Saturday, May 9, 2009

தேர்தலும் தேர்தல் நிமித்தமும்


ப்ரியாமானவர்களுக்கு வணக்கம்.

நீண்ட இடைவெளியாகிவிட்டது, பதிவெழுதி.  அடடே...  Junoon வசனம் போல முதல் வாக்கியம் அமைந்து விட்டதே...  பரவாயில்லை.  தொலைக்காட்சி நாடகங்களுக்கு வசனம் எழுதும் தகுதி வந்துவிட்டதாக பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.  முருகனின் அருள் நிரம்பப்பெற்ற உண்மையான தமிழர் ஒருவர் பற்றிய கிசு கிசு ஒன்று குதிரை ஓட்டுநர் ஒருவரிடம் கிடைக்கிறது.  நமீதாவின் புது பாய் பிரண்ட் யாரென்று தெரிந்து வைத்திருக்கும் நண்பர்கள் மட்டும் அவரிடம் சரியான விடையைச் சொல்லி கிசுகிசுவைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

சாருவைப் பற்றி 3 மாதங்களுக்கு முன்பு நான் எழுதிய ஒரு பதிவிற்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்ததும் நான் புளகாங்கிதமடைந்து விட்டதால் பெரிதாக எழுதத் தோன்றவில்லை.  சாருவைப் பற்றி எழுதியவுடன் லக்கிலுக் நினைவும் வந்துவிட்டது. சமீபத்தில் பதிவர் லக்கிலுக் நம்ம ப்ளாக்கில் ஒரு கமெண்ட் இட்டிருந்தார்.  “நீங்கள் எழுதி ரொம்ப நாளாகிவிட்டது, பார்த்து அதைவிட நாளாகிவிட்டது” என்று.  அவருக்குத் தெரியாத ஒரு விஷயம்,  நானும் மடிப்பாக்கத்துவாசி என்பது.  அட நமீதா சைஸிற்கு பெரிய பதிவரான இவரும் நம்ம பதிவை படிக்கிறாரோ என்று நினைத்தேன்.  கௌசல்யா ரேஞ்சிற்கு பதிவெழுதும் நம்மையும் நமீதா பின்தொடர்வது நினைத்தால் சந்தோஷம் தானே... Just for fun, கௌசல்யா கோவித்துக்கொள்ள வேண்டாம்... (யார் கண்டது கௌசல்யா கூட இதைப் படிக்கலாம்)

பாரதிராஜா அவர்கள் தலைமையில் திரைப்படக் குழுவினர் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 16 (“பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” - உபயம்: தொல்.திருமா) தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள், அக்கட்சிக்கு எதிராக.  அவர்களுக்கு எதிராக அவர்களே சிறப்பாக வேலை செய்து கொள்வார்கள் என்பதால்,  பாரதி ராஜா குழுவினருக்கு டென்ஷன் வேண்டாம்.  அவர்களின் பணிக்கு வாழ்த்துக்கள்.  சமீபத்தில் சீமானின் பேச்சை விண் டிவியில் கேட்டேன்.  இலங்கை ராணுவம் தலையில் போட்ட பாஸ்பரஸ் குண்டுகளை ஒத்த வார்த்தைகள்.  

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நமக்கு அலர்ஜி தரக்கூடியவை.  ஆனாலும் டிவியில் அவற்றை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.  எழுதி வைத்த காகிதங்களில் உள்ளவற்றை படிக்கும் ஜெயலலிதாவின் பேச்சு ஒரே மாதிரி இருந்தது.  போகப்போக விஷயங்களை சேர்த்துக் கொண்டே வருகிறார்.  கலைஞர் திருச்சியில் மட்டுமே பேசினார்.  உடல்நலக் கோளாறு காராணமாக மருத்துவமனையிலிருக்கும் அவர் எப்படியும் 10ந் தேதி தீவுத்திடலுக்கு வந்து சோனியாவுடன் இணைந்து பிரச்சாரம் செய்வாரென்று எதிர்பார்க்கலாம்.

 ஸ்டாலினின் பேச்சு சுகிக்கவில்லை.  ராமதாஸை ஒரு பிடி பிடிக்கிறார்.  என்னிடம் வந்து அரசியல் பாடம் கற்றுக்கொள் என்று அழைக்கிறாயே,  என்று ஆரம்பித்து நீ,  உன்னை என்று ஒருமையில் ஏக வசனம்.  திடீரென நடுவே “டாக்டர் ராமதாஸ் அவர்கள்” என்கிறார்.  ஒன்றும் பிரியவில்லை.  கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில்,  மீண்டும் மீண்டும் போட்டுக் காட்டிக் கொண்டேயிருந்தார்கள்.  மேடைப் பேச்சில் சிங்கமென கர்ஜிக்கும் வைகோ மாத்திரம் பொடா கைதிற்குப் பிறது திமுக விலேயோ அல்லது திமுக கூட்டணியிலேயோ ஐக்கியமாகியிருந்தால்,  அவருக்கும் திமுக விற்கும் பிரகாசமான எதிர்காலமாக இருந்திருக்கும்.  பாவம் 4 சீட் முக்கி முக்கி வாங்கிக் கொண்டு ஜெயலலிதா கை காட்டுபவரே பிரதமர் என்கிறார்.  பார்க்கப் பாவமாய் இருக்கிறது.  

ராமதாஸ் தானொரு தேர்ந்த அரசியல்வாதி என்பதை தேர்தலுக்குத் தேர்தல் ஒவ்வொரு கட்சிக்கும்,  பொதுமக்களுக்கும் நிருபித்துக் கொண்டேயிருக்கிறார்.  திருமா வளவனைப் பார்க்க பாவமாயிருக்கிறது.  மடிப்பாக்கம் வேலாயுதத்தை வேட்பாளராக அறிவித்து பிறகு மாற்றி அவரும் தன்னுடைய வழியைப் பற்றி தெளிவு படுத்திவிட்டார்.  

கேப்டனைப் பற்றித்தான் யாரும் செய்தி தருவதில்லை.  விஜய் டிவியில் அவருடைய மண்டபம் இடிந்த வீடியோ காட்சியை விளம்பரப் படுத்தி தான் திமுக ஓட்டையும் பிரிக்கப் போகிறேன் என சொல்கிறார்.  அடுத்த வாரம் இந்நேரம் எல்லாம் தெரிஞ்சு போயிருக்கும்.  அதுக்கடுத்த வாரம் நாம எல்லாத்தையும் மறந்துட்டு வேற வேலையைப் பாக்க போயிருப்போம்.  அரசியல் வியாபாரிகளும் அவரவர் வேலையைப் பார்க்கப் போயிருப்பார்கள்.  இது காலங் காலமாக நடப்பதுதானே...

அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் பெருவாரியான ஊடகங்கள் இருக்கும் வரை மக்களிடம் நேர்மையான கருத்துகள் சென்று சேராது.  சன் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி, மக்கள் டிவி - இவை அனைத்தும் கட்சி சார்ந்தவை.  விஜய் டிவியில் செய்தி இல்லை.  தயாநிதி மாறனின் கைங்கர்யத்தால் நிகழ்ந்த சோகம் அது.  நடுநிலையான ஊடக அமைப்புகளும் Survival - என்கிற கட்டாயத்தால் ஒரு பால் சார்ந்து இயங்கும் நிலை அமைகிறது.  

உண்மையிலேயே நல்லவன் ஒருவன் ஒரு கட்சி அமைக்க வேண்டும்.  அந்த கட்சியின் கொள்கைகள் பிடித்து எக்கச்சக்கமாக தொண்டர்கள் சேர வேண்டும். அவன் ஒரு தொலைக்காட்சி, ஒரு பத்திரிகை அமைக்க வேண்டும்.  அவை மிகவும் வெற்றிகரமாக மக்களைச் சென்று அடைய வேண்டும்.  அந்த டிவியில்தான் மக்கள் தொடர் மற்றும் சினிமா பார்க்க வேண்டும்.  பிறகு அந்த ஊடகங்களின் வழியாக விளம்பரம் செய்து அந்த நல்லவன் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்.  அந்த நல்லவன் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகும் நல்லவனாகவே இருக்க வேண்டும்.  இதுவெல்லாம் நடந்தாத்தான் நாடு நாடா இருக்கும்.  இல்லாட்டி அம்புட்டுதான்.  ஒன்னும் சொல்றதுக்கில்ல.

49 - O வை மின்னணு வாக்கு இயந்திரத்தில் வைப்பதற்குக்கூட பயந்து நடுங்கி ஒன்னுக்குப் போகும் அரசியல் வாதிகளுக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டுவது எப்படி என்றும் பிரியவில்லை.  

ஆனாலும் தயவுசெஞ்சு ஓட்டுப் போடுங்கள் நண்பர்களே...  பிஹாரில் நடந்ததைப் போல 37% ஓட்டு விழுவது ஜனநாயகமே அல்ல.  காஷ்மீரில் அதைவிடக் குறைவு என்பதற்கு தர்க்கரீதியான காரணங்கள் உள்ளன.  49 - O வையாவது குறைந்தது பதிவு செய்யுங்கள்.  வெட்டி நியாயம் பேசிட்டு ஓட்டு போடாம விட்டுடாதீங்க.  ஓட்டு போடாட்டி என்ன நடக்கும தெரியுமா? நீங்க பஸ்ல போகும்போது மொக்கையான படம் அல்லது விஜய் படம் போடுவாங்க...  


திரும்ப ரெண்டு மாசம் கழித்து யாராவது திட்டினால், பதிவெழுதுகிறேன்.

பேரன்புடன் 
நித்யகுமாரன்.


Friday, February 20, 2009

முடியலங்க சாரு...

முடியலங்க...

முடியல...

சாருவின் நடுநிலைமையைப் பற்றி நினைக்கும் போது... முடியலங்க...

எப்பப்பாத்தாலும் ஜெயமோகனைப் பத்தி எதாவது எழுதாட்டி அவரால இருக்க முடியாது. சுஜாதா மிகச் சரியாகவே சொன்னார். ராஸ லீலாவையும் ஜீரோ டிகிரியையும் காசு குடுத்து வாங்கி படிச்சவன் நான். சரோஜாதேவி, மருதம் மாதிரி புத்தகம் படிக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலோ என்னவோ சாரு பிடித்துப் போனது. காமக் கதைகளை அவருடைய தளத்தில் டீக்கடையில் தினத்தந்தி படிப்பதைப் போல ஓசியாகத்தான் படித்தேன். அதப்பத்தியும் பல தடவை அவரு கடிதம் எழுதி நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன், யாராவது டாலர்ல பணம் அனுப்பி வையிங்கன்னு கேப்பாரு. அப்பல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கும்.

யாராவது பணம் அனுப்பி வச்சீங்கன்னா இதே மாதிரி ஓசியில மத்தவங்க படிக்கலாம். இல்லன்னா கஷ்டம்னு எழுதுனாரு. எனக்கு ஒரு மாதிரி பீலிங்கா ஆயிடுச்சு. யாரோ சில தொரைங்க வெளிநாட்டுல இருந்து பணம் அனுப்பி வச்சதனால மட்டுமே நமக்கு இந்த காமக்கதைகளெல்லாம் ப்ரீயா படிக்க முடியுதோன்னு ஒரு கில்ட்டி பீலிங் வந்துடுச்சு. என்ன நடந்தாலும் கொஞ்சங்கூட அசையாம இருக்குற தமிழனா இருந்ததால, சரி சரின்னு தொடச்சு விட்டு்ட்டு படிச்சுக்கிட்டுதான் இருந்தேன்.

ராஜேஷ்குமார் நாவல்களும் பாலகுமாரன் நாவல்களும் ஒரு கட்டத்துக்கு மேல சலிச்சுப்போற மாதிரி சரோஜாதேவியைப் போன்ற எழுத்துகளின் மற்றொரு வடிவான காமக்கதைகளும் சலிக்கத்தான் துவங்கின. சரி இவரிடமிருந்து வேறு என்னதான் வித்தியாசமாக இருக்கிறது, என தேடத்துவங்கினால் “உன்னையெல்லாம் பாத்தா ரொம்ப பாவமாயிருக்கு” என்கிற ரீதியில் நான் பார்க்கப்பட்டேன். நமக்கு இருக்குற பிஸினஸ் டார்ச்சர்ல இதவேற தாங்கமுடியாதுன்ன சுகுறா தெரிஞ்சு போச்சு. அதிவீரபாண்டியன் அர்த்தஜாமக்கதைகள் என்கிற அடுத்த கட்டம் படிக்க முடியலங்க. இன்னா பண்றதுன்னு புரியல.

அலைபாயுதே குடுத்த அதே மணிரத்னம்தான் கன்னத்தில் முத்தமிட்டாலும் பண்ணாரு. அடுத்தடுத்த தளங்களுக்கு தாவிக்கொண்டே இருக்க வேண்டிய எழுத்து, சீனித்துண்டை சுற்றுகிற எறும்புகளைப்போல ஒரே இடத்திலேயே சுற்றுகிறது. பாவம். படிக்கிற நம்மளத்தான் சொல்லுறேன்.

சாருவின் கொடுமைகளை விட கொடுமையானவை, அவருக்கு பல்லக்கு தூக்கும் குறிவருடிகளின் (அடிவருடிகள் என்பன போன்ற வார்த்தைகள் எல்லாம் சாருவைப் பொறுத்தவரை சப்பையானவை) கருத்தாக்கங்கள். சாரு தன்னையும் ஜெமோவையும் எம்.ஜி.ஆர். சிவாஜி போலவும், ரஜினி கமல் போலவும், அஜீத் விஜய் போலவும், சிம்பு தனுஷ் போலவும் உருவாக்கி எழுதும் பிம்பங்கள் நான்கடவுளில் ஜெமோ எழுதிய வசனங்களை விட நகைச்சுவை நெடி படைத்தவை.

பொது இடத்தில் பலமான ஓசையுடன் காற்று பிரிவதைப் போலவும், பாத்ரூமில் சுச்சு போகும்போது பலமான ஓசையுடன் கோப்பையில் விழுகையில் வெளியிலிருப்போருக்கே கேட்டு விடுமோ என்பது போலவும் ஒரு வெட்கமான உணர்வு சாருவின் எழுத்துக்களை படிக்கையில் மேலிடுகிறது. இப்படிப்பட்ட உதாரணங்களை யோசிக்கவும் எழுதவும் முடிகிற துணிச்சல் சத்தியமாக சாருவிடமிருந்துதான் வந்தது.

அழகிரி ஓர் அப்பாவி மனிதர் எனச் சொல்லுவதிலாகட்டும், அவருடைய நடவடிக்கைகள் அராஜகம் எனச்சொல்லி ஆட்டோ வருமோ என நக்கலடிப்பதிலாகட்டும் அவர் ஒரு சிறந்த நடுநிலைவாதிதான். கனிமொழியோடு மிக்க அன்பு பாராட்டுகிறாராம். இப்போது கருணாநிதி அரசை கலைக்கச் சொல்கிறாராம். என்ன ஒரு நடுநிலையான கருத்துக்கள். சாரு சொல்லிவிட்டார் அவ்வளவுதான் இனி இந்த அரசு கலைக்கப்பட்டு விடும். உடன்பிறப்புக்களே திரண்டெழுங்கள்.

தமிழ்நாட்டு வீதிகளெங்கும் முனைக்கு முனை இன்னும் அதிகம் டாஸ்மாக் கடைகள் திறக்க வேண்டும் என்பன போன்ற புரட்சிகரமான கருத்துக்களுக்கு இவர் சொந்தக்காரர்.

“அவர் செய்த நன்று ஒன்று உளக் கெடும்” என்ற திருக்குறளின் போதனைக்கேற்ப ராஸலீலாவின் சில பத்திகளுக்காகவும், காமக்கதைகளின் சில அத்தியாயங்களுக்காகவும் அவர் (என்) பாராட்டுதலுக்குரியவர்.

எனக்குத்தெரிந்த வரையில் ஜெயமோகன் நினைத்தபோதெல்லாம் இவரைப்பற்றி எழுதி வாருவதில்லை. உ.த.எ. என்று அடைமொழி கொடுத்து அவரைப் பற்றி எழுதி தான் லைம்லைட்டுக்கு வருவதில் சாருவுக்கு பாரிஸ் கார்னர் சரக்குகளைவிட அதிகமான போதை வரலாம்.

நமக்குத்தான் சகிக்கவில்லை.

Friday, January 23, 2009

“இந்த ஏழு நாட்கள்“

இல்லாளின் ஒரு வாரப் பிரிவும் இல்லாமலிருத்தலும்




நீ
தளும்ப தளும்ப தரும்
காபி குவளைகள்
காலியாகவிருக்கின்றன

தளும்புகின்றன...

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

நடுநிசி வந்து
பூட்டிய கதவு திறந்து
அசந்து படுத்தாலும்
என்னோடு சேர்ந்து
உறங்க மறுத்து
உன் ஞாபக அலையடிக்கிறது
மாத காலண்டர்...

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

நீ
திட்டித்திட்டி செய்யாததையெல்லாம்
அனிச்சையாய் செய்கிறேன்...

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

வேண்டுமட்டும் தூங்கலாம்
ஆப்பாயில் சாப்பிடலாம்
10 மணி தாண்டி வீடு வரலாம்

இந்த எந்த சுதந்திரமும் வேண்டாம்
விரைந்து வா....

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

குடிக்க சுடுதண்ணீர் போடுகையிலும்
உள்ளாடை துவைக்கையிலும்
தெரிந்து போகிறது...

என்னை எந்தளவு
கெடுத்து வைத்திருக்கிறாயென்று...

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

நீ
திரும்பிவரும் நாள்வரை
மொத்தமாய் கிழித்தபின்
காலண்டரும் எனைப்பார்த்து
கைகொட்டி நகைக்கிறது

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Thursday, January 22, 2009

”எங்க ராஜ்மோகன் சார்”





ராஜ்மோகன் சாரைப் பத்தி நான் முதன் முதலா கேள்விப்பட்ட விஷயமே என்னை பயங்கொள்ளச் செய்தது எனலாம். அப்போது நான் திருச்சியில் திரு. சண்முகம் Architect அவர்களிடம் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அடுத்ததாக நான் ஸ்ரீரங்கம் , ராகவேந்திராபுரம் “"Suriya Towers Phase I " project டிற்கு மாற்றப்பட வாய்ப்பிருப்பதாக அறிந்தவுடன் அலுவலகத்தில் எல்லாரும் சொன்னார்கள் : “அவரு கிட்ட போறியா... நல்லா மாட்டப் போறடி...”.




ராஜ்மோகன் சார் ஒரு building promoter. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், ஹோலிகிராஸ் college அருகே அமைந்திருக்கிற Suriya Towers என்கிற commercial complex அவரோடதுதான் (with his partners). அவருடைய அடுத்த Residential project ஸ்ரீரங்கத்தில் தொடங்கவிருந்தது. அந்த project டிற்கான site engineer ஆக என்னை நியமிக்க எங்கள் Architect உத்தேசித்திருந்தார். அப்போது Engineering முடித்து இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்தன. சற்று raw வாக இருந்தேன் என்று சொல்லலாம். என்னை பண்படுத்தியவர் அவரென்றால் அது மிகையில்லை.




அவர் ஒரு terror என்பதில் மாற்றுக்கருத்துக்கள் எழ வாய்ப்பில்லை. “ரௌத்திரம் பழகு” என்று பாரதி சொல்வதை நான் அவரிடம் தான் கற்றுக் கொண்டேன். அவரிடம் பலமுறை நானும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன். பலமுறை சொல்லுவார் : “ இங்கேயிருந்து வெளிய போனா, முழுசா தயாராகிப் போயிடனும்..”. எந்தவொரு விஷயத்தை எடுத்தாலும் அதை முழுமையாக அலசி ஆராய்ந்து முடிக்கும் வரை அவர் கைவிடமாட்டார். தன்னைப் பார்த்தேனும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவரது எண்ணம்.




Weekly payment வாங்குவதற்கு மட்டுமே அவரைப் பார்த்தால் போதுமென்று மற்ற நாட்களில் அவரை நெருங்கவே பயந்து ஓடும் contractor களை பார்த்திருக்கிறேன். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் வந்தால் அவரைப் பார்க்க மனதில் தனி மரியாதையே வரும். அவருடைய கோபத்தின் அளவு எவ்வளவு என்பதை ஒருமுறை நான் நேரில் கண்டேன். ஏதோ தவறு செய்துவிட்டதற்காக site watchman ஒருமுறை அவரிடம் அடி வாங்கியதை இன்றும் என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது.




அதே போல், அடுத்தவர்களுக்கு ஏதெனும் செய்யவேண்டுமென்று நினைத்து விட்டால், மனிதர் சளைக்காமல் செய்வார். உண்மையாக உழைப்பதாக அவர் உணர்ந்தால் போதும் மனிதர் தாங்குவார். ஒருமுறை கட்டுக்கம்பி காலில் குத்தி இரத்தம் வழிய நான் வந்தபோது Rs.100/- பணம் கொடுத்து உடனடியாக ஆஸ்பத்திரிக்கு போகச் சொன்னார். “இதெல்லாம் ஒன்னுமில்லை சார் பாத்துக்கலாம் ” என்று சொல்லியும் விடவில்லை. அவருடைய partner சரவணன் அவர்களின் சிறுவயது பெண்குழந்தை ஒரு நாள் காலையில் 'happy birthday' என்று சொல்லி chocolate கொண்டு வந்தபோது, அடடா என்று பதறியபடி தன் சட்டைப் பைக்குள் கை விட்டு அப்படியே கையில் வந்த ரூபாய் நோட்டுகள் அத்தனையும் கொடுத்து வாழ்த்தினார்.




ஆன்மிகத்தில் மிகப்பெரும் நாட்டம் கொண்டவர் அவர். அவர் ஒரு சீரிய ஷீரடி சாய்பாபா பக்தர். ஜோதிடம் பார்க்கத் தெரியும். அவருடைய இஸ்லாம் நண்பர்களுக்குக் கூட ஜாதகம் எழுதித்தந்ததாக பிற்பாடு கேள்விப் பட்டேன். ”உங்க ஜாதகப் படி நீங்கள் எங்கும் வேலைபார்க்கும் வாய்ப்பு பிற்காலத்தில் இல்லை. தனியாகத் தொழில் செய்யத்தான் வாய்ப்புண்டு ” என்று அப்போதே சொன்னார். L&T யில் பணிபுரியும் வரையிலும் எனக்கு அந்த நம்பிக்கை பெரிதாக வரவில்லை. ஆனால் இன்று நான் தனியாக தொழில் செய்கிறேன். அந்த எண்ணங்கள் மனதில் வளர அன்று நல்லதொரு விதையை ஊன்றி அவர்தான் வளர்த்தார் எனலாம்.




ஆன்மிக நாட்டமும் மிகப் பெரிதாக என்னில் இருந்ததில்லை. முருகனையும் பிள்ளையாரையும், திருவெள்ளரை பெருமாளையும் கும்பிடுவதும் அப்பாவுக்காக செய்யும் காரியமாகத்தான் இருந்தது. ஷீரடி சாய்பாபாவை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்து, “இவரைத்தான் நீங்கள் பற்றிக்கொள்ள வேண்டும்” என்று குருஸ்தானத்தில் இருந்து வழிகாட்டியவரும் அவர்தான். பிற்பாடுதான் நான் செல்லும் பலவிடங்களில் சாய்பாபா அவர்களின் படமும் தொடர்ந்து வந்ததை நான் அறிந்துகொண்டேன். “அவரு நினைக்காம நீங்க அவரைப் பார்க்க முடியாது” என்று அவர் பாபாவைப் பற்றி அடிக்கடி கூறுவார். “அவனருளாளே அவன் தாள் பணிந்து” என்று வரிகளை நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.




ராஜ்மோகன் சார் பெரிதாக ஒன்றும் படிக்க வில்லை. சைக்கிள் கடையில் வேலைபார்த்தது முதல் பல விஷயங்களை என்னிடம் அவர் பகிர்ந்ததுண்டு. “இதை எவனும் சொல்லிக் கொடுக்க மாட்டான் ” என்று ஆரம்பித்தே பல விஷயங்களை எனக்கு சொல்லிக்கொடுத்தார். வியாபாரத்தில் சூழல் சரியில்லை என்றால் நான் அவரிடம் தான் உடனடியாக செல்வேன். திருச்சிக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் அவரை சந்திக்க நான் தவறுவதில்லை. என்னுடைய திருமணத்திற்கு தம்பதி சமேதமாக வந்து வாழ்த்தினார்.




அவருடைய சம்பந்தி வீட்டிற்கு சமீபத்தில் அவர் சென்னை வந்தபோது அவரை நேரில் சென்று (வாடகைக்) காரில் அழைத்து வந்து, மேடவாக்கத்தில் உள்ள என்னுடைய project site ஐ பெருமிதத்துடன் காட்டினேன். ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பாபா கோயிலுக்கு சென்றுவந்தோம். அவருடன் நான் பாபா கோயிலுக்குச் சென்றது அந்த ஒருமுறைதான். அந்த தருணம் மிகவும் திவ்யமானது. என்னைப் பற்றி தன் துணைவியாரிடம், “சின்னப்பையன் நல்லா பொறுப்பா பன்றான்” என்று சொன்னதாக பிற்பாடு கேள்விப்பட்டேன். மிக்க சந்தோஷமாகவிருந்தது.




கடந்த மாதத்தில் சென்னையில் உலகத் திரைப்பட விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் தவறாது சென்று வந்தேன். ஒரு நாள் காலை அங்கு பயணித்திருக்கும் போது வந்திருந்த call ஒன்றை நான் தவறவிட்டேன். Woodlands தியேட்டர் சென்று அடைந்தவுடன்தான் missed call ல் கண்டேன். குறித்து வைக்காத திருச்சி landline எண்ணிலிருந்து இரண்டு முறை call வந்திருந்தது. யாராகவிருக்கும் என்றெண்ணி தொலைபேசியபோது ராஜ்மோகன் சாரின் துணைவியார் பேசினார். “உங்க ராஜ்மோகன் சார் நம்மள விட்டு போய்ட்டாருய்யா... வெந்து சாம்பலா போய்ட்டாருய்யா...” என்று துவங்கி ஓலமிட்ட அந்த குரலை கேட்கும் சக்தி எனக்கில்லை. ஆளரவம் எண்ணாமல் நான் ஓங்கிப் பெருங்குரலெடுத்து அழத்துவங்கினேன். Car parking ஐ ஒட்டிய சுவரில் முட்டி சுற்றுப் புறம் மறந்து அழத் துவங்கினேன். அப்பக்கம் அந்நேரம் தம்மடிக்க வந்த இயக்குநர் ஸ்டான்லி உள்ளிட்ட இருவர் என்னை வித்தியாசமாக பார்த்து நகர்ந்தனர்.




இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே எங்க சார் heart attack ஆல் இறந்து போயிருந்தார். நான் பணிபுரிந்த அலுவலக நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ள முடியாது போனதாக பின்பு வருத்தப்பட்டனர். என்னுடைய மொபைல் நம்பரை அவருடைய மொபைல் போனில் இருந்து கண்டெடுத்து பின்பு எனக்கு போன் பண்ணியிருக்கிறார்கள் என்று பின்பு தெரிந்து கொண்டேன்.
சுற்றம் மறந்து நான் அழுதது எனக்கு நினைவு தெரிந்து அன்றுதான். மிகப்பெரிய சூன்யம் என்னை நெருங்கி அரவணைத்து உலுக்கத் தொடங்கியது. அந்த நிகழ்வை என்னால் ஒத்துக்கொள்ளவே முடியவில்லை. எனக்கு நினைவு தெரிந்து என்னை பாதிக்கும் அளவு எந்த பெரிய மரணமும் இது வரை நிகழவில்லை. இதை ஜீரணிக்க மிகவும் கஷ்டப் பட வேண்டியிருந்தது.




பாபா கோயிலுக்கு போவதைக்கூட நிறுத்திவிட எண்ணினேன். என்னுடைய பிரத்யேக முயற்சியில்லாமலேயே அதே ஈஞ்சம்பாக்கம் பாபா கோயிலுக்கு 2009 ஜனவரி 1 அன்று செல்ல நேரிட்டது. “அவரு நினைக்காம நீங்க அவரைப் பார்க்க முடியாது” என்று அவர் பாபாவைப் பற்றிச் சொன்னது நினைவுக்கு வந்தது. பாபாவிடம் வேண்டிக்கொள்ள ஆயிரம் இருந்தாலும் ராஜ்மோகன் சாரின் நினைவுகள் மட்டுமே சூழ்ந்து வந்தன. அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டி வந்தேன்.




புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை மொபைல் போனில் உள்ள ஒவ்வொரு எண்ணுக்கும் SMS அனுப்பிக் கொண்டே வருகையில் Rajmohan sir என்கிற அவருடைய பெயர் வந்து நிற்கிறது. விரல்கள் நடுங்க அடுத்த பெயரை தேடிச் செல்கிறேன். மொபைலில் இருந்து அவருடைய எண்ணை என்னால் நிச்சயமாக அழிக்கவே முடியாது என்பது மட்டும் நிதர்சனம்.

Saturday, January 10, 2009

வில்லு விஜய் - லொள்ளு ஜோக்ஸ்


சமீப காலமாக மொபைல் Inbox ல் வந்து குவிகின்றன,  விஜய் ஜோக்குகள்.  என் மச்சான் ஒருவர் தீவிர அஜீத் ரசிகர்.  அவர் நட்பு வட்டாரத்தில் புழங்கும் SMS களை எல்லாம் எனக்கு forward செய்து புண்ணியம் கட்டிக் கொள்கிறார்.  Laughter clubகள் தேவைப்படும் சமூகத்தில் இருக்கும் நமக்கு இதனைப் போன்ற நகைச்சுவை துணுக்குகள்,  ஓரளவு relief தருகின்றன என்றால் அது மிகையில்லை.  விஜய்யின் தீவிர ரசிகர்கள் (அப்படி யாரேனுமிருப்பின்),  இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் ஓரங்கட்டிக் கொள்ளவும்.

!  !  !  !  !  !  !
சோக்கு 1 :

விஜய் (பொல்லாதவன் கருணாஸ் ஸ்டைலில்) :   ஏய் மச்சி நீ கேளேன்,  ஏய் மாமா நீ கேளேன்,  ஏய் மாப்பு நீ கேளேன்,  நீ கேளேன்,  நீ கேளேன்....   

டேய் எவனாச்சும் கேட்டுத்தொலைங்கலேண்டா....

“வில்லு”  பாட்டு ரிலீஸாகியிருக்குது...

!  !  !  !  !  !  !
சோக்கு 2 :

“ சார் இந்த TV புதுசா மார்க்கெட்ல வந்துருக்கு .  இது தான் இப்ப fast moving.  நீங்க வேணா இந்த TV வாங்கிக்கிறீங்களா...?”

“ அப்படிங்களா...!  என்ன விலைங்க?”

“ just ஒரு லட்சம்தாங்க...”

“ஏங்க இவளோ விலை...?”

“நீங்க பாக்குற சேனல்ல விஜய் படம் வந்தா இது automatic ஆ channel மாத்திடும்..”

!  !  !  !  !  !  !
சோக்கு 3 :

“சரோஜா”  பிரேம்ஜி ஸ்டைலில் படிக்கவும்...

2002  -  புதிய கீதை

2003  -  வசீகரா

2004  -  உதயா

2005  -  சச்சின்

2006  -  ஆதி

2007  -  அழகிய தமிழ் மகன்

2008  -  குருவி

இவ்வளவு தாங்கிட்டோம்....

2009  -  வில்லு       ---->   இதைத் தாங்க மாட்டோமா...?

!  !  !  !  !  !  !
சோக்கு 4 :

(சூரியன் பட ஸ்டைலில்) கவுண்டமணி  :    “  நச்சு நச்சுங்கிராங்கப்பா....  “அழகிய தமிழ் மகன்” னு ஒரு படமாம்.  அதைப் பாக்கச்சொல்லி அனத்துறாங்கப்பா...  அது கூட பரவாயில்லை...  “குருவி” னு ஒரு படமாம்.  அதை விஜய் ரசிகர்களாலேயே (!) பாக்க முடியலயாம்.  அத நம்மல பாக்கச் சொல்லி ஒரே டென்ஷன் பண்றாங்கப்பா...  அந்த கொடுமையெல்லாம் கூட தாண்டி வந்துட்டேன்...  இப்ப பொங்கலுக்கு “வில்லு”னு ஒரு படம் வருதாம்.  அதை நான்தான் first show பாக்கனுமாம்...  ஒரே குஷ்டமப்பா...”

அருகிலிருக்கும் விஜய்  :  “  அண்ணா...  போன் வயர் பிஞ்சு நாளு நாள் ஆச்சுங்ணா...”

கவுண்டமணி :  “  டேய் பனங்கா மண்டைத்தலையா இது செல்போன்டா....  ஐயோ ஐயோ...

!  !  !  !  !  !  !
Just enjoy...   

திரையில் “வில்லு” படம் பார்த்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவும்.

வலை நண்பர்களுக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். 
Follow @ersenthilkumar