Friday, November 26, 2010

நந்தலாலா - மிஷ்கினின் கரங்களுக்கு முத்தமிட விரும்புகிறேன்...!

தமிழ் சினிமாவில் அத்திப்பூ பூத்திருக்கிறது.

மிஷ்கினின் நந்தலாலா அற்புதமான திரைப்படமாக வந்திருக்கிறது. சித்திரம் பேசுதடி மற்றும் அஞ்சாதே இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த படங்கள்.அஞ்சாதேயின் திரைக்கதையும் கதாபாத்திரங்களும் இன்னும் மனதை விட்டு நீங்காமலிருக்கின்றன.




பாஸ்கர் மணி (மிஷ்கின்), அகில்(அஸ்வத் ராம்) – இருவரும் முக்கிய கதாபாத்திரங்கள். பள்ளியில் படிக்கும் அகில் சிறு வயதிலேயே தன்னை விட்டுச்சென்ற தன் அம்மாவைத் தேட பள்ளி சுற்றுலாவை கட் அடித்துவிட்டு பயணிக்கிறான். சிறுவயதிலேயே மனநல மருத்துவமனையில் தன்னை விட்டுவிட்ட தன் தாயை வெறுத்து நொந்துபோன பாஸ்கர் மருத்துவமனையிலிருந்து தப்பித்து வெளியே வருகிறான். இருவரும் சந்திக்கிறார்கள். சந்தர்ப்பங்கள் அவர்களை இணைத்து ஒரு நேர்கோட்டில் பயணிக்க வைக்கின்றன. அம்மாவைத் தேடும் இரண்டு பேர் தங்கள் பயணத்தில் சந்தித்த விஷயங்கள் என்ன? இறுதியல் தத்தம் அன்னையரை கண்டு கொண்டார்களா? என்பனவற்றை தயவுசெய்து தியேட்டரில் பாருங்கள். இந்த படம் வெற்றி அடைந்தால்தான் நல்ல படங்கள் செய்ய இயக்குநர்கள் முன்வருவார்கள். தமிழ் சினிமாவை நேசிப்பவர்கள் இந்த படத்தை கட்டாயம் நேசிப்பார்கள்.




மிஷ்கின் தவிர வேறு யாரும் இந்த கதாபாத்திரத்தை சிறப்புறச் செய்திருப்பார்களா என்று தெரியவில்லை. நம் கதாநாயகர்களின் இமேஜ் வளையத்திற்குள் இந்த பாஸ்கர் நிச்சயம் பொருந்த மாட்டான். மிஷ்கினின் அசாத்தியமான உடல்மொழி அவரது கதாபாத்திரத்தை அற்புதமாக தாங்கி நிற்கிறது. முடிந்த போது அடிப்பதும் முடியாத போது அடிவாங்கி கதறுவதுமாக அந்த பாத்திரம் இயல்பாக செதுக்கப்பட்டிருக்கிறது. பாஸ்கரின் மனப் பிறழ்வின் நீள அகலங்கள் காட்சியைப் பொறுத்து பதமாக வெளிப்படுகிறது. “மென்டல்என அவரை திட்டியவனை புரட்டியெடுக்கும் காட்சியாகட்டும், “போடா மென்டல்என அகியே அவனை திட்டும் போது ஆற்றாமையில் அரற்றும் அந்த நடிப்பாகட்டும், கீழே விழுந்த தாவணிப்பெண்ணின் முட்டிக் காயத்தை எச்சில் தொட்டு ஆற்றும் போது, அறை வாங்கிக்கொண்டே “வலிக்குதா..?எனக் கேட்பதாகட்டும், “மழையில நனைஞ்சா எல்லா நாத்தமும் போயிடும்என ஸ்நிக்தாவை இழுத்து மழையில் நனைப்பதாகட்டும், திட்டிக்கொண்டே வந்து வீட்டின் பின்புறம் இருக்கும் தன் அம்மாவின் (ரோகிணி) நிலையைப் பார்த்து கதறி தூக்கிக் கொண்டே ஓடி அழுவதாகட்டும், தான் அடிவாங்கும் போது பைக்கில் வந்து சேரும் மிலிட்டரி இரட்டையர்களை பார்த்து மகிழ்ந்து அவர்களிடம் ஓடிச்சென்று தோளில் கைபோட்டு கட்டிக்கொண்டு (ஒரு கையால் பேண்ட்டை பிடித்துக் கொண்டே) “எங்காளு வந்துட்டான் பாரு, இப்ப என்ன பண்ணுவஎன்கிற ரீதியில் முதுகுப் பக்கமாக மட்டுமே உடல் மொழியில் பின்னுவதாகட்டும் – மனிதர் படம் முழுக்க வாழ்கிறார். தேசிய விருது தராவிட்டால் அது மிஷ்கினுக்கு இழப்பல்ல. இப்படி நான் எழுதுவது நிச்சயமாக மிகையில்லை.


அகிலாக வரும் அஸ்வத்ராம் இன்னொரு ஆச்சரியம். குழந்தை நட்சத்திரம் குழந்தையாகவே நடித்திருப்பது இன்னொரு சிறப்பு. ஸ்கூல் யூனிபார்மோடு, ஷூ சாக்ஸ், பாடப்புத்தக மூட்டை, வாட்டர் பாட்டில் சகிதம் – படம் முழுக்க தன் அப்பாவி முகத்தோடு, தன் குடும்பத்தின் மேக்ஸி சைஸ் கலர் போட்டோவுடன் தன் அம்மாவைத் தேடி அலைகிறான். ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பு. நந்தலாலா நல்ல தொடக்கம். அஸ்வத் செல்லவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

இளையராஜா படத்தின் மிகப்பெரிய பலம். அமைதிகாக்க வேண்டிய இடத்தில் அமைதிகாத்து ஆர்ப்பரிக்கும் இடத்தில் கொப்பளித்து வெளிவரும் ஆவேசப் புயலாகவும், தென்றலென தாலாட்ட வேண்டிய பொழுதில் மயிலிறகாய் வருடவும் செய்யும் பிண்னணி இசை தமிழனுக்கே பெருமை. அகிலின் அம்மா பாஸ்கரின் காலைப் பிடித்து கதறும் காட்சியில் வரும் பிண்னணி இசை ஒரு சோறு.

படத்தின் முதல் பிரேமிலேயே இது என்ன மாதிரியான படம் என்பதை மிஷ்கின் தெளிவு படுத்தி விடுகிறார். படத்தின் கேமரா கோணங்கள் நாம் படத்தை அணுக வேண்டிய விதத்தை சொல்லாமல் சொல்கின்றன. அகலமான கேமரா கோணங்களில் தூர வரும் உருவம், பிண்னணி இசையில்லாமல் வரும் வேளைகளும் நம்மை ஆட்கொள்கின்றன. Children of Heaven ல் பார்த்த அக்கா தம்பி கதாபாத்திரங்கள் போல இவ்விரண்டு கதாபாத்திரங்களும் நம்மை கொள்ளை கொள்கின்றன.

ஒரு சூழ்நிலை விபசாரியாக (எல்லாருமே அப்படித்தானோ) வரும் ஸ்நிக்தாவும் கவர்கிறார். பொசுக்கென்று ஆடை அவிழ்க்கும் அவள், ஒரு ஆணின் பேண்ட்டை கீழே விழா வண்ணம் இறுகக்கட்டும் அந்த மழைக் காட்சி ஓர் அழகான முரண்.

லாரி டிரைவர், சைக்கிள் தாவணிப்பெண், பைக் இளைஞர்கள், தேனிலவு தம்பதியர், கால் ஊனமுற்ற நபர், காரில் வரும் பீர் இளைஞர்கள், அகிலின் வீட்டு வேலைக்காரப் பெண், டிவிஎஸ் பைக்கில் வரும் ஐஸ் வண்டிக்காரர், விபசாரியைத் துரத்தி வரும் தாத்தா தலைமையிலான கோஷ்டி - என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் வந்து போகும் காட்சிகள் அனைத்தும் சிறப்பான சிறுகதை வடிவில் அமைந்து அழகூட்டுகின்றன.

தமிழில் இப்படியெல்லாம் ஒரு படம் வருமா என்ற நீண்ட நாள் ஏக்கத்தை நிறைவேற்றியிருக்கும் மிஷ்கினுக்கு எனது அன்புகள். இந்த திரைக்கதை எழுதிய அவர் கைகளை நான் முத்தமிட விரும்புகிறேன்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar