Showing posts with label timepass. Show all posts
Showing posts with label timepass. Show all posts

Friday, February 20, 2009

முடியலங்க சாரு...

முடியலங்க...

முடியல...

சாருவின் நடுநிலைமையைப் பற்றி நினைக்கும் போது... முடியலங்க...

எப்பப்பாத்தாலும் ஜெயமோகனைப் பத்தி எதாவது எழுதாட்டி அவரால இருக்க முடியாது. சுஜாதா மிகச் சரியாகவே சொன்னார். ராஸ லீலாவையும் ஜீரோ டிகிரியையும் காசு குடுத்து வாங்கி படிச்சவன் நான். சரோஜாதேவி, மருதம் மாதிரி புத்தகம் படிக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலோ என்னவோ சாரு பிடித்துப் போனது. காமக் கதைகளை அவருடைய தளத்தில் டீக்கடையில் தினத்தந்தி படிப்பதைப் போல ஓசியாகத்தான் படித்தேன். அதப்பத்தியும் பல தடவை அவரு கடிதம் எழுதி நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன், யாராவது டாலர்ல பணம் அனுப்பி வையிங்கன்னு கேப்பாரு. அப்பல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கும்.

யாராவது பணம் அனுப்பி வச்சீங்கன்னா இதே மாதிரி ஓசியில மத்தவங்க படிக்கலாம். இல்லன்னா கஷ்டம்னு எழுதுனாரு. எனக்கு ஒரு மாதிரி பீலிங்கா ஆயிடுச்சு. யாரோ சில தொரைங்க வெளிநாட்டுல இருந்து பணம் அனுப்பி வச்சதனால மட்டுமே நமக்கு இந்த காமக்கதைகளெல்லாம் ப்ரீயா படிக்க முடியுதோன்னு ஒரு கில்ட்டி பீலிங் வந்துடுச்சு. என்ன நடந்தாலும் கொஞ்சங்கூட அசையாம இருக்குற தமிழனா இருந்ததால, சரி சரின்னு தொடச்சு விட்டு்ட்டு படிச்சுக்கிட்டுதான் இருந்தேன்.

ராஜேஷ்குமார் நாவல்களும் பாலகுமாரன் நாவல்களும் ஒரு கட்டத்துக்கு மேல சலிச்சுப்போற மாதிரி சரோஜாதேவியைப் போன்ற எழுத்துகளின் மற்றொரு வடிவான காமக்கதைகளும் சலிக்கத்தான் துவங்கின. சரி இவரிடமிருந்து வேறு என்னதான் வித்தியாசமாக இருக்கிறது, என தேடத்துவங்கினால் “உன்னையெல்லாம் பாத்தா ரொம்ப பாவமாயிருக்கு” என்கிற ரீதியில் நான் பார்க்கப்பட்டேன். நமக்கு இருக்குற பிஸினஸ் டார்ச்சர்ல இதவேற தாங்கமுடியாதுன்ன சுகுறா தெரிஞ்சு போச்சு. அதிவீரபாண்டியன் அர்த்தஜாமக்கதைகள் என்கிற அடுத்த கட்டம் படிக்க முடியலங்க. இன்னா பண்றதுன்னு புரியல.

அலைபாயுதே குடுத்த அதே மணிரத்னம்தான் கன்னத்தில் முத்தமிட்டாலும் பண்ணாரு. அடுத்தடுத்த தளங்களுக்கு தாவிக்கொண்டே இருக்க வேண்டிய எழுத்து, சீனித்துண்டை சுற்றுகிற எறும்புகளைப்போல ஒரே இடத்திலேயே சுற்றுகிறது. பாவம். படிக்கிற நம்மளத்தான் சொல்லுறேன்.

சாருவின் கொடுமைகளை விட கொடுமையானவை, அவருக்கு பல்லக்கு தூக்கும் குறிவருடிகளின் (அடிவருடிகள் என்பன போன்ற வார்த்தைகள் எல்லாம் சாருவைப் பொறுத்தவரை சப்பையானவை) கருத்தாக்கங்கள். சாரு தன்னையும் ஜெமோவையும் எம்.ஜி.ஆர். சிவாஜி போலவும், ரஜினி கமல் போலவும், அஜீத் விஜய் போலவும், சிம்பு தனுஷ் போலவும் உருவாக்கி எழுதும் பிம்பங்கள் நான்கடவுளில் ஜெமோ எழுதிய வசனங்களை விட நகைச்சுவை நெடி படைத்தவை.

பொது இடத்தில் பலமான ஓசையுடன் காற்று பிரிவதைப் போலவும், பாத்ரூமில் சுச்சு போகும்போது பலமான ஓசையுடன் கோப்பையில் விழுகையில் வெளியிலிருப்போருக்கே கேட்டு விடுமோ என்பது போலவும் ஒரு வெட்கமான உணர்வு சாருவின் எழுத்துக்களை படிக்கையில் மேலிடுகிறது. இப்படிப்பட்ட உதாரணங்களை யோசிக்கவும் எழுதவும் முடிகிற துணிச்சல் சத்தியமாக சாருவிடமிருந்துதான் வந்தது.

அழகிரி ஓர் அப்பாவி மனிதர் எனச் சொல்லுவதிலாகட்டும், அவருடைய நடவடிக்கைகள் அராஜகம் எனச்சொல்லி ஆட்டோ வருமோ என நக்கலடிப்பதிலாகட்டும் அவர் ஒரு சிறந்த நடுநிலைவாதிதான். கனிமொழியோடு மிக்க அன்பு பாராட்டுகிறாராம். இப்போது கருணாநிதி அரசை கலைக்கச் சொல்கிறாராம். என்ன ஒரு நடுநிலையான கருத்துக்கள். சாரு சொல்லிவிட்டார் அவ்வளவுதான் இனி இந்த அரசு கலைக்கப்பட்டு விடும். உடன்பிறப்புக்களே திரண்டெழுங்கள்.

தமிழ்நாட்டு வீதிகளெங்கும் முனைக்கு முனை இன்னும் அதிகம் டாஸ்மாக் கடைகள் திறக்க வேண்டும் என்பன போன்ற புரட்சிகரமான கருத்துக்களுக்கு இவர் சொந்தக்காரர்.

“அவர் செய்த நன்று ஒன்று உளக் கெடும்” என்ற திருக்குறளின் போதனைக்கேற்ப ராஸலீலாவின் சில பத்திகளுக்காகவும், காமக்கதைகளின் சில அத்தியாயங்களுக்காகவும் அவர் (என்) பாராட்டுதலுக்குரியவர்.

எனக்குத்தெரிந்த வரையில் ஜெயமோகன் நினைத்தபோதெல்லாம் இவரைப்பற்றி எழுதி வாருவதில்லை. உ.த.எ. என்று அடைமொழி கொடுத்து அவரைப் பற்றி எழுதி தான் லைம்லைட்டுக்கு வருவதில் சாருவுக்கு பாரிஸ் கார்னர் சரக்குகளைவிட அதிகமான போதை வரலாம்.

நமக்குத்தான் சகிக்கவில்லை.

Tuesday, August 5, 2008

சும்மா குறிப்புகள் - 1



ப்ரியம் நிறைந்த நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

சமீபத்தில் நண்பர் தனசேகரிடம் அளவளாவிக் கொண்டிருந்தபோது, ப்ளாக் எழுதாது ஏன் என நோண்டி நொங்கெடுத்துக்கொண்டிருந்தார். நண்பர் நாடோடி இலக்கியனும் ஏன் எழுதவி்ல்லை என துருவிக்கொண்டிருக்கிறார். பெரிதாய் சொல்லிக்கொள்ளும்படி காரணம் ஏதுமி்ல்லை. விசைப்பலகை பிரச்சனை செய்துவிட்டது. ஆங்கில எழுத்துகள் E மற்றும் Y வேலை செய்யவி்ல்லை. சரி செய்ய சோம்பேறித்தனம் மற்றும் எழுதுவதிலும் பெரிதாக ஆர்வமில்லாமல் இருந்து விட்டது. இப்போது விசைப்பலகை தயார். எதாவது எழுதலாமே என்று அமர்ந்துவிட்டேன்.

* * * * *

குசேலன் படம் பார்க்கவில்லை. வலையெங்கும் துவைத்து தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் உலகத்தொலைக்காட்சிகளில் முதன்முறையாக வரும்போது பார்க்கலாம் என உத்தேசம். படம் பார்த்த நண்பர்களிடம் விசாரித்தேன். குட்டிப் பட்டாளத்தோடு மாயாஜால் சென்று படம் பார்த்த நண்பர் ராகவன் சொன்னது: “ பசங்களுக்கு படம் பிடிக்கல”. குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்காக, ரஜினி அவர்கள் ஹைதராபாத்திலிருந்து அவர்களுக்கு புரியும் விதத்தில் request ( அது மன்னிப்பு இல்லையாமே...!) செய்ததாக, CNN - IBN ல் செய்தி வெளிவந்தபோதே முடிவு செய்துவிட்டேன்; இந்த படத்தை திரையரங்கில் பார்ப்பதில்லையென்று. கலை வியாபாரிகளிடம் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்து போவது தமிழ் மக்களுக்கொன்றும் புதிதில்லையே...!

* * * * *

“குருவி” பாடல்கள் தொலைக்காட்சியில் வந்தால், என் 14 மாத மகன் தவறவிடுவதில்லை (“தேன் தேன் தேன்...” என்கிற மெலடி உட்பட...) . அப்படி என்னதான் பிடிக்கிறதென்றும் புரியவில்லை. தகிட தகிட எனத்துவங்கும் கலக்கலான “கத்தாழ கண்ணால...” முதல் அவனுக்குப்பிடித்த பாடல்கள் ஒரு வரிசையில் அமைகின்றன. தசாவதாரத்தில் “முகுந்தா முகுந்தா...” மற்றும் “கல்லைமட்டும் கண்டால்...” என இரண்டு பாடல்களும் அவனை வசீகரித்திருக்கின்றன. நேபாளி படத்தில் வரும் “கனவிலே கனவிலே...” என்கிற பாடலும், “பதினெட்டு வயது பட்டாம்பூச்சி...” என ஒரு பெண் துள்ளியாடும் ஒரு பாடலையும் இமை அசையாது ரசிக்கிறான். அவனுடைய ஹிட் லிஸ்ட்டின் புதுவரவு : சுப்ரமணியபுரத்திலிருந்து எனக்கு மிகவும் பிடித்த “கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்” என்ற அழகிய பாடல்.

* * * * *

ஆடி மாதத்தின் மையத்திலிருக்கிறோம். இன்னும் 12 நாட்களுக்கு ஆடி விளம்பரங்கள் நம்மை மேலும் துவைத்தெடுக்கும். ஸ்னிக்தா அழகாக அபிநயம் காட்டும் “மழை மழை மழை மழை பெய்யுதே...” என்ற sridevi textiles விளம்பரம் அட்டகாசம். அளவுக்கு அதிகமாக உணர்ச்சி கொட்டி + காட்டி, ப்ரியாமணி ஆடும் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் தொடர்ந்து பார்க்க சலிக்கிறது. “ஒரே எடத்துல ரெண்டு பாருங்க...” என்று அவர் தொடர்ந்து சொல்வதும் அபத்தம். மாறாக மீரா ஜாஸ்மின் வரும் “சாமுத்ரிகா பட்டு” விளம்பரம் படு பாந்தம். முன்பு படபடவென்று வந்த அதே விளம்பரத்தை சற்று பிரேக் போட்டு நிறுத்தி, ஸ்லோவாக சொல்கிறார்கள். இதுவும் அதே அழகுடன் மிளிர்கிறது. “சர்வ லட்சணமான பட்டு” என்ற பிரயோகம் கூட “லட்சணமான பட்டு” என சுருங்கிவிட்டது. பிரகாஷ்ராஜ் வரும் வனஸ்பதி விளம்பரத்தைக் காட்டிலும், ஜெயராம் கலக்கும் துணிக்கடை விளம்பரம் சிறப்பு. அவருடைய தமிழில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. “நொட்டு” என்று பஞ்சதந்திரத்தில் அவர் அடிக்கும் ஒரு டைமிங் காமெடியை இப்போது நினைத்தாலும் சிரித்து மாளமுடியாது. இந்த காட்சி யாருக்கேனும் நினைவிற்கு வந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

* * * * *

இப்போதைக்கு ஜூட்டு... விரைவில் ரிபீட்டு....

Follow @ersenthilkumar