Thursday, July 29, 2010

இருப்பைச் சொல்வதைத் தவிர வேறென்ன?


சீரியல் வேளைகளில்

கவனிக்கப்படா குழந்தையின்

ஓங்கி அரற்றிய அழுகையிலும்...


நல்ல சாப்பாட்டையும்

சாப்பிட முடியாத தாத்தா

உப்பில்லையென சடாரென படும் கோபத்திலும்...


புதுச் சுடிதார் கேட்டு ஒரு மாதம்

கடந்தும் கண்டுக்காத கணவனிடம்

“என்ன சொகத்தைக் கண்டேன்...”

எனத் துவங்கும் ஒரு கண் கசப்பிலும்...


பண்டிகைத் துணி எடுக்க

கணக்கு போடுகையில்

படுக்கையறையிலிருந்து வரும்

அம்மாவின் வயதான இருமலிலும்...


ஒரு மாசமாச்சே எனும் நினைப்பில்

ஓட்டே வராத மொக்கைக் கவிதை

எழுதும் நாலு வரி பதிவிலும்...


இருப்பதென்னவோ

“இருப்பைச் சொல்லும்“

ஆதியுணர்வேயன்றி வேறில்லை...


குறிப்பு

இதை எழுதுகையில் கூடவே இருந்து தன் இருப்பைக் காட்ட நக்கீரன் போல் குற்றம் கண்டுபிடித்து திருத்தும் முயற்சியில் ஈடுபட்ட என் மனைவிக்கு நன்றி.

Tuesday, July 27, 2010

மெட்டி...


தோடு
வளையல்
சங்கிலி
மோதிரம்
கொலுசு

அப்பாடா அவ்வளவுதான்...

கொஞ்சம் பொறு
மெட்டியோடு வருகிறேன்.

Thursday, July 22, 2010

நாய்ப்பொழப்பு


கல்லெடுக்கையில்
ஓங்கி குரலெடுத்து
புறமுதுகிட்டு ஓடும்
நாயைப் பார்க்கையில்...

தனியனில்லை
எனும் நம்பிக்கை
குரூரப் புன்னகையுடன்
மேலெலுகிறது...

“வலியார்முன் தன்னை நினைக்க...”
என்று குறள் சொல்லி
திரும்பி வந்தாலும்
“ரௌத்திரம் பழகச்...”
சொன்ன பாரதி
கனவில் வந்து
செருப்பாலடிக்கிறான்...

Wednesday, July 21, 2010

நாட்காட்டி


நல்லநேரம்
ராகு காலம்
எமகண்டம்
குளிகை
வாஸ்து
பொன்மொழி
ராசிபலன்
விடுமுறை

இப்படி எல்லாம் சொல்கிறது...

உன் வருகையைத்தவிர...

பொய்யாகவேனும் சொல்லலாமே
உன்னைப் போல...

Tuesday, July 20, 2010

போ... போ...


எப்போதுமில்லாமல்
எப்போதேனும்
வருவதால்தான்...

அது அழகு...

தொடர்ந்து இருந்தால்
வானவில் கூட
சலித்துப்போகலாம்...

சரி சரி
சீக்கிரம் கிளம்பு...
Follow @ersenthilkumar