Saturday, January 10, 2009

வில்லு விஜய் - லொள்ளு ஜோக்ஸ்


சமீப காலமாக மொபைல் Inbox ல் வந்து குவிகின்றன,  விஜய் ஜோக்குகள்.  என் மச்சான் ஒருவர் தீவிர அஜீத் ரசிகர்.  அவர் நட்பு வட்டாரத்தில் புழங்கும் SMS களை எல்லாம் எனக்கு forward செய்து புண்ணியம் கட்டிக் கொள்கிறார்.  Laughter clubகள் தேவைப்படும் சமூகத்தில் இருக்கும் நமக்கு இதனைப் போன்ற நகைச்சுவை துணுக்குகள்,  ஓரளவு relief தருகின்றன என்றால் அது மிகையில்லை.  விஜய்யின் தீவிர ரசிகர்கள் (அப்படி யாரேனுமிருப்பின்),  இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் ஓரங்கட்டிக் கொள்ளவும்.

!  !  !  !  !  !  !
சோக்கு 1 :

விஜய் (பொல்லாதவன் கருணாஸ் ஸ்டைலில்) :   ஏய் மச்சி நீ கேளேன்,  ஏய் மாமா நீ கேளேன்,  ஏய் மாப்பு நீ கேளேன்,  நீ கேளேன்,  நீ கேளேன்....   

டேய் எவனாச்சும் கேட்டுத்தொலைங்கலேண்டா....

“வில்லு”  பாட்டு ரிலீஸாகியிருக்குது...

!  !  !  !  !  !  !
சோக்கு 2 :

“ சார் இந்த TV புதுசா மார்க்கெட்ல வந்துருக்கு .  இது தான் இப்ப fast moving.  நீங்க வேணா இந்த TV வாங்கிக்கிறீங்களா...?”

“ அப்படிங்களா...!  என்ன விலைங்க?”

“ just ஒரு லட்சம்தாங்க...”

“ஏங்க இவளோ விலை...?”

“நீங்க பாக்குற சேனல்ல விஜய் படம் வந்தா இது automatic ஆ channel மாத்திடும்..”

!  !  !  !  !  !  !
சோக்கு 3 :

“சரோஜா”  பிரேம்ஜி ஸ்டைலில் படிக்கவும்...

2002  -  புதிய கீதை

2003  -  வசீகரா

2004  -  உதயா

2005  -  சச்சின்

2006  -  ஆதி

2007  -  அழகிய தமிழ் மகன்

2008  -  குருவி

இவ்வளவு தாங்கிட்டோம்....

2009  -  வில்லு       ---->   இதைத் தாங்க மாட்டோமா...?

!  !  !  !  !  !  !
சோக்கு 4 :

(சூரியன் பட ஸ்டைலில்) கவுண்டமணி  :    “  நச்சு நச்சுங்கிராங்கப்பா....  “அழகிய தமிழ் மகன்” னு ஒரு படமாம்.  அதைப் பாக்கச்சொல்லி அனத்துறாங்கப்பா...  அது கூட பரவாயில்லை...  “குருவி” னு ஒரு படமாம்.  அதை விஜய் ரசிகர்களாலேயே (!) பாக்க முடியலயாம்.  அத நம்மல பாக்கச் சொல்லி ஒரே டென்ஷன் பண்றாங்கப்பா...  அந்த கொடுமையெல்லாம் கூட தாண்டி வந்துட்டேன்...  இப்ப பொங்கலுக்கு “வில்லு”னு ஒரு படம் வருதாம்.  அதை நான்தான் first show பாக்கனுமாம்...  ஒரே குஷ்டமப்பா...”

அருகிலிருக்கும் விஜய்  :  “  அண்ணா...  போன் வயர் பிஞ்சு நாளு நாள் ஆச்சுங்ணா...”

கவுண்டமணி :  “  டேய் பனங்கா மண்டைத்தலையா இது செல்போன்டா....  ஐயோ ஐயோ...

!  !  !  !  !  !  !
Just enjoy...   

திரையில் “வில்லு” படம் பார்த்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவும்.

வலை நண்பர்களுக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். 

Thursday, January 8, 2009

விஜய் டிவியிடமிருந்து காப்பியடிக்கும் சன் மற்றும் கலைஞர்


விஜய் டிவியின் தனித்தன்மை வாய்ந்த நிகழ்ச்சிகள் இன்றும் அந்த தொலைக்காட்சிக்கு பெயர் பெற்றுத்தருபவையே. ஆரம்பத்தில் வெற்றிகரமாக வெளிவந்த “நையாண்டி தர்பார்” நிகழ்ச்சியின் வெற்றி குறிப்பிடத்தக்கது. யுகிசேதுவின் அறிவார்ந்த சிந்தனையும் அவரின் மிகப்பெரிய பலமான டைமிங் சென்சும் அந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு உறுதுணையென்றால், அந்த நிகழ்ச்சியை பரிட்சித்து பார்க்கும் தைரியம் பெற்றமைக்காக நாம் விஜய் தொலைக்காட்சியை பாராட்டலாம்.

அவர்களுடைய ஸ்டார் குரூப்பில் மிகப் பெரும் வெற்றியடைந்த “The great laughter challenge" நிகழ்ச்சியை தமிழில் “கலக்கப்போவது யாரு?” என கொண்டுவந்தார்கள் விஜய் டிவியினர். ஹிந்தியில் நவ்ஜோத் சித்துவும் மற்றொரு காமெடி நடிகரும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதால், இங்கே தமிழில் நம்ம ரமேஷ் மற்றும் ஒரு காமெடி நடிகரும் (யாரென்று நினைவில்லை, தெரிந்தால் சொல்லுங்களேன்) தொகுத்து வழங்கினர். விஜய் டிவி நிர்வாகத்திற்கும் அந்த நிகழ்ச்சியின் இயக்குநருக்கும் ஏதோ பிரச்சனை வந்தபின், சன் தொழிலாளர்களை கலைஞர் தொலைக்காட்சி வளைத்தது போல, சன் டிவி அந்த டீமையே வளைத்துப்போட்டு “அசத்தப்போவது யாரு?” என்று அளப்பரையை ஆரம்பித்தது. அரசியல் பின்னணியிலிருந்து வந்தவர்களுக்கு சொல்லித்தரவா வேண்டும்.


பிற்பாடு இதே நிகழ்ச்சியின் பல பிரதிகள் நாம் திருப்பும் டிவி தோறும் வந்து கொண்டேயிருக்கின்றன. பிற்பாடு விஜய் டிவி நிகழ்ச்சியில் அப்போது அதிமுகவில் இருந்த S V சேகர் கலந்து கொண்டு வாராவாரம் சன் டிவியை கலாய்த்துக் கொண்டேயிருந்தார். இப்போது S V சேகர் எந்த கட்சியில் இருக்கிறார் என்று அவருக்கே சந்தேகம் வருகிறதாம். ஏதோ போகிற போக்கில் இதை நான் சொல்லவில்லை. உலகத் திரைப்பட விழாவில் நடந்த ஒரு press meet ல் அவரே சொன்ன வாசகம்தான் இது.


இதே போலத்தான் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியும்... முதன்முதலில் விஜய் டிவியில் வந்தபோது (அதாவது சீசன் 1 என்று வைத்துக்கொள்ளுங்கள்) அந்த நிகழ்ச்சி மிகப் பெரும் கவனிப்பை ஏற்படுத்தியது என்பது உண்மை. இதைக்கண்ட சன் அந்த நிகழ்ச்சியின் மற்றொரு பிரதியையும் ஏற்படுத்தியது. பிற்பாடு வந்த கலைஞர் தொலைக்காட்சி டான்ஸ் மாஸ்டர் கலாவையே அமுக்கி “மானாட மயிலாட”ச் செய்தது. இப்போது இந்த ரெகார்ட் டான்ஸ் நிகழ்ச்சிகளை எந்த சானலில் காட்டினாலும் சகிக்கவேயில்லை.


முன்பு சன்டிவியில் சமக தலைவர் சரத்குமாரு நடத்திய “கோடீஸ்வரனை” நக்கலடித்து, ஜெயா டிவியில் வந்தது “பிச்சாதிபதி”. அதன் பிறகு ஜெயா தொலைக்காட்சி இந்த போட்டிகளிலெல்லாம் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை எனலாம். குஷ்பு வின் “ஜாக்பாட்” நிகழ்ச்சியே போதுமென்றிருக்கிறார்களோ என்னவோ...! அந்த நிகழ்ச்சிக்காக வாராவாரம் புதுப்புது ஜாக்கெட் களுடன் குஷ்பு வருவதாகக் கேள்வி.


தற்போது விஜய் டிவியில் வரும் உருப்படியான சில நிகழ்ச்சிகளுக்கு மற்ற சேனல்களிடமிருந்து போட்டியே கிடையாது. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் : “நடந்தது என்ன?”, “நீயா நானா”, “இப்படிக்கு ரோஸ்”, “காபி வித் அனு”, “ கணா காணும் காலங்கள்”, “லொள்ளுசபா” இப்படி நீள்கின்றன....








அதுவும் லொள்ளுசபாவின் “பேக்கரி” (போக்கிரியின் காமெடி வெர்ஷன்), இன்றும் என்னுடைய பேவரிட். சந்தானத்திற்குப் பிறகு ஜீவா அழகாக அந்த இடத்தை நிரப்பினார் எனலாம். ஆனால் இப்போது அப்படி ஒரு ஆள் கிடைக்காமல் அந்த நிகழ்ச்சி தடுமாறினாலும், அதன் பலமான script இன்றும் பட்டையக் கிளப்பும் மொக்கைக் காமெடிகளைக் கொண்டு கலக்கி வருகிறது.





“காபி வித் அனு”, “இப்படிக்கு ரோஸ்” போன்ற வித்தியாசமான சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒன்றுக்கொன்று ஒன்றுபடாமல் தனித்தன்மையுடன் விளங்குவது மிகச்சிறப்பு. இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியில் காம்பியரர் ஒரு திருநங்கை (இந்த வார்த்தை வலை இயங்குதளத்தில் பரவலாக வரக் காரணமானவர் லிவிங் ஸ்மைல் வித்யா தான்...), என்பது மட்டும் வித்தியாசமல்ல. அவர்கள் கையாளும் பிரச்சனைகளும் அப்படித்தான். ஒரு திருநங்கையுடன் மக்கள் சாதாரணமாக பேசுவதே வித்தியாசமாக சிந்திக்கப்பட்ட சமுதாயத்தில், மக்கள் தங்கள் அந்தரங்க பிரச்சனைகளை சொல்லி அழும் ஒரு புகலிடமாக மாற்றியது மிகப் பெரிய விஷயம். இப்படிப்பட்ட ஒரு மாற்றத்தை சத்தமில்லாமல் செய்த அந்த நிகழ்ச்சி பாராட்டத்தக்கது.







“காபி வித் அனு” ஒரு கொண்டாட்டம் என்று சொல்லலாம். அனுஹாசனின் நேர்மையான அணுகுமுறையும், இயல்பான பேச்சும், அழகு சிரிப்பும் (கல்யாணமாகாத பொண்ணப் பத்தி இப்படி பேசலாமா?), பேட்டியை எடுத்துச்செல்லும் பாங்கும் அசாத்தியமானது. இந்த பாணியில் சன்டிவியில் கௌதமி ஆரம்பித்த ஒரு நிகழ்ச்சி சுவடு தெரியாமல் காணாமல் போனதாக ஞாபகம். கௌதமியின் நிகழ்ச்சியில் முதல் guest ஆக வந்தவர் கமல்ஹாசன். அந்த நிகழ்ச்சியும் அந்த backdrop ம் இன்னும் ஞாபக அடுக்குகளில் இருக்கிறது.









“நடந்தது என்ன?” மற்றும் “நீயா? நானா?” போன்ற நிகழ்ச்சிகளின் வழியே ஒரு தொலைத்தொடர்பு சாதனம் தான் செய்யவேண்டிய பணியை சிறப்பாக செய்கிறது எனலாம். Infotainment என்ற பதத்திற்கு உதாரணமாக இந்த நிகழ்ச்சிகளை நான் சொல்வேன். இந்த நிகழ்ச்சிகளின் காம்பியரர் கோபிநாத் அவர்களின் குரல் வளமும், தெளிவான தமிழ் உச்சரிப்பும் மிக்க அழகு. நிகழ்வை நடத்திச் செல்லும் அவருடைய ஆளுமைத்தன்மையும், மிகவும் சீரிய editing ம் இந்த நிகழ்ச்சிகளின் தரத்தை பன்மடங்கு உயர்த்திக் காண்பிக்கின்றன.


அதிகாரத்தையும், பண பலத்தையும் கொண்டு சினிமாக்களை வாங்கிக் குவிக்கும் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள், அதே பலங்களைக் கொண்டு மிகவும் தரமான நிகழ்ச்சிகளையும் வழங்கலாமே...! ஊதுற சங்கை ஊதி வைப்பதில் எனக்கு எப்போதுமே பிரியம் உண்டு.


விஜய் தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Wednesday, January 7, 2009

10 பந்துகளே மீதமிருக்கையில் ஆஸ்திரேலியா அதிரடி வெற்றி


இன்று நடந்த இறுதி டெஸ்ட் போட்டியில் “சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனின்” மனோபாவத்தோடு களமிறங்கி, முடிவைப் பற்றி கலங்காமல் “பறவையின் கண்ணை மட்டுமே” கண்ட அர்ஜூனனைப் போல், வெற்றியை மட்டுமே எண்ணி செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.


பத்து பந்துகளே மீதமிருந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆட்டத்தை டிராவில் முடிக்க வாய்ப்பு இருந்தநிலையில், இப்படி தென்னாப்பிரிக்கா வாய்ப்பை தவறவிடும் என நினைக்கவில்லை. ஆஸ்திரேலியா மண்ணைக்கவ்வி விடும் என்று நினைத்திருந்த வேளையில், அவர்களின் போர்க்குணம் வெளிப்பட்டிருக்கிறது. இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு அவர்கள் வைத்திருக்கும் செக் இது.


முதலிடத்திற்கு வருவதைக்காட்டிலும் அதனை தக்கவைக்க பாடுபடும் போராட்டமே மிகப்பெரியது என்பது உண்மை. ஆஸ்திரேலிய அணி அந்த போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து ஆர்ப்பரித்து வரும். நம்முடைய அணி இங்கு கண்ட வெற்றிகளிலே தன்னைத் தொலைத்துவிடாமல், புது உத்வேகத்தோடு செயல்பட்டு ஆஸ்திரேலியாவிடமிருந்தும், தென்னாப்பிரிக்காவிடமிருந்தும் முதலிடத்தை தட்டிப் பறிக்க வேண்டும். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதன் மண்ணிலேயே டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருக்கும் தென்னாப்பிரிக்காவின் சாதனை நிச்சயம் பாராட்டத்தக்கது என்பதில் ஐயமில்லை.


திமுக மற்றும் அதிமுகவின் பணபலம், மீடியா பலம், கட்சி சின்ன பலம் - உட்பட பல பலங்களுக்கிடையே பலப்பரிட்சை நடத்திவரும் தேமுதிக போல நம் இந்திய அணி போராட வேண்டிய சூழலில் உள்ளது. விட்டுத்தர ஏதுமில்லை என்றாலும் எட்டிப்பறிக்க ஆயிரம் உள்ளது என்பதை மனதில் கொண்டு போராட வேண்டியது கேப்டனின் (தோனி) கடமை.


நம்ம சின்னம் முரசு இல்லிங்க... வெற்றிக்கோப்பைதானுங்க...

Thursday, December 18, 2008

உலகத்திரைப்படவிழா - மு.க.ஸ்டாலினின் SV சேகர் காமெடி


ஆறாவது சென்னை உலகத்திரைப்பட விழா நேற்று மிகச்சிறப்பாக துவங்கியது. தமிழக அரசின் 25 லட்ச ரூபாய் நிதி உதவியுடன் இந்த ஆண்டு மிகவும் புஷ்டியோடு நடத்த தலைப்பட்டிருக்கிறது ICAF அமைப்பு. இந்த அமைப்பு பற்றிய மேலதிக விபரத்திற்க அண்ணன் உண்மைத்தமிழனின் பதிவுகளைப் படித்துத் தெரிந்து கொள்ளவும்.


ஜாக்கி சேகரும், உண்மைத்தமிழரும் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றி காலையிலேயே வந்து விட்டனர். காலையில் woodlands தியேட்டரில் Bad faith (France) , Mirush (Norway) மற்றும் Casket for Hire (Phillipines) ஆகிய படங்களைப் பார்த்தோம்.


Woodlands திரையரங்கில் பார்த்த மூன்று படங்களும் சற்று heavy ஆன படங்கள். woodlands symphony யிலும், film chamber auditorium மிலும் திரையிடப்படும் படங்கள் அடுத்த வகுப்பைச் சார்ந்தவையே, comparitively.


Bad faith படம் எல்லா ஊர்லயும் இதுதான் பிரச்சனையா என்று வருத்தம் வரச்செய்தது. எந்த வித வணிகசமரங்களும் இல்லாமல் படமெடுத்திருப்பது மனதைக் கவர்ந்தது. சடாரென்று கடைசிக் காட்சியில் வில்லன் மனம் மாறி திருந்திவிடுவதைப்போல படம் முடிவடைந்த விதம் சிறு தொய்வைத் தந்தாலும், படம் பயணிக்கும் பாதையும் அதன் காட்சியமைப்புகளும் இயல்பான வசனங்களும் ஒரு திருப்தியைத்தந்தன என்பதில் ஐயமில்லை.


Mirush மிக அழகான ஒரு படம். தெள்ளிய நீரோடை போன்ற திரைக்கதை. Mirush ஆக வரும் பையன் மிகச்சிறந்த தேர்வு. படத்தின் சின்னச்சின்ன பாத்திரங்களும் அருமை. உதாரணம் : mirush உடன் Basket ball விளையாடும் பையன். நகைச்சுவை இழை தொடர்ந்து வருவதும் மிகச் சிறப்பு. எதிர்பாராத திருப்பத்துடன் முடியும் காட்சிகளும் அருமையே.


Casket for Hire - விளிம்பு நிலை மனிதர்களையும் அவர்தம் வாழ்க்கை முறைகளைப் பற்றியுமான ஒரு விரிவான ஆய்வின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களைக் கொண்ட படம். அவர்களது சந்தோஷம், துக்கம், நகைச்சுவை என அனைத்து பரிமாணங்களையும் அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. Survival அவர்களது வாழ்க்கையை எவ்வளவு தூரம் அடித்துத் துவைக்கிறது என்பதை அதன் போக்கிலேயே விட்டு காண்பித்திருக்கும் விதம் மிகச் சிறப்பு.


- - - - - - - -


சாயங்காலம் ஒரு சம்பிரதாய துவக்கவிழா கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. SV சேகர் மு.க. ஸ்டாலினை எஸ்கார்ட் செய்து அழைத்து வந்தார். சுருக்கமாக ஸ்டாலி்ன் பேசியபோதும் SV சேகரை விளித்தவிதம் நகைப்பை வரவழைத்தது. “சுயமரியாதை மிக்க தன்மானம் மிக்க” SV சேகர் என்று அவருக்கு ஒரு புது adjective கொடுத்து அழைத்தபோது அரங்கமே சிரித்தது. தொடர்ந்து பேசுகையில், “ இங்கு தமிழ்த்திரைப்படங்களையும் திரையிடவிருக்கிறார்கள். அதில் முதலாவதாக சேகருக்கு பொருத்தமாக 'அஞ்சாதே' என்ற திரைப்படம் திரையிடப்படவிருக்கிறது” - என்றும் ஸ்டாலி்ன் பேசி சிரிக்க வைத்தார்.


அவருடைய பேச்சின் ஹைலைட் காமெடி இதைவிட இன்னொன்றுதான்..... “ தமிழகத்தில் தற்போது நடைபெறும் இந்த பொற்கால ஆட்சியில்....” என்று அவர் பேசிக்கொண்டே போக எனக்கு மயக்கம் வராததுதான் குறை.


Sunday, November 23, 2008

100 பதிவு கண்ட அபூர்வ சிகாமணி அண்ணன் ஜாக்கி அவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்


ஜாக்கி சேகர் ஐயா சமூகத்திற்கு,

வந்தனங்கள். 100 பதிவு என்னும் இமாலய சாதனை புரிந்த களைப்பில் உங்கள் வாழ்க்கையில் வந்துபோன அனைவருக்கும் (பேனாவில் இங்க் ஊற்றித்தந்த பானு அக்காவையும், “காக்கா கடி” கடித்து கடலை மிட்டாய் தந்த சுரேஷையும் தாங்கள் விட்டு விட்டதற்கு என் கண்டணங்கள்) நெடுஞ்சாண்கிடையாக உருண்டு உருண்டு நீங்கள் நன்றி சொன்ன விதம் மிகவும் மெச்சத்தக்கது. இந்த பண்பினை நீங்கள் பாலகுமாரனிடமிருந்து தருவித்துக் கொண்டிருக்கலாம் என்று எண்ணுமளவிற்கு உங்களின் நன்றி கூறலின் விசுவாசம் உங்கள் பதிவெங்கும் மணக்கிறது.

பொதுவாக எண்ணிக்கையில் எனக்கு பெரிய நம்பிக்கையில்லை என்று சொன்னால் அது பொய். எண்ணிக்கைகள் தான் நாம் கடந்து வந்த தூரம் குறித்து நமக்கு அடிக்கடி உணர்த்துபவை. 100 என்ற எண்ணம் மிகவும் முக்கியமானது. அந்த எண்ணிக்கையை விட என்னை மிகவும் கவர்ந்த விடயம் என்னவென்றால் உங்களின் பதிவுகளில் காணப்படும் variety தான். அந்த பல்பொருள்தன்மை என்னை வெகுவாகவே கவர்ந்தது.

நீங்கள் அநியாயமாக சாகடித்த அந்த பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளன் அவ்வப்போது என் நினைவில் வந்து போவதுண்டு. சினிமா தியேட்டருக்குள் உணரும் வியர்வை பிசுபிசுக்கை அனுபவ சுருதியோடு சொன்ன உங்கள் வார்த்தைகளும், அப்போதைய அரசியல் சமூக சிக்கல்களை நக்கல் வழிய வழிய வறுத்தெடுத்த உங்கள் பாங்கும் அதீத கவர்ச்சியை அந்த தொடர்கதைக்கு வழங்கின என்றால் அது மிகையாகாது.

அதைப்போன்றதல்லாமல் வேறொரு genre ல் ஒரு புதிய தொடர் எழுதினால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம். கள்ளக்காதல், பஸ் ஸ்டாண்டு லாட்ஜ், சாவி துவாரத்தில் எட்டிப் பார்க்கும் ரூம் பாய், அநியாயமாய் உச்சக் கட்டத்தில் கிழிந்து போகும் காண்டம், வேடிக்கை பார்க்கும் செயலற்ற தமிழக போலீஸ் என்று தொடங்கி நீங்கள் பிளந்து கட்டி எழுதினால் சாரு தலைமையில் ஒரு கூட்டமே வந்து உங்கள் எழுத்தை உலகின் பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச்செல்லும் பணியை மேற்கொள்வார்கள். பிறகு நீங்கள் தனித்தளம் தொடங்கி இடைவேளை விட்டு இளைப்பாறலாம். இது குறித்து நீங்கள் பரிசீலிக்கவும்.

உங்களின் சினிமா பற்றிய புரிதலும் அது குறித்தான பார்வையும், சினிமாவில் உங்களுக்கு நெருக்கமானவர்களின் அறிவு விசாலமும் எனக்கு ஓரளவு தெரியும். நம் பதிவுலகில் முணுக் முணுக் கென்று வாரம் ஒரு திரைவிமர்சனம் எழுதும் பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் சினிமா என்பது என்ன... அதன் வலிகள் என்ன... இவர்கள் எழுதும் குப்பைகளால் வரும் பாதிப்புகள் என்ன என்பதெல்லாம் தெரியாது. சினிமா பற்றிய புரிதலை நம் சக பதிவர்களுக்கு ஏற்படுத்தும் முயற்சியில் புது கட்டுரைத்தொடர் எழுதலாம் (அதற்கெல்லாம் சத்தியமாக பின்னனூட்டமே வராது என்பது வேறு விஷயம்). சினிமா என்று தலைப்பிட்டு விட்டால் போதும், அதைப் படிக்க இங்கு அனைவரும் தலைப்பட்டு வருவார்கள் அது போதும். உலக சினிமா பற்றிய உங்கள் தொடரில் நல்ல திரைப்படங்களை நீங்கள் அறிமுகப்படுத்தும் பணி மேலும் தொடரட்டும்.

அம்புட்டுதான் சாமி... எனக்கு இப்ப உத்தரவு குடுங்க...

அன்புடன் நித்யகுமாரன்
Follow @ersenthilkumar