அம்மாவும் தம்பியும்

செல்வத்திற்கு துரோகம்

செய்யமாட்டார்கள்


குடித்து விட்டு

செல்வத்தின் அப்பா

ஆட மாட்டார்


கணவன் முன்னாலேயே

காவ்யாவுக்கு ராம்

பாலியல் தொந்தரவு செய்யமாட்டான்.


யாரு புருஷன் என்று

கல்யாணமாகாத கர்ப்பத்தைக்

காட்டி ப்ரியாவை யாரும்

தர்மசங்கடப் படுத்த மாட்டார்கள்


இரண்டு நாள் தப்பித்தோம்

நாமும் அவர்களும்.


சனி ஞாயிறு வந்துவிட்டது.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

மீண்டும் சந்திப்போம்


அன்பு நித்யன்.

Tuesday, August 10, 2010

எண்ணச் சிதறல்கள் - 10.08.10

ப்ரிய நண்பர்களுக்கு வணக்கம்.


Life is running between pillar and post.



வாழ்க்கை எப்போதும் தெளிந்த நீரோடையாக இருந்து விடுவதில்லை. அதனுடைய சுவாரஸ்யமே அதுதான். நம் வாழ்க்கை எனும் நதி நிறைய மாற்றங்களோடு கடலை சென்றடைகிறது. “பொங்கு பல சமயமெனும்...”எனத்துவங்கும் கடவுள் வாழ்த்துப் பாடல் நினைவிற்கு வருகிறது. அனைத்து மதங்களையும் நதிகளாக உருவகித்து எழுதப்பட்டிருக்கும் அப்பாடல், இறுதியில் நதிகள் எல்லாம் கடலிலே சென்று கலப்பது போல எல்லா மதங்களும் இறைவனையே சென்றடைகின்றன எனச் சொல்கிறது. அதனைப் போல நம் வாழ்க்கையை இறுதியில் கடலை சென்றடையும் நதியோடு ஒப்பிடுகையில் ஒரு நதியின் பயணம் போலவே நம் வாழ்க்கைப் பயணமும் மிகுந்த சிரமங்கள் நிறைந்ததாகவே இருக்கின்றது. ஆயினும் நதி கடலைச் சென்றடைவதில் எந்த சிரமமும் கொள்வதில்லை. அதனுடைய தன்மைதான் அதற்கு்க் காரணம். நீர் தனக்கென்று எந்த வடிவத்தையும் கொள்வதில்லை.பாறையோ முள்ளோ எது இடைப்பட்டாலும் இடைப்பட்ட வழியில் அது வழிந்தோடி விடுகிறது. அப்படி நாம் இருக்க முடியுமா?


She stole my heart


சமீபத்தில் இந்தப்பாடல் என்னையும் என் பையனையும் கவர்ந்து வைத்திருக்கிறது. Skyscraper களுக்கிடையே அனுஷ்கா போடும் குத்தாட்டம் 10 வினாடிகளே வந்தாலும் கலக்கலாக உள்ளது. சரியான படங்களைத் தேர்வு செய்து நடித்தால் அனுஷ்கா இன்னும் அழுத்தமாய் தன் அடையாளத்தைத் தமிழில் பதிவு செய்யலாம்.


Its Fun and fun only.


சமீபத்தில் நண்பரின் 5 வயது பெண்குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டேன். பிரமாண்ட கேக், உள் அலங்காரங்களை விடவும் மிகவும் பிடித்ததாக அமைந்தது, அங்கு வந்து அலும்பு செய்து கொண்டிருந்த குட்டிக் குழந்தைகள்தான். கிழிந்து கிடக்கும் முகமூடிகளும், உடையும் பலூன் சப்தங்களும், வீலென்று அழுகைகளும்,சின்ன விஷயங்களுக்கே அவர்கள் சந்தோஷப் படுவதுமாக குழந்தைகளின் உலகமே தனிதான். “சந்தோஷம்கிறது நாம அனுபவிக்கிறப்ப தெரியாது” என விருமாண்டியில் விருமாண்டி சொல்வது போல, நாம் குழந்தையாய் இருந்தபோது இருந்த மகிழ்வான தருணங்கள் அப்போது நமக்குப் புரிவதில்லைதானோ?


Endhiran counting starts…


ஷங்கரின் எந்திரன் பட ட்ரெயிலரைப் பார்த்தபின்பு உடனே படம் பார்க்கும் ஆர்வம் எகிறியிருக்கிறது. ஒரு ரஜினி இருந்தாலே கொண்டாட்டம். இந்தப் படத்தில் இரண்டு ரஜினிகள். ஆட்டம் பட்டையக் கிளப்பப் போகிறது. ராஜாதி ராஜா படத்தில் பார்த்த ரஜினி கொள்ளை அழகு. அந்த முன்முடியை இழந்த ரஜினியை பார்க்க வருத்தமாயிருக்கிறது, எந்திரன் வெளியீட்டு விழாவில் அவர் பேசிய பேச்சு வெகுவாக என்னைக் கவர்ந்தது. He deserve more than what he is today.


Schumacher on the rise…!


என் பையன் ஒரு கார்ப் பிரியனாக இருக்கிறான். மற்ற எந்த விளையாட்டுப் பொருட்களையும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. Marie பிஸ்கெட் தவிர வேறெதையும் விரும்பி சாப்பிடுவதில்லை. இதைத் தெரிந்து உங்களுக்கு என்னவாகப் போகிறது? சரி விடுங்கள்.


Left eye or right one?


சமீபத்தில் உடனடியாக அடுத்தடுத்து இடைவெளியில்லாமல் இரண்டு படங்களைப் பார்த்து நான் படாதபாடு பட்டேன். இரண்டுமே தியேட்டரில்தான்.அங்காடித்தெரு மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா. இரண்டு படங்களும் முழுமையாக மனதை ஆக்கிரமித்துக் கொண்டன. அப்போதுதான் முடிவு செய்தேன். ஒரு நல்ல படத்தைப் பார்த்த பின் சிறிது இடைவெளி விட்டுத்தான் அடுத்த படம் பார்க்கவேண்டுமென்று. இன்னும் “விண்ணைத்தாண்டி வருவாயா” பாடல்களிலேயே மூழ்கி, அதன் hangover லிருந்து இன்னும் வெளிவரவில்லை. எந்திரன் வந்துவிட்டான் அதகளம் பண்ணுவதற்கு. என்ன பண்ணுவதென்று புரியவில்லை.


விரைவில் சந்திக்கலாம்.


We will meet ..... will meet .... meet. (அய்யோ அய்யோ...!)


அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar